முருக சிவகுமார் (murugasivakumar)
பணத்தை கொட்டி கொடுத்து, தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வாழும் மக்களின் மனங்களில் படிந்திருக்கிறது. மாயை நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்ற உண்மை இந்த ஆண்டு வெளியாகியுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் இருந்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பொதுபுத்தியில் மக்களின் மனவெளியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாயையை நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்ந்தெறிந்திருக்கிறார். ”கறுப்பு வானில்’’ வெள்ளி மீனாய் வெளிப்பட்டு ஜொலிக்கும் இந்த ஜாஸ்மின் வாழ்ந்திருக்கும் வாழ்வையும், அவரது குடும்பச் சூழலையும், அவர் நிகழ்த்திருக்கும் சாதனையையும் ஒருசேர வைத்துப் பார்த்தால் சமூகத்தில் புரையோடி கிடக்கும் பல வினாக்களுக்கு அவர் விடையளித்திருக்கிறார்.

ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு தேர்வு நடக்கும், மாணவர்கள் எழுதுவார்கள், அதில் ஒருவர் முதலிடம் பிடிப்பார். இது ஆண்டுதோறும் நடப்பதுதானே? அது போலவே மாணவி ஜாஸ்மினும் பள்ளி இறுதித் தேர்வில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் அவ்வளவே, என்று பலரும் நினைக்கக் கூடும். அப்படி யாராவது நினைத்தால் அது பேதைமைத்தனம். அவர்கள் சமூகத்தையும் மக்களின் பொதுபுத்தியையும் அறியாதவராக இருப்பார்கள்!

வக்கற்ற ஏழைகள் சும்மா படிப்பதற்குதான் அரசு பள்ளிகள். அதில் படித்தால் உருப்பட முடியாது என்று பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் எண்ணுகிறார்கள். பொட்டப்புள்ளை படிச்சி என்ன பண்ண போகுது... என்று பேதம் பார்க்கும் பல வீடுகளும் இருக்கின்றன. பொருளாதாரத்தில வசதியில்லாததால சரியாக படிக்க முடியல... அவங்க அப்பா - அம்மா படிச்சவங்க; அதனால அவங்களால நல்ல மதிப்பெண் வாங்க முடிஞ்சது! என்று காரணம் சொல்லும் மாணவர்களும் இருக்கிறார்கள். படிப்பெல்லாம் நம்ம புள்ளைகளுக்கு வராது அதெல்லாம் இரத்தத்துல ஊறுனது... என்று தங்களை தாழ்வாகக் கருதி சிலரை மேல்நிலையில் வைத்து கொண்டாடி வெறும் வாயை மெள்ளுகிறவர்கள் நம்பில் ஏராளமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வினாக்களோடு மதம், சாதி, பொருளாதாரம், பால் ஆகியவற்றால் வேற்றுகளை நிறைந்து பிளவுபட்டு கிடக்கின்ற நம் சமுதாயத்தில் மாணவி ஜாஸ்மின் நிகழ்த்திருக்கும் சாதனை ஒன்றல்ல; பல.

அரசு - மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சரியாக சொல்லித் தருவதில்லை என்றும், அங்கு சரியான வசதிகள் இருப்பதில்லை என்றும் சொல்லியே அரசு பள்ளியை பற்றி தாழ்வான நிலைப்பாட்டை மக்களின் மனங்களில் உருவாக்கி வைத்திருக்கும் தனியார் பள்ளி நிருவாகங்கள் கொள்ளை லாபம் அடைந்து வந்தன. அவர்களுக்கு முதல் அடியை ஜாஸ்மின் கொடுத்திருக்கிறார். அதாவது அரசு - மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடத்தை பெற்று அரசு பள்ளிகள் ஒன்றும் குறைந்ததில்லை என்று பறைச்சாற்றிருக்கிறார்.

அதோடு நில்லாமல், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எல்லோரும் கூலிக்கு மாரடிப்பவர்கள்; கடமையை ஒழுங்காக ஆற்றாதவர்கள் என்று பல முனைகளில் இருந்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றச்சாற்றுகளை அள்ளித்தெளிக்கும் சூழலில் சாதனை ஜாஸ்மின், முதலிடத்தை பிடித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான களங்கத்தை போக்கி மாறுபட்ட உரையாடலை தொடங்கி வைத்திருக்கிறார்.

அடுத்து, ஜாஸ்மினின் குடும்பம் நடுத்தர குடும்பம். அவரின் தந்தை சேக்தாவூத் கடந்த 17 ஆண்டுகளாக துணி வியாபாரம் செய்து வருகிறார். பொருளாதார வசதியில்லாத அவர் மிதிவண்டியில் துணிகளை வைத்து ஊர் ஊராக சென்று விற்று வருபவர். தான் பெரிய அளவில் படிக்காததால் தனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண் பிள்ளையான ஜாஸ்மினுக்கு படிப்பதற்கான எந்த தடையையும் விதிக்கவில்லை என்பது பாராட்டுதலுக்குரியது. காரணம், இசுலாமிய சமுதாயத்தில் பெண்களுக்கென எராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் வெளியில் வரவே கூடாது; வீட்டுக்கு உறவினராக ஆண்கள் வந்தால் உள் அறைகளில் பதுங்கிக் கொள்ள வேண்டும். அப்படியே வந்தாலும் கறுப்பு பர்தாவை அணிந்து உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டுதான் பொதுவெளிக்கு வரவேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு மேல்படிப்பு படிக்க ஆர்வம் இருந்தாலும், அதை குழிதோண்டி புதைத்து விட வேண்டும். இப்படிப்பட்ட ஒடுக்கப்படும் நிலைகளையெல்லாம் கடந்து, அடக்குமுறைகளை தகர்த்து கறுப்பு பர்தாவில் ஒளிக்கீற்றாய் ஜாஸ்மின் வெளிப்பட்டிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் - பையன் தேர்வுக்கு படிக்கட்டும், அவனை தொந்தரவு செய்யாதே... பொட்ட புள்ள வீட்டு வேலையெல்லாம் செய்துவிட்டு அப்புறம் படிக்கட்டும்... அது படிச்சி என்ன செய்ய போகுது? என்று சொல்லும் குடும்பங்கள்தான் ஏராளம். இப்படி பெண் பிள்ளைகளை பாவிக்கும் பெற்றோர்களின் மன நிலையை மாற்ற ஜாஸ்மினின் ஒற்றை வெற்றி பயன்படக்கூடும்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த தனக்கு கிடைத்தவற்றை பயன்படுத்திக் கொண்டு படித்து முதலிடத்தை பிடித்திருப்பதன் மூலம் ஏழ்மையை காரணமாக காட்டும் பிள்ளைகளுக்கு ஜாஸ்மின் ஒரு பெரும் பாடத்தையும் கற்பித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் வெளியாகும் 10-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடத்தை பிடிப்பவர் வித்யாலயா என்ற பெயர்களை தாங்கியுள்ள தனியார் பள்ளிகளில் ஒரு பள்ளியைச் சேர்ந்தவராக இருப்பார். அவரின் நிழற்படத்தை பார்த்தோமானால் நெற்றியில் மெல்லிய நாமம் இருக்கும். மேம்படுத்திக் கொண்ட சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பார். தொடர்ச்சியாக இந்த நிலையை காணும் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நம் பிள்ளைகளுக்கு இந்தளவுக்கு படிப்பு வராது என்று கருதிக் கொண்டு படிப்பதற்கு தேவையானதை கூட வாங்கி தராமல் அசட்டையாக புறக்கணிப்பார்கள். அவர்களின் எண்ணங்களை அடித்து தும்சம் செய்துள்ள ஜாஸ்மின், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் பிறந்த பிள்ளைகளும், சமுதாயத்தில் காலங்காலமாக புரையோடி கிடக்கும் கற்பிதங்களையும் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து வெல்ல முடியும் என்று டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் காண விளைந்த கனவை மெய்ப்பித்து அவர்கள் நல்கிய உழைப்புக்கு மதிப்பளித்திருக்கிறார். அந்த சமூக வரலாற்றை ஜாஸ்மினுக்கு யாரும் சொல்லித் தராமல்கூட இருக்கலாம். ஆனாலும், ஜாஸ்மினின் இந்த எழுச்சிக்கு அந்த இருபெரும் தலைவர்களின் பாடு இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை.

இப்படியாக, பொதுமக்களின் மனத்தில் தனியார் பள்ளிகள் உருவாக்கியுள்ள மாயையையும், ஒடுக்கப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பப் பிள்ளைகளால் சாதிக்க முடியுமா? என்ற வினாவையும் தகர்ந்து ஒளிக்கீற்றாய் பாய்ந்து விடை தந்துள்ள ஜாஸ்மினை வாழ்த்துவோம். ஜாஸ்மினுக்கு மட்டுமல்ல; ஒடுக்குமுறைகளை தகர்த்து கிளர்ந்தெழும் எல்லா பெண்களுக்கும் வாழ்த்து கூறி வரவேற்பது நம் கடமையாகும்..!
9 Responses
  1. nagoreismail Says:

    இடுகைக்கு நன்றிகள்


  2. உங்கள் பதிவைப் பாராட்டுகிறேன்.

    ஆனால் நீங்கள் கூறிய கருத்துக்களுக்கு என் பதில்கள்.

    //இசுலாமிய சமுதாயத்தில் பெண்களுக்கென எராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் வெளியில் வரவே கூடாது; வீட்டுக்கு உறவினராக ஆண்கள் வந்தால் உள் அறைகளில் பதுங்கிக் கொள்ள வேண்டும். அப்படியே வந்தாலும் கறுப்பு பர்தாவை அணிந்து உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டுதான் பொதுவெளிக்கு வரவேண்டும்.....கறுப்பு பர்தாவில் ஒளிக்கீற்றாய் ஜாஸ்மின் வெளிப்பட்டிருக்கிறார்//

    இஸ்லாத்தில் அடக்குமுறை என்பதை இந்த மீடியாக்கள் தான் பொய் பிரச்சாரங்கள் செய்து வருகிரார்கள், இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமமான உரிமைகள் கொடுத்துள்ள மார்க்கம், அதை சரிவர சரியான முறை அன்று எடுத்துவைக்காது தான் இஸ்லாத்தை பற்றி தவறான எண்ணங்கள் அனைவரிடம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 20 ஆண்டுகளாக இஸ்லாத்தை சரியான முறையில் எடுத்துறைக்கும் முயற்சியில் சில இஸ்லாமிய இயக்கங்கள் ஈடுபட்டு வெற்றியும் கண்டுவருகிறார்கள்.தமிழகத்தில் இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் படித்து முன்னேறுவதற்கு இஸ்லாத்தை சரியான முறையில் மக்களிடம் எடுத்துறைத்தது தான் காரணமே தவிர, வேறு எந்த புரட்சியும் அல்ல என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

    பர்தாவையும், தலை முக்காடையும் கேவலமாக பேசித் திரியும் பிற்போக்கு காமக்கோமாளிக் கூட்டத்தாரின் முகத்தில் கரியை பூசியிருக்கிறார் சகோதரி ஜாஸ்மின்.

    வெற்றிபெற்ற அனைத்து சகோதரி சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


    அதிரை தாஜூதீன்


  3. Unknown Says:

    கார்ப்பரேசன் ஸ்கூல் என்றால் இளக்காரமாக பார்க்கும் ஒவ்வருவருக்கும் இது ஒரு நெத்தி அடி .
    எங்கே படிச்சா என்ன ? எப்படி படிக்கணும்னு தங்கச்சி ஜாஸ்மின் கிட்டே கேளு .
    ஜாஸ்மின் தங்கச்சிக்கு வாழ்த்துக்கள் ...நெல்லை கார்ப்பரேசன் ஸ்கூல் குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் .


  4. Sakothari Jasmin-ukku tholaipesiyil ennudaiya vazhthukkalaith therivithu vitten. Nanbar Siva kurippiduvathai pola avarudaiya saadhanai samukathil ulavum ennatra kelvikaukku pathilaaka amainthullathu. Salmaavin 'Irandaam jamangalin kathai' novelil varum Rabhiya matrum Mathina ponra sirumikalukku nerntha kodumaiyai thavirtha Jasmin thanthai Thiru.Sheik Dawood avarkalukkum, Maanakaratchi palli aasiriyarkalukkum matrum anaivarukkum nandrikal...

    Warm regards,
    G.Veerapandian,
    Student of Madurai Corporation School Secured state second rank in Geography in +2 in 2000
    Became an IAS officer in 2008
    Appointed as Assistant Collector (UT), Nalgonda District, Andhra Pradesh


  5. THE UFO Says:

    ///இசுலாமிய சமுதாயத்தில் பெண்களுக்கென எராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் வெளியில் வரவே கூடாது;//----வராமல் எப்படி பள்ளி சென்று படித்து சாதித்தார்?

    //வீட்டுக்கு உறவினராக ஆண்கள் வந்தால் உள் அறைகளில் பதுங்கிக் கொள்ள வேண்டும்.// ---எப்படி வெளியில் வந்து ஆண் நிருபர்களின் போட்டோவுக்கு போஸ் கொடுத்து பெட்டி அளித்திருக்கிறார்?

    // அப்படியே வந்தாலும் கறுப்பு பர்தாவை அணிந்து உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டுதான் பொதுவெளிக்கு வரவேண்டும்.//--அப்படித்தானே வந்து உங்கள் முகத்தில் கரி பூசி உள்ளார்.?

    // பெரும்பாலான பெண்களுக்கு மேல்படிப்பு படிக்க ஆர்வம் இருந்தாலும், அதை குழிதோண்டி புதைத்து விட வேண்டும்.//---இல்லையே..இவர் கலக்டர் ஆகப்போவதாய் சொல்லி இருக்கிறாரே? (முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி?)

    // இப்படிப்பட்ட ஒடுக்கப்படும் நிலைகளையெல்லாம் கடந்து, அடக்குமுறைகளை தகர்த்து கறுப்பு பர்தாவில் ஒளிக்கீற்றாய் ஜாஸ்மின் வெளிப்பட்டிருக்கிறார்.// எப்படி போட்டோ ஆதாரத்துடன் வெளியிட்டு அதற்கு நேர்மாராய் போய் சொல்லி இருக்கிறீர்கள்? இதேல்லாம் இந்த சகோதரி உடைத்தெறிந்துதான் வெற்றி பெற்றார் என்று எதற்கு ஆதாரமற்ற கொக்கரிப்பு...?

    ஒரு முஸ்லிம் குண்டு வைத்ததாக பொய்குற்றச்சாட்டு போட்டு கைது செய்யப்பட்டாலும்... எதோ அவர் குற்றம் நிரூபிக்கப்பட்டது போன்றும் உச்சநீதிமன்றமே தீர்ப்பு சொல்லிவிட்டது போன்றும் இஸ்லாமிய தீவிரவாதி கைது இஸ்லாமிய பயங்கரவாதி பிடிபட்டான் என்று தலைப்புச்செய்தி சொல்லியும்... கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டும் மகிழ்ந்த மீடியா இன்று 'அரசுப்பள்ளிமாணவி' முதலிடம் பெற்றார் என்று அடக்கி வாசிக்கின்றன...

    ஏன்? இப்போதும் சொல்லுங்களேன் ... "இஸ்லாமிய மாணவி தமிழ்நாட்டிலேயே முதலிடம் என்று...." . எங்கே சொல்வீர்கள்?

    இவ்வருட ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றவர் ஒரு காஷ்மீரி என்பதாலும் அவர் ஒரு முஸ்லிம் என்பதாலும் இருட்டடிப்பு செய்த மீடியாதானே....!


  6. ஜாஸ்மினுக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள் ...
    காத்திரமான தங்களின் பதிவுக்கு நன்றிகள் ....
    தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்றோரை தாஹுதீன் அவர்கள் அங்கீகரிக்க மறுப்பதில் வியப்பொன்றுமில்லை .....இஸ்லாத்தை சரியான முறையில் மக்களிடம் எடுத்துரைக்க அதற்குரிய சூழல் அவசியம் தோழரே ... அதை யார் ஏற்படுத்தி தந்தார்கள் என்பதெல்லாம் நாம் நினைவில் கொள்ள அவசியம் இல்லை தாம் ...
    நமது ஜாஸ்மீனின் இமாலய சாதனை இஸ்லாமிய மக்களுக்கு கல்வியில் பெரும் நாட்டத்தை ஏற்படுத்தினால் பெரிதும் மகிழ்வேன் .... அதற்க்கு இஸ்லாமிய அமைப்புகள் ஜாஸ்மீனின் வெற்றியை முன்வைத்து பாடுபட வேண்டும் ....

    வருகிறேன் தோழர் சிவா !


  7. Anbu Malar Says:

    ஜாஸ்மினுக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள் ...
    காத்திரமான தங்களின் பதிவுக்கு நன்றிகள் -E Anban


  8. முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள்.
    ஜாஸ்மின்னுக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

    நூறு பதிவுகளில் எழுதவேண்டிய விஷயத்தை ஒரே பதிவில் எழுதிவிட்டீர்கள்.
    உங்கள் எழுத்தில் நேர்மை இருக்கிறது.
    தொடருங்கள்....


  9. ஆம் பர்தா முன்னேற்றத்திற்க்கு தடைகள் என்ற முட்டாள் வாதத்தை சகோதரி ஜாஸ்மீன் உடைதெரிந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். தாஜீதீன் மற்றும் UFO வை வழி மொழிகிறேன். இடுகை எழுதிய உங்கலூக்கு நன்றிகள்