முருக சிவகுமார் (murugasivakumar)
"கொண்ட இலட்சியம் குன்றிடாத எங்களின் கொள்கை வீரரின் காலடி மண்ணிலே நின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம். நிச்சயம் தமிழீழம் காணுவோம்.

இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது."

-
தமிழ்த்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன்.

................................................................................................................................................................................................................................................

மது தாயகநிலத்தை அழித்து, பின் அபகரிக்க உலக நாடுகளின் உதவியோடு சிங்களப் பேரினவாதம் மேற்கொண்ட இரத்தக் குளியல் நடவடிக்கையின் (Operation BloodBath) இறுதி நாட்கள் எம்மால் நினைத்துப் பார்க்க முடியாதவை. அழுவதற்கும் அவகாசமின்றி அந்தரித்த மக்கள் திரள். அருகில், கண்முன்னே வெடித்துச்சிதறும் ஷெல்களால் துடித்துச் சாகும் உயிர்களின் கடைசிக் கதறல்கள்.

நடந்து விட்டதை அறியும் ஒருகண அவகாசம் கூட இல்லாமல் பிணங்களாய் விழுந்தவரின் உருக்குலைந்த உடல்கள். கை, கால்கள் துண்டிக்கப்பட்டு உதவிகேட்கும் அவலக் குரல்கள்.

பங்கருக்குள் பதுங்கியபடியே பட்டினியில் மயங்கி உயிர்பிரியப் போனவரின் அழுகிய உடல்களது வாடை. அகப்பட்டதை எடுத்துக் கொண்டு உயிர்காக்க அங்குமிங்கும் ஓடியலட்சக்கணக்கான மக்கள் திரளுக்குள் மிதிபட்டு இறந்த பிஞ்சுக் குழந்தைகள், கை கொடுக்க எவருமின்றி ஆங்காங்கே மல்லாக்காய் கிடந்த முதியோர்கள். ஆம், உலகின் மன சாட்சிக் கதவுகள் மூடிக்கிடக்க முள்ளிவாய்க் காலில் இன அழித்தல் கோரத்தாண்டவம் அரங்கேறியது.

இப்பேரழிவுக்கும் நடுவில் கடைசிவரை களமாடியே வீரமரணம் அடைவோம் என உறுமும் துப்பாக்கிகளுடன் எமது புலிவீரர் அணிகள். மே 12 முதல் சீலனின் மரபை எம்வீரர்கள் சுவீகரித்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் தாக்குதல் தளபதியாய் இருந்த சீலன் அண்ணன் சண்டைக்களத்தில் விழுப்புண் அடைந்தபோது,தன்னைச் சுட்டுவிட்டு ய்தத்தை எடுத்துச் சென்று தொடர்ந்துபோரிடு என அருண் என்ற சக போராளிக்கு உத்தரவிட்டார். அந்த மரபையே நாங்கள் சீலன் அண்ணன் மரபு என்கிறோம். அவ்வாறே கடைசி நாட்களில் நாங்கள் களமாடினோம்.

· விமானக் குண்டுவீச்சு, பல்குழல் எறிகணை வீச்சு, டாங்குகளின் ராட்சத குண்டு வீச்சு யாவற்றையும் நேரடியாக எதிர்கொண்டபடி கடற் புலித் தளபதி சூசையோடு தளபதியர்கள் பானு, விடுதலை, புலவர், சிறீராம் அணிகள் இறுதிவரை போராடி மடியும் திட சங்கற்பம் பூண்டவர்களாய் அணிகளை வழிநடத்தினர்.

· தேசியத்தலைவருடன் தளபதியர்கள் பொட்டம்மான், ஜெயம், குமரன் மற்றும்ரட்ணம் மாஸ்டரின் கரும்புலி அணிகள் களத்தில் ஆவேசம் எடுத்து ஆடின.

மே 15 அன்று ஊடறுத்துத் தாக்குதல் நடத்தி காயமுற்றிருந்த சொர்ணம் அண்ணன் தனது உடலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கும்படி எமக்கு கட்டளையிட்டு எம் கண் முன்னாலேயே ''கடைசிவரை போராடுங்கோ. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'' என்று கூறியபடி தன் கழுத்தில் கிடந்த இரு சயனைட் குப்பிகளையும் கடித்து கண்கள் சொருக வீரமரணம் தழுவினார். சொர்ணம் அண்ணன் கேட்டுக்கொண்டபடி, அவரின் திருவுடல் எதிரியின் கையில் கிடைத்து விடக்கூடாதென்ற அவரின் விருப்பத்தை நிறைவேற்ற அவரது உடலை குண்டு வைத்துத் தகர்த்துவிட்டு சூசை அண்ணனிடம் சென்றபோது .நா.பொதுச் செயலரின் தனிச்செயலர் நம்பியார் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அரசியறல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் அண்ணனையும், புலித்தேவனையும் அறிவுறுத்தியன்படி இருவரையும் முல்லைத்தீவு வட்டுவாகலுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார். வெள்ளைக் கொடியேந்திப் போனவர்களின் தொடர்பு வட்டுவாகல் சென்றபின் அறுந்தது.

நடேசன், புலித்தேவன் அண்ணன்களுக்குக் கிடைத்த துரோக மரணம் உலகம் நிச்சயம் எங்களைக் காக்க வராது என்ற செய்தியை எமக்கு உறுதியாக்கியது. இந்நிலையில் தலைவரைக் காப்பது ஒன்றே களத்தில் நின்ற எமது கடமையாகியது. களமுனையில் அவசர மாற்றங்கள் செய்யப்பட்டன. எமது ஆட்லறி பீரங்கிகள் யாவும் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன. கடற்புலி அணிகள் மட்டும் இடைமறிப்புத் தாக்குதல்களில் உக்கிரம் காட்டி நின்றன.

எஞ்சிநின்ற நூற்றுக்கும் குறைவான கடற்புலிகளை காயங்களோடு தளபதி விடுதலை நெறி செய்தார். மே-16 இரவு நந்திக் கடற்கரை வழி முன்னேறியராணுவத்தினருக்கும் தளபதி புலவர் அணியினருக்கும் இடையே அதிகாலை வரை சமர் தொடர்ந்தது. ராணுவத்தின் 53-வது படைப்பிரிவானது முழுப்பலத்துடனான முன்னெடுப்பை புலவரின் சிறு அணி முறியடித்து பலநூறுராணுவத்தினரை கொன்றழித்தது.

அதேநேரத்தில், இரட்டை வாய்க்கால் பகுதியிலிருந்து முன்னேறி வந்த 58-வது படைப்பிரிவு இராணுவத்தினருக்கு தளபதி விடுதலையின் அணி மரண அடி கொடுத்தது. ஆத்திரம்கொண்ட சிங்களராணுவம் தன் வெறிக்கூத்தை அப்பாவி மக்கள் மீது திருப்பியபோதுதான் அலறியடித்த மக்கள்ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் படுத்துப்படுத்து நகர்ந்தனர். சூசை அண்ணனுக்குத் தொடர்பெடுத்து இதனைக் கூறினேன். தொடர்ந்து தலைவரின் நிலை என்ன என்று கேட்டபோது அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள் என்றார்.

மக்கள் இப்போது முழுமையாக வெளியேறத் தொடங்கியிருந்தனர். அதைப் பயன்படுத்தி இராணுவம் எமது நிலைகளை நோக்கி முன்னேறியது. எம்மால் எதிர்தாக்குதல் செய்யமுடியாத நிலை. எம்மைராணுவம் கடந்து முன்னேறிவிட்டபோது, சூசை அண்ணனுக்கு மீண்டும் தொடர்பெடுத்து அதனைச் சொன்னேன். அதற்கு சூசை அண்ணன், நான் ஜக்கத் அடிக்கப் போறேன், நீங்கள் கடைசிவரை சண்டையிடுங்கோ என்றார். ஜக்கத் என்றால் வெடிமருந்து அங்கி அணிந்து எம்மையே தற்கொடையாக்கும் மரபு. அத்தோடு சூசை அண்ணனுனா தொடர்பு அறுந்தது.

சூசையண்ணை இருந்த புளியமரத்தடி எமது நிலையிலிருந்து 300 மீட்டர் தூரம்தான். அவர் இருந்த மண் அணையாலான காப்பரணுக்குள்தான் வெடிபொருட்களும், ய்தங்களும் இருந்தன. அப்பக்கம் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. கருந்திரளான புகை வான்நோக்கி எழுந்தது. கடலில் சரித்திரம் படைத்த எங்கள் சூசைண்ணன் கடற்புலிகள் பிறந்து வளர்ந்த அதே முல்லைத்தீவு கரையில் காவியமானார்.

நெஞ்சுகனத்த வேதனையோடு மீண்டும் களமிறங்கினோம். காயமுற்றுத் துடித்தபடி உறவினரால் கைவிடப்பட்ட மக்களின் கதறல்கள், முனகல்கள், சிதறிய பிணங்களின் அகோரங்கள், முண்டங்கள், தலைகள், சிதறிய உடைமைகள், எரியும் வாகனங்கள் இவற்றினூடே தவழ்ந்து தவழ்ந்து எதிரியின் அணிகளுக்குள் ஊடுருவினோம்.

மே 17 மாலை 7 மணி அளவில்... ஐவர் ஐவராகப் பிரிந்து களமாட முடிவு செய்தோம். எமக்கிடையே எஞ்சியிருந்த எல்லா தொடர்புகளையும் துண்டித்தோம். இறந்துகிடந்தராணுவத்தினரின் சீருடைகளை அகற்றி நாங்கள் அணிந்தோம். அவர்களின் நிலைகள், காவலரண்களில் நின்றபடி இரவு முழுவதும் சமராடினோம்.எனது ஐவர் அணி மட்டுமே அன்றிரவு 50-க்கும் மேலானராணுவத்தினரை அழித்தது.

குடிக்கத் தண்ணீரில்லை. மூன்று நாளுக்கு முன் கிடைத்த ஒரேயொரு மாவு உருண்டையை சாப்பிட்டுவிட்டு இரத்தக்கறை படிந்த உடலும் உடையுமாய், இரண்டு மாதமாய் உறங்காத கண்கள், குண்டுக் கீறல்களில் வழியும்ரத்தம், வலி எதையும்பொருட்படுத்தாது மோதிக் கொண்டிருந்தோம்.

உண்டியலடிச் சந்தியைக் கடந்து பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த கவச வாகனத்திற்கு ஆர்.பி.ஜி. அடித்து எரித்தோம். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் கடும் சண்டை எழவே உள்ளுக்குள் புகுந்து 53-வது படைப்பிரிவுக்கும் 58-வது படைப் பிரிவுக்கும் இடையே சண்டையை மூட்டிவிட்டோம். நூற்றுக்கணக்கானராணுவத்தினர் ஒருவரையொருவர் சுட்டுக் கொன்று கொண்டிருந்தபோது நாங்கள் நந்திக்கடல் பக்கமாய் நகர்ந்தோம்.

எமது ஐவர் அணியில் இருவர் வீரமரணம் அடைய எஞ்சியிருந்த மூவரும் இரட்டைவாய்க்கால் பகுதிக்கு நகர்ந்து அங்கும் இருராணுவ அணிகளுக்கிடையே சண்டையை மூட்டினோம். எமது அணி மட்டுமே அங்கு 200-க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை சுட்டுக்கொன்றது.

மே18 நண்பகல் 12 மணியளவில்... அதேராணுவச் சீருடையுடன் ஒற்றைப்பனையடி நோக்கி நகர்ந்தோம். ராணுவ கவச வாகனம் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர் திசையில்ஆர்.பி.ஜி. உந்துணையோடு வேறொருராணுவ அணி வந்தது. நாங்கள் கவச வாகன அணிநோக்கி தாக்குதல் தொடுக்க அவர்களோ எதிர்திசை ஆர்.பி.ஜி. அணியோடு சண்டையைத் தொடங்கினார்கள். நாங்கள் மீண்டும் நந்திக்கடல் பக்கமாய் முல்லை வீதியை கடக்க முற்பட்டோம். அங்கே காவலரணில் நின்ற மூன்றுராணுவத்தினர் சிங்களத்தில் எங்களைக் கூப்பிட சிக்கல் வருமென்பதால் மூவரையும் சுட்டோம்.

அங்கு சண்டை வெடித்தது. அருகிலுள்ள பனங்கூடலுக்குள் நுழைய முயன்றபோது எங்கிருந்தோ வந்த ஆர்.பி.ஜி. எறிகணை என் காலை பதம் பார்த்தது. தூக்கியெறியப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தேன். எழ முயன்றேன். முடியவில்லை. கண்கள் சுழன்றன. சாவதாய் நினைத்தேன். கண்கள் மூடின. ஆனால், மீண்டும் கண்விழித்தபோது நம்ப முடியவில்லை. உயிருடன் இருந்தேன். முள்ளிவாய்க்காலில் அல்ல. ஸ்ரீலங்காவின் இராணுவ மருத்துவமனையில்.

அங்கிருந்து எப்படித் தப்பினேன் என்பது இன்னொரு நெடிய கதை. உயிரோடிருந்தால் மீண்டும் உங்களுக்கு எழுதுவேன்.

ஆனால் ஒன்று: சுமார் 38,000 மாவீரர்களின் தியாகங்களோடு நான்காம் ஈழப்போர் முற்றுப் பெற்றிருந்தாலும் அவர்களின் குருதிச் சுவடுகளில் பாதம் பதித்தபடி ஐந்தாம் ஈழப்போர் தொடங்கும் என்றேனும் ஒருநாள் தமிழீழம் வெல்லும்.

- அணிதிரள காத்திருக்கும் உம் உறவுகளில் ஒருவன்

-- புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

முருக சிவகுமார் (murugasivakumar)

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக போரை நடத்தி இலட்சக்கணக்கானோரை கொன்றொழித்தது சிங்கள அரசு. இது உலக வரலாற்றில் மாபெரும் அவலமாகும். இதனை உலக நாடுகள் பலவும் கண்டித்த போதிலும் - “இது தமிழர்களுக்கு எதிரான போர் அல்ல; நாட்டை பிரிவினை கோரும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானது” என்று சொல்லியே, உலக நாடுகளின் வாய்களை மூடினார் இராசபக்சே. சில நாடுகள் கொடுத்த உதவியால் அவர் எண்ணத்தின்படி போரை நடத்தி முடித்தார்.


இந்தப் போரினால் பாதிக்கப்பட்டு - கொத்து குண்டுகளில் இருந்து தப்பித்து - இடம்பெயர்ந்த 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பு வலய முகாம்கள் - இடைத்தங்கள் முகாம்கள் என்று கூறி பல்வேறு முகாம்களில் குடும்ப அங்கத்தினரை பிரித்து அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் தமிழர்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து தராமல் வாட்டி வதைப்பதாகவும், அங்கு குறுகிய பரப்பில் பல இலட்சம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் பலர் நோய்வாய்பட்டு தவித்து வருவதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. அத்துடன், முகாம்களில் தங்கியுள்ள பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதும், இளைஞர்கள் கடத்தப்படுவதும், சுட்டு கொல்லப்படுவதும் அரங்கேறின. இதனை அறிந்த உலகநாடுகள் அனைத்தும் கண்டித்த போதிலும், இந்திய அரசு மட்டும் உரத்த குரலில் கண்டனமோ, கடிந்துகொள்ளவோ இல்லை என்பது வெறும் ஏமாற்றமாகவே இருந்தது.


தமிழினம் அவலத்தில் துடிப்பதை கண்டு இந்திய அரசில் உயர் பதவியில் உள்ளவர்கள் சட்டைசெய்யாமல் இருப்பது ஆச்சரியமானதல்ல. அதே சமயத்தில், ஈழத் தமிழர்கள் நம்பி கொண்டிருக்கும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் கோலோட்சி கொண்டிருக்கும் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி வெறும் அறிக்கைகளை வெளியிட்டபடியும், மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதியபடியும் இருந்தார். இதனை சுட்டிக்காட்டிய எதிர்கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர் அல்லலுற்றுவரும் நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசும், மத்திய அரசும் எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.


இந்நிலையில், இலங்கையில் வதை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. - காங்கிரசு கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10-ஆம் தேதி பிற்பகலில் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர். ஈழத் தமிழர் விசயத்தில் அக்கறையுடன் தொடர்ந்து வினா எழுப்பி வந்த தமிழக எதிர்கட்சிகளையும், தமிழின உணர்வாளர்களையும், நடுநிலையான மனிதநேய அமைப்பினரையும் ஒதுக்கிவிட்டு, ஆளும் தி.மு.க. - காங்கிரசு கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் மட்டுமே இலங்கை தமிழர்களின் வாழ்நிலையை அறிந்துகொள்ள சென்றிருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அனைவரும் சந்தேகப்பட்டனர்.


கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்ற தமிழக எம்.பிக்கள் குழு நேரடியாக சென்று வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை சந்திக்கவில்லை. மாறாக, சுற்றுலா சென்றது போல், யாழ் பல்கலைக் கழகத்தையும், அதில் உள்ள நூலகத்தையும் பார்வையிட்டு, அங்குள்ளவர்களிடம் கலந்துரையாடினர். மருத்துவமனையில் படுத்திருக்கும் நோயாளியைப் பார்க்க ஊருக்கு செல்பவர்கள் நேராக மருத்துவமனைக்கு செல்வதுதானே முறை? பிறகு இலங்கை ஆட்சியாளர்கள் அழைத்துச் சென்ற முகாம்களுக்கு மட்டும் சென்று நிலைமைகளைப் பார்த்து, அங்கு தங்கியிருப்பவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர். வெளிநாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களோ அல்லது குழுவினரோ அகதி முகாம்களை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பினால், இலங்கை அரசு அழைத்துச் சென்று காண்பிக்கும் முகாம்கள், வவுனியா மாவட்டத்தில் மானிக் பான் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்கள் . இந்த முகாம்களுக்குத்தான் தமிழக எம்.பிக்கள் குழுவினர் சென்று பார்த்து திரும்பியிருக்கிறார்கள்.


தமிழக எம்.பிக்குழுவின் வருகை தொடர்பாக இலங்கையில் இருந்து வெளிவரும் வீரகேசரி, உதயன், வலம்புரி ஆகிய தமிழ் நாளேடுகள், “இலங்கைக்கு தமிழக எம்.பிக்கள் குழுவின் வருகை அர்த்தமற்றது; அபத்தமானது; வெறும் பம்மாத்து” என்றெல்லாம் வர்ணித்து செய்திகளை வெளியிட்டன. அதேபோல், தமிழகக் குழுவின் மலையக வருகை ஏமாற்றத்தையே தந்துள்ளது என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். ஆக, இந்திய எம்.பிக்கள் இலங்கைக்கு வந்திருந்து உண்மைகளை அறியாமல் இருந்தது அங்குள்ள தமிழர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.


அதோடு, இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமின்றி உலகத்திலுள்ள தமிழர்களுக்கு அதிர்ச்சியளிப்பதான நிகழ்வுகளும் நடந்தேறின. அதாவது, கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி நாளேட்டுக்கு இந்திய நாடாளுமன்றக் குழுவில் சென்ற காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், அளித்த நேர்காணலில், “சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டே இலங்கையில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன” என்று கூறியிருக்கிறார். தமிழர்களை வதைக்கும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஊடகங்களும் கண்டித்து வந்த நிலையில் வதை முகாம்களுக்கு சுதர்சன நாச்சியப்பன் புதிய கண்டுபிடிப்பொன்றை வெளியிட்டு, இராசபக்சேவுக்கே வழிகாட்டியுள்ளார். அதேசமயத்தில், தமிழக நாடாளுமன்றக் குழுவில் சென்ற இன்னொரு காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.எம்.ஆரூண் செய்தியாளர்களிடம், “இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதனைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை” எனக் கூறியிருக்கிறார்.


அதோடு மட்டுமின்றி, இலங்கையின் நிலைமை தொடர்பாக பல்வேறு கருத்துக்களுடன் வருகைதந்த நாங்கள் வடக்கின் உண்மை நிலைமையைப் பார்த்த பின் ஆரோக்கியமான எண்ணங்களுடன் நாடு திரும்புகின்றோம் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அதிபர் இராசபக்சேவிடம் தெரிவித்ததாக அதிபர் ஊடகப் பிரிவின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பிக்களையும் முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திக்க இராசபக்சே அரசு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக எம்.பிக்கள் குழுவை மட்டும் சில முகாம்களுக்குள் அனுமதித்து சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது ஏன்? என்ற கேள்வி அரசியல் சார்பற்ற சாதாரணமானவர்களுக்கும் எழும். அதன் உள்நோக்கத்தை என்னவென்று கணிப்பது?, தமிழக எம்.பிக்கள் குழுவில் இடம் பெற்ற சிலர் அங்கு தெரிவித்த கருத்துக்களுக்கும், எம்.பிக்கள் குழு சென்னைக்குத் திரும்பிய பிறகு முதலமைச்சர் கருணாநிதி வெளிப்படுத்திய கருத்துக்களுக்கும் வேறுபாடு இருக்கவில்லை. அதே சமயத்தில், முகாம்களின் நிலவரம் பற்றி தனியாக அறிக்கை வெளியிடுவேன் என்று தொல்.திருமாவளவன் சொல்லியிருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது.


இதுவரை ஊடகங்கள் வெளிப்படுத்திவந்த முகாம்களின் உண்மை நிலைமையை வெளிப்படுத்தாமல் இராசபக்சே சொன்னவற்றையே கருணாநிதி சொல்லியிருப்பது ஒட்டுமொத்த தமிழினமே அவமானப்படும்படியான துரோகச் செயலாகவே இருக்கிறது. இந்திய - தமிழக அரசின் ஆய்வுக் குழுவாக செல்லாமல், இராசபக்சேவின் அழைப்பின் பேரில் எம்.பி.க்கள் குழு சென்றதாகதானே கருணாநிதி சொன்னார். கலைஞரின் கதை, வசனத்தில் உருவான எம்.பிக்கள் குழு பயணம் இராசபக்சேவுக்கு மிகப்பெரிய ஆறுதலை தந்திருக்கிறது. காரணம் இராசபக்சேவும் கருணாநிதியும் என்ன நோக்கத்திற்காக பயணத்தை திட்டமிட்டார்களோ, அத்திட்டத்தின்படியே எல்லாமும் நடந்தேறியுள்ளது. உலகத் தமிழர்களே... இனியுமா நம்புகிறீர்கள் தமிழகத் தலைவர்களையும் இந்தியாவையும்..?