தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக அரசு கலை கல்லூரிகளுக்கு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் விரிவுரையாளர்களை நேரடியாகத் அமர்த்தி வருகிறது. கடந்த 2007ஆம் ஆண்டில் 1000 விரிவுரையாளர்களையும், 2008-இல் 522 விரிவுரையாளர்களையும் அமர்த்தியது. 2009-இல் 1,195 விரிவுரையாளர்களை அமர்த்த எண்ணி செயலாற்றி வருகிறது. இவ்வாறாக பணியில் அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கானோர் முறையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களா என்றால் அது இல்லை. கடந்த ஆட்சியில் 2005ஆம் ஆண்டு போட்டித் தேர்வு மூலம் அரசு பொறியியல் மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஏறக்குறைய 61 ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். இதைப் பின்பற்றி இந்த அரசு பொறியியல் மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 2007ஆம் ஆண்டு 69 ஆசிரியர்களை அமர்த்தியது.
ஆனால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இப்போது வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு எந்த ஒரு போட்டித் தேர்வும் நடத்தப்படுவதில்லை. மாறாக, உயர்கல்வி தகுதி கல்லூரிகளில் பணிபுரிந்த அனுபவம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்து வருகிறது. இந்த முறையில் அதிகப்படியான முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாற்று எழுந்தபோதிலும் அதை நீக்க வழிவகை செய்யாமல் தொடர்ந்து முறையற்ற இந்த முறையிலேயே அமர்த்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
முறையற்ற மதிப்பீடு
இந்தத் தேர்வு முறையின்படி சான்றிதழ் சரிபார்ப்புக்கு 29 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதாவது முனைவர் பட்டத்திற்கு 9 மதிப்பெண்கள், கல்லூரிகளில் பணிபுரிந்த அனுபவத்திற்கு 15 மதிப்பெண்கள், புத்தகம் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் மொத்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்வித் தகுதியை தீர்மானிப்பது பல்கலைக்கழக மானியக்குழு. இக்குழு கடந்த 2006ஆம் ஆண்டு ஓர் இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. அதன்படி ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை முடித்தவரானால் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் விரிவுரையாளர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதோடு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கு தகுதியாகிறார். அவ்வாறு படிப்பை முடித்தவரின் கற்பித்தல் அனுபவம் என்பது ஆய்வியல் நிறைஞர் அல்லது முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு முதல் கணக்கில் கொள்ளப்படும். ஒருவர் சான்றாக ஒருவர் 2004ஆம் ஆண்டு ஆய்வியல் நிறைஞர் படிப்பை முடித்தவரானால் 2008ஆம் ஆண்டு வரை அவர் பணிபுரிந்த அனுபவகாலம் 4 ஆண்டுகள். அவர் பொது முதுநிலை கல்வித் தகுதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தனியார் கல்லூரிகளில் தற்காலிக அல்லது பகுதி நேர விரிவுரையாளராக 2004ஆம் ஆண்டுக்கு முன்னரே பணிபுரிந்ததாலும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெறுவதற்கு முன் அவர் பெற்ற அனுபவம் செல்லத்தக்கது அல்ல. இதை கருத்தில் கொள்ளாமல் மதிப்பெண்களை அரசு ஆசிரியர் தேர்வாணையம் வாரி வழங்கி வருகிறது.
தொலைநிலைக் கல்வியில் எம்.பில்
2006ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு இடைக்கால அறிக்கை வெளியானது. அதுமுதல் புற்றீசல் போல இந்தியாவின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தொலை கல்வி மூலமாக ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை வாரி வழங்கின. இதனால் கடந்த ஆண்டுகளில் இலட்சக்கணக்கானோர் தமிழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை தொலை கல்வி மூலம் பெற்றுள்ளனர். முதுநிலை கல்வித் தகுதியை மட்டும் கொண்டு தனியார் கல்லூரிகளில் பணிபுரிந்த தற்காலிக அல்லது பகுதிநேர விரிவுரையாளர்கள் பின்னாளில் பெறப்பட்ட ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைக் கொண்டு எளிதாக விரிவுரையாளர் வேலையைப் பெற்றுள்ளனர். இதனால் பல்கலைக்கழங்களில் - கல்லூரிகளில் முழு நேரமாகப் படித்து ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டத்தை பெற்றவர்கள் முன்பு குறிப்பிட்ட நபர்களின் ஒத்த வயதினராக இருப்பினும் கற்பித்தல் அனுபவமின்றி வாய்ப்பை முற்றிலுமாக இழந்துவிடுகின்றனர்.
கோட்டைவிட்ட தேர்வு வாரியம்
ஆசிரியர் தேர்வாணையத்தின் மதிப்பெண் விகிதப்படி மொத்த மதிப்பெண்களில் 52 விழுக்காடுகள் கற்பித்தல்அனுபவத்திற்கு வழங்கப்படுகிறது. அவ்வாறிருக்க ஒருவர் பெற்ற அனுபவம், கல்வித் தகுதி பெற்ற ஆண்டுக்குப் பிறகு பெறப்பட்டதா? என்பதைக் கூட கவனிக்க தேர்வு வாரியம் கோட்டைவிட்டது என்பதுதான் உண்மை. இதனால் நடைமுறைக்கு சாத்தியமற்ற பொய்யான அனுபவச் சான்றிதழைக் கொண்டு ஆயிரக்கணக்கானோர் அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களாகக் கடந்த 2 ஆண்டுகளில் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். தேர்வாணையம் பெயரளவுக்கு மட்டும் சிலரை தேர்வுப் பட்டியலிலிருந்து நீக்கியது. ஆனால் 75 விழுக்காட்டினர் பொய்யான சான்றிதழ்களைக் கொண்டு பணியில் சேர்ந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
முழுநேர கல்வி புறக்கணிப்பு
இதேபோன்று முனைவர் பட்டத்தை இருவழிகளில் பெறலாம். ஒன்று பகுதி நேரம். மற்றொன்று முழுநேரம். கல்லூரிகளில் 2 ஆண்டு பணிபுரிந்தவர்களுக்கே பகுதி நேரத்தில் முனைவர் பட்டப்படிப்பு படிக்க பல்கலைக்கழகம் இசைவளித்துள்ளது. ஆசிரியர் தேர்வாணையத்தின் கணக்குப்படி ஒருவர் பகுதி நேரத்தில் 5 ஆண்டுகளில் முனைவர் பட்டத்தை முடித்ததாக எடுத்துக்கொண்டால் அவருக்குக் கிடைக்கும் மதிப்பெண்கள், 5 ஆண்டுகளுக்கான கற்பித்தல் அனுபவத்திற்கு 10 மதிப்பெண்கள், முனைவர் பட்டத்திற்கு 9 மதிப்பெண்கள். ஆகமொத்தம் 19 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதே 5 ஆண்டுகள் ஒருவர் முழு நேரமாக முனைவர் பட்டம் பெற்றால் வெறும் 9 மதிப்பெண்கள் மட்டுமே தேர்வாணையம் வழங்குகிறது என்பது உண்மை. பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்போது கற்பித்தல் அனுபவம், ஆய்வு அனுபவம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த அனுபவம் முதலியவற்றை சமமாக எடுத்துக் கொள்ளும்போது தமிழக அரசால் அமர்த்தப்பட்ட ஆசிரியர் தேர்வாணையத்தால் முழு நேர மாணவரின் ஆய்வு அனுபவம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகிறது. இதனால் 5 முதல் 8 ஆண்டுகள் வரை முழு நேரம் படித்து முனைவர் பட்டம் பெற்ற முழுநேர ஆராய்ச்சி மாணவர்கள் கல்வியாளர்களாகப் பணியாற்ற வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
காற்றில் பறந்த தகுதி
கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பல்கலைக்கழக மானியக் குழுவால் அமைக்கப்பட்ட ஊதிய பரிசீலனைக் குழு கல்லூரி அல்லது பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான ஊதியத்தை 6ஆவது ஊதியக் குழுவிற்குப் பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையில் ஊதியம் மட்டுமின்றி கல்லூரி அல்லது பல்கலைக்கழக ஆசிரியர்களாக வருபவர்களின் கல்வித் தகுதியை முறறிலுமாக மாற்றி அமைத்துள்ளது. இதன்படி ஆய்வியல் நிறைஞர் பட்டம் மட்டும் பெற்ற தகுதியற்றவர்களாகின்றனர். முனைவர் பட்டம் பெற்றவர்களும் முதுநிலை பட்டம் பெற்று பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் விரிவுரையாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களும் மட்டும் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் புதிதாக சேரும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் ஊதியத்தைத் தாண்டுகிறது.
நிலைமை இவ்வாறாக இருக்க தமிழக அரசு புதிதாக விரிவுரையாளர்களை அமர்த்துவதாக அறிவித்து, கடந்த 2 வாரங்களில் அனைத்துப் பாடங்களுக்கும் நேர்காணல் முடிந்துவிட்டது. புதிதாக அமர்த்தப்படும் கல்லூரி ஆசிரியர்களுக்கு 6ஆவது ஊதியக் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுமெனில் பல்கலைக்கழக மானியக் குழுவின் 6ஆவது ஊதியக் குழு வெளியிட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழக ஆசிரியர்களின் குறைந்த அளவு தகுதியை அரசு காற்றில் பறக்கவிட்டது ஏன்? இந்த வினா எழும் என எண்ணிய உயர்கல்வித்துறை அவசர அவசரமாகப் பணி ஆணைகளை வழங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
தமிழக அரசுக்கு சில வினாக்கள்
பல ஆண்டுகள் இடைவிடாமல் முழுநேரமாக கல்லூரிக்கு சென்று படித்து முனைவர் பட்டம் பெற்ற ஒருவருக்கு வேலை வழங்க மறுக்க தமிழக அரசுக்கு, முறையற்ற முறையால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் சில வினாக்களையும் மாற்று திட்டங்களையும் முன்வைக்கிறேன்.
* அனைவருக்கும் கல்வி என்று இந்திய அரசு ஒருபுறம் கூறிக்கொண்டிருக்கும் வேளையில் ஏழை எளிய மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தகுதியற்ற விரிவுரையாளர்களைப் பணியில் தமிழக அரசு அமர்த்துகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பின்பற்றாத முறையற்ற தேர்வு முறையைத் தமிழக அரசு மட்டும் செயல்படுத்துவதன் நோக்கமும் அவசியமும் என்ன?
* பொருளாதாரத்தில் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் பயிலும் பொறியியல் கல்லூரிகளில் 69 விரிவுரையாளர்களைப் பணியில் அமர்த்த தேர்வு ஆணையம் போட்டித் தேர்வு நடத்தி திறமையானவர்களைப் பணியில் அமர்த்தியது. ஆனால் ஏழை எளியோர் பயிலும் அரசு கலைக் கல்லூரிகளில் போட்டித் தேர்வு நடத்தாமல் முறையற்ற தேர்வு முறையைப் பின்பற்றி திறமையற்ற விரிவுரையாளர்களைப் பணியில் அமர்த்துவதன் நோக்கம் என்ன?
* கடைநிலை ஊழியர் பணிளுக்குக்கூட போட்டித் தேர்வு நடத்தும் நிலையில் விரிவுரையாளர் பணி போன்ற உன்னதமான பணிக்குப் போட்டித் தேர்வு நடத்தாமல் தமிழக அரசு உயர்கல்வித்துறையை சீரழிப்பது ஏன்?
* இந்திய ஆட்சிப் பணியாளர்களைவிட அதிக ஊதியத்தைப் பெற இருக்கும் விரிவுரையாளர்களுக்குப் போட்டியின்றி நேர்மையின்றி வேலை வழங்குவது வேதனையாக உள்ளது.
* அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தொலை கல்வி மூலமாக வழங்கப்படும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தின் தரம் குறைவதை கருத்தில் கொள்ளாமல் தகுதி வாய்ந்த முழு நேரமாகப் பட்டம் பெற்ற மாணவர்களை ஒதுக்கி வைத்து பகுதிநேரமாகப் படித்தவர்களுக்கு வேலை வழங்குவது ஏன்?
* உழவர்கள் ஏழை எளிய மக்களின் பிள்ளைகளே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்று வருவதால் கல்வித் தரத்தை மேம்படுத்த முறைகேடான விரிவுரையாளர் தேர்வு முறையை உடனடியாகத் தமிழக அரசு நீக்கம் செய்ய வேண்டும்.
* எதிர்கால மாணவர்களின் நலன் கருதி பொய்யான கற்பித்தல் அனுபவச் சான்று, ஆராய்ச்சி தாள் சான்று அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்ட, அமர்த்தப்படவுள்ள அனைத்து விரிவுரையாளர்களையும் கண்டறிந்து மீண்டும் ஒருமுறை சான்றிதழ்களைச் சரிபார்த்து பணிநீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
படித்தவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லப்படும் நிலையில், முறையாக படித்தவர்களை புறக்கணித்து குறுக்கு வழியில் இலகுவாக படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை தமிழக அரசு உயர்கல்வித்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.
(இக்கட்டுரைக்கான தகவல் வழங்கியது: அனைத்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் குழுமம், தென்மண்டல பிரிவு. அவர்களுக்கு நன்றி)