அங்கு, நேரு உரையாற்றுகையில், “இதோ இன்னும் சிறிது நேரத்தில் நள்ளிரவு 12 மணி அடித்ததும் உலகம் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இந்தியா விழித்தெழப் போகிறது. விடுதலை பெற்ற நாடாக இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும் நேரத்தில் இந்திய மக்களின் தொண்டுக்காகவும், மனித குல மேம்பாட்டிற்காகவும் நம்மை ஒப்படைத்துக் கொள்ள சூளுரை ஏற்போம். எந்தக் காலத்திலும் தேடுதலையோ, இலட்சியத்தைதோ இந்தியா கைவிட்டதில்லை. விடுதலையைப் பெற இந்திய மக்கள் அனைவரும் ஆங்கிலேயரின் பல வகையான துன்பங்களைக் பொறுத்துக்கொண்டோம். சில துன்பங்கள் அப்படியே மனத்தில் நிற்கின்றன. எனினும் கடந்து போனதை நினைத்துக்கொண்டே இருக்காமல், நம்மை அழைக்கும் வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்போம். நம் கனவுகள் நிறைவேறிட நாம் இன்றும் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று உணர்ச்சியுடன் பேசினார்.
இந்தியாவின் விடுதலை நாளை இந்தியர்களும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் இன்று கொண்டாடும் வேளையில், போராட்டத்தால் கிடைத்த விடுதலை யாருக்குப் பயன்பட்டது என்பதைத் தன்ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாக இருக்கிறது. அமைதி வழியில் சிலர், போர் வழியில் சிலர், நாடகங்கள்- பாடல்கள் வாயிலாக சிலர் தேசிய உணர்வைத் தூண்டி மக்களைக் கிளர்ந்தெழச் செய்தனர். பல கோடி மக்கள் குரு சிந்தி, சிறையில் இருந்து போராடியதால் ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் இந்த விடுதலை கிடைத்ததா? என்ற வினா சமூக பொறுப்புள்ள - மனித நேயமுள்ள ஒவ்வொருவரின் மனதிலும் எழுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வினா தொடர்கிறது. இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு; இந்தியாவில் பிறந்தவர்கள் யாவரும் என் உடன் பிறந்தவர்கள்; வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்வதே இந்தியர்களின் சிறப்பு என்று பாடப் புத்தகங்களின் வாயிலாகக் குழந்தைககளுக்குச் சொல்லித் தரப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பிறந்த அனைவரும் உடன் பிறந்தவர்களாக இருக்கிறார்களா என்றால் உண்மையாக இல்லை.
மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் ஒரு குறிப்பிட்ட மக்கள் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். பல சிற்றூராட்சிகளில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் அவர்கள் இருப்பதற்கு அனுமதிக்காத சூழ்நிலை உள்ளது. கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் சாமி தெருவில் செல்லும்போது ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு மட்டும் செல்வதில்லை. கோயில்களில் நுழைவதற்கு விடுவதில்லை. பொதுவாக இருக்கும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளைகள் இருக்கின்றன; பொது இடங்களைப் பயன்படுத்த விடுவதில்லை. வாழ்ந்தால் தெருவில் நடக்கக்கூடாது. கோயில்களுக்கு வரக்கூடாது என்பதோடு இல்லாமல் இறந்தாலும் உடலை எரியூட்டுவதற்கோ புதைப்பதற்கோ இடம் மறுக்கும் நிலை தொடர்கிறது.
இந்நாட்டில் பிறந்த மக்கள் தம் சொந்த மண்ணில் உழைத்து வாழ்வதற்குக் கூட உரிமையில்லை. உழைத்து உணவுப் பொருட்களைக் கொடுக்கும் உழவர்களின் நிலங்களை அரசு பிடுங்கி, பெரு முதலாளிகளின் கையில் கொடுக்கிறது. வேளாண் நிலங்களில் சிறப்புப் பொருளாளதார மண்டலங்கள் அமைக்கப்படுவதால் சொந்த ஊரைவிட்டு மக்கள் நகரங்களுக்குக் கூலிகளாக இடம்பெயர்கின்றனர். பல மாவட்டங்களில் இருந்து குடிபெயர்ந்த தமிழர்கள், கருநாடகம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் சொந்த நாட்டு அகதிகளாக இருக்கின்றனர். தங்களுக்கு உள்ள விடுதலை எல்லையால் ஆற்றுமணல் உள்ளிட்ட கனிம வளங்களை அள்ளி வெளிநாடுகளும் அனுப்பி நீர் வளத்தை அழிக்கும் முதலாளிகளும் இந்த நாட்டில் இருக்கின்றனர். வெளிமாநிலங்களிலும், வெளியூர்களிலும் குறைந்த கூலிக்கு நிறைந்த உழைப்பை நல்கிப் பெரும் முதலாளிகளிடம் கொத்தடிமைகளாக எண்ணற்றோர் உள்ளனர். சிந்தித்தால் நமக்கு ஆபத்து என்று எண்ணி அரசு, குடிமகன்களைக் குடிகாரர்களாக்கிப் பெரும் தொகையை வருமானமாக ஈட்டுகிறது.
விடுதலைபெற்ற இந்தியாவில் வாழ்ந்துவரும் பலருக்கும் இன்னும் அடிப்படை வசதிகள்கூட கிடைக்கவில்லை. மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்படாததால் பல சிற்றூர்கள் இருளில் மூழ்கியுள்ளன. ஆற்றுக்கு அக்கரையில் வாழ்பவர்கள் சொந்த ஊரைவிட்டு வெளியூர்களுக்கு வருவதற்குப் போதிய வசதி இல்லாததால் அந்நிய நாட்டில் வாழ்வது போல் துண்டிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதியில் வாழ்ந்து வருகிறவர்கள் நோயுற்றாலோ, பெண்கள் கருவுற்றாலோ பல மைல் தொலைவுக்கு மனிதர்களே சுமந்துகொண்டு மருத்துவமனைக்கு வருகின்றனர். தூய்மையான குடிநீர் வழங்கப்படாததால் பல மைல் தொலைவுக்குச் சென்று தூய்மையற்ற தண்ணீரைத் தலையில் சுமந்து வந்து குடிக்கும் சிற்றூர்கள் உள்ளன.
வாழ்க்கையில் பின் தங்கியுள்ளவர்கள் படித்து வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால் பள்ளி, கல்லூரி வாயிலில் நுழையக்கூட முடியாதபடிக்குக் கட்டணம் பெறப்படுகிறது. அரசு தீட்டும் திட்டங்களைப் பட்டியலிட்டால் அதிர்ச்சியில் ஆழ்த்தும்படி உள்ளன. ஆனால், சிற்றூர்களுக்குச் சென்று பார்த்தால் முன்பு எவ்வாறு இருந்ததோ அப்படியே ஊர்கள் இருக்கின்றன. அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட நிதியை அமைச்சரும் அதிகாரிகளும் பங்கிட்டுக்கொள்வதால் திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றன.
தலைமுறை தலைமுறையாக வறுமையில் இருந்த உழைக்கும் மக்களில் பலர் எந்தவிதப் பயனையும் அடையாமல் ஒதுக்கப்பட்டுள்ளனர். தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பொதுமக்கள் அரசிடம் சென்றால் பணம் கொடுப்பவருக்கு மட்டுமே அதிகாரிகள் செயல்படுகின்றனர். ஒரு மனிதர் பிறந்து வாழ்ந்து இறக்கும் வரை அரசிடம் இருந்து எதைப் பெறவேண்டும் என்றாலும் கையூட்டு இல்லாமல் நடக்காது. இவை அனைத்தையும் எண்ணிப் பார்க்கும்போது இந்நாடு பெற்ற விடுதலை யாருக்குப் பயன்படுகிறது?! ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது என்று மட்டும் சொல்லலாம். மக்களுக்கு - குறிப்பாக அடித்தள மக்களுக்கு கிடைத்துவிட்டது என்று சொல்லுவது தவறு என்றே தோன்றுகிறது.
பொதுமக்களின் சொத்துக்களைப் பிடுங்கும் அமைச்சர்களும், கொலை வழக்கில் சிறைக்குச் சென்றுவிட்டு வந்து முதலமைச்சர் பதவியைக் கேட்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்தியா சுதந்திரம் பெற்றதால் மகிழ்ச்சியே. ஆனால், காலம் முழுவதும் உழைத்தாலும் வாழ்வு மாறாமல் இருக்கும் அடித்தள மக்களுக்கும், சாதி, மத வேறுபாடுகளால் வாழ்வைத் தேடி அலையும் மக்களுக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று சொன்னால் பலர் சிரிக்கிறார்கள். அது அவர்களின் சுதந்திரம்!
விடுதலைக்குப் பாடுபட்டவர்களை எண்ணிப் பார்த்தாவது. இந்நாட்டில் பிறந்த அனைவருக்கும் விடுதலை கிடைக்க வழிவகை செய்வோம் என்ற உறுதிமொழியை ஆட்சியாளர்களும் பெரும் முதலாளிகளும் ஏற்க வேண்டும்.
Anbulla Muru.siva
Nalla seithi sariyana nerathil .who is hereing again and again you and me or WE