முருக சிவகுமார் (murugasivakumar)
“சட்டப் பேரவை என்பது பழைய பொருள் விற்கும் சந்தை கடை அல்ல. அது Justify Fullமக்களின் எதிர்காலத்தை ஆக்கவும் அழிக்கவும் அதிகாரமுடைய ஓர் இடம். சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்கான ஒரு சட்டத் தீர்மானத்தை முன்னெடுக்கவோ அல்லது மோசமாக்கும் சட்டத் தீர்மானத்தைத் தடுக்கவோ சட்டப்பேரவை உறுப்பினர்களால் முடியும்.“ - இதை சொன்னவர் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கார். இந்த நோக்கத்தை இந்திய சட்டமன்றங்கள் செய்கின்றனவா? என்பது பெரும் ஏமாற்றமாக உள்ளது.

பிகாரில் சபாநாயகர் மீது செருப்பு வீசியது, கருநாடகத்தில் சாப்பிட்டு தூங்கி சபையை அவமதிப்பது, காஷ்மீரில் சபாநாயகர் மீது மைக்கை எறிந்தது. இதையெல்லாம் செய்தவர்கள், மாண்புமிகு எம் எல் ஏக்கள்தான். மாண்புடன் இருக்க வேண்டிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமர்களத்தில் ஈடுபடுவது மக்களின் நலனுக்காக (?!) என்று நினைத்தால் நீங்கள் உலகம் அறியாத அப்பாவிகள். சுருட்டிய பணத்தில், செய்த மோசடிகளில் யார் உச்சம் என்று ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை சுமத்தி அடித்து தாக்குகிறார்கள். சட்டமன்றங்களில் எம் எல் ஏக்கள் நடந்து கொள்வதை கண்ட மக்கள் தாங்கள் அனுப்பிய பிரதிநிதிகளை எண்ணி முகம் சுளிக்கிறார்கள். வெட்கப்பட்டு தலைகுனிகிறார்கள். ஊழல் செய்வதும், அடிதடியில் இறங்கி களேபரத்தில் ஈடுபடுவதும்தான் எம்.எல்.ஏக்களுக்கான தகுதி என்ற தோற்றம் உருவாகி வருகிறது.

பீகாரில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களில் ரூ.11,412 கோடி ஊழல் நடந்திருப்பதாக, விசாரணை அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, ராஷ்டிரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள். அப்போது அவர்கள் தங்கள் முன் இருந்த மைக்குகளை உடைத்தார்கள். மேஜை, நாற்காலிகளை கீழே தள்ளி சாய்த்தார்கள். அவர்கள், சபாநாயகரின் இருக்கைக்கு முன் சென்று, கையில் இருந்த பேப்பர்களை கிழித்து எறிந்தார்கள். அப்போது எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சில உறுப்பினர்கள் லேசான காயம் அடைந்தனர்.

இரண்டாவது நாள் பேரவை தொடங்கியதும் எம்.எல்.ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் மீது செருப்பு வீசப்பட்டது. பல ஆயிரம் மக்களின் ஒற்றை பிரதிநிதியாக இருந்து செயல்பட வேண்டிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் தாக்கிக் கொள்வதை அநாகரீகமாக இருக்கிறது.

பிகாரில்தான் இப்படி என்றால் அதைவிட கேடுகெட்ட நிலையில் கருநாடக சட்ட மன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள். என்னதான் பிரச்சனை என்றாலும் ஒரு நாகரீகத்தோடு நடந்துகொள்வதுதான் மாண்பு. இந்த மேன்மை அதிகார மனம் உள்ளவர்களுக்கு வரவே வராது. ஆனால், ஒரு இடத்திற்கு தர வேண்டிய மதிப்பை தராமல் கருநாடக சட்டப் பேரவை உறுப்பினர்கள் மாண்பற்ற போக்கில் நடந்துகொண்டார்கள். கருநாடகாவில் ரெட்டி சகோதரர்கள் சட்டவிரோதமாக சுரங்க தொழில் நடத்தி செய்து வரும் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் தேவேகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் குதித்தனர்.அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் என்ற ஏன்ற பெயரில் ரவுடித்தனம் செய்தனர். விடிய விடிய அவர்கள் சட்டசபைக்குள்ளேயே இருந்தனர். சட்டசபைக்குள் சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்து தூங்கினார்கள். இந்த கேவலத்தை நாடே காட்சி ஊடகங்களில் வேடிக்கை பார்த்தது. மக்கள் முகம் சுளித்து மனநெருடல் அடைந்தார்கள். ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் காமிரா முன்பு வெட்கமின்றி பல் இளித்தார்கள்.

காஷ்மீர் சட்டமன்றக் கூட்டத்தில் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மெகபூபா எழுந்து, பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பேச அனுமதி கேட்டார். காவலர்களை ஏவல் செய்து அரச பயங்கரவாததை முன்னெடுத்து, ஏதுமறியாத அப்பாவிகளை வஞ்சிக்கும் கொடூர மனம் கொண்ட ஆட்சியாளர்கள் அதிகார மனப்பாண்மையோடு நடந்துகொண்டார்கள். மக்கள் பிரச்சனை குறித்தும், அரச பயங்கரவாதம் குறித்தும் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆவேசமடைந்த மெகபூபா, சபாநாயகர் முகம்மது அக்பரை நோக்கி ஆவேசமாக விரைந்தார்.ஒரு கட்டத்தில் கோபமாகி சபாநாயகர் மேஜையில் இருந்த பொருட்களை கீழே வீசினார். அங்கிருந்த மைக்கைப் பிடுங்கி வீசியபோது அவைக் காவலர்கள் தடுத்து விட்டனர். சபையே சண்டைக்களமாகியது.

இத்தகைய கேடுகெட்ட செயல்பாடுகள் இங்கு விவாதிக்கப்பட்ட பிகார், கருநாடகம், காஷ்மீர் ஆகிய மாநில சட்டமன்றங்களில்தான் நடந்தனவா? இல்லையில்லை. இந்தியாவின் சட்டமன்றங்களில் கூட்டம் நடக்கும்போதெல்லாம் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பதற்றம் நிலவும். எதிர்கட்சி எம்.எல்.ஏக்களும், ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் ரகளையில் ஈடுபட்டு அடித்துக்கொள்வார்கள். இதுதான் சட்டமன்றங்களின் நடவடிக்கைகள். இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட மாநில சட்டமன்றங்கள் அனைத்துமே அதிகார துஷ்பிரயோகத்தோடு, பணம் சம்பாதிக்கும் தொழில் கூடங்களாகவும், கொள்ளை கும்பல்கள் அதிகார போட்டியில் மோதிக்கொள்ளும் மல்யுத்த கூடங்களாகவும் மாறியிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், அதிகார சாதிகளோடு கைகோர்த்து கொண்டு அடித்தள மக்களுக்கு சேரவேண்டிய அவர்களின் உரிமைகள் கூட முழுமையாக சென்று சேர எம்.எல்.ஏக்கள் விடுவதில்லை.

அடித்தள மக்களின் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் வர்க்கங்களின் காலடியில் சரணாகதி அடைந்து நாயினும் கீழாக நக்கி பிழைத்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்து கேட்டால், கட்சித் தலைமையின் கட்டளைக்கு பணிவதாக ஊளையிடுகிறார்கள்.

சாதி அதிகாரங்களுக்கும், கட்சி தலைமை அதிகாரங்களுக்கும் கீழ் பணிந்து நடந்தால் அடித்தளத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு எதுவுமே கிடைக்காது என்பதை நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே நாட்டின் தந்தையாக போற்றும் தகுதி படைத்த தீக்கதரிசி டாக்டர் அம்பத்கர் சுட்டிக்காட்டினார். அதோடு நில்லாமல், சாதி - கட்சி அதிகாரங்களை கடந்து தலித் பிரதிநிதிகள் சுயமாக செயல்பட வேண்டுமானால் இரட்டை வாக்குரிமை முறையை தேர்தலில் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுமேதை அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால், காந்தி உள்ளிட்ட மதவாதிகளும் சாதிவாதிகளும் இரட்டை வாக்குரிமை முறையை கொண்டுவரவிடாமல் தடுத்து நிறுத்தினர். கபட நாடகங்களை நடத்தி தனி தொகுதி முறையை கொண்டுவர அம்பேத்கரை சம்மதிக்க வைத்தார்கள். இதன் விளைவை தலித் பிரதிநிதிகளாக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்களின் செயல்பாடுகள் மூலமாக தலித் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
இத்தகைய அரசியல்வாதிகளை முறைப்படுத்த அரசியல் அமைப்புச் சட்டத்தில், எந்த ஏற்பாட்டையும் செய்யாதிருப்பது வருந்தத்தக்கது. இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நன்னடத்தை விதிகள் வகுக்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு நன்மையை விளைவிக்க ஏற்படுத்தப்பட்ட சட்டமன்றத்திலேயே அத்துமீறல்களை நடத்திவிட்டு எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் தப்புவது வாடிக்கையாகிவிட்டது. சொல்லப் போனால், ஜனநாயகம் பற்றி வாய்க்கிழிய பேசும் எம்.எல்.ஏக்கள் அதை மதிப்பதேயில்லை. அரசியல்வாதிகளை முறைப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் அரசியல்வாதிகளிடம் இருப்பதுதான் வேடிக்கையானது. நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்பும் இந்த கேடுகெட்ட போக்கு நிலவுகிறது. ஆனாலும் உலகிலலேயே இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாம்!?

ஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. சட்ட மன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவிடுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சம்பளமாக பெரும் தொகை வழங்கப்படுகிறது.ஆனால் சட்டமன்றங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் பொன்னான நேரமும், பணமும் வீணாக்கப்படுகின்றன. அது மட்டுமல்ல மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருக்கிறது.

ஆப்ரிக்காவில் உள்ள 26 ஏழைநாடுகளில் உள்ளவர்களை விட, இந்தியாவின் பீகார், சத்திஷ்கர் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள மக்கள் மிக அதிக வறுமையில் வாடுகிறார்கள். யுஎன்டிபி(UNDP) அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட சட்டமன்றங்கள் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகின்றன.

விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் கண்ணியத்தை காக்க கட்டாயமாக மனதளவில் மாற வேண்டும். அவர்கள் நடத்தும் ஆரோக்கியமான விவாதமும் செயல்பாடுகளும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் என்பதால் அரசியல்வாதிகள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்பதே அவர்களை மன்றங்களுக்கு அனுப்பிவைத்த மக்களின் விருப்பம்! பொதுமக்கள் விருப்பப்பட்டால் மட்டும் போதாது விழிப்போடு செயல்பட வேண்டும். இதுதான் சமூக வளர்ச்சிக்கு உதவும் என்பதே சமூக ஆர்வலர்களின் எண்ணம்.
முருக சிவகுமார் (murugasivakumar)
பணத்தை கொட்டி கொடுத்து, தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வாழும் மக்களின் மனங்களில் படிந்திருக்கிறது. மாயை நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்ற உண்மை இந்த ஆண்டு வெளியாகியுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் இருந்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பொதுபுத்தியில் மக்களின் மனவெளியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாயையை நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்ந்தெறிந்திருக்கிறார். ”கறுப்பு வானில்’’ வெள்ளி மீனாய் வெளிப்பட்டு ஜொலிக்கும் இந்த ஜாஸ்மின் வாழ்ந்திருக்கும் வாழ்வையும், அவரது குடும்பச் சூழலையும், அவர் நிகழ்த்திருக்கும் சாதனையையும் ஒருசேர வைத்துப் பார்த்தால் சமூகத்தில் புரையோடி கிடக்கும் பல வினாக்களுக்கு அவர் விடையளித்திருக்கிறார்.

ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு தேர்வு நடக்கும், மாணவர்கள் எழுதுவார்கள், அதில் ஒருவர் முதலிடம் பிடிப்பார். இது ஆண்டுதோறும் நடப்பதுதானே? அது போலவே மாணவி ஜாஸ்மினும் பள்ளி இறுதித் தேர்வில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் அவ்வளவே, என்று பலரும் நினைக்கக் கூடும். அப்படி யாராவது நினைத்தால் அது பேதைமைத்தனம். அவர்கள் சமூகத்தையும் மக்களின் பொதுபுத்தியையும் அறியாதவராக இருப்பார்கள்!

வக்கற்ற ஏழைகள் சும்மா படிப்பதற்குதான் அரசு பள்ளிகள். அதில் படித்தால் உருப்பட முடியாது என்று பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் எண்ணுகிறார்கள். பொட்டப்புள்ளை படிச்சி என்ன பண்ண போகுது... என்று பேதம் பார்க்கும் பல வீடுகளும் இருக்கின்றன. பொருளாதாரத்தில வசதியில்லாததால சரியாக படிக்க முடியல... அவங்க அப்பா - அம்மா படிச்சவங்க; அதனால அவங்களால நல்ல மதிப்பெண் வாங்க முடிஞ்சது! என்று காரணம் சொல்லும் மாணவர்களும் இருக்கிறார்கள். படிப்பெல்லாம் நம்ம புள்ளைகளுக்கு வராது அதெல்லாம் இரத்தத்துல ஊறுனது... என்று தங்களை தாழ்வாகக் கருதி சிலரை மேல்நிலையில் வைத்து கொண்டாடி வெறும் வாயை மெள்ளுகிறவர்கள் நம்பில் ஏராளமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வினாக்களோடு மதம், சாதி, பொருளாதாரம், பால் ஆகியவற்றால் வேற்றுகளை நிறைந்து பிளவுபட்டு கிடக்கின்ற நம் சமுதாயத்தில் மாணவி ஜாஸ்மின் நிகழ்த்திருக்கும் சாதனை ஒன்றல்ல; பல.

அரசு - மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சரியாக சொல்லித் தருவதில்லை என்றும், அங்கு சரியான வசதிகள் இருப்பதில்லை என்றும் சொல்லியே அரசு பள்ளியை பற்றி தாழ்வான நிலைப்பாட்டை மக்களின் மனங்களில் உருவாக்கி வைத்திருக்கும் தனியார் பள்ளி நிருவாகங்கள் கொள்ளை லாபம் அடைந்து வந்தன. அவர்களுக்கு முதல் அடியை ஜாஸ்மின் கொடுத்திருக்கிறார். அதாவது அரசு - மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடத்தை பெற்று அரசு பள்ளிகள் ஒன்றும் குறைந்ததில்லை என்று பறைச்சாற்றிருக்கிறார்.

அதோடு நில்லாமல், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எல்லோரும் கூலிக்கு மாரடிப்பவர்கள்; கடமையை ஒழுங்காக ஆற்றாதவர்கள் என்று பல முனைகளில் இருந்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றச்சாற்றுகளை அள்ளித்தெளிக்கும் சூழலில் சாதனை ஜாஸ்மின், முதலிடத்தை பிடித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான களங்கத்தை போக்கி மாறுபட்ட உரையாடலை தொடங்கி வைத்திருக்கிறார்.

அடுத்து, ஜாஸ்மினின் குடும்பம் நடுத்தர குடும்பம். அவரின் தந்தை சேக்தாவூத் கடந்த 17 ஆண்டுகளாக துணி வியாபாரம் செய்து வருகிறார். பொருளாதார வசதியில்லாத அவர் மிதிவண்டியில் துணிகளை வைத்து ஊர் ஊராக சென்று விற்று வருபவர். தான் பெரிய அளவில் படிக்காததால் தனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண் பிள்ளையான ஜாஸ்மினுக்கு படிப்பதற்கான எந்த தடையையும் விதிக்கவில்லை என்பது பாராட்டுதலுக்குரியது. காரணம், இசுலாமிய சமுதாயத்தில் பெண்களுக்கென எராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் வெளியில் வரவே கூடாது; வீட்டுக்கு உறவினராக ஆண்கள் வந்தால் உள் அறைகளில் பதுங்கிக் கொள்ள வேண்டும். அப்படியே வந்தாலும் கறுப்பு பர்தாவை அணிந்து உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டுதான் பொதுவெளிக்கு வரவேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு மேல்படிப்பு படிக்க ஆர்வம் இருந்தாலும், அதை குழிதோண்டி புதைத்து விட வேண்டும். இப்படிப்பட்ட ஒடுக்கப்படும் நிலைகளையெல்லாம் கடந்து, அடக்குமுறைகளை தகர்த்து கறுப்பு பர்தாவில் ஒளிக்கீற்றாய் ஜாஸ்மின் வெளிப்பட்டிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் - பையன் தேர்வுக்கு படிக்கட்டும், அவனை தொந்தரவு செய்யாதே... பொட்ட புள்ள வீட்டு வேலையெல்லாம் செய்துவிட்டு அப்புறம் படிக்கட்டும்... அது படிச்சி என்ன செய்ய போகுது? என்று சொல்லும் குடும்பங்கள்தான் ஏராளம். இப்படி பெண் பிள்ளைகளை பாவிக்கும் பெற்றோர்களின் மன நிலையை மாற்ற ஜாஸ்மினின் ஒற்றை வெற்றி பயன்படக்கூடும்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த தனக்கு கிடைத்தவற்றை பயன்படுத்திக் கொண்டு படித்து முதலிடத்தை பிடித்திருப்பதன் மூலம் ஏழ்மையை காரணமாக காட்டும் பிள்ளைகளுக்கு ஜாஸ்மின் ஒரு பெரும் பாடத்தையும் கற்பித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் வெளியாகும் 10-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடத்தை பிடிப்பவர் வித்யாலயா என்ற பெயர்களை தாங்கியுள்ள தனியார் பள்ளிகளில் ஒரு பள்ளியைச் சேர்ந்தவராக இருப்பார். அவரின் நிழற்படத்தை பார்த்தோமானால் நெற்றியில் மெல்லிய நாமம் இருக்கும். மேம்படுத்திக் கொண்ட சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பார். தொடர்ச்சியாக இந்த நிலையை காணும் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நம் பிள்ளைகளுக்கு இந்தளவுக்கு படிப்பு வராது என்று கருதிக் கொண்டு படிப்பதற்கு தேவையானதை கூட வாங்கி தராமல் அசட்டையாக புறக்கணிப்பார்கள். அவர்களின் எண்ணங்களை அடித்து தும்சம் செய்துள்ள ஜாஸ்மின், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் பிறந்த பிள்ளைகளும், சமுதாயத்தில் காலங்காலமாக புரையோடி கிடக்கும் கற்பிதங்களையும் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து வெல்ல முடியும் என்று டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் காண விளைந்த கனவை மெய்ப்பித்து அவர்கள் நல்கிய உழைப்புக்கு மதிப்பளித்திருக்கிறார். அந்த சமூக வரலாற்றை ஜாஸ்மினுக்கு யாரும் சொல்லித் தராமல்கூட இருக்கலாம். ஆனாலும், ஜாஸ்மினின் இந்த எழுச்சிக்கு அந்த இருபெரும் தலைவர்களின் பாடு இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை.

இப்படியாக, பொதுமக்களின் மனத்தில் தனியார் பள்ளிகள் உருவாக்கியுள்ள மாயையையும், ஒடுக்கப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பப் பிள்ளைகளால் சாதிக்க முடியுமா? என்ற வினாவையும் தகர்ந்து ஒளிக்கீற்றாய் பாய்ந்து விடை தந்துள்ள ஜாஸ்மினை வாழ்த்துவோம். ஜாஸ்மினுக்கு மட்டுமல்ல; ஒடுக்குமுறைகளை தகர்த்து கிளர்ந்தெழும் எல்லா பெண்களுக்கும் வாழ்த்து கூறி வரவேற்பது நம் கடமையாகும்..!
முருக சிவகுமார் (murugasivakumar)
உலக அரங்கில் பல்வேறு பெருமைகளை நம் நாடு பெற்றிருப்பதாக மார்தட்டிகொள்கிறோம். அதையெல்லாம் தூர தள்ளுகிற ஒரு செயல் புரையோடிக் கிடப்பதை கண்டு நாம் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டியிருக்கிறது. அத்தகைய நிலைக்கு நமது ஆட்சியாளர்களும், அதிகார மட்டத்தில் இருப்பவர்களுமே காரணம் என்பதுதான் வருந்தத்தக்கது. அந்த பெரும் கொடுஞ்செயல் ஊழலை தவிர வேறில்லை!

தனிமனிதர் ஒழுக்கமும் மக்களின் பண்பும்’ என்ற தலைப்பில் நடந்த கருதரங்கில் பேசிய நமது துணை குடியரசு தலைவர் தமீம் அன்சாரி, பொதுமக்களின் சேவையில், குடிமைச் சேவைகள், சட்டம் மற்றும் நீதி ஆகிய மூன்று துறைகளில் ஒழுக்கப் பண்பாடு என்பது இன்று மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், பொது வாழ்வில் ஊழல் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கவலை தெரிவித்தார். அதோடு நில்லாமல், பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளிலும் ஊழல் அதிகரித்ததன் விளைவாக கருப்புப் பண உற்பத்தி, கவலை தரும் பொருளாதார குற்றங்கள், மோசடிகள் மற்றும் ஊழல்கள், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி என்ற வடிவங்களில் சாதாரண பொதுமக்கள் அனுபவிப்பதையும் கவலையுடன் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தக் கவலை குடியரசு துணைத் தலைவருக்கு மட்டும் இருப்பதாக யாரும் கருதிவிட வேண்டாம். நம் நாட்டில் வாழ்கிற கடைக்கோடி குப்பன், சுப்பன் வரை அத்தனை பேருக்குமே அந்தக் கவலை இருந்து வருகிறது. காரணம், நம் நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை பணம் இல்லாமல் எந்தவொரு காரியத்தையும் செய்ய முடியாது என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் கையூட்டுப் பணம் கொடுப்பவரின் எண்ணிக்கையும், அதை வாங்கும் அதிகார மட்டத்தினர் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

பணம் பாதாளம் வரை பாயும் என்று யாரோ சொல்லிய பழமொழி இன்று நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மையாகவே இருந்து வருகிறது. அலுவலகத்தில் ஒரு வேலை ஆகவேண்டி சென்றால், கடை நிலை ஊழியரில் தொடங்கி அத்துறை தலைமை வரை அளந்து கொடுத்தாக வேண்டும். பணம் கொடுக்காவிட்டால், அது இல்லை; இது இல்லை என்று சொல்லி பல நாட்கள் இழுத்தடிக்கப்பட்டு, ஆண்டுகள் உருண்டோடினாலும் அது நம் கைக்கு வந்து சேரவே சேராது. இந்த நிலையை நம் நாட்டில் உள்ள யாரும் மறுப்பதற்கில்லை.

வானம் பார்த்த பூமியே உலகமென எண்ணி வாழ்கிற ஏழை உழைப்பாளியின் மகள் திருமணத்திற்கு உதவியாக இருக்குமென மாநில அரசு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தையும், கருவுற்ற பெண்களுக்கு உதவித் தொகை திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. எந்தவொரு திட்டமும் முழுமையாக சேராத நம் நாட்டில் கிராமப்புற ஏழை பெண்களுக்கான இந்த உதவித் தொகை திட்டங்களும் சேருமா என்ன? முழுமையாக கிடைப்பதில்லை. அதிகாரிகள் மத்தியில் பரவியிருக்கிற ஊழல் என்னும் விஷமே இந்த நிலைக்கு காரணம். அதிகாரிகள் கேட்கிற கையூட்டு பணத்தை கொடுக்காததால், உதவித் தொகைக்கு விண்ணப்பித்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்து அது நடக்கும்போது கூட திருமண உதவித் தொகை கிடைப்பதில்லை என்பது வெட்கக்கேடானது.

சாதியற்ற சமூகம் உருவாக வேண்டுமானால், அகமண முறை ஒழிந்து புறமண முறை பல்கி பெருக வேண்டும் என்று சமூகவியல் ஆய்வாளர் அம்பேத்கர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன் பேரில் சாதிகளை கடந்து வந்து சாதி மறுப்பு திருமணம் புரியும் இணையருக்கு உதவித் தொகையை அரசு அறிவித்திருக்கிறது. இந்த உதவித் தொகை அவர்களுக்கு கிடைக்காமல் முடக்குவதற்கு லஞ்சம் பேராயுதமாக அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வக்கிர மனம் கொண்ட சாதி இந்துக்களின் எண்ணம் ஈடேற்றம் அடைகிறது!

இப்படி அரசு துறை அலுவலகங்களில் கையூட்டு புழங்குவதை அரசு அறிந்திருக்காமல் இல்லை. ஊழலை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கும் அரசின் முயற்சி அவ்வப்போது வெளியே தெரியாமலில்லை. ஊழல் ஒழிப்பு துறை அதிகாரிகளால் நாள்தோறும் பல ஊழல் பெருச்சாலிகள் - அதிகாரிகள் கைது செய்யப்படுவதை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது. அத்தகைய கைது நடவடிக்கையால் ஏதேனும் பயன் விளைந்ததுண்டா? இல்லைவே இல்லை.

ரூ.2500 இலஞ்சம்: கள்ளக்குறிச்சி மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது, ரூ. 2,000 இலஞ்சம்: மின் வாரிய அலுவலர்கள் இருவர் கைது, இலஞ்சம் வாங்கிய வன அதிகாரிகள் 2 பேர் கைது, ரூ. 500 இலஞ்சம் வாங்கிய விழுப்புரம் நர்ஸ் கைது, 17.45 இலட்சம் ரூபாய் கையாடல் கூட்டுறவு வங்கி செயலர் கைது, கர்ப்பிணி உதவித்தொகை வழங்க இலஞ்சம் வாங்கியதாக நர்சு மீது வழக்கு, இலஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் கைது, ரூ.50 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய என்.எல்.சி. பொது மேலாளர் கைது..... இப்படி நாள்தோறும் ஊழல் செய்த - கையூட்டு பெற்ற பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள்.

கைது... வீட்டில் சோதனை, ஆவணங்கள் கைப்பற்றல், பணியிடை நீக்கம்... மீண்டும் பணி... இதுதான் ஊழல் செய்யும் அதிகாரிகள் மீதான தற்போதைய நடவடிக்கைகள். இந்த நடவடிக்கைகளால் எந்தவொரு அதிகாரியும் அச்சமடைந்து கையூட்டு வாங்காமல் இருப்பதில்லை. ஊழல் அதிகாரிகளுக்கு பெரிய தண்டனை ஏதும் வழங்கப்படுவதில்லை என்பதால்தான் மற்ற அதிகாரிகள் அச்சப்படாமல் தங்களது ஊழல் பணியை தொடர்கிறார்கள். இப்படி நடப்பதால்தான் உணவில் தொடங்கி உயிரை காக்கும் மருந்துகள் வரை காலாவதிகளும் கலப்படங்களும் புகுந்திருக்கின்றன. இந்தக் கொடுஞ்செயலை செய்த கொலையாளிகள் அரசதிகாரிகளின் துணையின்றி துணிந்து செய்திருக்க முடியுமா? ஏராளமான அப்பாவி உயிர்கள் செத்து மாண்டாலும் பரவாயில்லை; பல கோடிகளை சேர்த்து வைத்து சுகமான வாழ்வை அனுபவித்து, மீதியானதை பிள்ளைகளுக்கு விட்டு செல்வது என்ற இலக்கு மட்டுமே ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இருக்கிறது.

இதற்கெல்லாம் முடிவு கட்ட யாராலுமே முடியாதா? என்ற கேள்விக்கு ஒரே விடை ஆழ தேடி வேரறுப்பது. அதாவது ஒரு விஷச் செடியை அழிக்க வேண்டுமானால் கிளை நுனிகளை முறித்துவிட்டால் மட்டும் போதாது, அதன் வேர் பகுதியை தோண்டி முழுவதுமாக அழிக்க வேண்டும். அது போலவே நம் நாட்டிலும் சமுதாயத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஊழல் என்னும் அரக்கனை அழிக்கவும் வேண்டும். இதற்காக துணிச்சலான அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். அந்த நடவடிக்கையை கண்டு ஊழல் பெருச்சாலிகள் கொந்தளிக்கக் கூடும். அவர்கள் என்ன செய்தாலும் தீர்க்கமான நடவடிக்கையை எடுத்தாக வேண்டும்.

நடவடிக்கையை யார் எடுப்பது? - அரசும் ஆட்சியாளர்களும் தான்!

ஆனால், பணியிடை நீக்கம் செய்யப்படுகிற ஊழல் செய்யும் அதிகாரிகள், ஆட்சியாளர்களின் உதவியை நாடி மீண்டும் பணிக்கு திரும்பிவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். ஊழல் செய்யும்போது கையும் களவுமாக பிடிபட்டால், வழக்கு விசாரணை ஏதுமின்றி அந்த இலஞ்சம் வாங்கிய அதிகாரியை மீண்டும் பணியில் எங்கும் சேராதபடி பணி நீக்கம் செய்ய வேண்டும். அதோடு நில்லாமல் அவரின் சொத்துக்கள் அனைத்தையும் கண்டறிந்து அரசுடைமையாக்க வேண்டும். அப்போதுதாவது அதிகாரிகள் திருந்துவார்களா? என்பதை பார்ப்போம்.

கடை நிலை பதவி - உயர் பதவி, அதிகாரிகள் - ஆட்சியாளர்கள் என வலைப்பின்னலாக இருக்கிற இந்த ஊழலை ஒழிக்க கடுமையான சட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டுவருவார்கள் என்று சொன்னால் பொதுமக்கள் சிரிக்கிறார்கள். வேறென்ன சாதாரண மக்களால் செய்ய முடியும்!