முருக சிவகுமார் (murugasivakumar)

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 17- அன்று அக்கட்சியினரால் தமிழகம் முழுவதும் தமிழர் எழுச்சி நாளென கொண்டாடப்பட்டது. இது பலரையும் சாதாரணமாக கடந்து போன செய்தியாக இருக்கலாம். ஆனால், அன்று தினமலர்(ம்) நாளேட்டில் வெளியான ஒரு செய்தி பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தச் செய்திக்குப் பின்னால் ஒளிந்துள்ள அரசியல் வக்கிரம் பற்றி பலரும் சிந்திக்கவேயில்லை.

பிரம்மாவின் தலையில் பிறந்தவன் பார்ப்பனன், தோளில் பிறந்தவன் வைசியன், வயிற்றுல பிறந்தவன் சத்திரியன், கால் பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் - என்கிற மனு கோட்பாட்டின்படி, தலித்துகள் கடவுளுக்கு பிறக்கவில்லை (ஆண் - பெண் இணைந்த மனிதர்களுக்கே பிறந்தார்கள்) என்று கூறி அவர்களை ஊரின் ஒதுக்குப்புறமாக வைத்திருந்த கொடுமை நடந்ததெல்லாம் அந்தக் காலம்; இப்போ அதெல்லாம் கிடையாது, நாங்க தாயா புள்ளையா பழகுறோம்... என்று பலர் மூடத்தனமாக பேசுவதுண்டு. இந்நிலையில், பார்ப்பனக் கொள்கை பரப்பு ஊடகமான தினமலர் சாதி, மத அடையாள சொல் வழக்கினூடாக சமூகத்தில் நிலைநிறுத்த முனையும் வக்கிர அரசியல் பற்றி பேச இவர்கள் தயாராகயில்லை. காரணம், அந்தச் சொற்கள் பிற்போக்கு தினமலருக்கு மட்டுமல்ல... முற்போக்கு - தமிழ்த்தேசிய அரசியல் பேசும் சாதி இந்துக்களுக்கும் பழகிப்போனவைதான். சமூக நீதி கொள்கை பேசி அரசியல் நடத்தும் தலைவர்கள் வாழும் ஊரில்கூட நீதியற்ற அநியாய சாதி மோதல்கள் இப்போதும் நடந்து வருகின்றன. இதைத்தான் தினமலரும் எதிர்பார்க்கிறது.

இதனால், காலம் கடந்தாலும் அந்தச் செய்தி குறித்து இப்போது விவாதிக்கலாம் என்றே தோன்றுகிறது.

” விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் ஊர் தரப்பினருக்கும், காலனி தரப்பினருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டது......... நேற்றுக் காலை காலனி பகுதியில் உள்ள டி.பி.ஐ. பிரமுகர் கண்ணதாசன் ஊர் பொது இடத்தில் திருமாவளவன் பேனர் வைத்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றுக் காலை ஊர் தரப்பை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தினர்.இதனைத் தொடர்ந்து டி.பி.ஐ. பிரமுகரான கிளியனூர் ஊராட்சித் தலைவர் இரணியன் மற்றும் சிலர் நேற்று பிற்பகல் 2 மணிக்கு காலனி பகுதிக்கு வந்து விசாரித்து விட்டு திரும்பி சென்றபோது, ஊர் தரப்பை சேர்ந்த கிருஷ்ணராஜ், சுகுமார் ஆகிய இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவ இடத்திலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தாக்குதலுக்குள்ளான இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். இதையறிந்த ஊர் தரப்பினர் பிற்பகல் 2 மணிக்கு காலனி பகுதிக்கு சென்று, அங்குள்ள குடிசை வீடுகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது....”

-இப்படி நீளும் இந்தச் செய்தியில் ஊர் என்ற சொல் 8 முறையும், காலனி என்ற சொல் 4 முறையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நண்பர்களே! இப்போது நான் எதைப்பற்றி பேச வருகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். குறிப்பிட்ட சொற்கள் எத்தனை தடவை பயன்படுத்தபட்டு இருக்கிறது என்பதை கணக்கிடுவது நம் நோக்கமல்ல. அந்தச் சொற்கள் ஏன் ஆளப்பட்டு இருக்கிறது; அதன் உள் அரசியல் என்ன என்பதை ஆராய்வதே நம் நோக்கம். அந்தச் செய்தியில், ”தலித் அரசியலின் அடையாளமாக விளங்கும் திருமாவளவனின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத சாதி இந்து வன்னியர்களுக்கும் ஆதிதிராவிடர்களுக்கும் சண்டை ஏற்பட்டது’’ என்று இருந்திருக்க வேண்டும். அதுதான் உண்மை. ஆனால் தினமலரோ, ஊர் பொது இடத்தில் விலக்கப்பட்ட தலித்துகள் பேனர் வைத்ததே தவறு என்ற ரீதியில் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த வக்கிர அரசியலின் நீட்சியாகவே ஊர் - காலனி சொற்கள் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

நாள்தோறும் தினமலரை புரட்டி பார்த்தால், (1) இந்து மதத்தை நிலைநிறுத்தும் கோவில் பற்றிய செய்திகள், (2) தலித் மற்றும் சூத்திரத் தலைவர்களை கிண்டல் செய்யும் செய்தி, (3) சாதி மோதல்களில் சாதி இந்துக்களுக்கு ஆதரவான செய்தி, (4) ஆரிய அரசியலுக்கு எதிரான திராவிட அரசியலை ஏளனம் செய்யும் செய்தி. (5)அரசும் ஆட்சியாளர்களும் அடித்தள மக்களுக்கு எதிராக செயல்படும்போது மக்கள் மத்தியில் சிலர் ஆக்ரோசமாக பேசும் செய்தி. இவ்வாறான செய்திகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும்.

ஈழத்தில் தமிழ்மக்கள் மீது சிங்கள அரசு இரசாயண குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாக பல ஆயிரக்கணக்கானோரை கொன்றொழித்தபோதும், ”விடுதலைப் புலிகள் அட்டூழியம்; மக்கள் சிறைப்பிடிப்பு’’ என்று செய்தி வெளியிட்ட 'பெருமை' தினமலரையே சேரும். ஈழமக்களுக்கு ஆதரவாகவும் சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராகவும் போராடிவந்த விடுதலைப்புலிகளை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் பொதுக்கூட்டங்களில் பேசினால் அதை தவறாமல் வெளியிட்டு காவல்துறைக்கு காட்டிகொடுக்கும் பணியையும் தினமலர் செய்து வந்தது. விடுதலைச் சிறுத்தைகள் என்றாலே தினமலருக்கு எட்டிக்காய். யாரோ செய்யும் தவற்றைகூட விடுதலைச் சிறுத்தைகள் செய்ததாக செய்தி வெளியிடும். அதனைக் கண்டு அக்கட்சியினர் போராடினால், வன்முறை செய்ததாக செய்தி வெளியிட்டு காவல்துறைக்கு காட்டி கொடுக்கும். திருமாவளவனின் தலைமையில் கிளர்ந்தெழும் தலித் அரசியல் எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாததே இதற்கு காரணம் எனலாம்.

ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கிப் பயிலும் அரசு விடுதிகள் சீர்கேடாக இயங்குவது குறித்து செய்தி வெளியிடுமாறு எனக்கு தெரிந்த ஒருவர் தினமலரை கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அச்செய்தியை தினமலர் வெளியிட்டது. அதில், மாணவர்கள் அல்லல்படுவது குறித்து ஒரு வரிகூட எழுதாமல், அங்கு தங்கியுள்ள தலித் மாணவர்கள் பராமரிக்காமல் அலங்கோலமாக வைத்திருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சாலையோரமாக இருந்த விநாயகர் கோவில் சுவர் சிறியளவு உடைக்கப்பட்டால் அதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாக கரிசனையும் செய்தி வெளியிடும்.

கோவில் தேர் திருவிழாக்களை வெளியிடும் தினமலர், அக்கோவில்களில் இக்காலத்திலும் நுழையகூட முடியாமல் இருக்கும் மக்கள் பற்றி இதுவரை செய்தி வெளியிட்டிருக்குமா? ’ஊர் கூடி தேர் இழுப்போம்’ என்று பலரும் சொல்கிறார்கள். இந்த வாக்கியத்தின் அர்த்தம்: சமூகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு ஒரு பெரிய செயலை செய்து முடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், ஊர் கூடுவதில் ஒதுக்கப்பட்ட காலனி மக்கள் என்று சொல்லப்படுகிற தலித்துகள் சேர்க்கப்படவில்லை என்ற செய்தியை பதிவு செய்வதில்லை.

காலங்காலமாக ஒடுக்கப்பட்டு ஓரமாக கிடந்த மக்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பற்றிக்கொண்டு பொதுதளத்தில் வந்துவிட்ட பின்னரும் தனியாக துண்டிக்கப்பட்டவர்கள் என்ற பொருளில் காலனி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது அந்த மக்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் செயல். தினமலர் திட்டமிட்டு செய்துவரும் இந்த கீழ்தரபுத்தியுள்ள செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் தலித்துகளை ஒதுக்கும் தீண்டாமை சுவரை மாவட்ட நிருவாகம் அகற்ற முனைந்தது. சேலம் மாவட்டத்தில் திரௌபதியம்மன் கோவில் நுழைவு போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுத்தபோது மாவட்ட நிருவாகம் சமரச முயற்சியை மேற்கொண்டது. அப்போதெல்லாம் சாதி இந்துக்கள் ஊரில் இருந்து வெளியேறி ஆடு, மாடு, பொண்டு புள்ளக்குட்டிகள் உள்ளிட்ட விலங்குகளுடன் காடுகளில் தஞ்சம் புகுந்தனர். ஊரில் உள்ள ஆறறிவு மனிதர்களான தலித்துகளுடன் சேர்ந்து வாழ விரும்பாத சாதி இந்துக்கள் காடுகளில் ஐந்தறிவு விலங்குகளுடன் சேர்ந்து வாழ முன்வந்தது அவர்களின் அறிவை அம்பலப்படுத்தியது. அப்போது அந்தச் செய்தியை தினமலர்(ம்) வெளியிட்ட போது, ஊர் தரப்பினர் ஊரைவிட்டு வெளியேறினர் என்று பெரும் கரிசனை பொங்க வருத்தப்பட்டது. ஆனால், காலம் காலமாக பல நூற்றாண்டுகளாக சேரி - காலனி என்ற பெயரில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தலித்துகளை வாழ நிர்பந்தப்படுத்திய காட்டுமிராண்டி கயமைத்தனத்தை பற்றி மனு”தர்மம்’’ பேசும் தினமலர்(ம்) என்றாவது வெட்கப்பட்டு எழுதியதுண்டா? இல்லவே இல்லை. தலித்துகளின் வாழ்வு பின்தங்கியதற்கு யார் காரணம் என்பதையும் அவர்கள் எழுச்சிகொள்வதற்கு தடையாக இருந்தது எது என்பதையும் அவர்கள் எழுதியிருந்தால் தலித் அரசியல் என்கிற சொற்கள் இந்தச் சமூகத்தில் இருந்திருக்காது. இதைவிட முக்கியமாக ஒன்று நடந்திருக்கும்: சாதி ஒழிப்புக்கு ஆய்தமாக மாமேதை அம்பேத்கர் வலியுறுத்தியதும், பார்ப்பன சாதி இந்துக்களால் கைவிடமுடியாததுமான அகமண முறை ஒழிந்து, அவர்களின் பெண் பிள்ளைகள் தலித் இளைஞர்களுடன் கைகோர்த்திருப்பார்கள். அந்தநிலை வந்துவிடக்கூடாது என்பதே தினமலரின் எதிர்பார்ப்பு,

பழமைகள் மாறி போய் நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அறிவியலாளர்கள் வெற்றிகரமாக அனுப்பிய நிலையில்கூட, தினமலர்(ம்) போன்ற பார்ப்பனக் கொள்கை பரப்பு ஊடகங்கள் பழைய சாதி அடையாளத்தையும், மத அடையாளத்தையும் முன்நிறுத்தியே செய்திகளை வெளியிட்டு வருகின்றன. உதாரணமாக, இந்து சாதி சங்கங்களின் செய்தியை முக்கியத்துவம் கருதி வெளியிடும்போது. அதில், கெங்கசாமி ’நாயுடு’, வீரபத்திரக்(ன்) ’கவுண்டர்’ தலைமை வகித்தனர் என்று இருக்கும். சாதியை நிலைநிறுத்தும் இத்தகைய அடையாள சொற்களை பயன்படுத்தும் நோக்கம் என்ன? அடுத்தவர்களுக்கு கெடுதலை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அவர்களின் நல்வாழ்வுக்கு உகந்தது எதுவோ அதை மக்களின் மனத்தில் நிலைநிறுத்த வேண்டும் அதுதான் அவர்களுக்கு அவசியம்.

நாட்டில் நடந்துவரும் கேடுகளுக்கு முழுமுதல் காரணமான மதத்தையும் சாதியையும் தோற்றுவித்த கடவுள் சித்தாந்தத்தை அம்பலப்படுத்தி சாதியற்ற சமூகத்தை நிர்மாணிக்க தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் மாமேதை தந்தை பெரியார். ஆனால், பாலியல் குற்றம் மற்றும் கொலை குற்றத்தில் சிறைக்கு சென்ற ஊத்தவாயம் சங்கரனை “பெரியவாள்’’ என்று மரியாதையுடன் செய்திகளில் குறிப்பிடும் தினமலர், தமது இனத்தவரை அவமானப்படுத்தியவரை அவமானப்படுத்தும் கேடுகெட்ட எண்ணத்தில் தந்தை பெரியாரை - ஈ.வெ.ராமசாமி என்றே குறிப்பிட்டு வருகிறது.

இவ்வாறு சாதி, மத அடையாளங்களை நிலைநிறுத்தும் பிற்போக்குத்தன உள் அரசியல் கொண்ட பாசிச ஊடகம் தினமலர் என்றுள்ள நிலையிலும் பல ஆயிரம் பிரதிகள் விற்பனையுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருகிறது. இதற்கு சாதியின் பிரம்மாக்களான பார்ப்பனர்களின் ஆதரவு மட்டுமே காரணமல்ல. 'இப்பெல்லாம் சாதிகளே இல்லை; நாங்க எல்லோருடனும் தாயா புள்ளையா பழகுறோம்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் சாதி இந்துக்களும் அவர்களின் உறவுகளும்தான். அதனால்தான் சமூக அக்கறை கொண்ட பல நல்ல ஏடுகள் பொருளாதார ரீதியில் திணறும்போதும், தினமலர் நாளேடு எந்தவித சிரமங்களுமின்றி வெளிவந்துகொண்டிருக்கிறது.

இவற்றைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை காரணம், தந்தை பெரியார் பிறந்த பூமியில் பெரியாரிஸ்ட்கள் ஆளுகிறார்கள் என்கிற பெருமையே போதும். இவர்களின் உறவுகளால் செருப்பு மாலை போட்டு அவமானப்படுத்தப்படும் அம்பேத்கர் சிலைகளுக்கு பிறந்த நாளின்போதும், இறந்த நாளின்போதும் பூமாலை போடும் பரந்த மனப்பான்மை கொண்ட் தமிழ்த்தேசிய சமூக நீதி அரசியல் பேசுபவர்கள் நமக்கு தலைவர்கள் என்ற பெருமையும் போதும். எந்தவித மன நெருடலோ அச்சமோ இன்றி தினமலர்(ம்) தம் ’சமூகக் கடமை’யை தொடர்ந்து ஆற்றும்.

இறுதியாக, தினமலரின் வக்கிர அடையாள அரசியலை கண்டிக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டில் மக்கள் வாழும் அனைத்து பகுதிகளும் ஊர் - காலனி என்ற பிரிவினையோடுதான் இப்போதும் இருக்கின்றன என்பதை தினமலர் செய்தியாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது. ’சாதிகள் இப்போது இல்லை; ரொம்ப மாறிடுச்சி..’ என்று சொல்பவர்களின் முகத்தில் அறைந்து உறுதிப்படுத்திய தினமலருக்கு நன்றி சொல்வோம்.

இது குறித்து தொடர்ந்து விவாதிப்போம்; கருத்துகளை பரிந்துகொள்ளுங்கள்.
3 Responses
 1. Ecoligist Says:

  வணக்கம்
  "தினமலரின் தொடரும் வக்கிர அடையாள அரசியல்" கட்டுறையில் சொல்லவேண்டியதை தெளிவாக சொல்லியமைக்கு நன்றி! ஆனால் நீங்கள் இந்த பிரச்சனையை பார்பனன் மற்றும் தலித்துக்கும் இடையேயானது என முன்வைப்பது தவறு! உன்னையில் இந்த பிரசசனையில் எந்த இடத்திலும் பார்பனன் இல்லை, தின்டிவனத்தில் அவன் தலிதுகளிடம் சன்டைக்கும் போகவில்லை, அந்த சன்டையைப் பற்றி எழுதிய ரிபோர்டரும் பார்பனன் இல்லை.

  உன்மையில் தென்னிந்தியாவில் பெரும்பான்னையான ஊடகங்கள் சூத்திரர் வசமுள்ளது, தமிகத்திலும் அதே நிலைதான் ஆக நீஙகள் சொன்னதுபோல இங்கு தமிழகம் மற்றும் இந்தியாவில் பெரியாரிஸ்ட்கள்(பிற்படுத்தப்பட்டவர்கள் தான் சுதந்திர இந்தியாவின் ஆளும் வர்கம்) தான் ஆளுகிறார்கள் அப்படியிறுக்க ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அதற்க்கு காரனமானவர்களை கூறாமல் இன்னும் பார்பனன் வாலைபிடித்துக் கொண்டிருப்பது ச‌ரிய‌ல்ல‌.

  யார் க‌ல்லெறிந்தார்க‌ளோ அவ‌ர்க‌ள் தான் க‌ல்ல‌டிப்பட‌ வேண்டும், பின்பு நாம் க‌ல்லை கொடுத்தவனை பார்த்துக்கொள்ளாம்.

  நான் எங்கு அழுத்தி சொல்வ‌து என்ன‌வெனில் எந்த ஒரு ப‌த்திரிக்கையும் அப்பகுதி ஆதிக்க சாதிகளின் கையில்தான் இருக்கிறது என்பதே! ஆக‌ இங்கு ப‌த்திரிக்கைக‌ள் சூத்திறர‌ர்க‌ளால் தான் ந‌ட‌த்த‌ப்ப‌டுகிறது தின‌ம‌ல‌ர் உட்ப‌ட‌. இதே போண்ற‌ ஊர் க‌ல‌ணி செய்தி தின‌ம‌னியிலிம் க‌ட‌ந்த‌ வார‌ம் இட‌ம்பெற்ற‌து...

  அன்புட‌ன்..அப்ர‌காம் லிங்க‌ன்


 2. shankar Says:

  'தினமலரின் வக்கிர அடையாள அரசியல்' நிறையவே யோசிக்க வைக்கறது. எப்போதோ பிராமணர்கள் தூவி விட்டு சென்ற விஷ விதை, வெட்ட வெட்ட
  வேர் விட்டு நிற்கிறது. யார் யாரோ சாதி தீயை பத்த வைக்க தினமலர் அதற்கு மிக கவனமாக மறைமுகமாக எண்ணெய் ஊற்கிறது. ஆனால் இதை சுட்டிகாட்டினால் அவர்கள் ஏற்க மாட்டார்கள்.


  முதலில் தமிழர்கள் திருந்த வேண்டும். பின்னர் தினமலர் தானாக திருந்தும்.


 3. Anbu Thambi Siva,
  Your critique on Dinamalar sounds good. But you also extend your support to the leader of sudra, Ramasamy who started the comprador politics of sudra supremacy which simply subjucated our people again and again. Now our people are at sudra encounters and no way it is right to use Parpanar or brahmans as the perpetrators of caste untouchability.
  I will appreciate you if you focus much on Dravida Maayaa.
  In Dhamma,
  Sakya Mohan
  Philadelphia