முருக சிவகுமார் (murugasivakumar)
தமிழக சட்டப்பேரவையில் 24-ஆம் தேதி புதன்கிழமை உயர்கல்வி மானிய கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர் க.பொன்முடி விடையளித்தார், அப்போது கல்லூரி ஆசிரியர்கள் 1000 பேர் புதிதாக அமர்த்தப்பட உள்ளதாக அறிவித்தார். இந்த வேளையில், கல்லூரி ஆசிரியர் பணியமர்த்த முறையில் இருக்கும் முறையற்ற சிக்கல்களை விவாதிப்பது அவசியமாகிறது.


தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக அரசு கலை கல்லூரிகளுக்கு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் விரிவுரையாளர்களை நேரடியாகத் அமர்த்தி வருகிறது. கடந்த 2007ஆம் ஆண்டில் 1000 விரிவுரையாளர்களையும், 2008-இல் 522 விரிவுரையாளர்களையும் அமர்த்தியது. 2009-இல் 1,195 விரிவுரையாளர்களை அமர்த்த எண்ணி செயலாற்றி வருகிறது. இவ்வாறாக பணியில் அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கானோர் முறையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களா என்றால் அது இல்லை. கடந்த ஆட்சியில் 2005ஆம் ஆண்டு போட்டித் தேர்வு மூலம் அரசு பொறியியல் மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஏறக்குறைய 61 ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். இதைப் பின்பற்றி இந்த அரசு பொறியியல் மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 2007ஆம் ஆண்டு 69 ஆசிரியர்களை அமர்த்தியது.
ஆனால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இப்போது வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு எந்த ஒரு போட்டித் தேர்வும் நடத்தப்படுவதில்லை. மாறாக, உயர்கல்வி தகுதி கல்லூரிகளில் பணிபுரிந்த அனுபவம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்து வருகிறது. இந்த முறையில் அதிகப்படியான முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாற்று எழுந்தபோதிலும் அதை நீக்க வழிவகை செய்யாமல் தொடர்ந்து முறையற்ற இந்த முறையிலேயே அமர்த்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

முறையற்ற மதிப்பீடு

இந்தத் தேர்வு முறையின்படி சான்றிதழ் சரிபார்ப்புக்கு 29 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதாவது முனைவர் பட்டத்திற்கு 9 மதிப்பெண்கள், கல்லூரிகளில் பணிபுரிந்த அனுபவத்திற்கு 15 மதிப்பெண்கள், புத்தகம் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் மொத்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்வித் தகுதியை தீர்மானிப்பது பல்கலைக்கழக மானியக்குழு. இக்குழு கடந்த 2006ஆம் ஆண்டு ஓர் இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. அதன்படி ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை முடித்தவரானால் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் விரிவுரையாளர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதோடு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கு தகுதியாகிறார். அவ்வாறு படிப்பை முடித்தவரின் கற்பித்தல் அனுபவம் என்பது ஆய்வியல் நிறைஞர் அல்லது முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு முதல் கணக்கில் கொள்ளப்படும். ஒருவர் சான்றாக ஒருவர் 2004ஆம் ஆண்டு ஆய்வியல் நிறைஞர் படிப்பை முடித்தவரானால் 2008ஆம் ஆண்டு வரை அவர் பணிபுரிந்த அனுபவகாலம் 4 ஆண்டுகள். அவர் பொது முதுநிலை கல்வித் தகுதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தனியார் கல்லூரிகளில் தற்காலிக அல்லது பகுதி நேர விரிவுரையாளராக 2004ஆம் ஆண்டுக்கு முன்னரே பணிபுரிந்ததாலும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெறுவதற்கு முன் அவர் பெற்ற அனுபவம் செல்லத்தக்கது அல்ல. இதை கருத்தில் கொள்ளாமல் மதிப்பெண்களை அரசு ஆசிரியர் தேர்வாணையம் வாரி வழங்கி வருகிறது.

தொலைநிலைக் கல்வியில் எம்.பில்

2006ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு இடைக்கால அறிக்கை வெளியானது. அதுமுதல் புற்றீசல் போல இந்தியாவின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தொலை கல்வி மூலமாக ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை வாரி வழங்கின. இதனால் கடந்த ஆண்டுகளில் இலட்சக்கணக்கானோர் தமிழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை தொலை கல்வி மூலம் பெற்றுள்ளனர். முதுநிலை கல்வித் தகுதியை மட்டும் கொண்டு தனியார் கல்லூரிகளில் பணிபுரிந்த தற்காலிக அல்லது பகுதிநேர விரிவுரையாளர்கள் பின்னாளில் பெறப்பட்ட ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைக் கொண்டு எளிதாக விரிவுரையாளர் வேலையைப் பெற்றுள்ளனர். இதனால் பல்கலைக்கழங்களில் - கல்லூரிகளில் முழு நேரமாகப் படித்து ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டத்தை பெற்றவர்கள் முன்பு குறிப்பிட்ட நபர்களின் ஒத்த வயதினராக இருப்பினும் கற்பித்தல் அனுபவமின்றி வாய்ப்பை முற்றிலுமாக இழந்துவிடுகின்றனர்.

கோட்டைவிட்ட தேர்வு வாரியம்

ஆசிரியர் தேர்வாணையத்தின் மதிப்பெண் விகிதப்படி மொத்த மதிப்பெண்களில் 52 விழுக்காடுகள் கற்பித்தல்அனுபவத்திற்கு வழங்கப்படுகிறது. அவ்வாறிருக்க ஒருவர் பெற்ற அனுபவம், கல்வித் தகுதி பெற்ற ஆண்டுக்குப் பிறகு பெறப்பட்டதா? என்பதைக் கூட கவனிக்க தேர்வு வாரியம் கோட்டைவிட்டது என்பதுதான் உண்மை. இதனால் நடைமுறைக்கு சாத்தியமற்ற பொய்யான அனுபவச் சான்றிதழைக் கொண்டு ஆயிரக்கணக்கானோர் அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களாகக் கடந்த 2 ஆண்டுகளில் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். தேர்வாணையம் பெயரளவுக்கு மட்டும் சிலரை தேர்வுப் பட்டியலிலிருந்து நீக்கியது. ஆனால் 75 விழுக்காட்டினர் பொய்யான சான்றிதழ்களைக் கொண்டு பணியில் சேர்ந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

முழுநேர கல்வி புறக்கணிப்பு

இதேபோன்று முனைவர் பட்டத்தை இருவழிகளில் பெறலாம். ஒன்று பகுதி நேரம். மற்றொன்று முழுநேரம். கல்லூரிகளில் 2 ஆண்டு பணிபுரிந்தவர்களுக்கே பகுதி நேரத்தில் முனைவர் பட்டப்படிப்பு படிக்க பல்கலைக்கழகம் இசைவளித்துள்ளது. ஆசிரியர் தேர்வாணையத்தின் கணக்குப்படி ஒருவர் பகுதி நேரத்தில் 5 ஆண்டுகளில் முனைவர் பட்டத்தை முடித்ததாக எடுத்துக்கொண்டால் அவருக்குக் கிடைக்கும் மதிப்பெண்கள், 5 ஆண்டுகளுக்கான கற்பித்தல் அனுபவத்திற்கு 10 மதிப்பெண்கள், முனைவர் பட்டத்திற்கு 9 மதிப்பெண்கள். ஆகமொத்தம் 19 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதே 5 ஆண்டுகள் ஒருவர் முழு நேரமாக முனைவர் பட்டம் பெற்றால் வெறும் 9 மதிப்பெண்கள் மட்டுமே தேர்வாணையம் வழங்குகிறது என்பது உண்மை. பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்போது கற்பித்தல் அனுபவம், ஆய்வு அனுபவம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த அனுபவம் முதலியவற்றை சமமாக எடுத்துக் கொள்ளும்போது தமிழக அரசால் அமர்த்தப்பட்ட ஆசிரியர் தேர்வாணையத்தால் முழு நேர மாணவரின் ஆய்வு அனுபவம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகிறது. இதனால் 5 முதல் 8 ஆண்டுகள் வரை முழு நேரம் படித்து முனைவர் பட்டம் பெற்ற முழுநேர ஆராய்ச்சி மாணவர்கள் கல்வியாளர்களாகப் பணியாற்ற வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

காற்றில் பறந்த தகுதி

கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பல்கலைக்கழக மானியக் குழுவால் அமைக்கப்பட்ட ஊதிய பரிசீலனைக் குழு கல்லூரி அல்லது பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான ஊதியத்தை 6ஆவது ஊதியக் குழுவிற்குப் பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையில் ஊதியம் மட்டுமின்றி கல்லூரி அல்லது பல்கலைக்கழக ஆசிரியர்களாக வருபவர்களின் கல்வித் தகுதியை முறறிலுமாக மாற்றி அமைத்துள்ளது. இதன்படி ஆய்வியல் நிறைஞர் பட்டம் மட்டும் பெற்ற தகுதியற்றவர்களாகின்றனர். முனைவர் பட்டம் பெற்றவர்களும் முதுநிலை பட்டம் பெற்று பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் விரிவுரையாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களும் மட்டும் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் புதிதாக சேரும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் ஊதியத்தைத் தாண்டுகிறது.
நிலைமை இவ்வாறாக இருக்க தமிழக அரசு புதிதாக விரிவுரையாளர்களை அமர்த்துவதாக அறிவித்து, கடந்த 2 வாரங்களில் அனைத்துப் பாடங்களுக்கும் நேர்காணல் முடிந்துவிட்டது. புதிதாக அமர்த்தப்படும் கல்லூரி ஆசிரியர்களுக்கு 6ஆவது ஊதியக் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுமெனில் பல்கலைக்கழக மானியக் குழுவின் 6ஆவது ஊதியக் குழு வெளியிட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழக ஆசிரியர்களின் குறைந்த அளவு தகுதியை அரசு காற்றில் பறக்கவிட்டது ஏன்? இந்த வினா எழும் என எண்ணிய உயர்கல்வித்துறை அவசர அவசரமாகப் பணி ஆணைகளை வழங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

தமிழக அரசுக்கு சில வினாக்கள்

பல ஆண்டுகள் இடைவிடாமல் முழுநேரமாக கல்லூரிக்கு சென்று படித்து முனைவர் பட்டம் பெற்ற ஒருவருக்கு வேலை வழங்க மறுக்க தமிழக அரசுக்கு, முறையற்ற முறையால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் சில வினாக்களையும் மாற்று திட்டங்களையும் முன்வைக்கிறேன்.

* அனைவருக்கும் கல்வி என்று இந்திய அரசு ஒருபுறம் கூறிக்கொண்டிருக்கும் வேளையில் ஏழை எளிய மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தகுதியற்ற விரிவுரையாளர்களைப் பணியில் தமிழக அரசு அமர்த்துகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பின்பற்றாத முறையற்ற தேர்வு முறையைத் தமிழக அரசு மட்டும் செயல்படுத்துவதன் நோக்கமும் அவசியமும் என்ன?

* பொருளாதாரத்தில் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் பயிலும் பொறியியல் கல்லூரிகளில் 69 விரிவுரையாளர்களைப் பணியில் அமர்த்த தேர்வு ஆணையம் போட்டித் தேர்வு நடத்தி திறமையானவர்களைப் பணியில் அமர்த்தியது. ஆனால் ஏழை எளியோர் பயிலும் அரசு கலைக் கல்லூரிகளில் போட்டித் தேர்வு நடத்தாமல் முறையற்ற தேர்வு முறையைப் பின்பற்றி திறமையற்ற விரிவுரையாளர்களைப் பணியில் அமர்த்துவதன் நோக்கம் என்ன?

* கடைநிலை ஊழியர் பணிளுக்குக்கூட போட்டித் தேர்வு நடத்தும் நிலையில் விரிவுரையாளர் பணி போன்ற உன்னதமான பணிக்குப் போட்டித் தேர்வு நடத்தாமல் தமிழக அரசு உயர்கல்வித்துறையை சீரழிப்பது ஏன்?

* இந்திய ஆட்சிப் பணியாளர்களைவிட அதிக ஊதியத்தைப் பெற இருக்கும் விரிவுரையாளர்களுக்குப் போட்டியின்றி நேர்மையின்றி வேலை வழங்குவது வேதனையாக உள்ளது.

* அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தொலை கல்வி மூலமாக வழங்கப்படும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தின் தரம் குறைவதை கருத்தில் கொள்ளாமல் தகுதி வாய்ந்த முழு நேரமாகப் பட்டம் பெற்ற மாணவர்களை ஒதுக்கி வைத்து பகுதிநேரமாகப் படித்தவர்களுக்கு வேலை வழங்குவது ஏன்?

* உழவர்கள் ஏழை எளிய மக்களின் பிள்ளைகளே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்று வருவதால் கல்வித் தரத்தை மேம்படுத்த முறைகேடான விரிவுரையாளர் தேர்வு முறையை உடனடியாகத் தமிழக அரசு நீக்கம் செய்ய வேண்டும்.

* எதிர்கால மாணவர்களின் நலன் கருதி பொய்யான கற்பித்தல் அனுபவச் சான்று, ஆராய்ச்சி தாள் சான்று அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்ட, அமர்த்தப்படவுள்ள அனைத்து விரிவுரையாளர்களையும் கண்டறிந்து மீண்டும் ஒருமுறை சான்றிதழ்களைச் சரிபார்த்து பணிநீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

படித்தவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லப்படும் நிலையில், முறையாக படித்தவர்களை புறக்கணித்து குறுக்கு வழியில் இலகுவாக படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை தமிழக அரசு உயர்கல்வித்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

(இக்கட்டுரைக்கான தகவல் வழங்கியது: அனைத்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் குழுமம், தென்மண்டல பிரிவு. அவர்களுக்கு நன்றி)
முருக சிவகுமார் (murugasivakumar)

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்தான் இப்போதைய பரபரப்பு. தேர்ச்சி கண்டவர்கள் மகிழ்ச்சி அடைந்து கல்லூரிகளில் சேர தேடி அலைகிறார்கள். தோல்வி கண்டவர்கள் துவண்டுபோய் வேதனை அடைகிறார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்குக் கல்வி அளிக்கும் "மகத்தான" பணியை ஆற்றும் கடமையுள்ள தமிழக அரசு மகிழவும் வேண்டாம்; வேதனைப்படவும் தேவையில்லை. மாறாக வெட்கப்பட வேண்டும்.


இது காட்டமான விமர்சனமாகக் கூட இருக்கலாம். வெளிப்படையான மனநிலையில் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் மாநில அளவில் முதல் மூன்று இடத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே.


ஆக, முதல் மூன்று இடப் பட்டியலில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இடம்பெறவில்லை. ஏன்? இதற்கு யார் பொறுப்பேற்பது? யார் குற்றவாளி? இந்த நிலைக்கு முதலில் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இரண்டாவதாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

மாணவர்களின் நிலைக்கு ஆசிரியர்களையும் அரசையும் குற்றம் சாற்றுவது எந்தவிதத்தில் நியாயம் என்று வினவலாம்.


என் நினைவில் பதிந்த நிகழ்வை உங்களுக்குச் சொல்கிறேன். அரசு பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர் ஒருவர், அவரின் மகனைத் தனியாருக்குச் சொந்தமான மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்திருந்தார். அவரிடம் பேசும்போது, 'அரசு பள்ளியில் பணியாற்றும் நீங்கள், உங்கள் மகனை அதே பள்ளியில் சேர்த்திருக்கலாமே' என்றேன். அதற்கு ஆசிரியர் சொன்ன விடை, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 'அரசு பள்ளிக்கூடத்தில் நண்பகல்வேளை உணவு உண்ணும் போது பன்றிகளும் மாணவர்களும் ஒன்றாக இருக்கும் நிலை உள்ளது. அந்தப் பள்ளியில் என் மகனைச் சேர்த்தால், நான் சரியாகப் படிக்காததற்கு என் அப்பாதான் காரணம் என்று எதிர்காலத்தில் அவன் சொல்வான், அப்பழியை நான் ஏற்க விரும்பவில்லை' என்றார்.


ஆசிரியர்கள் உட்படப் படித்தவர்களின் இந்த நிலைதான். இந்த நிலையை மாற்ற முயற்சிக்காது வெறுமனே பேசும் இந்த மாதிரி ஆட்களால்தான், 12-ஆம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் ஒரு இடத்தைக்கூட அரசு பள்ளி மாணவர்கள் பெறாததற்குக் காரணம்.


'மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்கள் இடம்பெறவில்லையே' என்று ஆசிரியர்களிடம் கேட்டால், 'அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி, அதுங்க திருந்தாதுங்க, யாருக்கு என்ன விதியோ அதுதான் நடக்கும்' என்று சொல்வார்கள். மாணவர்களுக்குத் தரமான கல்வியைத் தரும் பொறுப்புள்ள ஆசிரியர்கள், மாணவர்களைப்பற்றி நிலையான ஒரு எண்ணத்தை வைத்திருக்கின்றனர். இந்த மனநிலையில் மாற்றம் வராதவரை மாநில அளவில், மாவட்ட அளவிலான பட்டியலில் ஒரு மாணவரின் பெயர்கூட சேராது.

தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் இரண்டு, மூன்று மடங்கு அதிகம்.. புதிதாக எதையும் படிக்காமல் எப்போதோ படித்த பாடத்தை மனப்பாடமாக வகுப்பறையில் ஒப்பித்துவிட்டு நேரத்தை கழிக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அக்கறையின்றி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் போக்கில் மாற்றம் வரவேண்டும்.


பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் ஏழைகள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். படிக்காமல் வெயிலிலும் மழையிலும் உழைக்கும் நம் வாழ்க்கை குழந்தைகளுக்கு வந்துவிடக்கூடாது என்று பெற்றோர்கல் அனைவரும் எண்ணுகின்றனர். படிக்காத வறியவர்களின் குழந்தைகள், பள்ளியில் சேர்க்கப்படும்போதே ஏ, பி, சி, டி... சொல்லிக்கொண்டே சேர்வார்களா? இருக்கவே இருக்காது. எதுவும் தெரியாமல் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் கற்பித்து வல்லவர்களாக மாற்றவேண்டும். அதைவிட்டுவிட்டுப் படிக்காத வறியவர்களின் பிள்ளை வளர்ந்த சூழல்தான் சரியில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாற்றுவது எப்படி நியாயமாக இருக்கும்.


தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அதனை ஏற்று நடத்துகிறவர்களுக்கு எப்படியாவது பாடுபட்டு வெற்றியை அடைய வேண்டும் என்று உள்ள உறுதியுடன் வேலை செய்கின்றனர். அந்த இலக்கையும் அடைகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் கூறும்போது, சென்ற கல்வியாண்டில் நான் கற்பிக்கும் பாடத்தில் நல்ல தேர்ச்சி காட்டினால் மட்டுமே, ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு தேர்வு முடிவு எப்படி இருக்குமோ? அச்சமாக இருக்கிறது என்று சொன்னார்.


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த அச்சம் சிறிதும் கிடையாது. காரணம், மாணவர்கள் தேர்ச்சி அடைந்தால் என்ன, தேர்ச்சி பெறவில்லை என்றால் என்ன.. எப்படி இருந்தாலும், அரசு அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கி வருகிறது.

பள்ளிக்கு வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி, பாடம் கற்பித்தாலும் சரி, கற்பிக்காமல் இருந்தாலும் சரி, மாதந்தோறும் ஊதியம் மட்டும் வாங்கிவிடலாம், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு பெறலாம். தனியார் பள்ளி நிருவாகத்தின் கட்டளைக்கு அஞ்சி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் தனியார் ஆசிரியர்களிடம் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பாடம் கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனநிலையில் மாற்றம் வரும். படித்ததற்கு ஊதியம் தருகிறார்கள்.. அந்தப்பணத்தைத் தனியார் பள்ளிகளுக்குக் கட்டணமாகச் செலுத்தி நம் பிள்ளைகளுக்கு மட்டும் தரமான கல்வி கிடைக்கச் செய்கிறோம் என்பதான போக்கை அரசு பள்ளி ஆசிரியர்கள் மாற்றிக்கொள்வார்கள்.


ஆசிரியர்களின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு கடுமையான சில முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும். அதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் அரசு அலுவலர்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது. அரசு பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்களாக இருந்தால் அவர்கள் பணியாற்றும் பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எண்ணம்.


அடுத்து அரசின் பொறுப்பு என்ன? தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஏறக்குறைய ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இவ்வளவு தொகை செலவிட்டும் ஒருவரைக்கூட மாநிலப் பட்டியலில் இடம்பெறச் செய்யவில்லை. அரசு நிதி ஓதுக்கிச் செலவிட்டுத் திட்டங்களைத் தீட்டினால் மட்டும் போதாது. அந்தத் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா? என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியையும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே இருக்கும் இடைவெளியையும் அரசு போக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஒரு கல்வியாண்டின் பாதி ஆண்டுவரை மாணவர்களின் தரத்தை அரசு மதிப்பிட்டு, பெரும் வெற்றிக்கான இலக்கை அடைவதற்குத் தடையாக இருப்பவர்கள் ஆசிரியர்களா? அல்லது மாணவர்களா? என்பதை அறிய வேண்டும். கல்வியில் மாணவர்கள் பின்தங்கியுள்ளதற்கு மாணவர்கள் காரணம் என்றால் அதனைத் தீர்ப்பதற்குப் புதிய திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள்தான் காரணம் என்றால் அத்தகையை ஆசிரியர்களைக் களையெடுக்க வேண்டும். இத்தகைய செயல்களைச் செய்தால் மாணவர்களின் கல்வி மேம்படும்.


இல்லையெனில் தனியாருடன் போட்டிப்போடமுடியாத நிலையில் அரசு பள்ளிகள் இருந்துகொண்டேதான் இருக்கும். குறைந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடையும் மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி வெறும் அரசு உதவித்தொகை பெறுகிறவர்களாக மட்டுமே இருப்பார்கள்.


முத்தாய்ப்பாக ஒன்று சொல்ல வேண்டுமெனில் அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் வலியுறுத்திவரும் சமச்சீர்கல்வியைத் தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் இருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும்.

இல்லையெனில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களுக்கான பட்டியலில் அரசு பள்ளி மாணவர்கள் இல்லை என்ற நிலையை எண்ணித் தமிழக அரசு வெட்கப்பட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும்.

முருக சிவகுமார் (murugasivakumar)
ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். விக்டோரியா மாகாணத்தில் தங்கி படித்துவரும் இந்திய மாணவர்கள் மீது அந்நாட்டு மாணவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரவன் குமார் என்ற மாணவர் உள்பட 4 இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர். இவர்கள் தாக்கப்பட்ட இடம் ஒர் விருந்து நடைபெற்ற இடம்.

அங்கு ஸ்குரூடிரைவரால் குத்தப்பட்ட குமார் என்ற மாணவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர். இராஜேஷ் குமார் என்ற மாணவர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பல்விந்தர் சிங் என்ற மாணவர் கத்தியால் குத்தப்பட்டார். நிறவெறி காரணமாக இந்த தாக்குதல்கள் நடந்ததாக இந்திய மாணவர்கள் சார்பில் கூறப்படுகிறது.


அப்படியானால் இந்தியாவில் இருந்து படிக்க வந்த மாணவர்கள், ஆஸ்திரேலியர்கள் பார்வையில் கறுப்பர்கள். அதாவது, தாழ்ந்தவர்கள் - தீண்டத்தகாதவர்கள் - தங்களைவிட கீழானவர்கள்.


இத்தாக்குதல் குறித்து அறிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சார் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் ஆகிய இருவரும் பதற்றமடைந்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.


பாதிக்கப்பட்டவர்கள், கீழ் நிலை சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் இவ்வளவு விரைவில் பேசியிருப்பார்களா என்று சின்னபுள்ளதனமா கேட்காதீங்க. தமிழக மீனவர்களை இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றபோது தமிழ்நாட்டை சேர்ந்த ப.சிதம்பரம் உயர் பதவியில் இருந்தும் இந்தியப் பிரதமரோ, வெளியுறவுத் துறை அமைச்சரோ ஒரு வார்த்தை கூட பேசவில்லையே!


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், "ஆஸ்திரேலியாவில் இருக்கும் 90,000க்கும் அதிகமான இந்திய மாணவர்களும் எங்கள் நாட்டின் விருந்தினர்கள்" என்று கெவின் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அறிவுகெட்டத்தனமானது" என்று கூறி வருத்தமும், கண்டனமும் தெரிவித்தார்.


"ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அறிந்து வேதனை அடைந்தேன். ஆஸ்திரேலியாவில் நடந்த நிறவெறித் தாக்குதல் மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய களங்கம்" என்று பா.ஜ. தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.


இந்நிலையில் இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க கோரியும் நேற்று ஆஸ்திரேலியா வாழ் இந்திய மாணவர்கள் சம்மேளனம், தேசிய மாணவர்கள் சங்கம் ஆகியவை சார்பில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. மெல்போர்ன் நகரில் ஷரவன் குமார் சிகிச்சை பெற்று வரும் மெல்போர்ன் ராயல் மருத்துவமனை முன்பு தொடங்கி இந்திய மாணவர்கள் சம்மேளன தலைவர் குப்தா தலைமையில் விக்டோரியா நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். நிறவெறி தாக்குதலை நிறுத்து. எங்களுக்கு நீதி வேண்டும். பாரத மாதா வாழ்க’’ என்று முழக்கமிட்டபடி சென்றனர்.


சரி,
இதையெல்லாம் யாவரும் அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். ஆயினும் இது குறித்து நான் எழுதுவதற்கான காரணம்
, "நிறவெறியால் தாக்கப்பட்ட இந்திய மாணவர்கள்" என்ற சொற்கள் என்னை இந்தியாவோடு இணைத்து பல விடயங்களை யோசித்து பார்க்க வைக்கிறது.


தாக்குதலுக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்டவர்களை நிழற்படத்தில் பாருங்கள். இவர்கள் எல்லோரும் வெள்ளைத் தோல் மனிதர்கள். இன்னும் நல்ல சொற்களில் சொல்ல வேண்டுமானால், இவர்கள் இங்கு மேட்டுக்குடிகள். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களை இந்த மேட்டுக்குடிகள் என்ன செய்கிறார்களோ, அது இப்போது நடக்கிறது. (அதற்காக மாணவர் மீதான தாக்குதலை நியாயப்படுத்துகிறேன் என்று நினைக்காதீர்கள்)


உயர் கல்வியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தபோது, "இவர்களெல்லாம் உயர்கல்வி படிக்க வந்துவிட்டால், நாங்கள் தெரு பெருக்க போக வேண்டும்" என்று கூறி துடைப்பத்துடன் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்களில் துளியளவும் நியாயம் இல்லையென்றாலும், இதனை வட இந்திய ஆங்கில ஊடகங்கள் பெரிதாக்கி வெளியிட்டன. இந்த சாதிய மனநிலை மாற்றம் பெறாமலே பல மட்டங்களில் தொடர்கிறது.


காலம் காலமாக இவர்களால் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி ஒடுக்கப்பட்ட தலித் மக்கள், சாதி ரீதியாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.


தெருவில் நடந்தால் தீட்டு, பொது கிணற்றை பயன்படுத்த தடை, தலித் இனத்தை சேர்ந்தவர் படித்து உயந்த பதவியில் இருந்தாலும் கீழானவர்தான், ஆடு, பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகள் புழங்கும் இடங்களை கூட தலித் மக்கள் பயன்படுத்த எதிர்ப்பு, சமூக நீதி கொள்கையில் தலித் மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை சலுகைகள் என்று தவறாக நினைத்து அதனை கேவலப்படுத்தும் சாதி இந்து அதிகாரிகள். சாதி இந்துக்கள் செய்யும் கொடுமைகளை எதிர்த்து பேசினால், மலம் தின்ன வைப்பது, வாயில் சிறுநீர் கழிப்பது. தலித் பெண்தானே என்ற கேடு கேட்ட எண்ணத்தால் வல்லுறவுக்கு ஆட்படுத்துதல். இத்தகைய சாதி கொடுமைகள், நிறவெறியை விட கொடுமையானவை.


நிறவெறியால் பாதிக்கப்பட்ட அந்த மேட்டுக்குடிகள் தான், இந்தியாவில் இத்தகைய நிலை தொடருவதற்கு காரணமானவர்கள். வெள்ளை இனத்தவர்கள் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தவறென்று கூக்குரலிடும் இவர்களும் இவர்களின் உறவினர்களும் இந்திய ஒடுக்கப்பட்டவர்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களும் தவறென்று ஒப்புக்கொண்டு மனம் திருந்த வேண்டும். இன்னும் ஒருபடி போய்கூட முன்னோர்கள் செய்த குற்றத்திற்காக ஒடுக்கப்பட்டவர்கள் முன் மன்னிப்பும் கேட்க வேண்டும்.


"நிறவெறி தாக்குதலை நிறுத்து. எங்களுக்கு நீதி வேண்டும்" என்று பேரணியில் முழக்கமிட்ட இந்த மேட்டுக்குடிகள் - சாதியை பேணுபவர்கள் இந்திய தலித் மக்களுக்கும் நியதி கிடைக்காமல் முட்டுக்கட்டை போடுவதை கைவிட வேண்டும்.


உயர்வு - தாழ்வு, கருப்பு - வெள்ளை , இனம், பால் போன்றவற்றில் வேறுபாடு பார்த்து ஒரு பிரிவு மக்கள் இன்னொரு பிரிவு மககளை ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி துன்பத்தை கொடுக்கக் கூடாது. மனித உரிமைக்கு பங்கம் விளையும்போது பாதிக்கப்பட்டவர் பக்கம் நின்று நியாயம் கிடைக்க போராட வேண்டியது மனிதர்களின் தலையாய கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். தனக்கு ஏற்படும் வலியும் - துன்பமும் போன்றதுதான் பிறருக்கு ஏற்படும் வலியும் - துன்பமும் என்று மனதார உணர வேண்டும்.


ஆஸ்திரேலியாவில் நிறவெறியால் பாதிக்கப்பட்ட இவர்கள், நிறவெறி போன்றதே சாதிவெறியும் மத வெறியும் என்பதை உணர்ந்து சாதி - மதம் அற்ற சமூகத்தை உருவாக முனைய வேண்டும். நிறவெறியால் பாதிக்கப்பட்டபோது துடித்து கண்டித்த ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இந்தியாவில் சாதிவெறி தாக்குதல் நடக்கும்போது கண்டிக்க வேண்டும் அல்லது சாதிவெறி இல்லாமல் தடுக்க வேண்டும்.இதுவே என் எண்ணம்; சமூக ஆர்வலர்களின் எண்ணம்.

இது குறித்து தொடர்ந்து விவாதிக்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.