தமிழக முதல்வர் கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் மாபெரும் கல்வி புரட்சி ஒன்று நடந்து வருவதாகக் கேள்விப்பட்டேன். அங்குள்ள பள்ளியொன்றுக்குச் செல்வதற்கு வழிகேட்டு ஒரு அறையில் நுழைந்தேன். மாணவர்கள், கணினி முன் அமர்ந்து தலையணி குரல் வாங்கியை (ஹெட் போன்) மாட்டிக்கொண்டு அமர்ந்து இருந்தனர். ஏதோ அழைப்பு நடுவத்திற்கு வந்துவிட்டோமே என்று மன தயக்கத்துடன் அறையைவிட்டு வெளியில் செல்வதற்கு முற்பட்டேன். இது அழைப்பு நடுவம் அல்ல; அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப் பள்ளிதான் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது என்னை ஆச்சரியத்தில் ஆழத்தியது.
தமிழக சிற்றூர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தை 12 ஆண்டுகள் படிக்கின்றனர். ஆனாலும் பெரும்பான்மையோருக்கு ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ, படிக்கவோ, புரிந்துகொள்ளவோ இயலுவதில்லை ஆங்கிலத்தில் இருக்கும் விண்ணப்பங்களை நிரப்ப முடியாமல் 80 விழுக்காடு மாணவர்கள் துன்பப்படுகின்றனர்.
பொருளாதாரத்தில் வசதிபடைத்தவர்களின் பிள்ளைகள் அனைவரும் பதின்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்களுக்குச் சிறந்த முறையில் ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படுவதால், உயர்கல்வி பெறுவதிலும் வேலைவாய்ப்பு பெறுவதிலும் அவர்கள் முன்னிலையில் உள்ளனர். அவர்களுடன் சிற்றூர்ப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் போட்டிபோட முடியாமல் வாழ்வில் பின்தங்கி விடுகின்றனர்.
இந்நிலையை மாற்றுவதற்கு தமிழக அரசு முயல வேண்டும் என்று பலமுறை என்னை போன்றோர் எண்ணியதுண்டு. தமிழ் உணர்வுடன் தமிழை படிப்பதும் படிக்க சொல்வதும் முக்கியமானதுதான். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கிலம் தெரியாமல் எந்தத் துறையிலும் வெல்லமுடியாது என்பது உண்மை. கணினி உதவியுடன் ஆங்கிலப் பயிற்சி என்னும் புதிய திட்டத்தைக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு தொடங்கியதைப் பார்க்கும்போது மனதில் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தமிழக முதல்வர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் மேல்நிலைப் பள்ளியில் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இத்திட்டத்தைத் தொடக்கிவைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆங்கிலப் பயிற்சி பெறுவதற்கு ரூ.6 இலட்சம் மதிப்பில் கணினி, மென்பொருள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என நான்கு படிநிலைகளில் உரையாடல் நிகழ்ச்சியாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், குறும்படங்களின் வழியாக உரையாடல் நுணுக்கங்களை அறிதல், விளையாட்டு நிகழ்ச்சிகளின் வழியாக வரி வடிவமைப்பை அறிதல், மென்பொருள் வழியாக இலக்கணம் மற்றும் சொற்களின் உச்சரிப்பை அறிதல் போன்ற முறைகளிலும் பயிற்சிகள் நடைபெறுகிறது. சுவாமி விவேகானந்தர், ஆப்ரகாம் லிங்கன் போன்ற முக்கிய ஆட்களின் ஆங்கில சொற்பொழிவுகள், உரைகள் ஆகியவற்றைக் கொண்டும் மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பது இத்திட்டத்தின் முக்கியக் கூறாகும். அனைத்து வகுப்புகளின் ஆங்கிலப் பாட புத்தகங்கள் குறுந்தகடுகளில் தமிழ் பொருளுடன் உள்ளன. இவை அனைத்தையும் கொண்டு மாணவர்களுக்கு முதுநிலை ஆங்கில ஆசிரியர் பயிற்சியளிக்கிறார்.
திருக்குவளையில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கும் சரவணனிடம் இத்திட்டம் குறித்துக் கேட்டபோது, கணினி ஆய்வகத்தின் மூலம் ஆங்கிலப் பயிற்சி பெறுவது மாணவர்களுக்கு உற்சாகமாக உள்ளது. வகுப்பறைகளில் மாணவர்களின் நடத்தையில் பெரும் மாற்றத்தை இப்பயிற்சி வகுப்புகள் உருவாக்கியுள்ளன. சிறு விளையாட்டு நிகழ்ச்சிகளின் மூலம் ஆங்கிலப் பயிற்சி அளிப்பது விரைவாக மாணவர்களைப் புரிந்துகொள்ள வைக்கிறது என்றார்.
இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்றுவரும் 11-ஆம் வகுப்பு மாணவர் கமலக்கண்ணன் கூறுகையில், கணினி உதவியுடனான ஆங்கிலப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆங்கிலப் பாடங்களைப் பொருளுடன் புரிந்துகொள்ள முடிகிறது. ஆங்கிலத்தில் பேசுவதில் எனக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன் தன்னம்பிக்கையின் அளவும் உயர்ந்துள்ளது என்றார்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பயிற்சி பெறும் ஒரு மாணவரின் தந்தை கூறுகையில், என் மகன் திருக்குவளை மேல்நிலைப் பள்ளியில் 11 -ஆம் வகுப்புப் படித்து வருகிறான். வானொலி, தொலைக்காட்சிகளில் வரும் தமிழ்செய்திகளைப் பார்க்காத, கேட்காத அவன், இப்போது, நாள்தோறும் ஆங்கிலச் செய்திகளைக் கேட்டு புரிந்துகொள்கிறான். இது கணினி உதவியுடனான ஆங்கிலப் பயிற்சி திட்டத்தின் பயனாகும் என்கிறார்.
இந்த ஆங்கிலப் பயிற்சித் திட்டத்தை 30 பள்ளிகளில் விரைவில் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் தொடங்க உள்ளதாகவும் நாகை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா தெரிவிக்கிறார்.
கொம்புகள் சீவப்பட்ட நிலையில் களத்தில் நிற்கும் காளையுடன் முனை மழுங்கிய கொம்புடன் இருக்கும் காளை எப்படி போட்டிபோட முடியும். போட்டியிட்டாலும் தோல்வியே மிஞ்சும். ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியாத சிற்றூர்ப்புற மாணவர்கள், வேலைவாய்ப்புப் பெறுவதற்குப் பெரும் துன்பப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ முடிவதில்லை.
கணினி உதவியுடன் ஆங்கிலப்பயிற்சி அளிக்கும் இந்தப் புதிய முறையை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் பொருளாதாரத்தில் வசதி படைத்த மாணவர்களுடன் ஏழை மாணவர்களும் போட்டிபோட முடியும். இதுவே, என் போன்றோரின் எதிர்ப்பார்ப்பாகும். இத்திட்டத்தைத் தமிழக அரசு விரைவில் விரிவுபடுத்தும் என நம்புவோம் .