தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்தான் இப்போதைய பரபரப்பு. தேர்ச்சி கண்டவர்கள் மகிழ்ச்சி அடைந்து கல்லூரிகளில் சேர தேடி அலைகிறார்கள். தோல்வி கண்டவர்கள் துவண்டுபோய் வேதனை அடைகிறார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்குக் கல்வி அளிக்கும் "மகத்தான" பணியை ஆற்றும் கடமையுள்ள தமிழக அரசு மகிழவும் வேண்டாம்; வேதனைப்படவும் தேவையில்லை. மாறாக வெட்கப்பட வேண்டும்.
இது காட்டமான விமர்சனமாகக் கூட இருக்கலாம். வெளிப்படையான மனநிலையில் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் மாநில அளவில் முதல் மூன்று இடத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே.
ஆக, முதல் மூன்று இடப் பட்டியலில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இடம்பெறவில்லை. ஏன்? இதற்கு யார் பொறுப்பேற்பது? யார் குற்றவாளி? இந்த நிலைக்கு முதலில் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இரண்டாவதாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
மாணவர்களின் நிலைக்கு ஆசிரியர்களையும் அரசையும் குற்றம் சாற்றுவது எந்தவிதத்தில் நியாயம் என்று வினவலாம்.
என் நினைவில் பதிந்த நிகழ்வை உங்களுக்குச் சொல்கிறேன். அரசு பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர் ஒருவர், அவரின் மகனைத் தனியாருக்குச் சொந்தமான மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்திருந்தார். அவரிடம் பேசும்போது, 'அரசு பள்ளியில் பணியாற்றும் நீங்கள், உங்கள் மகனை அதே பள்ளியில் சேர்த்திருக்கலாமே' என்றேன். அதற்கு ஆசிரியர் சொன்ன விடை, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 'அரசு பள்ளிக்கூடத்தில் நண்பகல்வேளை உணவு உண்ணும் போது பன்றிகளும் மாணவர்களும் ஒன்றாக இருக்கும் நிலை உள்ளது. அந்தப் பள்ளியில் என் மகனைச் சேர்த்தால், நான் சரியாகப் படிக்காததற்கு என் அப்பாதான் காரணம் என்று எதிர்காலத்தில் அவன் சொல்வான், அப்பழியை நான் ஏற்க விரும்பவில்லை' என்றார்.
ஆசிரியர்கள் உட்படப் படித்தவர்களின் இந்த நிலைதான். இந்த நிலையை மாற்ற முயற்சிக்காது வெறுமனே பேசும் இந்த மாதிரி ஆட்களால்தான், 12-ஆம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் ஒரு இடத்தைக்கூட அரசு பள்ளி மாணவர்கள் பெறாததற்குக் காரணம்.
'மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்கள் இடம்பெறவில்லையே' என்று ஆசிரியர்களிடம் கேட்டால், 'அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி, அதுங்க திருந்தாதுங்க, யாருக்கு என்ன விதியோ அதுதான் நடக்கும்' என்று சொல்வார்கள். மாணவர்களுக்குத் தரமான கல்வியைத் தரும் பொறுப்புள்ள ஆசிரியர்கள், மாணவர்களைப்பற்றி நிலையான ஒரு எண்ணத்தை வைத்திருக்கின்றனர். இந்த மனநிலையில் மாற்றம் வராதவரை மாநில அளவில், மாவட்ட அளவிலான பட்டியலில் ஒரு மாணவரின் பெயர்கூட சேராது.
தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் இரண்டு, மூன்று மடங்கு அதிகம்.. புதிதாக எதையும் படிக்காமல் எப்போதோ படித்த பாடத்தை மனப்பாடமாக வகுப்பறையில் ஒப்பித்துவிட்டு நேரத்தை கழிக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அக்கறையின்றி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் போக்கில் மாற்றம் வரவேண்டும்.
பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் ஏழைகள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். படிக்காமல் வெயிலிலும் மழையிலும் உழைக்கும் நம் வாழ்க்கை குழந்தைகளுக்கு வந்துவிடக்கூடாது என்று பெற்றோர்கல் அனைவரும் எண்ணுகின்றனர். படிக்காத வறியவர்களின் குழந்தைகள், பள்ளியில் சேர்க்கப்படும்போதே ஏ, பி, சி, டி... சொல்லிக்கொண்டே சேர்வார்களா? இருக்கவே இருக்காது. எதுவும் தெரியாமல் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் கற்பித்து வல்லவர்களாக மாற்றவேண்டும். அதைவிட்டுவிட்டுப் படிக்காத வறியவர்களின் பிள்ளை வளர்ந்த சூழல்தான் சரியில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாற்றுவது எப்படி நியாயமாக இருக்கும்.
தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அதனை ஏற்று நடத்துகிறவர்களுக்கு எப்படியாவது பாடுபட்டு வெற்றியை அடைய வேண்டும் என்று உள்ள உறுதியுடன் வேலை செய்கின்றனர். அந்த இலக்கையும் அடைகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் கூறும்போது, சென்ற கல்வியாண்டில் நான் கற்பிக்கும் பாடத்தில் நல்ல தேர்ச்சி காட்டினால் மட்டுமே, ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு தேர்வு முடிவு எப்படி இருக்குமோ? அச்சமாக இருக்கிறது என்று சொன்னார்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த அச்சம் சிறிதும் கிடையாது. காரணம், மாணவர்கள் தேர்ச்சி அடைந்தால் என்ன, தேர்ச்சி பெறவில்லை என்றால் என்ன.. எப்படி இருந்தாலும், அரசு அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கி வருகிறது.
பள்ளிக்கு வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி, பாடம் கற்பித்தாலும் சரி, கற்பிக்காமல் இருந்தாலும் சரி, மாதந்தோறும் ஊதியம் மட்டும் வாங்கிவிடலாம், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு பெறலாம். தனியார் பள்ளி நிருவாகத்தின் கட்டளைக்கு அஞ்சி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் தனியார் ஆசிரியர்களிடம் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பாடம் கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனநிலையில் மாற்றம் வரும். படித்ததற்கு ஊதியம் தருகிறார்கள்.. அந்தப்பணத்தைத் தனியார் பள்ளிகளுக்குக் கட்டணமாகச் செலுத்தி நம் பிள்ளைகளுக்கு மட்டும் தரமான கல்வி கிடைக்கச் செய்கிறோம் என்பதான போக்கை அரசு பள்ளி ஆசிரியர்கள் மாற்றிக்கொள்வார்கள்.
ஆசிரியர்களின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு கடுமையான சில முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும். அதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் அரசு அலுவலர்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது. அரசு பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்களாக இருந்தால் அவர்கள் பணியாற்றும் பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எண்ணம்.
அடுத்து அரசின் பொறுப்பு என்ன? தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஏறக்குறைய ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இவ்வளவு தொகை செலவிட்டும் ஒருவரைக்கூட மாநிலப் பட்டியலில் இடம்பெறச் செய்யவில்லை. அரசு நிதி ஓதுக்கிச் செலவிட்டுத் திட்டங்களைத் தீட்டினால் மட்டும் போதாது. அந்தத் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா? என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியையும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே இருக்கும் இடைவெளியையும் அரசு போக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஒரு கல்வியாண்டின் பாதி ஆண்டுவரை மாணவர்களின் தரத்தை அரசு மதிப்பிட்டு, பெரும் வெற்றிக்கான இலக்கை அடைவதற்குத் தடையாக இருப்பவர்கள் ஆசிரியர்களா? அல்லது மாணவர்களா? என்பதை அறிய வேண்டும். கல்வியில் மாணவர்கள் பின்தங்கியுள்ளதற்கு மாணவர்கள் காரணம் என்றால் அதனைத் தீர்ப்பதற்குப் புதிய திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள்தான் காரணம் என்றால் அத்தகையை ஆசிரியர்களைக் களையெடுக்க வேண்டும். இத்தகைய செயல்களைச் செய்தால் மாணவர்களின் கல்வி மேம்படும்.
இல்லையெனில் தனியாருடன் போட்டிப்போடமுடியாத நிலையில் அரசு பள்ளிகள் இருந்துகொண்டேதான் இருக்கும். குறைந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடையும் மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி வெறும் அரசு உதவித்தொகை பெறுகிறவர்களாக மட்டுமே இருப்பார்கள்.
முத்தாய்ப்பாக ஒன்று சொல்ல வேண்டுமெனில் அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் வலியுறுத்திவரும் சமச்சீர்கல்வியைத் தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் இருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும்.
இல்லையெனில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களுக்கான பட்டியலில் அரசு பள்ளி மாணவர்கள் இல்லை என்ற நிலையை எண்ணித் தமிழக அரசு வெட்கப்பட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும்.
Greetings from Norway!!!
அரசு பள்ளிகள் அனைத்தையும் சிறப்பான தனியார் நிறுவனங்கள் பொறுப்பில் விட்டால்தான் ஆசிரியர்கள் திருந்துவார்கள்.
சிறந்த வருங்கால தலைமுறை உருவாக இந்த சீரிய உதவியை சிரமேற்று செய்ய நாட்டில் அதிகம் சம்பாதிக்கும் தொழிலதிபர்களும்,நடிகர்களும் முன்வரவேண்டும்.