Showing posts with label அம்பேத்கர். Show all posts
Showing posts with label அம்பேத்கர். Show all posts
முருக சிவகுமார் (murugasivakumar)
பணத்தை கொட்டி கொடுத்து, தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வாழும் மக்களின் மனங்களில் படிந்திருக்கிறது. மாயை நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்ற உண்மை இந்த ஆண்டு வெளியாகியுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் இருந்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பொதுபுத்தியில் மக்களின் மனவெளியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாயையை நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்ந்தெறிந்திருக்கிறார். ”கறுப்பு வானில்’’ வெள்ளி மீனாய் வெளிப்பட்டு ஜொலிக்கும் இந்த ஜாஸ்மின் வாழ்ந்திருக்கும் வாழ்வையும், அவரது குடும்பச் சூழலையும், அவர் நிகழ்த்திருக்கும் சாதனையையும் ஒருசேர வைத்துப் பார்த்தால் சமூகத்தில் புரையோடி கிடக்கும் பல வினாக்களுக்கு அவர் விடையளித்திருக்கிறார்.

ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு தேர்வு நடக்கும், மாணவர்கள் எழுதுவார்கள், அதில் ஒருவர் முதலிடம் பிடிப்பார். இது ஆண்டுதோறும் நடப்பதுதானே? அது போலவே மாணவி ஜாஸ்மினும் பள்ளி இறுதித் தேர்வில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் அவ்வளவே, என்று பலரும் நினைக்கக் கூடும். அப்படி யாராவது நினைத்தால் அது பேதைமைத்தனம். அவர்கள் சமூகத்தையும் மக்களின் பொதுபுத்தியையும் அறியாதவராக இருப்பார்கள்!

வக்கற்ற ஏழைகள் சும்மா படிப்பதற்குதான் அரசு பள்ளிகள். அதில் படித்தால் உருப்பட முடியாது என்று பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் எண்ணுகிறார்கள். பொட்டப்புள்ளை படிச்சி என்ன பண்ண போகுது... என்று பேதம் பார்க்கும் பல வீடுகளும் இருக்கின்றன. பொருளாதாரத்தில வசதியில்லாததால சரியாக படிக்க முடியல... அவங்க அப்பா - அம்மா படிச்சவங்க; அதனால அவங்களால நல்ல மதிப்பெண் வாங்க முடிஞ்சது! என்று காரணம் சொல்லும் மாணவர்களும் இருக்கிறார்கள். படிப்பெல்லாம் நம்ம புள்ளைகளுக்கு வராது அதெல்லாம் இரத்தத்துல ஊறுனது... என்று தங்களை தாழ்வாகக் கருதி சிலரை மேல்நிலையில் வைத்து கொண்டாடி வெறும் வாயை மெள்ளுகிறவர்கள் நம்பில் ஏராளமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வினாக்களோடு மதம், சாதி, பொருளாதாரம், பால் ஆகியவற்றால் வேற்றுகளை நிறைந்து பிளவுபட்டு கிடக்கின்ற நம் சமுதாயத்தில் மாணவி ஜாஸ்மின் நிகழ்த்திருக்கும் சாதனை ஒன்றல்ல; பல.

அரசு - மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சரியாக சொல்லித் தருவதில்லை என்றும், அங்கு சரியான வசதிகள் இருப்பதில்லை என்றும் சொல்லியே அரசு பள்ளியை பற்றி தாழ்வான நிலைப்பாட்டை மக்களின் மனங்களில் உருவாக்கி வைத்திருக்கும் தனியார் பள்ளி நிருவாகங்கள் கொள்ளை லாபம் அடைந்து வந்தன. அவர்களுக்கு முதல் அடியை ஜாஸ்மின் கொடுத்திருக்கிறார். அதாவது அரசு - மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடத்தை பெற்று அரசு பள்ளிகள் ஒன்றும் குறைந்ததில்லை என்று பறைச்சாற்றிருக்கிறார்.

அதோடு நில்லாமல், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எல்லோரும் கூலிக்கு மாரடிப்பவர்கள்; கடமையை ஒழுங்காக ஆற்றாதவர்கள் என்று பல முனைகளில் இருந்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றச்சாற்றுகளை அள்ளித்தெளிக்கும் சூழலில் சாதனை ஜாஸ்மின், முதலிடத்தை பிடித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான களங்கத்தை போக்கி மாறுபட்ட உரையாடலை தொடங்கி வைத்திருக்கிறார்.

அடுத்து, ஜாஸ்மினின் குடும்பம் நடுத்தர குடும்பம். அவரின் தந்தை சேக்தாவூத் கடந்த 17 ஆண்டுகளாக துணி வியாபாரம் செய்து வருகிறார். பொருளாதார வசதியில்லாத அவர் மிதிவண்டியில் துணிகளை வைத்து ஊர் ஊராக சென்று விற்று வருபவர். தான் பெரிய அளவில் படிக்காததால் தனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண் பிள்ளையான ஜாஸ்மினுக்கு படிப்பதற்கான எந்த தடையையும் விதிக்கவில்லை என்பது பாராட்டுதலுக்குரியது. காரணம், இசுலாமிய சமுதாயத்தில் பெண்களுக்கென எராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் வெளியில் வரவே கூடாது; வீட்டுக்கு உறவினராக ஆண்கள் வந்தால் உள் அறைகளில் பதுங்கிக் கொள்ள வேண்டும். அப்படியே வந்தாலும் கறுப்பு பர்தாவை அணிந்து உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டுதான் பொதுவெளிக்கு வரவேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு மேல்படிப்பு படிக்க ஆர்வம் இருந்தாலும், அதை குழிதோண்டி புதைத்து விட வேண்டும். இப்படிப்பட்ட ஒடுக்கப்படும் நிலைகளையெல்லாம் கடந்து, அடக்குமுறைகளை தகர்த்து கறுப்பு பர்தாவில் ஒளிக்கீற்றாய் ஜாஸ்மின் வெளிப்பட்டிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் - பையன் தேர்வுக்கு படிக்கட்டும், அவனை தொந்தரவு செய்யாதே... பொட்ட புள்ள வீட்டு வேலையெல்லாம் செய்துவிட்டு அப்புறம் படிக்கட்டும்... அது படிச்சி என்ன செய்ய போகுது? என்று சொல்லும் குடும்பங்கள்தான் ஏராளம். இப்படி பெண் பிள்ளைகளை பாவிக்கும் பெற்றோர்களின் மன நிலையை மாற்ற ஜாஸ்மினின் ஒற்றை வெற்றி பயன்படக்கூடும்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த தனக்கு கிடைத்தவற்றை பயன்படுத்திக் கொண்டு படித்து முதலிடத்தை பிடித்திருப்பதன் மூலம் ஏழ்மையை காரணமாக காட்டும் பிள்ளைகளுக்கு ஜாஸ்மின் ஒரு பெரும் பாடத்தையும் கற்பித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் வெளியாகும் 10-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடத்தை பிடிப்பவர் வித்யாலயா என்ற பெயர்களை தாங்கியுள்ள தனியார் பள்ளிகளில் ஒரு பள்ளியைச் சேர்ந்தவராக இருப்பார். அவரின் நிழற்படத்தை பார்த்தோமானால் நெற்றியில் மெல்லிய நாமம் இருக்கும். மேம்படுத்திக் கொண்ட சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பார். தொடர்ச்சியாக இந்த நிலையை காணும் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நம் பிள்ளைகளுக்கு இந்தளவுக்கு படிப்பு வராது என்று கருதிக் கொண்டு படிப்பதற்கு தேவையானதை கூட வாங்கி தராமல் அசட்டையாக புறக்கணிப்பார்கள். அவர்களின் எண்ணங்களை அடித்து தும்சம் செய்துள்ள ஜாஸ்மின், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் பிறந்த பிள்ளைகளும், சமுதாயத்தில் காலங்காலமாக புரையோடி கிடக்கும் கற்பிதங்களையும் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து வெல்ல முடியும் என்று டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் காண விளைந்த கனவை மெய்ப்பித்து அவர்கள் நல்கிய உழைப்புக்கு மதிப்பளித்திருக்கிறார். அந்த சமூக வரலாற்றை ஜாஸ்மினுக்கு யாரும் சொல்லித் தராமல்கூட இருக்கலாம். ஆனாலும், ஜாஸ்மினின் இந்த எழுச்சிக்கு அந்த இருபெரும் தலைவர்களின் பாடு இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை.

இப்படியாக, பொதுமக்களின் மனத்தில் தனியார் பள்ளிகள் உருவாக்கியுள்ள மாயையையும், ஒடுக்கப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பப் பிள்ளைகளால் சாதிக்க முடியுமா? என்ற வினாவையும் தகர்ந்து ஒளிக்கீற்றாய் பாய்ந்து விடை தந்துள்ள ஜாஸ்மினை வாழ்த்துவோம். ஜாஸ்மினுக்கு மட்டுமல்ல; ஒடுக்குமுறைகளை தகர்த்து கிளர்ந்தெழும் எல்லா பெண்களுக்கும் வாழ்த்து கூறி வரவேற்பது நம் கடமையாகும்..!
முருக சிவகுமார் (murugasivakumar)

ஏப்ரல் பதிமூன்றாம் தேதி வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் என் பணத்தை எடுப்பதற்காக போனேன். அங்கு வரிசையில் காத்திருந்தபோது,

"சார், கூட்டம் அதிகமாக இருக்குது, நான் நாளைக்கு வரலாம்னு நினைக்கிறேன், நாளைக்கு பேங்க் இருக்கா?"

என்று வங்கி அலுவலரிடம் கேட்டார். அதற்கு விடையளித்த வங்கி அலுவலர், "நாளைக்கு சித்திரை ஒண்ணாம் தேதி தமிழ்ப்புத்தாண்டு லீவு" என்றார்.


நான் உடனடியாக சொன்னேன்: "தமிழ்ப் புத்தாண்டுக்கு மாநில அரசு தான் விடுமுறை விடனும், நாளைக்கு டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதால மத்திய அரசின் விடுமுறை" என்றேன். அங்கிருந்தவர்கள் என்னை உற்று பார்த்தார்கள்...


அங்கிருந்து கிளம்பி வந்தும் வங்கியில் நடந்த நிகழ்வு என் மனதை பலவாறு யோசிக்க வைத்தது.


இந்த நாட்டில் காந்திக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் மாதக்கணக்கில் விழா எடுத்து கொண்டாடப்படுகிறது. அது தொடர்பாக மக்களின் மனத்தில் புகுமாறு திட்டமிட்டு ஊடகங்களில் பரப்ப படுகிறது. ஆனால், டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளையும் இறந்த நாளையும் மக்களின் மனங்களில் புகாதபடி சாதி இந்து சமூகம் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.


முன்பு திசம்பர் ஆறாம் நாளில் அம்பேத்கரின் இறந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், இந்து வெறியர்களால் திட்டமிடப்பட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அன்றையில் இருந்து திசம்பர் ஆறாம் நாள் என்றால் அம்பேத்கர் இறந்த நாள் என்ற சுவடு மறக்கடிக்கப்பட்டு, பாபர் மசூதி இடிப்பு நாள் என்றே ஊடகங்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இப்போது தமிழ்நாட்டில் அம்பேத்கரின் பிறந்த நாளும் மறைக்கப்பட்டு வருகிறது.

இந்தக் செயலுக்கு யாரை நொந்துகொள்வது?


அம்பேத்கரின் பிறந்த நாளுக்காக அரசால் விடப்பட்ட பணி விடுமுறையை தமிழ்ப் புத்தாண்டுக்கான விடுமுறை என்று இருக்கும் படித்தவர்களே தமிழ் நாட்டில் ஏராளம். அம்பேத்கரின் உழைப்பால் சமூக நியதி கொள்கையால் பயனடைந்த படித்தவர்களே இப்படியென்றால் படிக்காதவர்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை.


ஆனால், இந்த கேடுகெட்ட சமூகத்தில் படிக்காதவர்களுக்கு படித்தவர்கள் வழிகாட்டாமல், படிக்காதவர்களின் வழிகளான பிற்போக்கு மூடத் தனங்களை பெரும்பாலான படித்தவர்கள் பின்பற்றுகிறார்கள்.

போதாக்குறைக்கு முற்போக்கு பாசறையில் இருந்து உதயமான கலைஞ்சர் தொலைக்காட்சி, சண் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் காணத்தவறாதீர்கள்.. என்று ஒளிரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இன்று கூட டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் பற்றி குறைந்த அளவுக்கு கூட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பவில்லை.


பொருளாதாரத்துறையில் சிறந்து விளங்கியவர் - உலகமே போற்றும் வகையில் சட்டத்தை வடிவமைத்தவர் - சமூக நியதிக்கு தடையாக விளங்குவது எது என்பதை கண்டுணந்து அஞ்சாமல் எடுத்துரைத்து செயலாற்றியவர் - ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் .பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் உரிமைகள் கிடைக்க வழிவகையை ஏற்படுத்தியவர். இவ்வாறாக சமூகமும் மக்களும் சமநிலையுடன் வாழ வேண்டும் என எண்ணி பாடுபட்ட ஒரு மனிதரான டாக்டர் அம்பேத்கருக்கு இந்த நாடு செய்யும் நன்றி கடன் இது தானா?


இந்த நாடு எப்போதுமே மேட்டுக்குடிகளின் பக்கமே இருந்திருக்கிறது - இருக்கிறது. இந்த நாட்டு சட்டத்தை வடிவமைத்து மக்கள் உரிமையுடன் வாழ வேண்டும் என்று தான் வாழ்ந்த காலம் முழுவதும் செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரைதான் இந்த நாடு தந்தையாக ஏற்று கொண்டிருக்க வேண்டும். ஆனால், காலம் முழுதும் மேட்டுக்குடிகளையே கொண்டாடிய இந்த சமூகத்தில், பார்ப்பன பனியா மேட்டுக்குடி இனத்தை சேர்ந்த காந்தி நாட்டின் தந்தையாக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த கால வரலாறு இப்படி தவறாக இருக்க நிகழ்கால வரலாறு என்னவோ அம்பேத்கர் என்ற மனிதரை மறக்கடிக்குமோ? என்று அச்சப்பட வைக்கிறது.

இந்த நிலைக்கு - பிறந்த நாளின்போது அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செல்வதும், அதன் பின்னர் அடுத்து இறந்த நாள் வரும் வரை கண்டுகொள்ளாமல் இருப்பதும் மரபாகி போனதுதான் காரணம். அதற்காக அம்பேத்கரின் சிலைக்கு நாள்தொறும் மாலை அணிவிக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. அதைவிட முக்கியமானது, அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் முனைப்புடன் பரப்ப வேண்டும்.


இந்த செயலை தாழ்த்தப்பட்டவர்கள் தான் செய்ய வேண்டும் என்ற தவறான எண்ணத்தை, அம்பேத்கரால் பயனடைந்த பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் குறிப்பாக பெண்களும் மனங்களில் இருந்து முற்றாக துடைத்தெறிய வேண்டும்.


அம்பேத்கரை புரிந்துகொள்ளாத - அவரின் கொள்கைகளை திறந்த மனத்துடன் அறிந்துகொள்ளாத இந்த சமூகம் என்றைக்குமே உருப்படாது.


அறிவாயுதம் ஏந்தி அடிமை சமூகத்தை மாற்ற பாடுபட்ட டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று , "டாக்டர் அம்பேத்கர் தலித் தலைவர் அல்ல, அனைத்துப் பிரிவினருக்குமான பொது தலைவர்" என்ற நிலை வர அனைவரும் உறுதி ஏற்போம். அவ்வாறே செயல்படுவோம்.