undefined
undefined

பொதுபுத்தியில் மக்களின் மனவெளியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாயையை நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்ந்தெறிந்திருக்கிறார். ”கறுப்பு வானில்’’ வெள்ளி மீனாய் வெளிப்பட்டு ஜொலிக்கும் இந்த ஜாஸ்மின் வாழ்ந்திருக்கும் வாழ்வையும், அவரது குடும்பச் சூழலையும், அவர் நிகழ்த்திருக்கும் சாதனையையும் ஒருசேர வைத்துப் பார்த்தால் சமூகத்தில் புரையோடி கிடக்கும் பல வினாக்களுக்கு அவர் விடையளித்திருக்கிறார்.
ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு தேர்வு நடக்கும், மாணவர்கள் எழுதுவார்கள், அதில் ஒருவர் முதலிடம் பிடிப்பார். இது ஆண்டுதோறும் நடப்பதுதானே? அது போலவே மாணவி ஜாஸ்மினும் பள்ளி இறுதித் தேர்வில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் அவ்வளவே, என்று பலரும் நினைக்கக் கூடும். அப்படி யாராவது நினைத்தால் அது பேதைமைத்தனம். அவர்கள் சமூகத்தையும் மக்களின் பொதுபுத்தியையும் அறியாதவராக இருப்பார்கள்!
வக்கற்ற ஏழைகள் சும்மா படிப்பதற்குதான் அரசு பள்ளிகள். அதில் படித்தால் உருப்பட முடியாது என்று பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் எண்ணுகிறார்கள். பொட்டப்புள்ளை படிச்சி என்ன பண்ண போகுது... என்று பேதம் பார்க்கும் பல வீடுகளும் இருக்கின்றன. பொருளாதாரத்தில வசதியில்லாததால சரியாக படிக்க முடியல... அவங்க அப்பா - அம்மா படிச்சவங்க; அதனால அவங்களால நல்ல மதிப்பெண் வாங்க முடிஞ்சது! என்று காரணம் சொல்லும் மாணவர்களும் இருக்கிறார்கள். படிப்பெல்லாம் நம்ம புள்ளைகளுக்கு வராது அதெல்லாம் இரத்தத்துல ஊறுனது... என்று தங்களை தாழ்வாகக் கருதி சிலரை மேல்நிலையில் வைத்து கொண்டாடி வெறும் வாயை மெள்ளுகிறவர்கள் நம்பில் ஏராளமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வினாக்களோடு மதம், சாதி, பொருளாதாரம், பால் ஆகியவற்றால் வேற்றுகளை நிறைந்து பிளவுபட்டு கிடக்கின்ற நம் சமுதாயத்தில் மாணவி ஜாஸ்மின் நிகழ்த்திருக்கும் சாதனை ஒன்றல்ல; பல.
அரசு - மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சரியாக சொல்லித் தருவதில்லை என்றும், அங்கு சரியான வசதிகள் இருப்பதில்லை என்றும் சொல்லியே அரசு பள்ளியை பற்றி தாழ்வான நிலைப்பாட்டை மக்களின் மனங்களில் உருவாக்கி வைத்திருக்கும் தனியார் பள்ளி நிருவாகங்கள் கொள்ளை லாபம் அடைந்து வந்தன. அவர்களுக்கு முதல் அடியை ஜாஸ்மின் கொடுத்திருக்கிறார். அதாவது அரசு - மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடத்தை பெற்று அரசு பள்ளிகள் ஒன்றும் குறைந்ததில்லை என்று பறைச்சாற்றிருக்கிறார்.
அதோடு நில்லாமல், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எல்லோரும் கூலிக்கு மாரடிப்பவர்கள்; கடமையை ஒழுங்காக ஆற்றாதவர்கள் என்று பல முனைகளில் இருந்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றச்சாற்றுகளை அள்ளித்தெளிக்கும் சூழலில் சாதனை ஜாஸ்மின், முதலிடத்தை பிடித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான களங்கத்தை போக்கி மாறுபட்ட உரையாடலை தொடங்கி வைத்திருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் - பையன் தேர்வுக்கு படிக்கட்டும், அவனை தொந்தரவு செய்யாதே... பொட்ட புள்ள வீட்டு வேலையெல்லாம் செய்துவிட்டு அப்புறம் படிக்கட்டும்... அது படிச்சி என்ன செய்ய போகுது? என்று சொல்லும் குடும்பங்கள்தான் ஏராளம். இப்படி பெண் பிள்ளைகளை பாவிக்கும் பெற்றோர்களின் மன நிலையை மாற்ற ஜாஸ்மினின் ஒற்றை வெற்றி பயன்படக்கூடும்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த தனக்கு கிடைத்தவற்றை பயன்படுத்திக் கொண்டு படித்து முதலிடத்தை பிடித்திருப்பதன் மூலம் ஏழ்மையை காரணமாக காட்டும் பிள்ளைகளுக்கு ஜாஸ்மின் ஒரு பெரும் பாடத்தையும் கற்பித்திருக்கிறார்.

இப்படியாக, பொதுமக்களின் மனத்தில் தனியார் பள்ளிகள் உருவாக்கியுள்ள மாயையையும், ஒடுக்கப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பப் பிள்ளைகளால் சாதிக்க முடியுமா? என்ற வினாவையும் தகர்ந்து ஒளிக்கீற்றாய் பாய்ந்து விடை தந்துள்ள ஜாஸ்மினை வாழ்த்துவோம். ஜாஸ்மினுக்கு மட்டுமல்ல; ஒடுக்குமுறைகளை தகர்த்து கிளர்ந்தெழும் எல்லா பெண்களுக்கும் வாழ்த்து கூறி வரவேற்பது நம் கடமையாகும்..!