முருக சிவகுமார் (murugasivakumar)
எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக நண்பர்களே !
‘தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்’ முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தை கூறிக்கொண்டு, உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்!

உங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்!
மெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்!

அடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வளையம் வரச் சொல்லி குண்டு வீசி தாக்கி நூற்றுக்கணக்கான உயிர்கள் உடல் சிதறிப் போனதும் ஆயிரக்கணக்கில் குற்றுயிராய் கிடப்பதுவும் அறிந்திருப்பீர்கள். இன்னும் தொண்டு நிறுவனங்களுக்குத் தடை, சுதந்திர ஊடகம் இல்லை, கொலைக்களத்தில் குரல் கொடுக்க யாருமற்ற ஏதிலிகளாய் நாம் உங்கள் முன்னே மண்டியிட்டு நிற்கிறோம்.
யார் வந்தார் எமை அணைக்க ?
யார் வந்தார் எமை பார்க்க?
யார் வந்தார் எமை தூக்க ?
நாம் சபிக்கப்பட்டவர்களா?
இல்லை, சாவதற்கே பிறந்தவரா?
நாமும் சக மனிதர்களாக தானே பூமியில் பிறந்தோம்?
சாவு மணி அடித்து அடித்து காதே செவிடாகப் போய்விட்டது.
மரணப் படுக்கையில் என் இறுதி ஆசையைக் கேட்கிறேன் சகோதரா ! சாகும் முன் ஒரு முறை விடிவு மணியைக் கேட்க வேண்டும் நான்.
தொப்புள் கொடி உறவுகளே! கூப்பிடு தூரத்தில் தானே நீங்கள் உள்ளீர்கள். எங்கள் குரல் இன்னுமா கேட்கவில்லை. இல்லை இல்லை கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் முத்துக்குமரன் ஒருவன் முளைவிட்டிருக்க மாட்டான்.
இந்தியப் படை வீரர்கள் முன்னணி களத்திலே ,
இந்தியப் போர் கப்பல் பருத்தித்துறைக் கடலிலே,
இந்திய உளவு வானூர்திகள் முல்லைத்தீவு வான் பரப்பிலே.
சிறீலங்கா @பார்ப்படையுடன் மட்டும் என்றால் விடுதலைப் புலிகள் என்றோ வெற்றி சூடி ஈழம் முடித்தே விடுவார்கள். ஆனால், நாம் போராட வேண்டியதோ இந்திய வல்லரசின் துணையுடன் வரும் சிறீலங்கா @பார்ப்படை@யாடல்லவா.
இது தாங்க முடியாத தம்பி தியாகச் சிகரம் முத்துக்குமரன் தன்மீது தீமூட்டி கொண்டான். இதனைக் கொணர்ந்து இன்று இது காட்டுத்தீயாகப் பரவி தமிழகம் எங்கும் எழுச்சிக்கோலம் பூண வைத்துள்ளது.
நண்பர்களே!
உங்கள் கைகள் தான் கறை படியாதவை
உங்கள் உணர்வுகள் தான் நேர்மையானவை
நீங்கள் தான் நாளைய தமிழகத்தின், தமிழீழத்தின் சிற்பிகள்.
உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
உங்கள் முடிவுகள் போரை நிறுத்தட்டும்
உங்கள் வியர்வைகள் ஈழத்தை நிறுவட்டும்
ஓயாது ஒலியுங்கள்
நீங்கள் ஓய்ந்தால்
நாங்கள் வீழ்வது மட்டுமல்ல
நாளை இருக்கவும் மாட்டோம்
இதனை எழுதும் போதும் குண்டுகள் கூவுகின்றன.
இப்போது உங்கள் கைகளில் மட்டும் தான் எங்கள் வாழ்வின் நொடித்துளிகள்.
கந்தகக் காற்றதனே சொந்தமென ஆகி
கண்ணீரில் எம் சொந்தம் கானகங்கள் ஏகி
வந்த பகை சாய்க்க வெஞ்சிரம் கொண்டுள்ளோம்
வாழ்வோ சாவோ இனியெல்லாம் உம் கையில்.
உங்களை நம்பி இன்னும் வன்னியில் சாவுக்குள் வாழ்கின்றோம்
எமக்கு ஓர் இனிய விடியல் பிறக்குமென்று.

ஒலிக்குமா உங்கள் குரல்
கிடைக்குமா உங்கள் கரம்

உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,
சாவின் மடியில் உள்ள ஈழத் தமிழர் சார்பில்
நான்
முருக சிவகுமார் (murugasivakumar)


கவிதை

உறங்கிக் கொண்டிருக்கிறேன்

ஜெ. பிரான்சிஸ் கிருபா

நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்
என் தூக்கத்தின் கதவுகளை தலையால் முட்டாதீர்கள்
ஒரு கையால் வாயைப் பொத்திக் கொள்ளுங்கள்
மறு கையால் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்
மேலும் கைகள் இருந்தால் கடவுளாகிக் கொள்ளுங்கள்
எனக்கொன்றும் வருத்தமில்லை
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்


வேலு தம்பி வந்தால் என்ன
வில்வரத்தினம் வந்தால் என்ன
தமிழ்ச்செல்வன் வந்தால் என்ன
சிவரமணி வந்தால் என்ன

நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

குண்டுகள் விழட்டும்
தோட்டாக்கள் வெடிக்கட்டும்
தமிழன் உடல் தாறுமாறாய் கிழியட்டும்
தமிழச்சி முலையை நாய் கவ்விச் செல்லட்டும்
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

நாடுகள் கூடட்டும்
மாநாடுகள் பேசட்டும்
வீடுகள் அற்றவர்கள்
காடுகள் சேரட்டும்
தடைகளை போடட்டும்
தவிடு பொடியாக்கட்டும்
எனக்கென்ன
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

அவர்கள் சூழட்டும்
கூடி நின்று பதுங்கு குழியில் மோலட்டும்
இறந்து கொண்டிருப்பவர்கள் காயங்களில்
உப்பு எரியட்டும்
அம்மா என்று பிளந்த வாயிலும்
மூத்திரத் துளிகள் உதிரட்டும்
எனக்கென்ன
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

கிராமம் நகரம் யாவும் மரணம்
என்றான தேசத்தில்
ஒரு பெட்டை நாய்கூட
வாழ அஞ்சுகிற கொடுமையான வீதியில்
இலைகளோ கிளைகளோ
வாய்பொத்திக் கொள்ளும் பொழுது
இரவானால் என்ன பகலானால் என்ன எனக்கு?
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

சிவகாம சுந்தரியம்மன் நடை திறப்புக் காண
மனசுக்குள்ளேயே போய்க் கொண்டிருக்கிறார்கள்
பவானியும் செல்வியும் மைதிலியும் மதுசூதனனும்
நடை திறந்தால் என்ன மூடினால் என்ன
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

போர்தான் தேநீர்
போர்தான் சிற்றுண்டி
போர்தான் சோறு
போர்தான் வாழ்வு
போர்தான் மரணம் என்றான நிலத்தில்
தமிழ் நதியாக ஓடட்டும்
கடல் மணியாக ஒலிக்கட்டும்
எனக்கென்னநான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

விழிக்கும்போது
என் கல்லறை வெடிக்கும் ஓசையை
காதுள்ளவர்கள் கேட்கலாம்
கண்ணுள்ளவர்கள் பார்க்கலாம்

('உயிர் எழுத்து', ஜனவரி 2009 இதழில் பிரசுரமாகியுள்ள கவிதை)

முருக சிவகுமார் (murugasivakumar)

இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்க பெரும் போரை அரசு நடத்தி வருகிறது. பல இலட்சம் மக்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர். இதற்கு முன் பல இலட்சம் பேரை கொன்றும் இலங்கை அரசு ஓயவில்லை.

இப்போது இந்திய வல்லரசு தனது படைகளை இலங்கைக்கு அனுப்பி தமிழினத்தை அழித்து வருகிறது. இது எந்த வகையில் நியாயம்?

மனித படுகொலைகளை திட்டமிட்டு நடத்தி வரும் இந்திய - இலங்கை அரசுகளை உலக மக்களே கண்டியுங்கள்... நீங்கள் வாய் மூடி கிடப்பதேன்...