முருக சிவகுமார் (murugasivakumar)
"கொண்ட இலட்சியம் குன்றிடாத எங்களின் கொள்கை வீரரின் காலடி மண்ணிலே நின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம். நிச்சயம் தமிழீழம் காணுவோம்.

இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது."

-
தமிழ்த்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன்.

................................................................................................................................................................................................................................................

மது தாயகநிலத்தை அழித்து, பின் அபகரிக்க உலக நாடுகளின் உதவியோடு சிங்களப் பேரினவாதம் மேற்கொண்ட இரத்தக் குளியல் நடவடிக்கையின் (Operation BloodBath) இறுதி நாட்கள் எம்மால் நினைத்துப் பார்க்க முடியாதவை. அழுவதற்கும் அவகாசமின்றி அந்தரித்த மக்கள் திரள். அருகில், கண்முன்னே வெடித்துச்சிதறும் ஷெல்களால் துடித்துச் சாகும் உயிர்களின் கடைசிக் கதறல்கள்.

நடந்து விட்டதை அறியும் ஒருகண அவகாசம் கூட இல்லாமல் பிணங்களாய் விழுந்தவரின் உருக்குலைந்த உடல்கள். கை, கால்கள் துண்டிக்கப்பட்டு உதவிகேட்கும் அவலக் குரல்கள்.

பங்கருக்குள் பதுங்கியபடியே பட்டினியில் மயங்கி உயிர்பிரியப் போனவரின் அழுகிய உடல்களது வாடை. அகப்பட்டதை எடுத்துக் கொண்டு உயிர்காக்க அங்குமிங்கும் ஓடியலட்சக்கணக்கான மக்கள் திரளுக்குள் மிதிபட்டு இறந்த பிஞ்சுக் குழந்தைகள், கை கொடுக்க எவருமின்றி ஆங்காங்கே மல்லாக்காய் கிடந்த முதியோர்கள். ஆம், உலகின் மன சாட்சிக் கதவுகள் மூடிக்கிடக்க முள்ளிவாய்க் காலில் இன அழித்தல் கோரத்தாண்டவம் அரங்கேறியது.

இப்பேரழிவுக்கும் நடுவில் கடைசிவரை களமாடியே வீரமரணம் அடைவோம் என உறுமும் துப்பாக்கிகளுடன் எமது புலிவீரர் அணிகள். மே 12 முதல் சீலனின் மரபை எம்வீரர்கள் சுவீகரித்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் தாக்குதல் தளபதியாய் இருந்த சீலன் அண்ணன் சண்டைக்களத்தில் விழுப்புண் அடைந்தபோது,தன்னைச் சுட்டுவிட்டு ய்தத்தை எடுத்துச் சென்று தொடர்ந்துபோரிடு என அருண் என்ற சக போராளிக்கு உத்தரவிட்டார். அந்த மரபையே நாங்கள் சீலன் அண்ணன் மரபு என்கிறோம். அவ்வாறே கடைசி நாட்களில் நாங்கள் களமாடினோம்.

· விமானக் குண்டுவீச்சு, பல்குழல் எறிகணை வீச்சு, டாங்குகளின் ராட்சத குண்டு வீச்சு யாவற்றையும் நேரடியாக எதிர்கொண்டபடி கடற் புலித் தளபதி சூசையோடு தளபதியர்கள் பானு, விடுதலை, புலவர், சிறீராம் அணிகள் இறுதிவரை போராடி மடியும் திட சங்கற்பம் பூண்டவர்களாய் அணிகளை வழிநடத்தினர்.

· தேசியத்தலைவருடன் தளபதியர்கள் பொட்டம்மான், ஜெயம், குமரன் மற்றும்ரட்ணம் மாஸ்டரின் கரும்புலி அணிகள் களத்தில் ஆவேசம் எடுத்து ஆடின.

மே 15 அன்று ஊடறுத்துத் தாக்குதல் நடத்தி காயமுற்றிருந்த சொர்ணம் அண்ணன் தனது உடலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கும்படி எமக்கு கட்டளையிட்டு எம் கண் முன்னாலேயே ''கடைசிவரை போராடுங்கோ. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'' என்று கூறியபடி தன் கழுத்தில் கிடந்த இரு சயனைட் குப்பிகளையும் கடித்து கண்கள் சொருக வீரமரணம் தழுவினார். சொர்ணம் அண்ணன் கேட்டுக்கொண்டபடி, அவரின் திருவுடல் எதிரியின் கையில் கிடைத்து விடக்கூடாதென்ற அவரின் விருப்பத்தை நிறைவேற்ற அவரது உடலை குண்டு வைத்துத் தகர்த்துவிட்டு சூசை அண்ணனிடம் சென்றபோது .நா.பொதுச் செயலரின் தனிச்செயலர் நம்பியார் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அரசியறல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் அண்ணனையும், புலித்தேவனையும் அறிவுறுத்தியன்படி இருவரையும் முல்லைத்தீவு வட்டுவாகலுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார். வெள்ளைக் கொடியேந்திப் போனவர்களின் தொடர்பு வட்டுவாகல் சென்றபின் அறுந்தது.

நடேசன், புலித்தேவன் அண்ணன்களுக்குக் கிடைத்த துரோக மரணம் உலகம் நிச்சயம் எங்களைக் காக்க வராது என்ற செய்தியை எமக்கு உறுதியாக்கியது. இந்நிலையில் தலைவரைக் காப்பது ஒன்றே களத்தில் நின்ற எமது கடமையாகியது. களமுனையில் அவசர மாற்றங்கள் செய்யப்பட்டன. எமது ஆட்லறி பீரங்கிகள் யாவும் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன. கடற்புலி அணிகள் மட்டும் இடைமறிப்புத் தாக்குதல்களில் உக்கிரம் காட்டி நின்றன.

எஞ்சிநின்ற நூற்றுக்கும் குறைவான கடற்புலிகளை காயங்களோடு தளபதி விடுதலை நெறி செய்தார். மே-16 இரவு நந்திக் கடற்கரை வழி முன்னேறியராணுவத்தினருக்கும் தளபதி புலவர் அணியினருக்கும் இடையே அதிகாலை வரை சமர் தொடர்ந்தது. ராணுவத்தின் 53-வது படைப்பிரிவானது முழுப்பலத்துடனான முன்னெடுப்பை புலவரின் சிறு அணி முறியடித்து பலநூறுராணுவத்தினரை கொன்றழித்தது.

அதேநேரத்தில், இரட்டை வாய்க்கால் பகுதியிலிருந்து முன்னேறி வந்த 58-வது படைப்பிரிவு இராணுவத்தினருக்கு தளபதி விடுதலையின் அணி மரண அடி கொடுத்தது. ஆத்திரம்கொண்ட சிங்களராணுவம் தன் வெறிக்கூத்தை அப்பாவி மக்கள் மீது திருப்பியபோதுதான் அலறியடித்த மக்கள்ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் படுத்துப்படுத்து நகர்ந்தனர். சூசை அண்ணனுக்குத் தொடர்பெடுத்து இதனைக் கூறினேன். தொடர்ந்து தலைவரின் நிலை என்ன என்று கேட்டபோது அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள் என்றார்.

மக்கள் இப்போது முழுமையாக வெளியேறத் தொடங்கியிருந்தனர். அதைப் பயன்படுத்தி இராணுவம் எமது நிலைகளை நோக்கி முன்னேறியது. எம்மால் எதிர்தாக்குதல் செய்யமுடியாத நிலை. எம்மைராணுவம் கடந்து முன்னேறிவிட்டபோது, சூசை அண்ணனுக்கு மீண்டும் தொடர்பெடுத்து அதனைச் சொன்னேன். அதற்கு சூசை அண்ணன், நான் ஜக்கத் அடிக்கப் போறேன், நீங்கள் கடைசிவரை சண்டையிடுங்கோ என்றார். ஜக்கத் என்றால் வெடிமருந்து அங்கி அணிந்து எம்மையே தற்கொடையாக்கும் மரபு. அத்தோடு சூசை அண்ணனுனா தொடர்பு அறுந்தது.

சூசையண்ணை இருந்த புளியமரத்தடி எமது நிலையிலிருந்து 300 மீட்டர் தூரம்தான். அவர் இருந்த மண் அணையாலான காப்பரணுக்குள்தான் வெடிபொருட்களும், ய்தங்களும் இருந்தன. அப்பக்கம் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. கருந்திரளான புகை வான்நோக்கி எழுந்தது. கடலில் சரித்திரம் படைத்த எங்கள் சூசைண்ணன் கடற்புலிகள் பிறந்து வளர்ந்த அதே முல்லைத்தீவு கரையில் காவியமானார்.

நெஞ்சுகனத்த வேதனையோடு மீண்டும் களமிறங்கினோம். காயமுற்றுத் துடித்தபடி உறவினரால் கைவிடப்பட்ட மக்களின் கதறல்கள், முனகல்கள், சிதறிய பிணங்களின் அகோரங்கள், முண்டங்கள், தலைகள், சிதறிய உடைமைகள், எரியும் வாகனங்கள் இவற்றினூடே தவழ்ந்து தவழ்ந்து எதிரியின் அணிகளுக்குள் ஊடுருவினோம்.

மே 17 மாலை 7 மணி அளவில்... ஐவர் ஐவராகப் பிரிந்து களமாட முடிவு செய்தோம். எமக்கிடையே எஞ்சியிருந்த எல்லா தொடர்புகளையும் துண்டித்தோம். இறந்துகிடந்தராணுவத்தினரின் சீருடைகளை அகற்றி நாங்கள் அணிந்தோம். அவர்களின் நிலைகள், காவலரண்களில் நின்றபடி இரவு முழுவதும் சமராடினோம்.எனது ஐவர் அணி மட்டுமே அன்றிரவு 50-க்கும் மேலானராணுவத்தினரை அழித்தது.

குடிக்கத் தண்ணீரில்லை. மூன்று நாளுக்கு முன் கிடைத்த ஒரேயொரு மாவு உருண்டையை சாப்பிட்டுவிட்டு இரத்தக்கறை படிந்த உடலும் உடையுமாய், இரண்டு மாதமாய் உறங்காத கண்கள், குண்டுக் கீறல்களில் வழியும்ரத்தம், வலி எதையும்பொருட்படுத்தாது மோதிக் கொண்டிருந்தோம்.

உண்டியலடிச் சந்தியைக் கடந்து பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த கவச வாகனத்திற்கு ஆர்.பி.ஜி. அடித்து எரித்தோம். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் கடும் சண்டை எழவே உள்ளுக்குள் புகுந்து 53-வது படைப்பிரிவுக்கும் 58-வது படைப் பிரிவுக்கும் இடையே சண்டையை மூட்டிவிட்டோம். நூற்றுக்கணக்கானராணுவத்தினர் ஒருவரையொருவர் சுட்டுக் கொன்று கொண்டிருந்தபோது நாங்கள் நந்திக்கடல் பக்கமாய் நகர்ந்தோம்.

எமது ஐவர் அணியில் இருவர் வீரமரணம் அடைய எஞ்சியிருந்த மூவரும் இரட்டைவாய்க்கால் பகுதிக்கு நகர்ந்து அங்கும் இருராணுவ அணிகளுக்கிடையே சண்டையை மூட்டினோம். எமது அணி மட்டுமே அங்கு 200-க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை சுட்டுக்கொன்றது.

மே18 நண்பகல் 12 மணியளவில்... அதேராணுவச் சீருடையுடன் ஒற்றைப்பனையடி நோக்கி நகர்ந்தோம். ராணுவ கவச வாகனம் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர் திசையில்ஆர்.பி.ஜி. உந்துணையோடு வேறொருராணுவ அணி வந்தது. நாங்கள் கவச வாகன அணிநோக்கி தாக்குதல் தொடுக்க அவர்களோ எதிர்திசை ஆர்.பி.ஜி. அணியோடு சண்டையைத் தொடங்கினார்கள். நாங்கள் மீண்டும் நந்திக்கடல் பக்கமாய் முல்லை வீதியை கடக்க முற்பட்டோம். அங்கே காவலரணில் நின்ற மூன்றுராணுவத்தினர் சிங்களத்தில் எங்களைக் கூப்பிட சிக்கல் வருமென்பதால் மூவரையும் சுட்டோம்.

அங்கு சண்டை வெடித்தது. அருகிலுள்ள பனங்கூடலுக்குள் நுழைய முயன்றபோது எங்கிருந்தோ வந்த ஆர்.பி.ஜி. எறிகணை என் காலை பதம் பார்த்தது. தூக்கியெறியப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தேன். எழ முயன்றேன். முடியவில்லை. கண்கள் சுழன்றன. சாவதாய் நினைத்தேன். கண்கள் மூடின. ஆனால், மீண்டும் கண்விழித்தபோது நம்ப முடியவில்லை. உயிருடன் இருந்தேன். முள்ளிவாய்க்காலில் அல்ல. ஸ்ரீலங்காவின் இராணுவ மருத்துவமனையில்.

அங்கிருந்து எப்படித் தப்பினேன் என்பது இன்னொரு நெடிய கதை. உயிரோடிருந்தால் மீண்டும் உங்களுக்கு எழுதுவேன்.

ஆனால் ஒன்று: சுமார் 38,000 மாவீரர்களின் தியாகங்களோடு நான்காம் ஈழப்போர் முற்றுப் பெற்றிருந்தாலும் அவர்களின் குருதிச் சுவடுகளில் பாதம் பதித்தபடி ஐந்தாம் ஈழப்போர் தொடங்கும் என்றேனும் ஒருநாள் தமிழீழம் வெல்லும்.

- அணிதிரள காத்திருக்கும் உம் உறவுகளில் ஒருவன்

-- புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

Labels: |
1 Response
  1. goutham Says:

    anbulla muruga sivakumar
    goutham

    ungal keetru katturai mikavum arumai

    இறுதி நாளில் நடந்தது என்ன? : ஈழப் போரில் உயிர் தப்பிய போராளியின் அனுபவக் கடிதம்
    mika mika mukkiyamana pathivu
    vazthukkal.
    ungal cell no. anuppi vaikkavum

    anbudan
    goutham