முருக சிவகுமார் (murugasivakumar)
தரவற்றோருக்கு பற்றுக்கோடாகத் திகழ்ந்த அன்னை தெரசா, மனிதக் குலத்துக்குக் கிடைத்த பேரருளாளராகப் போற்றப்படுகிறார். கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடு தொண்டாற்றினார். தொண்டின் மறு உருவம் தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அன்னை தெரசா என உலகம் முழுவதும் உள்ள மக்களால் பாசத்துடன் அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் எக்னஸ் கோஞ்சா பொயாஜியூ.

யுகோஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்த மாசிலோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்ஜே நகரில் 1910-ஆம் ஆண்டு அன்னை தெரசா பிறந்தார். ஆகஸ்டு 26-ஆம் நாள் தெரசா பிறந்ததாகச் சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தமது பிறந்த நாள் ஆகஸ்டு 27-ஆம் நாள் தான் என்பதைத் தெரசாவே உறுதிபடுத்தியுள்ளார்.

1922-ஆம் ஆண்டில் தனது 12-ஆவது வயதில், சொந்த ஊரில் பெற்றோர்களுடன் வாழ்ந்துகொண்டிருந்தபோது, வறுமையால் வாடுபவர்களுக்கு உதவுவதையே வாழ்க்கையாகக் கொள்ள வேண்டும் எனக் கடவுள் தனக்குக் கட்டளையிட்டதாக குறிப்பிடும் தெரசா, மற்றவர்களுக்காகத் தனது வாழ்வை ஒப்படைத்துக் கொள்ள முடிவு செய்து கொண்டார். தொண்டுக்காகப் பிறந்தவள் தான் என்பதை உணர்ந்த தெரசா, இந்தியாவின் கல்கத்தா நகரில் யுகோஸ்லோவியக் கிறித்துவ மிஷினர்கள் தொண்டாற்றுவதைக் கேள்விப்பட்டுத் தானும் பணியாற்ற விரும்புவதாகக் கூறினார். 1929-ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு வந்தார். தொடக்கத்தில் அவர் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1946-ஆம் ஆண்டு டார்ஜிலிங்கிற்குத் தொடர்வண்டியில் சென்று கொண்டிருந்த போது, சேரியில் அல்லல்படும் வறியவர்களுக்குத் தொண்டாற்ற வருமாறு தனது கனவில் கடவுள் அழைப்பதாக குறிப்பிடும் தெரசா, இந்தக் கடமையை நிறைவேற்றப் பள்ளியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்குக் கத்தோலிக்க மதத் தலைவர் போப் பாண்டவரிடம் இருந்து அனுமதி கிடைத்தது. உடனடியாக முதல் உதவி மருத்துவத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டு சேரி மக்களுக்குத் தன் தொண்டைத் தொடங்கினார். தெரசாவின் தொண்டு உள்ளத்தைக் கண்ட சகோதரிகள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவராக அவருடன் பணியாற்ற இணைந்ததால் கருணை இல்லம் (’மிஷினர் ஆப் சேரிடிஸ்’) என்னும் சமூகத் தொண்டு அமைப்பை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு அன்னையாகத் தெரசா திகழ்ந்தார்.

சமூகத்தில் கைவிடப்பட்டவர்களான தொழு நோயர்களையும் சாவின் விளிம்பில் கிடந்த பிச்சை எடுப்பவர்களையும் தெரசாவும் அவரது அமைப்பினரும் தேடிப்பிடித்து உதவினர். மற்றவர்களால் மறுக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு தரும் இடமாகத் தெரசாவின் அமைப்பு விளங்கியது. தெரசாவின் கருணை உள்ளத்தால் உருவான அந்த அமைப்பு பல நாடுகளிலும் பரவியது. இதனால், தொண்டின் மறு உருவமான தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1962-இல் அமைதி மற்றும் உலகப் புரிந்துணர்வுக்கான மகசேசே விருது, 1972-இல் பாப்பரசர் 23-ஆம் அமைதிக்கான பரிசு, காபிரியேல் விருது, 1973-இல் டெம்லெடொன் விருது, 1980-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பாரத் ரத்னா விருது, 1985-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிக உயர் விருதான விடுதலைக்கான அதிபர் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற அன்னை தெரசா 1997-ஆம் ஆண்டில் இறந்தார். இவரின் இறப்புக்குப் பின்னர் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.

வாழ்ந்த போது ஒரு மனிதருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட முதல் பெருமை அன்னை தெரசாவுக்கு மட்டுமே உரியது. அவரைப் புகழ்ந்தவர்களிடம், ”கடவுள் கை காட்டிய கடமையைச் செய்கிறேன்’’ என்று புன்னகையுடன் விடையளித்தார். கடவுள் இருப்பதாக கூறி தொழுபவர்கள் எல்லோருமே இவரைப் போலவே இருந்தால், உலகத்தில் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கொடுமைகள் நிகழாது! அன்னை தெரசாவின் வாழ்வில் இருந்து பாடம் கற்போம்.

(ஆக.27-ஆம் தேதி அன்னை தெரசா பிறந்த நாள்)
முருக சிவகுமார் (murugasivakumar)
இந்தியாவில் ஏறக்குறைய 200 ஆண்டுகள் நடந்த வந்த ஆங்கிலேயர் ஆட்சி முடிந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்றது. இந்தியர்களின் ஒருமித்த போராட்டத்தைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள், இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை இந்திய மக்களிடம் ஒப்படைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க விழா ஆகஸ்ட் 14 -ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குத் தில்லியில் பாராளுமன்ற நடுமண்டபத்தில் நடந்தது.

அங்கு, நேரு உரையாற்றுகையில்,தோ இன்னும் சிறிது நேரத்தில் நள்ளிரவு 12 மணி அடித்ததும் உலகம் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இந்தியா விழித்தெழப் போகிறது. விடுதலை பெற்ற நாடாக இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும் நேரத்தில் இந்திய மக்களின் தொண்டுக்காகவும், மனித குல மேம்பாட்டிற்காகவும் நம்மை ஒப்படைத்துக் கொள்ள சூளுரை ஏற்போம். எந்தக் காலத்திலும் தேடுதலையோ, இலட்சியத்தைதோ இந்தியா கைவிட்டதில்லை. விடுதலையைப் பெற இந்திய மக்கள் அனைவரும் ஆங்கிலேயரின் பல வகையான துன்பங்களைக் பொறுத்துக்கொண்டோம். சில துன்பங்கள் அப்படியே மனத்தில் நிற்கின்றன. எனினும் கடந்து போனதை நினைத்துக்கொண்டே இருக்காமல், நம்மை அழைக்கும் வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்போம். நம் கனவுகள் நிறைவேறிட நாம் இன்றும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று உணர்ச்சியுடன் பேசினார்.

இந்தியாவின் விடுதலை நாளை இந்தியர்களும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் இன்று கொண்டாடும் வேளையில், போராட்டத்தால் கிடைத்த விடுதலை யாருக்குப் பயன்பட்டது என்பதைத் தன்ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாக இருக்கிறது. அமைதி வழியில் சிலர், போர் வழியில் சிலர், நாடகங்கள்- பாடல்கள் வாயிலாக சிலர் தேசிய உணர்வைத் தூண்டி மக்களைக் கிளர்ந்தெழச் செய்தனர். பல கோடி மக்கள் குரு சிந்தி, சிறையில் இருந்து போராடியதால் ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் இந்த விடுதலை கிடைத்ததா? என்ற வினா சமூக பொறுப்புள்ள - மனித நேயமுள்ள ஒவ்வொருவரின் மனதிலும் எழுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வினா தொடர்கிறது. இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு; இந்தியாவில் பிறந்தவர்கள் யாவரும் என் உடன் பிறந்தவர்கள்; வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்வதே இந்தியர்களின் சிறப்பு என்று பாடப் புத்தகங்களின் வாயிலாகக் குழந்தைககளுக்குச் சொல்லித் தரப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பிறந்த அனைவரும் உடன் பிறந்தவர்களாக இருக்கிறார்களா என்றால் உண்மையாக இல்லை.

மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் ஒரு குறிப்பிட்ட மக்கள் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். பல சிற்றூராட்சிகளில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் அவர்கள் இருப்பதற்கு அனுமதிக்காசூழ்நிலை உள்ளது. கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் சாமி தெருவில் செல்லும்போது ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு மட்டும் செல்வதில்லை. கோயில்களில் நுழைவதற்கு விடுவதில்லை. பொதுவாக இருக்கும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளைகள் இருக்கின்றன; பொது இடங்களைப் பயன்படுத்த விடுவதில்லை. வாழ்ந்தால் தெருவில் நடக்கக்கூடாது. கோயில்களுக்கு வரக்கூடாது என்பதோடு இல்லாமல் இறந்தாலும் உடலை எரியூட்டுவதற்கோ புதைப்பதற்கோ இடம் மறுக்கும் நிலை தொடர்கிறது.

இந்நாட்டில் பிறந்த மக்கள் தம் சொந்த மண்ணில் உழைத்து வாழ்வதற்குக் கூட உரிமையில்லை. உழைத்து உணவுப் பொருட்களைக் கொடுக்கும் உழவர்களின் நிலங்களை அரசு பிடுங்கி, பெரு முதலாளிகளின் கையில் கொடுக்கிறது. வேளாண் நிலங்களில் சிறப்புப் பொருளாளதார மண்டலங்கள் அமைக்கப்படுவதால் சொந்த ஊரைவிட்டு மக்கள் நகரங்களுக்குக் கூலிகளாக இடம்பெயர்கின்றனர். பல மாவட்டங்களில் இருந்து குடிபெயர்ந்த தமிழர்கள், கருநாடகம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் சொந்த நாட்டு அகதிகளாக இருக்கின்றனர். தங்களுக்கு உள்ள விடுதலை எல்லையால் ஆற்றுமணல் உள்ளிட்ட கனிம வளங்களை அள்ளி வெளிநாடுகளும் அனுப்பி நீர் வளத்தை அழிக்கும் முதலாளிகளும் இந்த நாட்டில் இருக்கின்றனர். வெளிமாநிலங்களிலும், வெளியூர்களிலும் குறைந்த கூலிக்கு நிறைந்த உழைப்பை நல்கிப் பெரும் முதலாளிகளிடம் கொத்தடிமைகளாக எண்ணற்றோர் உள்ளனர். சிந்தித்தால் நமக்கு ஆபத்து என்று எண்ணி அரசு, குடிமகன்களைக் குடிகாரர்களாக்கிப் பெரும் தொகையை வருமானமாக ஈட்டுகிறது.

விடுதலைபெற்ற இந்தியாவில் வாழ்ந்துவரும் பலருக்கும் இன்னும் அடிப்படை வசதிகள்கூட கிடைக்கவில்லை. மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்படாததால் பல சிற்றூர்கள் இருளில் மூழ்கியுள்ளன. ஆற்றுக்கு அக்கரையில் வாழ்பவர்கள் சொந்த ஊரைவிட்டு வெளியூர்களுக்கு வருவதற்குப் போதிய வசதி இல்லாததால் அந்நிய நாட்டில் வாழ்வது போல் துண்டிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதியில் வாழ்ந்து வருகிறவர்கள் நோயுற்றாலோ, பெண்கள் கருவுற்றாலோ பல மைல் தொலைவுக்கு மனிதர்களே சுமந்துகொண்டு மருத்துவமனைக்கு வருகின்றனர். தூய்மையான குடிநீர் வழங்கப்படாததால் பல மைல் தொலைவுக்குச் சென்று தூய்மையற்ற தண்ணீரைத் தலையில் சுமந்து வந்து குடிக்கும் சிற்றூர்கள் உள்ளன.

வாழ்க்கையில் பின் தங்கியுள்ளவர்கள் படித்து வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால் பள்ளி, கல்லூரி வாயிலில் நுழையக்கூட முடியாதபடிக்குக் கட்டணம் பெறப்படுகிறது. அரசு தீட்டும் திட்டங்களைப் பட்டியலிட்டால் அதிர்ச்சியில் ஆழ்த்தும்படி உள்ளன. ஆனால், சிற்றூர்களுக்குச் சென்று பார்த்தால் முன்பு எவ்வாறு இருந்ததோ அப்படியே ஊர்கள் இருக்கின்றன. அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட நிதியை அமைச்சரும் அதிகாரிகளும் பங்கிட்டுக்கொள்வதால் திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றன.

தலைமுறை தலைமுறையாக வறுமையில் இருந்த உழைக்கும் மக்களில் பலர் எந்தவிதப் பயனையும் அடையாமல் ஒதுக்கப்பட்டுள்ளனர். தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பொதுமக்கள் அரசிடம் சென்றால் பணம் கொடுப்பவருக்கு மட்டுமே அதிகாரிகள் செயல்படுகின்றனர். ஒரு மனிதர் பிறந்து வாழ்ந்து இறக்கும் வரை அரசிடம் இருந்து எதைப் பெறவேண்டும் என்றாலும் கையூட்டு இல்லாமல் நடக்காது. இவை அனைத்தையும் எண்ணிப் பார்க்கும்போது இந்நாடு பெற்ற விடுதலை யாருக்குப் பயன்படுகிறது?! ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது என்று மட்டும் சொல்லலாம். மக்களுக்கு - குறிப்பாக அடித்தள மக்களுக்கு கிடைத்துவிட்டது என்று சொல்லுவது தவறு என்றே தோன்றுகிறது.

பொதுமக்களின் சொத்துக்களைப் பிடுங்கும் அமைச்சர்களும், கொலை வழக்கில் சிறைக்குச் சென்றுவிட்டு வந்து முதலமைச்சர் பதவியைக் கேட்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்தியா சுதந்திரம் பெற்றதால் மகிழ்ச்சியே. ஆனால், காலம் முழுவதும் உழைத்தாலும் வாழ்வு மாறாமல் இருக்கும் அடித்தள மக்களுக்கும், சாதி, மத வேறுபாடுகளால் வாழ்வைத் தேடி அலையும் மக்களுக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று சொன்னால் பலர் சிரிக்கிறார்கள். அது அவர்களின் சுதந்திரம்!

விடுதலைக்குப் பாடுபட்டவர்களை எண்ணிப் பார்த்தாவது. இந்நாட்டில் பிறந்த அனைவருக்கும் விடுதலை கிடைக்க வழிவகை செய்வோம் என்ற உறுதிமொழியை ஆட்சியாளர்களும் பெரும் முதலாளிகளும் ஏற்க வேண்டும்.

முருக சிவகுமார் (murugasivakumar)
வவுனியா முகாமில் தமிழர்களோடு தங்கியிருந்த புலித்தலைவர்கள் க.வே.பாலக்குமாரன், கரிகாலன், யோகரத்தினம் யோகி, புதுவை இரத்தினதுரை ஆகியோரை இனம்கண்டு விசாரனைக்காக அழைத்துச் சென்ற சிங்கள போர்ப்படை அவர்களை சித்தரவதை செய்து ரகசியமாக படுகொலை செய்திருக்கிறது. இச்செய்தியை ”சிறீலங்கா கார்டியன்” என்ற கொழும்பு இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அந்த நான்கு போராளிகளின் பங்கு மிகப்பெரியது. அதிலும் குறிப்பாக, விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை - ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர். அவரை இழந்த செய்தி கேட்டு என் நெஞ்சம் பதைபதைத்தது. அதற்கு காரணம் உண்டு, விடியல் வெளியீடாக வெளிவந்திருக்கிற அவரது கவிதை தொகுதியை கடந்த சனவரி மாதம்தான் முழுவதுமாக படித்து முடித்தேன். ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போது, கோபமும் அழுகையும் உள்ளத்தில் கொப்பளித்தது.

“இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்
எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்”
“துயரம் அழுவதற்காக அல்ல... எழுவதற்காக
..................................................................................”

- இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

”அட மானுடனே!
தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்
பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்
நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.
அன்னை மடியில் இருந்து கீழிறங்கி
அடுத்த அடியை நீ வைத்தது
தாயகத்தின் நெஞ்சில்தானே.
இறுதியில் புதைந்தோ
அல்லது எரிந்தோ எருவாவதும்
தாய்நிலத்தின் மடியில்தானே.
நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்
பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்”

- வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை, தனது பதினான்காவது வயதில் கவிதை எழுத தொடங்கி, முப்பத்தேழாவது வயதில் (1935) விடுதலைப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர், ஒரு சிற்பக் கலைஞரும் கூட.

“எமது மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறிவதில் நானும் போராட வேண்டும் என்று நினைத்தேனே தவிர, தொடர்ந்தும் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பில் நான் வரவில்லை. ஆனால், அமைப்புக்கு வருவதற்கு முன்பே எனது துறை கலையாக இருந்தபடியால், அமைப்புக்குள் நுழைந்த பின்பும் இயக்கத்தில் கலைப் பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது. இந்தப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என உறுதியுடன் கூறிவந்த புதுவை இரத்தினதுரை, ”ஈழத்தில் மட்டுமல்ல மானுடம் எங்கு வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் எனது கவிதை பேசும்” என்கிறார்.

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளை படித்தும், கவிதைப் பாடல்களை கேட்டும் பலநூறு இளைஞர்களும், இளைஞிகளும் விடுதலைப் படையினில் வந்து சேர்ந்து “மண் மீட்புக்காக” களமாடிக் கொண்டிருப்பதை சென்னையில் என் அண்டை வீட்டில் வாழும் ஈழத் தமிழ் நண்பர் யொனி, சொல்ல கேட்கும் பொழுது - கவிஞரின் “கவிதாயுதம்” இருப்பதிலேயே உயர் கருவியாக மதிக்கப்பட்டு - மெய் சிலிர்க்க வைக்கிறது.

ஈழமண்ணில் தோன்றிய மிகச்சிறந்த ஆய்வாளர்களும் ஒருவரான பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள், புதுவை இரத்தினதுரை கவிதைகள் பற்றி குறிப்பிடும்பொழுது,
“...இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்
எல்லைகள் மீறி யார் வந்தவன்.
நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
நின்றது போதும் தமிழா - உந்தன்
கலைகள் அழிந்து கவலை மிகுந்து
கண்டது போதும் தமிழா இன்னும்
உயிரை நினைத்து உடலை சுமந்து
ஓடவா போகிறாய் தமிழா...”

என நெருப்பாக தொடங்கி நீளும் ஒரு பாடலை புதுவை இரத்தினதுரை எழுதியுள்ளார். அந்த பாடல் வரிகள் எத்தகைய தாக்கத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன் - ஈழத்திலுள்ள திருநல்வேலி சந்தியில் - 1993இல் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் ஒருவர் தேநீர் குடித்துவிட்டு, சுருட்டு பற்ற வைத்துக்கொண்டு குளிருக்காக தலையையும் காதையும் மறைத்து தான் போட்டிருந்த போர்வையுடன் மிதிவண்டியில் ஏறிய நேரத்தில் இந்தப் பாடலும், “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலும் ஒலிபரப்பாக மிதிவண்டியில் அப்படியே நின்றபடி கேட்டுவிட்டு சென்றார். புதுவை இரத்தினதுரையின் புரட்சிக் கருத்துக்களையும் நெகிழ்ச்சியான அனுபவங்கலையும் பாடலில் கேட்டு, உறைந்துபோன அந்த ஈழத் தமிழனின் செயலை கண்டு மனம் நெகிழ்ந்தேன்” என்று பூரிப்போடு கா.சிவதம்பி எழுதியுள்ளார்.

விரும்பி இடம்பெயர்வது வேறு - விரும்பாமல் வன்முறை செய்து இடம்பெற வைப்பதென்பது வேறு. புலம் பெயர வைப்பவன் - இறுதியில் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அவனை மன்னிக்கவே கூடாது என மனம் பதற வைக்கிறது புதுவை இரத்தினதுரையின் சில படைப்புகள்.


“ஊர் பிரிந்தோம்
ஏதும் எடுக்கவில்லை
அகப்பட்ட கொஞ்சம் அரிசி,
பருப்பு, இரண்டு பாய், இருமல் மருந்து,
மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,
காற்றுப் போய்க்கிடந்த மிதிவண்டி,
காணியுறுதி,
அடையாள அட்டை அவ்வளவே,
புறப்பட்டு விட்டோம்.
இப்போ உணருகிறேன்
உலகில் தாளாத துயரெது?
ஊரிழந்து போதல் தான்.”

இந்த நிலை - அரை நூற்றாண்டாக... ஈழமண்ணில் தொடர்கிறது. இது நாளையும் தொடரும் என்கிற போது... சொல்லி புலம்ப சொற்களில்லை. இயலாமையால் மனம் மௌனமாகிறது.

“தம்பி பெஞ்சாதியின் தமையன் வீட்டில்
இரவில் பாய்விரிக்க எங்கு இடமிருந்தாலும்
அங்கு உடல் சரிப்பு.
வீட்டுக்காரரின் தூக்கம் கலையுமென
இருமலைக் கூட உள்ளே புதைப்பு
களவுக்கு வந்தவன் போல மனைவியுடன் கதைப்பு
கிணற்று வாளி தட்டுப்பட்டாலே படபடப்பு
ஒண்டுக்கிருத்தல்,
குண்டி கழுவுதல்
ஒவ்வொன்றையும் பயந்தபடி ஒப்பேற்றல்.”

- இப்படி காலம் காலமாக சிதைந்தும் - மனம் சிதையாமல் இருப்பதெப்படி?. நம்பிக்கை. உண்மையின் மேல் ஈழத் தமிழர்கள் வைத்திருக்கும் பெரு நம்பிக்கை. இந்த நூற்றாண்டிற்கு மட்டுமல்ல - இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழனின் விடுதலைப் போராட்டத்திற்கான இந்த “எரிசக்தி” கையிருப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

“இன்று நடை தளர்ந்தும்
நரை விழுந்தும் தள்ளாடும்
ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய இளைஞர்களே!
வெள்ளைத் தோல் சீமான்கள்
வீடு திரும்ப மூட்டை கட்டியபோது
நீங்கள் ஏன் ஊமையானீர்கள்?”

என்று ஒரு ஞாயமான வினாவை தனது கவிதை மூலம் புதுவை இரத்தினதுரை எழுப்புகிறார். செய்யவேண்டிய வேலையை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்து விட்டால் தலைமுறைகள் ஏன் தத்தளித்தாடுகிறது என்று கேட்ட கவிஞர், இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் சுருக்கென சூடு வைக்க தயங்கவில்லை,

“உடல்கீறி விதை போட்டால்
உரமின்றி மரமாகும்
கடல் மீது
வலை போட்டால்
கரையெங்கும் மீனாகும்.
இவளின் சேலையைப் பற்றி
இந்தா ஒருவன்
தெருவில் இழுக்கின்றான்
பார்த்துவிட்டுப்
படுத்துறங்குபவனே!
நீட்டிப்படு.
உனக்கும் நெருப்பூட்டிக் கொளுத்த
அவனுக்கு வசதியாக இருக்கட்டும்.
‘ரோஷ’ நரம்பை
யாருக்கு விற்று விட்டுப்
பேசாமற் கிடக்கின்றாய்?”

- இத்தகைய அற்புத படைப்பின் மூலம் - ஈழத் தமிழ்மக்களை போராட்ட களத்திற்கு செல்ல வழியமைத்தவர் புதுவை இரத்தினதுரை.

“......சும்மா காற்றில் பற்றியா இந்தத் தீ மூண்டது?
இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.
எத்தனை பேரைத் தீய்த்து
இந்த தீ வளர்த்தோம்.
எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்
அணைய விடக்கூடாது
ஊதிக்கொண்டேயிரு.
பற்றியெரியப் போகுதெனப் பதறுவர்
ஊதுவதை நிறுத்தி விடாதே
இந்தத் தீயின் சுவாலையிற்தான்
மண் தின்னிகள் மரணிக்கும்.”

மீண்டும் ஊரில் நுழைய - தெருவில் நடக்க - தன் வீட்டு நிழலில் களைப்பாற துடிக்கும் என் உறவு ஈழத்தமிழினத்திற்கு எப்போது விடிவுகாலம் பொறக்கும் என்று எண்ணும்படியாக துக்கம் தொண்டையை அடைக்க என்னை நிலைதடுமாற செய்தது புதுவை இரத்தினதுரையின் கவிதைகள். அவரின் படைப்பை மொத்தமாக ( நூல்: பூவரசம்வேலியும் புலுனிக் குஞ்சுகளும்; ஆசிரியர்: புதுவை இரத்தினதுரை; வெளியீடு: விடியல் பதிப்பகம், பக்கம்: 432; விலை: ரூ.300) படித்து முடித்தபோது மண்ணைப் பற்றியும், மண்ணுக்கும் மனிதனுக்குமான பாசம் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும், உறவுப் பிரிவின் துயரங்களைப் பற்றியும், வாழ்க்கையின் உன்னதங்கள், அழகியலைப் பற்றியும், புரட்சியைப் பற்றியும், அறுந்துபோகாத உறுதியான நம்பிக்கைகள் எனக்குள்ளே கூடியிருப்பதை உணர்கிறேன்.

உண்மையான ஒவ்வொரு தமிழனிடமும் கவிதை மூலமாக புலம்பினார் புதுவை இரத்தினதுரை. மனித நேயமுள்ள உலகத்து மனிதர்களிடம் புலம்பினார். நெஞ்சு வெடித்து இனத்துக்காகக் கதறிய இந்த கவிஞனுக்கு என்ன சொல்ல போகிறது இந்த உலகம். பதறி துடிக்கும்போது கவனிக்காமல் போய் வழக்கம் போல் எழவுக்கு துக்கம் விசாரிப்பது போலவே இந்த பதிவையும் வருத்தத்தோடு எழுதுகிறேன்.

குறைந்த அளவு இரக்கத்தையாவது உலகம் காட்டியிருக்கக் கூடாதா ஈழமக்களுக்கு..? என் வாழ்நாள் முழுவதும் நினைத்து வெட்கப்படுவேன்.