Showing posts with label சிற்றூர். Show all posts
Showing posts with label சிற்றூர். Show all posts
முருக சிவகுமார் (murugasivakumar)
அடித்தளத்தில் வாழ்கிறவ்ர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், வாழ்வு மறுக்கப்பட்டவர்கள் குரல் இந்திய சமுதாயத்தில் செவிசாய்க்கப்படாது; வெற்றிபெறாது என்பது மகளிர் மசோதா மூலம் மீண்டுமொரு முறை நிரூபிக்கப்படவிருக்கிறது. கடந்த 13 ஆண்டுகளாக என்ன காரணத்துக்காக சமூகநீதி கொள்கையுடையவர்களால் எதிர்க்கப்பட்டதோ, அந்த எதிர்ப்புக்கு கிஞ்சித்தும் சுணங்காத அதிகாரச் சமூகம் அதே நிலையில் மகளிர் மசோதாவை செயல்படுத்தவிருப்பது வேதனையானது.

2009 ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற்ற அன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்ற போது பேசிய ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், ‘மகளிர் மசோதாவை இதே வடிவில் கொண்டுவந்தால் இதை எதிர்க்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எங்கள் கட்சிக்கு இல்லாமல் இருக்கலாம்; ஆனால், இந்த அவையிலேயே நான் விஷம் குடித்து இறப்பேன், மசோதாவை நிறைவேற்ற விடமாட்டேன்’ என்றார்.

இப்படியாக மகளிர் மசோதாவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் நிறைவேற்றப்படாமலே இருந்தது. இந்த மசோதாவில் சில திருத்தங்களை செய்து பின்னர் அமல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது மகளிர் உரிமை நாளாக மார்ச் 8 அன்று இந்திய பெண்களுக்கான பரிசாக அளிக்கப்பட இருக்கிறது.இந்த சட்ட மசோதாவை மேட்டுக்குடி மனோபாவம் கொண்டவர்களால் நிருவகிக்கப்படுகிற காங்கிரசு, பாஜக, இடதுசாரிகள் கட்சிகள் ஆதரிக்கின்றன.

அதேசமயம், லாலு பிரசாத், முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோரின் கட்சிகள் எதிர்கின்றன. அவர்கள் எதிர்த்தாலும் மசோதா நிறைவேறப் போவது உறுதி. சிற்றூர்ப்புறங்களில் சொல்லப்படும் ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது என்ற சொலவடை உறுதியாகியிருப்பது வருந்தத்தக்கது.ஆனால், இந்த நிலை தொடருவது நல்லதல்ல என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எண்ணம்.

இந்நிலையில் மகளிர் மசோதவை தடுத்து நிறுத்துபவர்கள் அனைவரும் ஆணாதிக்கவாதிகள் - சமூகநலனுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தை பெண்ணியவாதிகளும், மசோதாவை ஆதரிப்பவர்களும் பரப்பிவருகின்றனர்.

ஜூன் 16, 2009 அன்று 'ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் பெண்களின் பங்கை அதிகரித்தல்' என்ற கருத்தரங்கை திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி துவக்கி வைத்து பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் பெண்கள் மசோதாவை நிறைவேற்றினால் சிலர் விஷம் குடிப்பேன் என்கிறார்கள். இந்த சமுதாயத்தில் அந்தளவுக்கு ஆணாதிக்கம் இருக்கிறது. அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு போக மீதியுள்ள இடங்களை பெண்களுக்கு தரலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். அரசியல் ஆண்களின் வசதிகளுக்காக உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. அதில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை போராடி பெற வேண்டும்” என்று அரைவேக்காட்டுத்தனமாக சொல்லியிருக்கிறார்.

இப்படியான கருத்தை பரப்பியதும் பரப்பி வருவதும் கேடுகெட்ட அரசியல் வித்தை என்ற நிலையில் மகளிர் மசோதா குறித்தும், எதிர் - ஆதரவு கருத்து குறித்தும் விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது.

ஒரு அரசியல் தலைவரின் மகளாக பிறந்து, முதலமைச்சரின் குமரியாக வளர்ந்து, வசதியாக மாப்பிளைக்கு மனைவியாகி சுகபோக வாழ்க்கை நடத்திய பின்னர் திடீரென்று எம்.பியாக அவதாரமெடுத்து நாடாளும் மன்ற கட்டடத்தில் நுழைந்த அரசிளங்குமரி கனிமொழி சரத் யாதவை ஆணாதிக்கவாதி என்று திட்டியதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. பாவம், அவர் வளர்ந்த சூழல் அப்படி. சரத் யாதவின் கருத்தில் இருக்கும் நியாயத்தை புரிந்துகொள்ளும் திராணியற்றவர் கனிமொழி என்பதுதான் உண்மை.

இத்தருணத்தில் மகளிர் மசோதா பற்றி அரைவேக்காட்டுத்தனமாக பேசாமல் ஒரு கருத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மசோதாவை எதிர்ப்பவர்கள் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்ற கேடுகெட்ட எண்ணத்தால் எதிர்க்கவில்லை. மாறாக, ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை அளிக்க வகை செய்துவிட்டு, அந்த மசோதாவை நிறைவேற்றுங்கள் என்றுதான் வலியுறுத்துகிறார்கள். அவர்கள் எண்ணமும், செயல்பாடும் தவறா? அதை தவறென்று நினைப்பவர்கள் அனைவரும் அடித்தளத்தில் வாழ்பவர்களை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத ஆதிக்கவாதிகள் என்று பழியை சுமக்க வேண்டியவர்கள். சமூகத்தை முழுவதுமாக அறியாத பலரும் மகளிர் மசோதா பற்றி பேசுவது வேதனையானது.

உள் இட ஒதுக்கீடு ஏன் தேவை?

சாதிகளாலும், பொருளாதார படிநிலையாலும் பிரிந்து கிடக்கிற இந்திய சமூகத்தில் வாழ்கிற பெண்கள் எல்லோரும் ஒரே நிலையில் வாழ்கிறார்களா? என்ற கேள்விக்கு இல்லைவே இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், எத்தனையோ இலட்சம் பெண்கள் இந்தியாவில் அரவமற்று வாழ்கை தேடிக்கொண்டே கிடக்கிறார்கள்.

சாதி, பணம், மதம், சடங்கு, ஆண் உள்ளிட்ட கருத்தியல்களின் கீழ் பெண்கள் மண்டியிட்டு கிடக்கும் அளவுக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அதே சமயத்தில் எல்லா பெண்களையும், ஒரே அளவுகோலில் வைத்து பார்க்கலாமா? அப்படி பார்க்கும் பார்வை சரியானதா? என்றால், அது நிச்சயமாக சிறந்த பார்வையாக இருக்க முடியாது.

ஆதிக்கசாதிகளின் தெருவில்கூட தலித் நடக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற ஊர்களும், அன்றாடங்காய்ச்சி கூலி தலித்துகள் சாதிகளின் நெருக்குதல்களில் சிக்குண்டு மூச்சுதிணற முழிபிதுங்கி கிடக்கிற ஊர்களும் இந்தியாவில் ஏராளமாக காணப்படுகின்றன. இப்படிப்பட்ட நம் சமூகத்தில் வாழ்கிற பெண்களை (1) கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, அடித்தள பெண்கள்; (2) பொருளாதாரத்தில் உயர்ந்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள்; (3)சாதியால் ஒடுக்கப்பட்ட இன பெண்கள் என்று மூன்று வகையாக பகுக்கலாம். உயர்குடியில் பிறந்த பெண்களுக்கு, இந்த சமூகத்தில் விரவிக்கிடக்கிற வாய்ப்பும் வசதிகளும் கிராமப்புறத்தில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு கிடைத்ததில்லை. அந்த கிராமப்புற பிற்படுத்தப்பட்ட பெண்களை காட்டிலும், சாதியால் காலம்காலமாக வஞ்சிக்கப்பட்ட தலித் பெண்களின் இருப்பு ஒவ்வொரு நாளும் அச்சத்திலும் வேதனையிலும் உறைந்து கிடக்கிறது.

தலித் பெண்கள்: ஓலைகுடிசையில் சாணித் தரையில் பிறந்து, செங்காட்டு மண்ணில் புரண்டு, ஆசிரியர்கள் இல்லாத பள்ளியில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு வந்து, ஒரு பண்ணையாரிடம் அடிமை ஆளாக இருக்கிற ஆணுக்கு வாக்கப்பட்டு, புள்ளக்குட்டிகளோடு, வானம்பார்த்த நிலத்தை மொட்ட களைவெட்டியால் கொத்திக்கொண்டும், மொன்ன அரிவாளால் அறுப்பு அறுத்துக் கொண்டும் அரை வயிறு கஞ்ச குடித்து வாழ்நாளை கழித்து மடிந்துபோகிறார்கள்.

தலித் அல்லாத பெண்கள்: ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பை உறிஞ்சி காசுகளாகவும், நகைகளாகவும் குவித்துள்ள வீட்டில் பிறந்து கான்கிரீட் தரையிலும், தொட்டிலிலும் வளர்ந்து, பொம்மைகளோடு விளையாடி, பத்து ஊரை கடந்து சென்றாவது நல்ல பள்ளியில் படித்துவிட்டு, அப்பா - அண்ணண்கள் கடைக்கண் கருணையோடு பணம் படைத்தவனுக்கு வாக்கப்பட்டு, வேலையாட்களை மெய்க்கும் பொறுப்பை ஏற்று, பஞ்சு மெத்தையில் தூங்கி பாலும் சோறும் தின்று, உழைக்காமலே உடலை வளர்த்து, பணத்தால் இறப்பு நாளை தள்ளி போட்டு வாழ்கிறவர்கள்.

வசதிபடைத்த குடும்ப பெண்கள்: சுகத்தில் வளர்ந்து, பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதற்காக மட்டுமே பணம் கட்டியாவது பட்டப் படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் உறங்கும் நேரம், தொலைக்காட்சி பார்க்கும் நேரம் போக, மீதி பொழுதை போக்க உதட்டு சாயத்துடன் மகளிர் மன்றங்களிலும், கட்சிகளிலும் வலம் வந்து வாழ்கிறவர்கள்.

இம்மூன்று தரப்பினரையும் ஒருசேர பார்ப்பவர்கள் மனநோயாளிகளாகதான் இருப்பார்கள்.

ஆதிக்கசாதி குடியில் பிறந்த பெண்களுக்கு அவர்களின் அப்பா, அண்ணன்கள் உறுதுணையாக இருந்து பலரது உழைப்பை சுரண்டியாவது வாழ்நாள் முழுவதும் வசதியாகவே வாழ வகை செய்வார்கள். ஆனால், உழைத்தும் அதற்கேற்ப கூலி வழங்கப்படாத இந்த சாதிய - முதலாளிய சமுதாயத்தில் அடிமைகளாக வாழ்க்கை நடத்துகிற அப்பா, அண்ணண்கள் இருக்கும்போதும், தான் வாழ்வதற்கான வகையை தானே தேடி நிலக்கிழார்களின் கொல்லைகளில் வயிறுகூட நிரப்ப போதாத கூலிக்கு வாழ்நாளை ஒப்புகொடுத்துவிட்டு, பிள்ளை, குட்டிகளோடும், உறவுகளோடும் இழுபடுகிற தலித் பெண்களுக்கு யாரும் துணை வருவதில்லை.

”ஊர் குருவி ஒசர பறந்தாலும், பருந்தாகாது” என்று சாதியவாதிகளால் கட்டமைக்கப்பட்ட மொழியை போல, இத்தடைகளையெல்லாம் மீறி அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தின் பயனால் வாழ்வின் பற்றுக்கோடென படிப்பை எண்ணி படித்துவிட்டு வெளியே வரும் தலித் பெண்கள், வேலை செய்கிற இடங்களில் சாதிய மனநோயாளிகளிடம் சிக்குண்டு மன உளைச்சலில் கிடக்கிறார்கள். வேலை செய்கிற இடங்களில் தலித் பெண்களை உளைச்சலில் ஆழ்த்துகிற ஆதிக்கசாதி ஆண்களுக்கு சளைக்காதவர்களாக ஆதிக்கச்சாதி பெண்களும் இருந்து வருகின்றனர் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

ஆதிக்கசாதி இனத்திலும், பொருளாதார வசதிபடைத்த இனத்திலும் பிறந்த பெண்களுக்கு ஆணாதிக்க சமுதாயத்தில் பல கொடுமைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. அதை எதிர்கிற முற்போக்காளர்களில் பலர் அதனினும் கீழாக வாழ்கிற தலித் பெண்களை, ஆதிக்க சாதி பெண்கள் நடத்துகிற விதத்தை கண்டிப்பதே இல்லை.

இந்நிலையில், ஒரு தலித் பெண்ணையும், ஒரு பிற்படுத்தப்பட்ட பெண்ணையும், ஒரு மேட்டுக்குடி பெண்ணையும் ஒரு தளத்தில் வைத்து பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனத்தை பணம் படைத்தவர்களும், மேட்டுக்குடிகளும் நிரம்பிக்கிடக்கிற நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவை நிறைவேற்றவிருக்கிறார்கள்.

கருணாநிதியின் கருத்து

இதனை எதிர்க்க வேண்டிய இடத்தில் இருக்கிற முதலமைச்சர் கருணாநிதி, இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, பெரும்பான்மையோர் கருத்து எதுவோ அதைதான் பொதுக்கருத்தென ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி, “மகளிர் மசோதா சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பெரும்பாமையோரின் கருத்தை பொதுக்கருத்தாக ஏற்றுக்கொள்ள சொல்கிற கருணாநிதியின் கருத்து பெரும் ஆபத்தானது. இதே நிலைப்பாட்டை சாதியிலும், ஆன்மீகத்திலும் பொருத்தி பார்த்து பெரும்பான்மையோரின் கருத்தை பொதுக்கருத்தை ஏற்றுக்கொள்ளலாமா? என்பதையும் அவர் விளக்கினால் குழப்பம் விலகும். பதவியையும் சொத்துக்களையும் நிலைநிறுத்திகொள்ள எதை வேண்டுமானாலும் பேசும் நிலைக்கு திராவிட தலைவர் கலைஞர் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

மகளிருக்கு இடங்களை ஒதுக்குவதற்காக மசோதாவைக் கொண்டு வருகிறபோது, அந்த இடங்களை யாரெல்லாம் கைப்பற்றுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கும், உதட்டுசாயம் பூசிக் கொண்டு கிளப்புகளில் வலம் வருகிற மேட்டுக்குடி பெண்களுக்கும், வசதியான குடும்ப பெண்களுக்கும் 33% இட ஒதுக்கீடு பயன்பட போகிறது. இவர்களை கடந்து, கிராமப்புறத்தில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட பெண்களோ, அதனினும் கீழாக வாழ்கிற தலித் பெண்களும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கேற்கவே முடியாது என்பதுதான் உண்மை.

இந்த நிலை ஏற்பட்டுவிட கூடாது என்பதால்தான் தலித் பெண்களுக்கும், பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும், சிறுபான்மையின பெண்களுக்கும், கிராமப்புற பெண்களுக்கும் தனித் தனி உள் இட ஒதுக்கீட்டை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அடித்தள பெண்கள் மீது மேட்டுக்குடி சமூகம் கட்டவிழ்த்துவிடும் வன்முறையின் வடிவமாக மகளிர் மசோதாவை பார்க்கலாம்.

எதிர்காலத்திலாவது அடித்தளத்தில் வாழ்கிற ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க அதிகார வர்க்கத்தினர் முன்வரும் வரை இது குறித்து தொடர்ந்து விவாதிப்பது தேவையாகிறது.
முருக சிவகுமார் (murugasivakumar)
இந்தியாவில் தலித்து மக்கள் அனைத்து நிலைகளிலும் வஞ்சிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, அவர்களுக்கு ஆதிக்கச் சாதிகள் செய்யும் கொடுமைகளை விட அரசாங்கம் செய்து வரும் வன்கொடுமைகளை அதிகம். காரணம், இந்த ஆட்சியும், அதிகார மையங்களும் சாதிவாதிகளால்தான் ஆளப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.

ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளாக இருப்பது உணவு, உடை, இருப்பிடம். இந்த மூன்றில் உணவு இல்லாமல் பட்டினியோடு காலத்தை கழிக்க முடியும். அது நம் நாட்டில் இயல்பானதுதான். இந்தியாவின் மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் வயிறார சாப்பிடுவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் இராப்பட்டினியாகவே உறங்கச் செல்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அடுத்து, உடை - பழைய கந்தல் துணியையாவது துவைத்து துவைத்து கட்டிக் கொள்ளலாம். வறுமையின் உச்சத்தை வெளிச்சம்போட்டு வெளிப்படுத்துவதாக அரை நிர்வாணத்தோடு அலையும் மனிதர்கள் நம் சமுதாயத்தில் ஏராளமாக இருக்கிறார்கள்.


அடுத்து, மூன்றாவதாக இருப்பிடம். உணவு, உடை இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம் என்ற நிலையிலும் படுத்துறங்க இருப்பிடம் ஒன்று இல்லையெனில் வாழ்க்கை நரகமாகவே மாறிவிடும்.

பெரிய மாளிகை போன்ற வீடுகளை கட்டி வைத்துவிட்டு குடியிருக்காமல், கட்டி சாத்திவிட்டு கிடக்கும் வீடுகளை சென்னை உள்ளிட்ட நகரங்களில் காணலாம். அல்லது, இரண்டு மூன்று பேருக்கு 10 அறைகளுக்கு மேல் 4 மாடிகள் கட்டி ஆட்கள் நடமாட்டமின்றி பல அறைகள் கிடக்கின்றன. இவ்வாறாக, ஆறு மாதங்களாக பூட்டிக்கிடக்கும் வீடுகள் - ஆட்கள் வசிக்காத வீடுகளை கைப்பற்றி வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்க தனி சட்டம் கொண்டு வந்தால் நல்லாதான் இருக்கும். ஏனெனில், சிலர் வணிகம், அரசியல் போன்ற தொழில்களை செய்து, மக்களை ஏமாற்றி அளவுக்கு மீறி சொத்துக்களை அமுக்கி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அதே நேரத்தில், படுத்துறங்க வீடு என்று சொல்லுபடியான ஒரு இடம் இல்லாததால் பல குடும்பங்கள், சாலையோரங்களில் பிள்ளை குட்டிகளுடன் காலத்தை கழித்தபடி கிடக்கின்றன.

கிராமப் புறங்களில் பார்த்தோமானால், வயல்களில் எளிதாக கிடைக்கிற கரும்பு தோகையையும், தென்னங்கீற்றுகளையும் நிலக்கிழார்களிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கி கொண்டு வந்து கூரையாக வேய்து, மண்ணை பிசைந்து கற்களை வைத்து குடிசைகளை அமைத்து வாழும் மக்களை காணலாம். அந்தக் குடிசைகளில் பெரும்பாலானவை பல ஆண்டுகளாக மாற்றப்படாமல், கூரை பொத்தலாகி போய் இரவுகளில் முற்றத்தில் நிலா எட்டிப் பார்த்தபடி இருக்கும். மழை பெய்யும் காலங்களில் ஒரு ஓரத்தில் குழந்தைகளை தூங்கவைத்துவிட்டு, சொம்பு, தட்டு, ஈய ஏனம் ஆகியவற்றை வைத்து மழைநீரை பிடித்தபடி இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கும் எண்ணற்ற பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

இத்தகைய கொடுமைகளையெல்லாம், காலம் காலமாக உழைத்து தம் உழைப்பின் வழியாக பலரின் வாழ்வை சுகமாக்கிய தலித் மக்களே பெரும்பாலும் அனுபவித்து வருகிறார்கள்.


இந்த நிலையை போக்கி அனைத்து மக்களுக்குமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஆளும் அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்புடன்தான் தலித் மக்களுக்கு வீடு கட்டித் தருவதற்கென மத்திய அரசு அன்னை இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தை உருவாக்கியது. அதன் மூலம் 1980-க்கு பிறகு தலித் மக்களுக்கு 4 பேர் படுக்கும் அளவுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டன. நம் நாட்டில் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவழிக்காத சூழலில், தலித்துகளுக்கு வீடுகளை கட்டுவதற்கென ஒதுக்கப்பட்ட நிதியும் முறையாக செலவிடப்படவில்லை. இத்திட்டத்திற்கான பல ஆயிரம் ரூபாயில் ஆளுங்கட்சியினரும், அலுவலர்களும் பெரும் தொகையை தமது பங்காக எடுத்து கொண்டு, குறைந்த தொகையில் வீடுகள் கட்டித் தருகிறார்கள்.

அவ்வாறு கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகள் பலவும் அடுத்த மழைக்கே தாங்காமல் ஒழுகும் அவல நிலையில் இருந்தன. ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தலித் கான்கிரீட் வீடுகள் இப்போது பல இடங்களிலும் மேற்கூரை இடிந்துவிழுகின்றன.


காலம் முழுவதும் ஓய்வின்றி உழைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் தலித் மக்களுக்கு வழங்கப்படாத இந்தச் சமுதாயத்தில், பெரும்பாலான தலித்துகள் அன்றாடம் காய்ச்சிகளாகவே வாழ்கிறார்கள் அல்லது வாழ்வின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் முதலாளிகளிடம் கடனாக சில நூறுகளை வாங்கிவிட்டு, அதற்கு பல ஆயிரங்களை வட்டியாக கட்டிக்கொண்டு கடனாளிகளாகவே கிடக்கிறார்கள்.


இவர்களிலெல்லாம் இடிந்து விழும் நிலையிலுள்ள தங்களது வீடுகளை பராமரிக்கவோ மராமத்து பணிகளை செய்யவோ இயலாமல், வீடுகள் எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற பயத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
இப்போது மழைக்காலம் என்பதால் இது குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டியது அவசியம்.

அண்மையில் பெய்த மழையின்போது, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரபெருமாள் கோயில் என்ற கிராமத்தில் - அண்ணா நகரில் தமிழக அரசு கட்டிய தொகுப்பு வீட்டின் மேல் கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது. எப்படியும் இடிந்து விழும் என்ற நம்பிக்கையில் அண்டை வீட்டில் படுத்திருத்த அக்குடும்பத்தினர் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
(மேற்கூரை இடிந்து விழுந்துள்ள நிலையை கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள படத்தை பாருங்கள்)

அதற்கு முன்பு பெய்த மழையின்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர் பகுதியில் ஒரு தலித்தின் அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் அங்கு இரவில் படித்துக் கொண்டிருந்த 2 பெண் குழந்தைகள் மாண்டுபோனார்கள். வேதாரண்யம் அடுத்த உப்பளாஞ்சேரி கிராமத்தில் பன்னீர்ச்செல்வம் என்ற தலித்தின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்தவர்கள் காயமடைந்தார்கள். நல்லுதேவன் பட்டியில் உள்ள பழனி என்பவரின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பழனியின் குழந்தையும், மனைவியும் இறந்தனர்.


மொடக்குறிச்சி அருகே அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் காயத்துடன் சிறுமி உயிர் தப்பினாள்.

செங்குளம் காலனி அரசு குடியிருப்பு பால்கனி இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பலியானார். இங்கு குறிப்பிட்ட நிகழ்வுகள் கொஞ்சம்தான். இவ்வாறாக, தமிழ்நாடு முழுவதும் அரசால் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் மழை பெய்யும் போதெல்லாம் இடிந்து விழுகின்றன.

இதுதான் தலித்துகளுக்கு அரசு செய்துள்ள திட்டத்தின் நிலை. தலித்துகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மத்திய அரசு ஒதுக்கப்படும் நிதியை தமிழக ஆளும் வர்க்கம் முறையாக செலவழிக்காததே இந்த நிலைக்கு காரணம்.

ஆதிதிராவிடர் நலத்திற்கென உருவாக்கப்பட்ட துறை தலித்துகளின் வாழ்வு மேம்பாட்டிற்கு உதவியதாக தெரியவில்லை. ஒரு சாதாரண தலித், ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கிய நிதியின் மூலமாக முதலாளியாக மாறினார் என்பதை யாராவது கண்டதுண்டா? இருக்கவே வாய்ப்பில்லை. காரணம், ஆடு, மாடு வாங்குதல் அல்லது மண்வெட்டி, கடப்பாரை வாங்குதல் செருப்பு தைக்க கடை வைத்தல் - இப்படிபட்ட நிலையில்தான் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதைவைத்து யாராவது முதலாளியாக உருவாக முடியுமா?

தலித்துகள் முதலாளிகளாக மாறுவதற்காக உருவாக்கப்பட்ட பெட்ரோல் நிலையம், பேருந்து வழித்தட உரிமம் போன்ற திட்டங்கள் நிறைய இருக்கின்றன. அவை தலித்துகளின் பெயரால் வேற்று சாதியினருக்கு வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கும் அதிகாரிகள் இருக்கும் வரை சாதாரண தலித் வளர முடியாது. இதுதான் உண்மை. அது போலத்தான், அரசால் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை பராமரிப்பதற்கென தலித்துகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக ஆதிதிராவிடர் நலத்துறை கணக்குகள் எழுதியுள்ளன. ஆனால், அந்தத் தொகை தலித் மக்களுக்கு சென்றடையவே இல்லை.

இதைவிட மோசமாக அணுகுமுறையை தி.மு.க. அரசு தொடங்கி செய்து வருகிறது. அதுதான் சமத்துவபுரம் திட்டம். தலித்துகளின் பெயரால் பெரும் திட்டங்களுக்கான நிதியை எடுத்து வேற்று சாதியினருக்கு வழங்குவது போலவே, தலித்துகளின் பணம் சமத்துவபுரம் என்ற பெயரால் வேறுசாதியினருக்காக - ஆளுங்கட்சியினருக்காக செலவிடப்படுகின்றது.


அண்மையில், சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் பேசும் போது, ’’முந்தைய தி.மு.க ஆட்சியின்போது முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 145 இடங்களில் சமத்துவபுரங்கள் தொடங்கப்பட்டது. பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்ததன் நினைவாக மேலும் 95 சமத்துவபுரங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2008-09 தமிழ்நாட்டில் 29 சமத்துவபுரம் அமைக்க திட்டமிடப்பட்டது. இங்கு திறக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தோடு சேர்த்து இதுவரை 9 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் மீதமுள்ள 20 சமத்துவபுரங்களும் திறக்கப்பட்டு விடும். 2009-10-இல் மேலும் 30 சமத்துவபுரங்களும், 2011-ஆம் ஆண்டு மீதம் உள்ள 36 சமத்துவபுரங்களும் திறக்கப்பட்டு மொத்தம் 95 சமத்துவபுரங்களும் அமைக்கப்பட்டு திறக்கப்படும்’’ என்றார்.


கலைஞரின் முற்போக்கு கனவு திட்டம் என்றும், சமுதாயத்தை மாற்றுவதற்கான திட்டம் என்று தி.மு.க. அரசு மார்தட்டி வரும் இந்தத் திட்டமே ஒரு மோசடியான திட்டம். பட்டினியால் வாடுகிறவனுக்கு உணவு கொடுக்க வேண்டிய நிதியை வைத்து கோயிலில் அன்னதானம் வழங்கிய ஜெயலலிதாவின் திட்டம் போல, தலித் மக்களுக்கு வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய பணத்தில் இந்த 95 சமத்துவபுரங்களும் அமைக்கப்படுகின்றன.


தலித்துகளுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் தாட்கோ மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் வீடு கட்டித்தர வேண்டும். வேறு எந்தத் திட்டத்துக்கும் இந் நிதியை பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறி, சமத்துவபுரங்களுக்கு தமிழக அரசு நிதியை வீணாக செலவழித்து வருகிறது. பெரியாரின் பெயரால் வாழ்வின் உச்சத்தை தொட்ட கருணாநிதி சமத்துவபுரம் அமைக்க முடிவெடுத்தபோது, இதற்கான நிதியை தமிழக அரசே தமது நிதியில் இருந்து ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், தலித் மக்களுக்கான நிதி தவறான வழியில் செலவிடப்படுகிறது.

இந்த இடத்தில் சிலர் யோசிக்கலாம். வீடு, மானியக் கடன்கள் ஆகியவை அரசாங்கமா பார்த்து கொடுக்கிற இலவசங்கள் தானே... எவ்வளவு கொடுத்தால்தான் என்ன? என்ற மனநிலை பலருக்கும் இருக்கிறது. இப்படி எண்ணுபவர்கள்தான் படித்துவிட்டு அலுவலராக வரும்போது, அந்த மனநிலையோடே செயல்படுகிறார்கள். ஆண்டாண்டுக் காலமாக தலித் மக்களின் உழைப்பை சுரண்டி வாழ்ந்த, வாழ்கிற இந்த ஆதிக்க சமூகம், தலித்துகளின் வாழ்நிலையை மாற்ற கடமைப்பட்டுள்ளது.

தலித்துகளுக்கு அரசாங்கம் செய்வது சலுகையோ, இலவசங்களோ அல்ல; அவை தலித்துகளின் உரிமைகள் என்பதை வரலாற்று நிகழ்வுகளை தெரிந்துகொண்டு,
திறந்த மனதோடு ஒப்புக்கொள்ள வேண்டும். ஆதிக்கச் சாதிகளில் பிறந்தவர்கள் அதனை ஒப்புக்கொள்வதன் மூலமாகவே தலித்துகளின் உரிமைகள் முறையாக அவர்களை சென்றடையும்.

இந்த சமத்துவபுரம் என்ற மோசடி திட்டம் பற்றி செ.கு.தமிழரசன் மட்டுமே கண்டித்திருக்கிறார். தலித்துகளின் ஏகபோக பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்கிற வேறு எந்த தலித் தலைவர்களும் இது குறித்து வாய் திறக்கவேயில்லை. வெறும் ஒன்று, இரண்டு சீட்டுகளுக்காக தமது மக்களின் அடிப்படை உரிமைகளைகூட விட்டுத் தர தலித் தலைவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.


புனிதமான இடங்கள் என்று சொல்லப்படுகிற கோயில்களை கட்டுவதற்கு பல ஏழைமக்கள் மாண்டுபோனார்கள். அவர்களின் பிணங்களின் மீதுதான் நாம் வியக்கும் கோயிகளும் அரண்மனைகளும் கட்டப்பட்டன. அந்த கெடுகெட்டத்தனத்தை அரசன் செய்தான் என்பதாலேயே யாரும் தட்டிக் கேட்டு புரியவைக்கவில்லை. அது போலவே, தலித் தலைவர்களும், சமநீதி சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களும் இந்த மாதிரியான மோசடிகளை செய்யும் ஆளும் வர்க்கத்தையும், அதிகாரிகளையும் தட்டிக் கேட்காமல் இருக்கும் வரை - தலித்துகளின் சமாதிகளின் மீது சமத்துவபுரங்களை தமிழக அரசு கட்டிக்கொண்டுதான் இருக்கும். இந்த நிலையை மாற்ற சமூக ஆர்வலர்கள் பெரும் விவாதத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.
முருக சிவகுமார் (murugasivakumar)
இந்தியாவில் ஏறக்குறைய 200 ஆண்டுகள் நடந்த வந்த ஆங்கிலேயர் ஆட்சி முடிந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்றது. இந்தியர்களின் ஒருமித்த போராட்டத்தைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள், இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை இந்திய மக்களிடம் ஒப்படைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க விழா ஆகஸ்ட் 14 -ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குத் தில்லியில் பாராளுமன்ற நடுமண்டபத்தில் நடந்தது.

அங்கு, நேரு உரையாற்றுகையில்,தோ இன்னும் சிறிது நேரத்தில் நள்ளிரவு 12 மணி அடித்ததும் உலகம் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இந்தியா விழித்தெழப் போகிறது. விடுதலை பெற்ற நாடாக இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும் நேரத்தில் இந்திய மக்களின் தொண்டுக்காகவும், மனித குல மேம்பாட்டிற்காகவும் நம்மை ஒப்படைத்துக் கொள்ள சூளுரை ஏற்போம். எந்தக் காலத்திலும் தேடுதலையோ, இலட்சியத்தைதோ இந்தியா கைவிட்டதில்லை. விடுதலையைப் பெற இந்திய மக்கள் அனைவரும் ஆங்கிலேயரின் பல வகையான துன்பங்களைக் பொறுத்துக்கொண்டோம். சில துன்பங்கள் அப்படியே மனத்தில் நிற்கின்றன. எனினும் கடந்து போனதை நினைத்துக்கொண்டே இருக்காமல், நம்மை அழைக்கும் வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்போம். நம் கனவுகள் நிறைவேறிட நாம் இன்றும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று உணர்ச்சியுடன் பேசினார்.

இந்தியாவின் விடுதலை நாளை இந்தியர்களும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் இன்று கொண்டாடும் வேளையில், போராட்டத்தால் கிடைத்த விடுதலை யாருக்குப் பயன்பட்டது என்பதைத் தன்ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாக இருக்கிறது. அமைதி வழியில் சிலர், போர் வழியில் சிலர், நாடகங்கள்- பாடல்கள் வாயிலாக சிலர் தேசிய உணர்வைத் தூண்டி மக்களைக் கிளர்ந்தெழச் செய்தனர். பல கோடி மக்கள் குரு சிந்தி, சிறையில் இருந்து போராடியதால் ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் இந்த விடுதலை கிடைத்ததா? என்ற வினா சமூக பொறுப்புள்ள - மனித நேயமுள்ள ஒவ்வொருவரின் மனதிலும் எழுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வினா தொடர்கிறது. இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு; இந்தியாவில் பிறந்தவர்கள் யாவரும் என் உடன் பிறந்தவர்கள்; வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்வதே இந்தியர்களின் சிறப்பு என்று பாடப் புத்தகங்களின் வாயிலாகக் குழந்தைககளுக்குச் சொல்லித் தரப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பிறந்த அனைவரும் உடன் பிறந்தவர்களாக இருக்கிறார்களா என்றால் உண்மையாக இல்லை.

மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் ஒரு குறிப்பிட்ட மக்கள் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். பல சிற்றூராட்சிகளில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் அவர்கள் இருப்பதற்கு அனுமதிக்காசூழ்நிலை உள்ளது. கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் சாமி தெருவில் செல்லும்போது ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு மட்டும் செல்வதில்லை. கோயில்களில் நுழைவதற்கு விடுவதில்லை. பொதுவாக இருக்கும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளைகள் இருக்கின்றன; பொது இடங்களைப் பயன்படுத்த விடுவதில்லை. வாழ்ந்தால் தெருவில் நடக்கக்கூடாது. கோயில்களுக்கு வரக்கூடாது என்பதோடு இல்லாமல் இறந்தாலும் உடலை எரியூட்டுவதற்கோ புதைப்பதற்கோ இடம் மறுக்கும் நிலை தொடர்கிறது.

இந்நாட்டில் பிறந்த மக்கள் தம் சொந்த மண்ணில் உழைத்து வாழ்வதற்குக் கூட உரிமையில்லை. உழைத்து உணவுப் பொருட்களைக் கொடுக்கும் உழவர்களின் நிலங்களை அரசு பிடுங்கி, பெரு முதலாளிகளின் கையில் கொடுக்கிறது. வேளாண் நிலங்களில் சிறப்புப் பொருளாளதார மண்டலங்கள் அமைக்கப்படுவதால் சொந்த ஊரைவிட்டு மக்கள் நகரங்களுக்குக் கூலிகளாக இடம்பெயர்கின்றனர். பல மாவட்டங்களில் இருந்து குடிபெயர்ந்த தமிழர்கள், கருநாடகம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் சொந்த நாட்டு அகதிகளாக இருக்கின்றனர். தங்களுக்கு உள்ள விடுதலை எல்லையால் ஆற்றுமணல் உள்ளிட்ட கனிம வளங்களை அள்ளி வெளிநாடுகளும் அனுப்பி நீர் வளத்தை அழிக்கும் முதலாளிகளும் இந்த நாட்டில் இருக்கின்றனர். வெளிமாநிலங்களிலும், வெளியூர்களிலும் குறைந்த கூலிக்கு நிறைந்த உழைப்பை நல்கிப் பெரும் முதலாளிகளிடம் கொத்தடிமைகளாக எண்ணற்றோர் உள்ளனர். சிந்தித்தால் நமக்கு ஆபத்து என்று எண்ணி அரசு, குடிமகன்களைக் குடிகாரர்களாக்கிப் பெரும் தொகையை வருமானமாக ஈட்டுகிறது.

விடுதலைபெற்ற இந்தியாவில் வாழ்ந்துவரும் பலருக்கும் இன்னும் அடிப்படை வசதிகள்கூட கிடைக்கவில்லை. மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்படாததால் பல சிற்றூர்கள் இருளில் மூழ்கியுள்ளன. ஆற்றுக்கு அக்கரையில் வாழ்பவர்கள் சொந்த ஊரைவிட்டு வெளியூர்களுக்கு வருவதற்குப் போதிய வசதி இல்லாததால் அந்நிய நாட்டில் வாழ்வது போல் துண்டிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதியில் வாழ்ந்து வருகிறவர்கள் நோயுற்றாலோ, பெண்கள் கருவுற்றாலோ பல மைல் தொலைவுக்கு மனிதர்களே சுமந்துகொண்டு மருத்துவமனைக்கு வருகின்றனர். தூய்மையான குடிநீர் வழங்கப்படாததால் பல மைல் தொலைவுக்குச் சென்று தூய்மையற்ற தண்ணீரைத் தலையில் சுமந்து வந்து குடிக்கும் சிற்றூர்கள் உள்ளன.

வாழ்க்கையில் பின் தங்கியுள்ளவர்கள் படித்து வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால் பள்ளி, கல்லூரி வாயிலில் நுழையக்கூட முடியாதபடிக்குக் கட்டணம் பெறப்படுகிறது. அரசு தீட்டும் திட்டங்களைப் பட்டியலிட்டால் அதிர்ச்சியில் ஆழ்த்தும்படி உள்ளன. ஆனால், சிற்றூர்களுக்குச் சென்று பார்த்தால் முன்பு எவ்வாறு இருந்ததோ அப்படியே ஊர்கள் இருக்கின்றன. அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட நிதியை அமைச்சரும் அதிகாரிகளும் பங்கிட்டுக்கொள்வதால் திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றன.

தலைமுறை தலைமுறையாக வறுமையில் இருந்த உழைக்கும் மக்களில் பலர் எந்தவிதப் பயனையும் அடையாமல் ஒதுக்கப்பட்டுள்ளனர். தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பொதுமக்கள் அரசிடம் சென்றால் பணம் கொடுப்பவருக்கு மட்டுமே அதிகாரிகள் செயல்படுகின்றனர். ஒரு மனிதர் பிறந்து வாழ்ந்து இறக்கும் வரை அரசிடம் இருந்து எதைப் பெறவேண்டும் என்றாலும் கையூட்டு இல்லாமல் நடக்காது. இவை அனைத்தையும் எண்ணிப் பார்க்கும்போது இந்நாடு பெற்ற விடுதலை யாருக்குப் பயன்படுகிறது?! ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது என்று மட்டும் சொல்லலாம். மக்களுக்கு - குறிப்பாக அடித்தள மக்களுக்கு கிடைத்துவிட்டது என்று சொல்லுவது தவறு என்றே தோன்றுகிறது.

பொதுமக்களின் சொத்துக்களைப் பிடுங்கும் அமைச்சர்களும், கொலை வழக்கில் சிறைக்குச் சென்றுவிட்டு வந்து முதலமைச்சர் பதவியைக் கேட்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்தியா சுதந்திரம் பெற்றதால் மகிழ்ச்சியே. ஆனால், காலம் முழுவதும் உழைத்தாலும் வாழ்வு மாறாமல் இருக்கும் அடித்தள மக்களுக்கும், சாதி, மத வேறுபாடுகளால் வாழ்வைத் தேடி அலையும் மக்களுக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று சொன்னால் பலர் சிரிக்கிறார்கள். அது அவர்களின் சுதந்திரம்!

விடுதலைக்குப் பாடுபட்டவர்களை எண்ணிப் பார்த்தாவது. இந்நாட்டில் பிறந்த அனைவருக்கும் விடுதலை கிடைக்க வழிவகை செய்வோம் என்ற உறுதிமொழியை ஆட்சியாளர்களும் பெரும் முதலாளிகளும் ஏற்க வேண்டும்.