முருக சிவகுமார் (murugasivakumar)
வட தமிழகத்தில் புனித இடமாகவும் சிறப்புவாய்ந்த இடமாகவும் விளங்கும் நகரம்திருவண்ணாமலை. இந்நகரைச் சுற்றிலும் இனாம் காரியந்தல், வெங்காயவேலூர், ஆடையூர், வேடியப்பனூர் உள்ளிட்ட சிற்றூர்கள் உள்ளன. இனாம்காரியந்தலுக்கும் ஆடையூருக்கும் இடையே கௌதி வேடியப்பன் என்னும்பெயரில் அடுக்குத் தொடர் மலைகள் உள்ளன. ஊர்காவல் காத்த மாவீரர்கள்இறந்த பின்னர் நடுகல் நட்டு சிறு தெய்வமாக வழிபடும் மரபு கொண்டவர்கள்தமிழர்கள். இதனால் அப்பகுதியில் வேடியப்பனுக்கு நடுகல் நட்டு சாமியாகமக்கள் வழிபட்டு வருகின்றனர்

இந்நிலையில் தமிழக அரசின் இரும்பு கனிம சுரங்க நிறுவனத்தின் துணையுடன்ஜிண்டால் இரும்பு நிறுவனம், இந்த மலையில் இரும்பை வெட்டி எடுக்கமுடிவுவெடுத்துள்ளது. அதற்கு அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

கௌதி வேடியப்பன் மலை உள்ள பகுதி தரிசு நிலப்பகுதி அல்ல. கானகத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பட்ட காடுகள் உள்ளன. இரண்டுஇலட்சம் மரங்கள் இருக்கும் இந்த மலையை, விலங்குகளும் பறவைகளும்உறைவிடமாகக் கொண்டு வாழ்கின்றன. இந்த மலைகளில் உருவாகி சிறியஓடைகள் மூலம் வரும் நீர், இந்தப் பிரதேசத்தில் இயற்கைச் சூழல் அமைப்புக்குமிக முக்கியமானதாக உள்ளது

இத்தகைய சிறப்புகளை அழிக்கும் நோக்கில் ஜிண்டால் நிறுவனம் திட்டத்தைச்செயல்படுத்த உள்ளது. இந்த சுரங்கத் திட்டத்தால் இரும்புத் தாது துகள்வெளியேறி காற்றை மாசுபடுத்தும். இதனால் இந்தப் பகுதியில் உள்ள 20 சிற்றூர்களில் வாழும் 2 இலட்சம் மக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படும். இதுமட்டுமின்றி திருவண்ணாமலையை வலம் வரும் மக்களும் பாதிப்படைவர். இந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களும் நிலத்தடி நீரும் இத்திட்டத்தால்பாதிக்கப்படும். மேலும், மலைகள் அழிக்கப்பட்டால் மழைவளம் இருக்காது. இதனால் பல இலட்சம் மக்களின் வாழ்நிலையும், உழவர்களின் விளைச்சலும்பாதிக்கப்படும்.

இந்த இரும்பு சுரங்கத் திட்டத்தால் பல இலட்சம் உழவர்கள் பாதிக்கப்படும்நிலையில் 185 பேருக்கு மட்டுமே வேலை வழங்குவதாக ஜிண்டால் நிறுவனம்உறுதியளித்துள்ளது

325 எக்டேர் கானகப்பகுதியில் இத்திட்டத்தை நிறைவேற்ற தீர்மானித்துள்ளஇந்நிறுவனம், இப்பகுதியில் உள்ள மக்களுக்குத் திருநெல்வேலி மாவட்டத்தில்நிலம் ஒதுக்குவதாகத் தெரிவித்துள்ளனர். நிலம் தரமுடிமேயொழிய திட்டம்நிறைவேற்றும் பகுதியில் உள்ள இயற்கை சூழல் அமைப்பை தரமுடியாது.

இவ்வளவு பாதிப்புகளையும் விளைவுகளையும் தெரிந்திருந்தும் இது குறித்துஇப்பகுதி மக்களுக்கு முழுமையாகத் தெரியாதவாறு கமுக்கமாக வைத்துள்ளனர். இந்தத் திட்டத்தால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான அறிக்கை ஒன்றுஉருவாக்கப்பட்டுள்ளது. மேலோட்டமாக இருக்கும் அந்த அறிக்கை அதிகஅளவில் மக்களுக்குக் கிடைக்கப்படவில்லை.
இத்திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு இரும்பு தாது கனிமக் கழகம், தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் ஆகியவற்றின் சா ர்பில் திசம்பர் 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மு.இராசேந்திரன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் லிமிடெட் உயர் அதிகாரிகள், தொண்டு நிறுவனப் பேராளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி நிருவாகிகள், கௌதி வேடியப்பன் மலையைச்சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட சிற்றூர்களைச் சேர்ந்த மக்கள் என 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விவாதித்தனர்.

325 எக்டேர் பரப்பில் ரூ.450 கோ டியில் இரும்பு தாது வெட்டி எடுக்கும் பணியால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் லிமிடெட் நிருவாக அதிகாரிகள் பேசினர்

இதையடுத்து தொண்டு நிறுவனங்கள், பசுமை தாயகம் அமைப்பு, எக்ஸ்னோரா, தமிழ்நாடு சுற்றுசூழல் கழகம் ஆகியவற்றின் சார்பில் கலந்துகொண்டவர்களும், பொதுமக்களும் இரும்புத் தாது வெட்டி எடுக்கும் திட்டத்தால் மக்களுக்கு காது கேட்கும் திறன் குறையும், நுரையீரல் பாதிக்கப்படும், பழமையான வேடியப்பன் கோவில் பாழடையும், மலையைச்சுற்றியுள்ள பகுதிகள் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்படும், அரிய வகை பறவைகளும் விலங்குகளும் மூலிகைகளும் மரங்களும் அழிந்து போகும். எனவே, இரும்புத் தாது வெட்டி எடுக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று எடுத்துக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இக்கூட்டம் பற்றியும், இயற்கைச்சூழல் பாதிப்பு குறித்தும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க .எஸ்.டபுள்யூ ஸ்டீல் லிமிடெட் நிறுவனம் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனாலும், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசியதால், மக்களின் கருத்தை மீறி ஜிண்டால் நிறுவனத்தின் திட்டம் நிறைவேற்றப்படமாட்டாது என்றும் திட்டம் நிறுத்திவைக்கப்படும் என்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.இராசேந்திரன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

ஆயினும், அதிகாரம் படைத்தவர்கள் இத்திட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபடலாம். எனவே, பல இலட்சம் மரங்களையும், அங்கு வாழும் விலங்குகள்- பறவைகளையும், மக்களையும் பாதுகாக்க கௌதி வேடியப்பன் மலை அழிப்புத் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என அப்பகுதியில் செயல்பட்டுவரும் கௌதி வேடியபன் மலை பாதுகாப்பு இயக்கம், பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
முருக சிவகுமார் (murugasivakumar)

வீட்டில் ஒரு மகனும் தந்தையும் அமர்ந்திருந்தனர். நீண்ட நாட்களாக மனத்தில் இருந்த ஒரு ஐயத்தைக் கேட்டுவிட வேண்டும் என்று மகன் எண்ணினான். தன் தந்தையிடம் மகன், நான் குழந்தையாக இருக்கும்போது கன்னுக்குட்டின்னு செல்லமாகக் கூப்பிட்டீங்க, இப்போ மாடுன்னு திட்டுறீங்களே... என்று கேட்டான். அதற்குத் தந்தை விடையளித்தார்,உன் அம்மா உனக்குப் பால் கொடுக்கல.. நீ மாட்டுப்பால் குடித்துதான் வளர்ந்த, அதனாலதான் அப்போ கன்னுகுட்டி... இப்போ மாடு.. நீ வளந்துட்ட.. நான் செல்லமாதான் கூப்பிடுறேன்என்றார். இப்போது பெரும்பாலான குழந்தைகள் மாட்டுப் பால் குடித்துதான் வளருகின்றன.


ஒரு பாலூட்டியின் பாலும் வேறொரு பாலூட்டியின் பாலும் குணத்தில் வேறுபாடுடையது. உலகில் உள்ள அனைத்துப் பாலூட்டிகளின் பாலும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நம் மூகத்தில் தாய்ப் பாலுக்கு மாற்றாகக் குழந்தைகளுக்கு விலங்கின் பால் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. தாயின் பால் குழந்தைக்கு அறிவைக் கொடுக்கிறது. இது அனைத்துப் பாலூட்டிகளுக்கும் பொருந்தும். ஆனால், ஒரு பாலூட்டியின் பாலை வேறொரு பாலூட்டியின் குழந்தைக்குக் கொடுக்கும்போது உடல் எடை கூடுவதாகவும், அறிவு வளம் குறைவதாகவும் கூறப்படுகிறது.


தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்து தப்பிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து இளமை பருவத்தை அடையும்போதும் சீரான எடையுடன் வளர தாய்ப்பால் உதவுகிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து த்துகளும் அடங்கியிருக்கின்றன. தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளைவிடத் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியுடன் இருப்பதாகப் பலரும் கூறுகின்றனர்.

குறிப்பாகக் குழந்தைகளுக்கு நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றிற்குத் தாய்ப்பால் துணை நிற்கிறது. பிறந்து 6 மாதங்கள் முதல் 1 வயதுவரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளில் 80 விழுக்காட்டினர் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வதில்லை. குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய்வரும் வாய்ப்பைத் தாய்ப்பால் குறைக்கிறது.


ஒவ்வாமையினால் ஏற்படும் மூச்சிறைப்பு நோயைத் தடுக்கும் வல்லமையும் தாய்ப்பாலில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு குடும்பத்தில் மரபு வழியாக நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து இருந்தால், அக்குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு முதல் 6 மாதக் காலங்கள் வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுத்துவந்தால் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கலாம்.


தாய்ப்பாலில் இருக்கும் அமிலத்தன்மையானது என்டோர்வின் எனப்படும் வலி போக்கியை (நிவாரணியை) அதிகம் சுரக்க வைக்கிறது. இதனால் உடலில் ஏற்படும் வலிகளைப் போக்கும் வல்லமை குழந்தைகளின் உடலுக்கு வருகிறது. மழலைப் பருவத்தில் குழந்தைகளை நச்சுயிரி(வைரஸ்), நுண்ணுயிரிகளால் ஏற்படும் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இவ்வாறான திடீர்ச் சாவுகளிலிருந்து குழந்தைகளைக் காக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு இருக்கிறது.


இத்தகைய சிறப்பு வாய்ந்த தாய்ப்பால் என்ற உயர்ந்த கொடை தாய்க்கு மட்டுமே இருக்கிறது. ஆனால், பெண்களில் பலர் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதில்லை. தாய்ப்பால் கொடுப்பதால் தங்களின் உடலின் வனப்பும் கட்டமைப்பும் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். ஐந்தறிவு உள்ள மாடு, எருமை, ஆடு உள்ளிட்ட விலங்குகள் குட்டி ஈன்றதும், பால் கொடுக்கின்றன. பிற உயிரினத்திற்கும் தன் பாலை கொடையாகக் கொடுத்தாலும், தன் குட்டிக்குப் பால் கொடுக்காமல் இருப்பதில்லை. மனிதர்களின் தங்களின் தேவைக்கு மாட்டுப் பாலை கரந்துக்கொள்ளும் போதும் துன்பப்பட்டாவது தன் குட்டிக்குப் பால் ஊட்டி மகிழ்கிறது. இவ்வாறு ஐந்து அறிவுள்ள விலங்குகள் பாலூட்டுவதில் அக்கறையுடன் இருக்கும்@பாது, பெண்களில் சிலர் தங்களின் வனப்பையும், உடல் கட்டையும் காரணமாகக் கூறிப் பாலூட்டாமல் இருப்பது வருந்தத்தக்கது.


குழந்தைக்கு பாலூட்டாத பெண்களின் செயலை வணிக நிறுவனங்கள் ஊக்கப்படுத்துகின்றன. தங்களின் பொருட்களை விற்பனை செய்யப் புதிய உத்திகளைக் கையாளுகின்றன. தாய்ப்பாலைவிட தாங்கள் உருவாக்கும் பொருட்களில் த்து அதிகமாக இருப்பதாக விளம்பரப்படுத்தித் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு தொலைக்காட்சிகளிலும் பதாகைகளிலும் பரப்புரை செய்கின்றன. ஆனால், வணிக நிறுவனங்கள் தரும் த்துப் பொருட்கள் அனைத்தும் தாய்ப்பாலின் குணங்களுக்கு ஈடாவதில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆகவே, இத்தகைய வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைச் ட்டத்திற்குப் புறம்பானது எனச் சில நாடுகள் அறிவித்துள்ளன. மேலும், தாய்ப்பால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்குவதால் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை அனைத்து நாடுகளும் வலியுறுத்துகின்றன.


குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் பெண்ணின் உடல் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் கருத்துகளை மருத்துவ ஆய்வுகள் முற்றிலும் மறுத்துள்ளன. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் உடலில் வேதியியல் மாற்றங்கள் உருவாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மகப்பேற்றுக் காலத்தில் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இந்த எடை காரணமாக உடலில் தேவையற்ற கலோரிகள் சேர்ந்துவிடும் இதனால் பல்வேறு நோய்கள் வரும் வாய்ப்பு உருவாகும். அந்தத் தேவையற்ற கலோரியை இழப்பதற்குப் பெண்கள் பாலூட்டுவது இன்றியமையாதது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாதவிலக்குக் காலத்திற்குப் பின்னர்ப் பெண்களுக்கு ஆஸ்டியோ பெட்ரோசிஸ் எனப்படும் எலும்புமுறிவு நோய் வருவதாகக் கூறப்படுகிறது. தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு இந்த நோய் பெரும்பாலும் வருவதில்லை. மகப்பேற்றுக் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் குருதிப்போக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது கட்டுக்குள் வருவதாகவும், அவ்வாறு தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்குக் குருதிபோக்குத் தொடர்ந்து நீடிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், பாலூட்டும் பெண்களுக்கு மாதவிலக்குக் காலம் 20 முதல் 30 வாரங்கள் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.


குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரையும் பார்க்கும் திறன் 12 முதல் 15 அங்குலம் வரை இருக்கும். தாயின் மார்புக்கும், முகத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ஏறக்குறைய 15 அங்குலம் இருக்கும் என்பதால் குழந்தை பால் குடிக்கும்போது தாயின் முகத்தை உற்று கவனிக்கும். இதனால் அத்தாயின் முகம் குழந்தையின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும். ஒரு குழந்தை தனியாக இருக்கும்போது வேறொருவரும், அக்குழந்தையின் தாயும் ஒரே நேரத்தில் அழைக்கும்போது அக்குழந்தை ட்டெனத் தாயிடம் செல்லும்। தாயின் முகம் பழக்கப்பட்ட முகம் என்பதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.


தாய்ப்பாலின் மணத்தைக் குழந்தை விரும்புகிறது. இதனாலும் எளிதில் தாயைக் கண்டுகொள்கிறது. ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு கொப்பூழ்க்கொடி வழியே ஏற்படுகிறது. அதனைப் வலுப்படுத்தத் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளைவிடத் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்குத் தாயின் மீது அன்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.


குழந்தை குடிக்கக் குடிக்க ஊறிக்கொண்டே இருப்பது தாய்ப்பாலின் தனித்தன்மை. தாய்க்கு மட்டுமே பால் கொடுக்கும் உயர்ந்த கொடை இருக்கிறது. எனவே, தாய்ப்பாலைக் குழந்தைகளுக்குத் தவறாமல் கொடுத்துக் குழந்தைக்கும், தாய்க்குமான உறவை வலுப்படுத்துவோம்.

முருக சிவகுமார் (murugasivakumar)
மிழக முதல்வர் கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் மாபெரும் கல்வி புரட்சி ஒன்று நடந்து வருவதாகக் கேள்விப்பட்டேன். அங்குள்ள பள்ளியொன்றுக்குச் செல்வதற்கு வழிகேட்டு ஒரு அறையில் நுழைந்தேன். மாணவர்கள், கணினி முன் அமர்ந்து தலையணி குரல் வாங்கியை (ஹெட் போன்) மாட்டிக்கொண்டு அமர்ந்து இருந்தனர். ஏதோ அழைப்பு நடுவத்திற்கு வந்துவிட்டோமே என்று மன தயக்கத்துடன் அறையைவிட்டு வெளியில் செல்வதற்கு முற்பட்டேன். இது அழைப்பு நடுவம் அல்ல; அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப் பள்ளிதான் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது என்னை ஆச்சரியத்தில் ஆழத்தியது.

தமிழக சிற்றூர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தை 12 ஆண்டுகள் படிக்கின்றனர். ஆனாலும் பெரும்பான்மையோருக்கு ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ, படிக்கவோ, புரிந்துகொள்ளவோ இயலுவதில்லை ஆங்கிலத்தில் இருக்கும் விண்ணப்பங்களை நிரப்ப முடியாமல் 80 விழுக்காடு மாணவர்கள் துன்பப்படுகின்றனர்.

பொருளாதாரத்தில் வசதிபடைத்தவர்களின் பிள்ளைகள் அனைவரும் பதின்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்களுக்குச் சிறந்த முறையில் ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படுவதால், உயர்கல்வி பெறுவதிலும் வேலைவாய்ப்பு பெறுவதிலும் அவர்கள் முன்னிலையில் உள்ளனர். அவர்களுடன் சிற்றூர்ப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் போட்டிபோட முடியாமல் வாழ்வில் பின்தங்கி விடுகின்றனர்.

இந்நிலையை மாற்றுவதற்கு தமிழக அரசு முயல வேண்டும் என்று பலமுறை என்னை போன்றோர் எண்ணியதுண்டு. தமிழ் உணர்வுடன் தமிழை படிப்பதும் படிக்க சொல்வதும் முக்கியமானதுதான். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கிலம் தெரியாமல் எந்தத் துறையிலும் வெல்லமுடியாது என்பது உண்மை. கணினி உதவியுடன் ஆங்கிலப் பயிற்சி என்னும் புதிய திட்டத்தைக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு தொடங்கியதைப் பார்க்கும்போது மனதில் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தமிழக முதல்வர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் மேல்நிலைப் பள்ளியில் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இத்திட்டத்தைத் தொடக்கிவைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆங்கிலப் பயிற்சி பெறுவதற்கு ரூ.6 இலட்சம் மதிப்பில் கணினி, மென்பொருள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என நான்கு படிநிலைகளில் உரையாடல் நிகழ்ச்சியாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், குறும்படங்களின் வழியாக உரையாடல் நுணுக்கங்களை அறிதல், விளையாட்டு நிகழ்ச்சிகளின் வழியாக வரி வடிவமைப்பை அறிதல், மென்பொருள் வழியாக இலக்கணம் மற்றும் சொற்களின் உச்சரிப்பை அறிதல் போன்ற முறைகளிலும் பயிற்சிகள் நடைபெறுகிறது. சுவாமி விவேகானந்தர், ஆப்ரகாம் லிங்கன் போன்ற முக்கிய ஆட்களின் ஆங்கில சொற்பொழிவுகள், உரைகள் ஆகியவற்றைக் கொண்டும் மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பது இத்திட்டத்தின் முக்கியக் கூறாகும். அனைத்து வகுப்புகளின் ஆங்கிலப் பாட புத்தகங்கள் குறுந்தகடுகளில் தமிழ் பொருளுடன் உள்ளன. இவை அனைத்தையும் கொண்டு மாணவர்களுக்கு முதுநிலை ஆங்கில ஆசிரியர் பயிற்சியளிக்கிறார்.

திருக்குவளையில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கும் சரவணனிடம் இத்திட்டம் குறித்துக் கேட்டபோது, கணினி ஆய்வகத்தின் மூலம் ஆங்கிலப் பயிற்சி பெறுவது மாணவர்களுக்கு உற்சாகமாக உள்ளது. வகுப்பறைகளில் மாணவர்களின் நடத்தையில் பெரும் மாற்றத்தை இப்பயிற்சி வகுப்புகள் உருவாக்கியுள்ளன. சிறு விளையாட்டு நிகழ்ச்சிகளின் மூலம் ஆங்கிலப் பயிற்சி அளிப்பது விரைவாக மாணவர்களைப் புரிந்துகொள்ள வைக்கிறது என்றார்.

இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்றுவரும் 11-ஆம் வகுப்பு மாணவர் கமலக்கண்ணன் கூறுகையில், கணினி உதவியுடனான ஆங்கிலப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆங்கிலப் பாடங்களைப் பொருளுடன் புரிந்துகொள்ள முடிகிறது. ஆங்கிலத்தில் பேசுவதில் எனக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன் தன்னம்பிக்கையின் அளவும் உயர்ந்துள்ளது என்றார்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பயிற்சி பெறும் ஒரு மாணவரின் தந்தை கூறுகையில், என் மகன் திருக்குவளை மேல்நிலைப் பள்ளியில் 11 -ஆம் வகுப்புப் படித்து வருகிறான். வானொலி, தொலைக்காட்சிகளில் வரும் தமிழ்செய்திகளைப் பார்க்காத, கேட்காத அவன், இப்போது, நாள்தோறும் ஆங்கிலச் செய்திகளைக் கேட்டு புரிந்துகொள்கிறான். இது கணினி உதவியுடனான ஆங்கிலப் பயிற்சி திட்டத்தின் பயனாகும் என்கிறார்.

இந்த ஆங்கிலப் பயிற்சித் திட்டத்தை 30 பள்ளிகளில் விரைவில் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் தொடங்க உள்ளதாகவும் நாகை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா தெரிவிக்கிறார்.

கொம்புகள் சீவப்பட்ட நிலையில் களத்தில் நிற்கும் காளையுடன் முனை மழுங்கிய கொம்புடன் இருக்கும் காளை எப்படி போட்டிபோட முடியும். போட்டியிட்டாலும் தோல்வியே மிஞ்சும். ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியாத சிற்றூர்ப்புற மாணவர்கள், வேலைவாய்ப்புப் பெறுவதற்குப் பெரும் துன்பப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ முடிவதில்லை.

கணினி உதவியுடன் ஆங்கிலப்பயிற்சி அளிக்கும் இந்தப் புதிய முறையை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் பொருளாதாரத்தில் வசதி படைத்த மாணவர்களுடன் ஏழை மாணவர்களும் போட்டிபோட முடியும். இதுவே, என் போன்றோரின் எதிர்ப்பார்ப்பாகும். இத்திட்டத்தைத் தமிழக அரசு விரைவில் விரிவுபடுத்தும் என நம்புவோம் .
முருக சிவகுமார் (murugasivakumar)

"2011-இல் இந்து தேசம் உருவாகப் போகிறது. அச்சமயம் இந்தியாவில் உள்ள அனைத்து முசுலிம் தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டிருப்பார்கள் அல்லது செத்திருப்பார்கள். மீதி முசுலிம்கள் மதம் மாறி இந்துக்களாகி இருப்பார்கள். நாடு முழுவதும் இந்துக்கள் மட்டுமே இருப்பார்கள்"- இந்த படுபயங்கரச் சொற்களை உதிர்த்தவர் பாபுபாய் பட்டேல். இவர் குசராத்தில் செயல்பட்டுவரும் பஜ்ரங்கி நவ்சேத்னா அமைப்பின் தலைவர். அயோத்திச் சிக்கல், அதனைத் தொடர்ந்து நடந்த வகுப்புக் கலவரத்தில் முசுலிம்களைக் கொன்று குவித்த போது செய்தியாளர்களிடம் பாபுபாய் இவ்வாறு கூறினார்.

வகுப்புவாத அரசியலுக்கு இடம் தராமல் பல காலம் தென்னிந்தியா இருந்தது. ஆனால், வகுப்புவாத அரசியல் கட்சியான பா.ச.க. கருநாடகத் தேர்தலில் வெற்றிபெற்று தென்னிந்தியாவில் முதல்முறையாக ஆட்சி அமைக்கிறது. இச்சமயத்தில் பாபுபாய் குறிப்பிட்டுள்ள சொற்கள் மிக முக்கியமானவை. சமூகத்தின் மீது அக்கறைகொண்ட அனைவரும் சிந்திக்க வேண்டியவை. இந்து பண்பாட்டைக் காப்பதாகவும் அதனைத் தூய்மைப்படுத்துவதாகவும் கூறிச் செயல்படுவரும் விசுவ இந்து பரிசத் அமைப்பின் அரசியல் வடிவம்தான் பா.ச.க. இந்த வகையில் பா.ச.க., வி.இ.ப., மதவெறிகொண்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் கடந்த காலச் செயல்பாடுகளை நாம் நினைவுக்கு கொண்டுவருவோம்.

கடந்த 2002-ஆம் ஆண்டு 27-ஆம் தேதி கோத்ராவில் சபர்மதி விரைவுத் தொடர்வண்டி எஸ்-6 பெட்டி தீப்பிடித்து எரிந்ததில் 59 கரசேவகர்கள் இறந்தனர். இதற்கு முசுலிம்கள்தான் காரணம் என்று முதலில் வதந்தி பரவியது. பின்னர், இது பயங்கரவாதிகளின் சதி என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து குசராத் மாநிலம் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. அங்கு பிப்ரவரி 28- ஆம் தேதி தொடங்கி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இலட்சம் வீடுகள், கடைகள், உடைமைகள் பாழாகின. குல்பர்க் பகுதியில் 5 ஆயிரம் வீடுகள் எரிந்து ஆள் இல்லாமல் ஆன்மா இல்லாமல் கிடக்கின்றன. இந்தத் தாக்குதலில் இருந்து முசுலிம்கள் தப்பித்து வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக சாலைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கருவுற்றிருந்த முசுலிம் பெண்களின் வயிறுகள் கிழிக்கப்பட்டு அரைகுறையாக வளர்ந்திருந்த சிசுக்கள் அழிக்கப்பட்டன. இந்தக் கொடுஞ்செயல்கள் ஏதோ தானாகவே நடந்தவை அல்ல; திட்டமிட்டு நடத்தப்பட்டவை. இச்செயல்களில் ஈடுபட்ட இந்து வெறியர்களுக்கு முதலமைச்சர் மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உறுதுணையாக இருந்தது.

இந்துத்துவத்தின் ஆய்வுக்களமாக குசராத்தை நிலை நிறுத்தி அங்கு நாயகனாக வளர்க்கப்பட்டவர்தான் இந்த மோடி. இத்தாக்குதலுக்குப் பிறகு அகமதாபாத் உள்ளிட்ட குசராத்தின் பல நகரங்கள் இந்து - முசுலிம் என இரண்டாகப் பிரிந்து கிடக்கின்றன. கலவரத்தில் தெறித்து ஓடியவர்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். 2002-இல் குடியிருப்புகளை விட்டு விரட்டப்பட்ட 5 ஆயிரம் முசுலிம் குடும்பங்கள் வாழும் 69 குடியிருப்புகள் இன்னும் இருக்கின்றன. ஆனால், அவர்கள் அங்கு வந்து வாழமுடியாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் மோடியைக் கண்டித்தது. அதற்கு விடையளித்த மோடி,. "முகாம்களில் இருந்து முசுலிம்கள் வரமறுப்பது பயத்தால் அல்ல; இப்போதுள்ள இடத்தில் வருமானம் அதிகமாகக் கிடைக்கிறது" என்று கூறினார். தான் ஆட்சி செய்யும் பகுதியில் குறிப்பிட்ட ஒருசாரார் மிக மோசமாக நடத்தப்பட்டனர்; நடத்தப்படுகின்றனர் என்ற மனநெருடல் முதலமைச்சராக இருக்கும் மோடிக்குத் துளியளவும் இல்லை. ஏனென்றால் அவருக்குக் கற்பிக்கப்பட்ட பாடம் கற்பிக்கப்பட்டது.

மோடி போன்ற அடிப்படைப் பிற்போக்குவாதிகள் அனைத்து மாநிலங்களிலும் முதலமைச்சர்களாக இருந்தால் பாபுலால் பட்டேலின் எண்ணம் விரைவில் நிறைவேறும்.உ.பி சட்டமன்றத் தேர்தலின்போது பா.ச.க குறுந்தகடு ஒன்றை வெளியிட்டது. அது குறித்து முறையீடுகள் அதிகமாக வந்ததைத் தொடந்து பா.ச.க.வின் இந்தியத் தலைவர் இராச்நாத் சிங் மீதும் உ.பி. மூத்த தலைவர் லால்ஜி தாண்டன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. அக்குறுந்தகட்டின் உள்ளடக்கத்தை 'இந்தியாவின் அறைகூவல்' என்னும் தலைப்பில் 'தி இந்து' நாளிதழ் வெளியிட்டிருந்தது. தலையில் முசுலிம் போல தொப்பி அணிந்த ஒருவர் மகிழுந்தில் குண்டுவைக்கிறார். இந்துக்கள் போல் வேடமிட்டு இரண்டு இளைஞர்கள் பசுக்களை விலை கொடுத்து வாங்குகின்றனர். அதில் ஒரு பசுவைக் கொன்று இறைச்சி எடுக்கின்றனர். இவ்வாறான காட்சிகளில் விரியும் இப்படத்தில் பார்வையாளருக்கு சில கருத்துக்களை ஆழமாக மனதில் பதியவைக்கிறது. அதாவது., முசுலிம்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாகிறது. இதற்கு காங்கிரசுதான் காரணம். நாட்டையும் இந்து மதத்தையும் காப்பாற்ற பா.ச.க.வுக்கு வாக்களியுங்கள் என்ற கருத்து அழுத்தமாக இருந்தது. ஆனாலும், உ.பியில் அவர்களால் வெல்ல முடியவில்லை.இத்தகைய பயங்கரமான மதவாதக் கட்சி அடுத்தடுத்து இந்தியாவில் மாநில ஆட்சியைக் கைப்பற்றுவது நல்லதா?, உறுதியாக இல்லவே இல்லை.

இப்போது கருநாடகத் தேர்தலில் இலவசத் திட்டங்களை அறிவித்தும் சோனியாகாந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட அரசியல் பேராளர்கள் பரப்புரையாற்றியும் 224 இடங்களில் பா.ச.க. 110 இடங்களைப் பெற்றுப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. மக்களை வளர்க்கும் பொருளாதாரத் திட்டங்களோ சமூகத்தை முன்னேற்றும் முற்போக்குக் கொள்கைகளோ பா.ச.க.விடம் இல்லை. மாறாக மத வெறியைத் தூண்டிவிடுவது மட்டுமே மிக முக்கியமான குறிக்கோள். ஆனாலும் காங்கிரசு நடுவண் அரசில் ஆட்சி செய்யும் காலக்கட்டத்திலேயே மார்ச் 2007-இல் பஞ்சாபிலும் உத்தர்கண்டிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு மாநிலத்திலும் காங்கிரசு தோற்றது. பா.ச.க வென்றது. இதற்குக் காரணம் காங்கிரசின் உட்கட்சி மோதலே என்று கூறப்பட்டது. கருநாடகத்தில் பா.ச.க. வென்றதற்குப் பெரிய கொள்கை ஒன்றும் கிடையாது. காங்கிரசிற்கான மாற்று என்றே மக்கள் நினைக்கின்றனர். எனவே, காங்கிரசின் தோல்வி என்பது மத நல்லிணக்கத்தின் தோல்வி என்றே கருதலாம்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை காப்பாற்றுவதற்கு மதவாதமற்ற கட்சிகளை ஒன்றிணைப்பது தேவை. அந்தப் பணியை காங்கிரசு செய்துவந்தது. ஆனாலும், பொருட்களின் விலைவாசி உயர்வானது மக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கியிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு ஓர் ஆண்டே உள்ளநிலையில் கருநாடகத்தேர்தல் முடிவைக் கண்டு, அத்வானியும் இராச்நாத்சிங்கும் கொக்கரிக்கிறார்கள்.

பெரியார் பிறந்த மண்ணில் வகுப்புவாதம் நுழையாது என்று கூறப்படும் தமிழகத்தில் பா.ச.க. பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடுகிறது. இப்போதுள்ள நிலையே நீடித்தால் பா.ச.க. நடுவண் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி. பா.ச.க. ஆட்சியில் அத்வானிதான் பிரதமராவார். அவரைப் பற்றி நாடு அறிந்த ஒரு நிகழ்வை இங்கு நினைவு கூர்வோம்.பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உரிய இடஒதுக்கீட்டை அளிக்க வகைசெய்வதற்கு மண்டல் குழுவை பிரதமர் வி.பி.சிங் அமைத்தார். மண்டல் அறிக்கையை எதிர்த்து அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார். அவர் செல்லும் வழியெங்கும் கலவரங்கள் வெடித்தன. இத்தகைய "நல்லவர்" அத்வானி பிரதமரானால் பாபுபாய் பட்டேலின் கனவு நனவாகும். இந்நேரத்தில் காங்கிரசு தன் குறைபாடுகளைக் கண்டறிந்து அதனைப் போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நெருங்கி வரும் ஆபத்து மக்களை பாதிக்கும்.

பெரும் புரட்சிக்காக பாடுபட்டு வருவதாக மார்தட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகள், கருநாடகத்தில் பா.ச.க. வெற்றிபெற்ற இச்சமயத்திலாவது வறட்டு அரசியலை விட்டுவிட்டு ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். காங்கிரசு ஆட்சிக்கு மாற்று பா.ச.க. ஆட்சி என்று கருதும் மக்களின் மனப்போக்கில் மாற்றத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் கொண்டுவர முடியவில்லை. காரணம், நாட்டிற்கு ஆற்றவேண்டிய கடமைக்கும் மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைக்கும் இடையே கம்யூனிஸ்ட்களுக்கு இருக்கும் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

1951-ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட்கள், தலைவர் ஸ்டாலினைக் காண இரஷ்யாவுக்கு சென்றிருந்தனர். அப்போது, 'பன்னாட்டுக் கடமைகளை நிறைவேற்ற நீங்கள் வந்திருப்பது சரியே, அதனை நடைமுறைப்படுத்தும்போது, நாட்டின் கடமைக்கும் உங்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைக்கும் இடையே பெரும் சிக்கல் இருக்கிறது. அந்தச் சிக்கல்களை நீங்கள் புரிந்துகொண்டீர்கள். அந்தப் புரிதலே உங்களைத் தோல்வியடைய செய்துவிட்டது" என்று தலைவர் ஸ்டாலின் கூறினார். இந்தியக் கம்யூனிஸ்ட் குறித்த அவரின் மதிப்பீடு இன்றும் தொடர்கிறது.

மதவாதக் கட்சிக்கு எதிராக மக்களின் மீது அக்கறைகொண்ட முற்போக்குக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.சரி, கருநாடகத்தில் பா.ச.க. ஆட்சி எப்படி இருக்கும். சட்டப்பேரவையைக் கலைப்பதற்கு முன்பு ஒருவாரம் முதல்வராக இருந்த எடியூரப்பா முதலமைச்சராகிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு எடியூரப்பா தம் ஆதரவாளர்களுடன் ஒகேனக்கல் பகுதிக்கு வந்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்று காவிக் கொடி பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டார். எனவே, அவரின் ஆட்சியில் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் உள்ளது. முதற்செயல் தவறாக நடந்தால் முழுக்க தவறாகவே முடியும் என்பார்கள்.

தேசியப் பற்றுகொண்ட பா.ச.க. மக்களின் மிக முக்கிய சிக்கலான குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும். தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்டதும் செய்தியாளர்களுக்கு எடியூரப்பா அளித்த நேர்காணலில், கருநாடகத்தில் நிலம், மொழி, நீர் ஆகியவற்றை காக்கப் பாடுபடுவேன் என்று கூறியுள்ளார். இன்னும் எதிர்காலத்தில் என்னென்ன நடக்குமோ? பொறுப்பானவர்கள் பொறுமையுடன் இருக்கக் கூடாது.

முருக சிவகுமார் (murugasivakumar)
முருக சிவகுமார் - குறும்பட இயக்குநர்

லை இலக்கியவாதிகளிடையேயும் புதிய தலைமுறை இளைஞர்களிடையையேயும் இன்று ஆதிக்கம் செலுத்தி வரும் கலை, குறும்படமாகும். குறைவான செலவில் ஒரு குறும்படத்தை எடுத்துவிடக்கூடிய வாய்ப்பு கூடியிருப்பதும் அதற்கொரு காரணமாகும். எல்லா கலை இலக்கிய வடிவங்களிலும் தூய அழகியல் சார்ந்தும் சமூகப்பிரச்சினைகள் சார்ந்தும் பேசும் இரு போக்குகள் காணப்படுவது போல் குறும்படத்துறையிலும் இவ்விரு போக்குகள் நிலவுகின்றன. பெரும்பாலும் அழகியல் சார்ந்தவற்றைக் குறும்படங்களும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை ஆவணப்படங்களும் பேசுகின்றன. உண்மையை உண்மையாக வெளிப்படுத்த இவ்வடிவம் கைக்கொடுக்கிறது. 'ஒரு நதியின் மரணம்' எனும் ஆவணப்படத்தின் மூலம் தாமிரபரணி படுகொலையை வெளியுலகிற்குக் கொண்டுவந்து ஆவணப் படத்தின் வலிமையை தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்தியவர் ஆர்.ஆர்.சீனிவாசன். அவ்வரிசையில் தமிழில் ஒரு சில முக்கியமான ஆவணப்படங்கள் அவ்வப்போது எடுக்கப்படுகின்றன. அப்படி ஒரு ஆவணப்படத்தின் மூலம் கவனம் பெற்றிருப்பவர் முருகசிவகுமார். அந்த ஆவணப்படம் - 'விடுதீ '. கிராமப்புறங்களிலிலுந்து வந்து சென்னையில் அரசு ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் நரகச் சூழலைச் சித்தரிக்கும் ஆவணப்படம் இது. சில விருதுகளையும் பரவலான வரவேற்பையும் பெற்றது இப்படம். 'விடுதீ ' ஆவணப்படம்... (29நிமிடம்: ஆண்டு 2005)

சென்னையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் நரக நிலையை பேசும் படம் 'விடுதீ' . தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலிருந்து சென்னைக்கும் படிக்க வரும் ஏழ்மையான தலித் மாணவர்கள் பலருக்கு அடைக்கலம் தருபவை இராயபுரம், வில்லிவாக்கம், நந்தனம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் விடுதிகள். இவ்விடுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இன்றி மாணவர்கள் படும் இன்னல்களை அவர்களின் வாயிலாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். இத்தகைய விடுதிகளில் கொடுக்கப்படும் உணவுகள் மிகவும் மோசமானவையாக உள்ளன. தண்ணீர் கூட சுகாதார மற்றதாய் இருக்கிறது. இதனால் பலருக்கு டைபாய்டு, அல்சர் போன்ற வியாதிகள் வருவதாக விரக்தியுடன் பேட்டியளிக்கின்றனர் மாணவர்கள். பாசி படிந்த கழிவறைகள், கழிவறைக்கு அருகிலேயே மாணவர்களின் அறை, வெட்டவெளிகுளியல், உடல்களை அடைத்து வைத்ததைப் போல் ஒரே அறையில் பலர், ஈக்கள் மொய்க்கும் குப்பைத் தொட்டி, சுத்தம் செய்யப்படாத சுற்றுப்புறம் என 'விடுதீ' யின் காட்சிகள் விரிந்து செல்கின்றன. இத்தகைய சூழலில் படிப்பது சாத்தியமா எனும் கேள்வியை எழுப்புகிறது இவ்விரணப் படம்.

"சாப்பாட்டில் கை வைக்கும் போது சுண்ணாம்பில் கை வைப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்கிறார் ஒரு மாணவர்". "சாப்பிடணும்னு தோணும் ஆனா சாப்பிட முடியாது" என்கிறார், விடுதி மாணவர்களில் ஒருவராக இருந்த இயக்குநர் முருகசிவகுமார், மாணவர்களில் சிலர் நல்ல உணவுக்காக திருமண மண்டபங்களில் சர்வர் வேலை செய்வதையும் இப்படம் காட்சிப் படுத்தியுள்ளது.

விடுதிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் கெஸ்ட்டாக தங்கும் சூழ்நிலையில் அனைவருக்கும் பரிமாறப்பட்ட பிறகே மீதமுள்ள உணவு இவர்களுக்கு அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் அதுவும் கிடைக்காமல் போய் விடுவதை ஒரு மாணவி குறிப்பிடும்போது பார்வையாளர்களை ஒரு வித சோகம் அழுத்துகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலருடைய நேர்காணல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. அத்துடன் கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்., இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஜி.செல்வா, இந்தியா டுடே ராதிகா, துடி பாரதி பிரபு ஆகியோரது நேர்காணல்களும் இடம் பெற்றுள்ளன. "ஒரு மாணவனுக்கு மாதத்திற்கு 400 ரூபாய் வழங்கப்படுகிறது. இது போதாது, உணவுக்கான முழுத்தொகையும் வழங்கப்பட வேண்டும்" என்று கிறிஸ்துதாஸ் காந்தியும், "அரசே தலித்மாணவர்கள் மீது செலுத்தும் வன்முறை இது" என்று பாரதிபிரபுவும், "பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் விடுதிகள் நன்றாகப் பரமாரிக்கப் படுகின்றன. ஆனால், தலித் மாணவர் விடுதிகள் மோசமாக இருக்கின்றன அரசே இப்படி பாரபட்சமாக நடந்துக் கொள்கிறது" என்று ராதிகாவும் இப்படத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றனர். "தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசு நிதி 500 கோடி ரூபாயை தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது அதிகாரிகளின் சாதி மனோபாவத்தை காட்டுகிறது. விடுதிகளின் இத்தகைய அவலநிலை மாற, போராட்டம் தான் தீர்வு கொடுக்கும். மாணவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்." என்கிறார் செல்வா. "மாணவர்கள் ஒன்றிணைவது எப்போது? இப்பிரச்சினையை உணர்ந்த உங்கள் பங்கு என்ன? போராட்டம் எப்போது?" எனும் கேள்விகளுடன் முடிகிறது 'விடுதீ' .

சக மாணவர்களின் நலனுக்காக குரல் கொடுத்திருக்கும் இயக்குநர் முருகசிவகுமாரின் பணி பாராட்டுக்குரியதாகும்.

இயக்குநர் முருகசிவகுமார் பற்றி ...

தற்போது 26 வயதாகும் முருகசிவகுமார் விகடன் பிரசுரத்தில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் முனைவர் ஜார்ஜ் அவர்களிடம் நவீன நாடக வரலாறு எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வரும் இவர் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிக்களுர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இனி அவருடன் : இப்படி ஒரு ஆவணப்படத்தை இயக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

"விடுதியில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் தான் முதல் காரணம். சென்னை புதுக்கல்லூரியில் எம்.ஏ.தமிழ் இலக்கியம் படித்த போது இராயபுரம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் இடம் கிடைக்காமல் விருந்தினராக (கெஸ்ட்) தங்கியிருக்க நேர்ந்தது. ஐந்து பேருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் கூடுதலாக பதினைந்து பேர் சேர்ந்து இருபது பேர் தங்கியிருந்தோம். எல்லா அறைகளிலும் இப்படித்தான் மிகுந்த நெருக்கடியுடன் தங்கியிருப்பார்கள். காலையில் டாய்லெட் செல்ல வரிசையில் காத்துகிடக்க வேண்டும். டாய்லெட்டின் உள்ளே இருப்பவனை சீக்கிரம் வரச் சொல்லி வெளியே காத்திருப்பவர்கள் கதவை தட்டுவார்கள். குளிப்பதற்கும் இப்படித்தான் நெருக்கடி. ஐந்து பேருக்கான உணவையே இருபது பேரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். முதலில் தட்டு தூக்குகிறவனுக்கு தான் உணவு கிடைக்கும் என்கிற நிலை. சிலருக்கு உணவு கிடைக்காது இரண்டு மூன்று நாட்கள் கூட சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால் பல மாணவர்கள் பக்கத்தில் உள்ள திருமண மண்டபங்களில் சர்வர் வேலைக்கு செல்வார்கள். உணவுக்கு உணவும் கிடைக்கும் கை செலவுக்கு காசும் கிடைக்கும். இத்தகைய சூழலில் படித்தால் மாணவர்களால் எப்படி படிக்க முடியும். அரசு வேலைக்கு மற்ற மாணவர்களுடன் எப்படி போட்டி போட முடியும். இந்தக் கொடுமையை வெளி உலகிற்கு உணர்த்த வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இந்த ஆவணப்படத்தை இயக்கினேன்."

இத்தகைய சூழலிலிருந்து உங்களால் எப்படிப் பணம் செலவு செய்து படம் எடுக்க முடிந்தது?

"சென்னையில் திபீகா என்றொரு நிறுவனம் அதன் குறும்பட விழாக்களிலும் திரையிடல் நிகழ்வுகளிலும் பல குறும்படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பணியாற்றி ஜெயச்சந்திரன் எனும் நண்பரின் தூண்டுதலாலும் உதவியாலும் தான் இப்படம் எடுக்க முடிந்தது. கேமரா, எடிட்டிங் பணம் என எல்லாவிதத்திலும் உதவினார். அவரின்றி இப்படம் எடுத்திருக்க இயலாது. நானும் என் சக மாணவர்களும் அனுபவித்த இன்னல்களும் வேதனைகளும் இப்படத்திற்கு உயிர் தந்தது".

ஆவணப் படத்துறை நோக்கி வந்த உங்கள் பாதை குறித்து?

"நான் தருமபுரி மாவட்டத்துக்காரன். திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ.தமிழிலக்கியம் படித்தபோது, வறுமையின் காரணமாக பேராசிரியரும் கவிஞருமான வே.நெடுஞ்செழியன் வீட்டில் தங்கிப் படித்தேன். அவரது வழிகாட்டுதலில்தான் என் சிந்தனை கட்டமைக்கப்பட்டது. 'சுட்டுவிரல்' எனும் தனிச்சுற்று இதழ் ஒன்றை நடத்தினார். அதில் வெளியான என் சிறுகதை ஒன்றைப் படித்து விட்டு மிகவும் பாராட்டினார். அவர் நடத்திய நாடகத்தில் என்னை நடிக்க வைத்தார். அந்த ஆர்வத்தின் காரணமாகத்தான் சென்னைக்கு இலக்கியத்திலும் நாடகத்திலும் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் வந்தேன். இலக்கியக் கூட்டங்களுக்கு அலைந்தேன். பாரதிபிரபுவின் 'கனல்' கலைக் குழவில் சேர்ந்து பல மேடைகளில் 'வர்ணாசிரமம்' நாடகத்தில் நடித்தேன். அதன்பிறகு குறும்படங்கள் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த உந்துதலே என்னையும் ஆவணப் படத்திற்கு அழைத்து வந்து சேர்த்தது. எனது இந்தப் பயணத்தில் அக்கறை கொண்டவர்களாக பாரதிபிரபு, அரங்க மல்லிகா, ஞாநி, கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்., சிவகாமி ஐ.ஏ.எஸ்., ஜெயசந்திரன் ஆகியோரை இனம்கண்டு மனதில் பதித்து வைத்திருக்கிறேன்.

அரசு விடுதியில் இருந்து கொண்டு உங்களால் எப்படி இந்த ஆவணப்படத்தை எடுக்க முடிந்தது?

"பல சிக்கல்களையும் இன்னல்களையும் சந்தித்து தான் இந்த ஆவணப் படத்தை எடுக்க முடிந்தது. பாதிக்கப்படும் மாணவர்களே பேசவும் பேட்டிதரவும் தயங்கினார்கள், பயந்தார்கள். மாணவர்கள், சமையல்காரர்கள், வார்டன் என எல்லோருக்கும் பதில் சொல்லவேண்டியிருந்தது. நந்தனம் விடுதியின் வார்டன் கேமராவைப் பிடுங்கி வைத்துக் கொண்டார், போராடித்தான் திரும்பப் பெற்றேன்". உங்களைப் பாதித்த குறும்படங்கள், குறும்பட இயக்குநர்கள்?"ஆர்.ஆர்.சீனிவாசனின் 'ஒரு நதியின் மரணம்' 'Untouchable Country' என்னை மிகவும் பாதித்த படங்கள். சவால்களை எதிர்கொண்டு சமூகப் பிரச்சினைகளை எடுக்கும் ஆர்.ஆர்.சீனிவாசன் எனக்குப் பிடித்தமானவர். அம்ஷன் குமார், பி.லெனின், டி.அருள் எழிலன் ஆகியோரும் பிடிக்கும்.

இன்றைய தமிழ்க் குறும்பட சூழல் குறித்து?

"வணிகத் திரைப் படங்களில் சொல்லப்படாதவற்றை இதில் சொல்ல முடியும். நாடகத்துறையில் சமூக மாற்றத்திற்கான அரங்கை 'மாற்று அரங்கு ' என்பார்கள். அதன் தரை வடிவம் தான் ஆவணப்படம். அத்தகைய வலிமை வாய்ந்த குறும்படத்தை சினிமாவில் நுழைவதற்கான 'விசிட்டிங் கார்டு ' ஆகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் குறும்படங்களில் மக்கள் விரோதக் கருத்துக்களையும் திணிக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளைப் பேசும் குறும்படங்கள் இன்னும் நிறைய வரவேண்டும்."

உங்களின் அடுத்த திட்டம்?

" நிலா முற்றம் எனும் என் கவிதையைக் குறும்படமாக்கவுள்ளேன். விடுதீ க்கு ஜெயச்சந்திரன் உதவியதைப் போல் யாராவது உதவினால் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேச விரும்புகிறேன். பொருளாதாரச் சூழல் தான் என்னை அந்நியமாக வைத்துள்ளது."

'விடுதீ' க்குப் பிறகு விடுதிகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டனவா? இப்பிரச்சினைகள் தீர வழி என்ன?

"மிஸோராம் ஆளுநர் ஏ.பத்மனாபன் அவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை தலைமைச் செயலருக்கும் இந்த ஆவணப்படம் தனியாகத் திரையிட்டுக் காட்டப்பட்டது. அதன்பிறகு சில விடுதிகள் சீர்செய்யப்பட்டுள்ளன. கிராமப்புற மாணவர்கள் தாம் இங்கு தங்கிப் படிக்கிறார்கள். ஆனால் அவர்களைச் சரியாகப் படிக்க விடாமல் வீட்டுக்கே திருப்பி அனுப்புகின்றன இந்த விடுதிகள். இந்த மோசமான சூழலில் படிப்பதால் தலித் மாணவர்களால் பிற மாணவர்களுடன் வேலை வாய்ப்பில் போட்டி போட முடியவில்லை. திறமையான மாணவர்கள் பலர் இந்த விடுதிகளில் இருக்கிறார்கள். கிராமத்திலிருந்து படிக்க வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மாணவர்களும் நல்ல விடுதிகளில் தங்கிப் படிக்க அரசு தான் வழிசெய்ய வேண்டும்."

நம்பிக்கையை சுமந்த மனசுடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் முருக சிவகுமார்.

- யாழினி முனுசாமி