முருக சிவகுமார் (murugasivakumar)

இல்லாத ஒரு பொருளை இறைவனென்று சொல்லுவார்;

இருக்கின்ற மானிடரை இழிவு என்று சொல்லுவார்


- இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர் பாடியது. இப்போதும் இந்தப் பாடல் வரிகளை சொல்லுமளவுக்கு சமூகம் இருக்கிறது என்பது அருவெறுப்பானது மட்டுமல்ல, வேதனையானதும்கூட.

கடவுளை நம்புகிறவர்களின் பேச்சில் ஒருவித வெறித்தனம் இருக்கும். இந்த வெறித்தனம்தான் பல தகராறுகளுக்கெல்லாம் மூலக்காரணம்.


கட்ந்த வாரத்தில் செய்தித்தாளை பார்த்தபோது, ஒரு நிழற்படம் கண்களை உறுத்தியது. மனதுக்கு நெருடலை தந்த அந்தப் படம், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகிலுள்ள செட்டிப்புலம் கிராமத்தில் தலித்மக்கள் ஒரு கோயிலுக்குள் நுழைந்து வழிபட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்டது.

இல்லாத ஒரு பொருளை இருப்பதாக சொல்லி அதன் பெயரால் நடந்துவரும் அநியாயங்கள் ஏராளம். கடவுள் என்று சொல்லி கல்லை நேசிக்கும் பலர் மனிதர்களை நேசிப்பதில்லை. அதனால்தான் மனிதநேயமற்ற கொடுமைகள் நடந்து வருகின்றன. செட்டிப்புலம் கிராமத்தில் என்ன நடந்தது? யாரால் நடந்தது? இத்தகைய சம்பவங்களுக்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? என்பது குறித்து விவாதிக்கலாமென்று தோன்றியது.


செட்டிப்புலம் கிராமத்தில் வன்னியர்கள் 300 குடும்பங்களும், தலித்துகள் 115 குடும்பங்களும் வசிக்கின்றன. வன்னியர்களில் பெரும்பான்மையோர் தென்னந்தோப்புகளுடன்கூடிய நிலம் வைத்துள்ளனர். அவர்களின் நிலங்களில் தலித்துகள் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இங்கு கடைத்தெருவிலுள்ள சலூன் கடையில் தலித்துகளுக்கு முடிவெட்டுவதோ, முடி மழிப்பு செய்வதோ மறுக்கப்பட்டு வருகிறது. ஆதிக்க மனோபாவத்தை பார்த்து பழகிப் போன தலித்துகள் பக்கத்து ஊருக்கு சென்று முடிவெட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


இப்படிப்பட்ட செட்டிப்புலம் கிராமத்தில் ஏகாம்பரேசுவரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் தலித் மக்கள் நுழைய ஆதிக்கச் சாதி இந்துக்களான வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அக்டோபர் 14-ஆம் தேதி, சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் தலித்துகள் ஆலய பிரவேசம் செய்ய முயன்றனர். அதனை அறிந்த வன்னியர்கள் திரண்டு நின்று அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, ஆதிக்கச் சாதி கருத்தியலை விட்டுத் தர தயாராக இல்லாத வன்னியர்கள், காவல்துறை ஊர்தி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அத்தாக்குதலில் காவல்துறையினர் காயமடைந்ததால் தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.


இதையடுத்து அங்கு பதற்றம் நிலவியதால் அன்று மாலை 3 மணிக்கு பிறகு வெறும் முன்னூறு குடும்பங்களில் வாழும் வன்னியர்களை அடக்க ஏராளமான அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டார்.


இந்நிலையில், கோயில் நுழைவு பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், அன்று 10 ஆயிரம் தலித்துகளுடன் ஆலயப் பிரவேசம் செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்தனர்.


இதையடுத்து, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் அண்ணாதுரை (வன்னியர்) முன்னிலையில் அமைதிக் கூட்டம் நடந்தது. இதில், தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்று வழிபாடு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.


இத்தீர்மானத்தை செயல்படுத்த, அன்று இரவே கோயிலில் ஆயுதப்படை பிரிவு காவலர்கள் குவிக்கப்பட்டனர். கோட்டாசியர். இராஜேந்திரன்(ஆதிதிராவிடர்), வேதாரண்யம் வட்டாட்சியர் கருணாகரன்(ஆதிதிராவிடர்) ஆகியோர் வீடு, வீடாக சென்று தலித் மக்களை 4 வேன்களில் ஏற்றி அழைத்து கொண்டு சென்றனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் முனியநாதன்(ஆதிதிராவிடர்), மாவட்ட வருவாய் ஆய்வாளர் அண்ணாதுரை(வன்னியர்) ஆகியோர் கோயிலில் காத்திருந்தனர். பின்னர், வேன்களில் கொண்டு வரப்பட்ட தலித் ஆண்களும், பெண்களுமாக 70 பேர், மாவட்ட ஆட்சியர் முனியநாதன் தலைமையில் 11.45 மணிக்கு கோயிலுக்குள் சென்றனர்.


சிறப்பு பூஜைக்கு பிறகு தலித் மக்களுக்கு சுண்டல், சர்க்கரைப்பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. (இப்படிப்பட்ட சடங்கு நாடகத்தை நடத்திய ஆட்சியாளர்கள் அல்வா கொடுத்திருக்கலாம்)


செட்டிப்புலம் கோயிலுக்குள் தலித் மக்களை அழைத்து சென்ற நிகழ்வின் நிழற்படத்தை பத்திரிகைகளில் பார்த்தபோது, (மேலே இருக்கும் படத்தை நீங்களும் பாருங்கள்) பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் இந்த நிலையா என்று மனம் குமுறியது. மதத்தையும், சாதியையும் நிலைநிறுத்தி பிரச்சனைகளை உருவாக்கும் கடவுள் என்னும் கற்பிதம் தேவையா? என்று காலங்காலமாக முற்போக்குவாதிகள் கூறிவருகின்றனர். ஆயினும் சமூகத்தில் உள்ள பெரும்பான்மையோர் இன்னும் திருந்தியபாடில்லை. அதேசமயத்தில், இந்த கோயில் நுழைவு போராட்டம் தேவையா? என்று சிலருக்கு கேள்வியெழலாம். சாதியின் அடிப்படையில் விளைந்த அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அனைத்து இடங்களிலும் புழங்க உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்டுவது மிக அவசியம். ஆகவே, இதைப் பற்றி விவாதிப்பது நம் கடமை என்று தோன்றியது.


இல்லாத ஒரு பொருளை இறைவனென்று வழிபடும் பகுத்தறிவற்றவர்கள். தன்னைப் போலவே உடலும் சதையுமாக இருக்கிற சக மனிதனை சாதியின் அடிப்படையில் இழிவுபடுத்தி வருகிறார்கள். கோயிலுக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடும். இது கடவுளின் கட்டளை’’ என்று சொல்லி இந்தச் சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களை பொது விசேசங்களில் கலந்துகொள்ள விடாமல் ஒதுக்கிவைக்கிற வக்கிர புத்தியுள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லோரும் கடவுளை வழிபடுகிற காட்டுமிராண்டிகளாகவே இருக்கிறார்கள்.


இத்தகைய கேடுகெட்டத்தனத்தோடு இந்த உலகம் இருக்கிறதென்றால், அதைப் பார்த்துக் கொண்டுகடவுள்’’ சும்மா கிடப்பது ஏன்? எல்லோருக்கும் நல்லது செய்து, கெட்டது செய்பவர்களை அழிப்பதுதான் கடவுளின் வேலையென்றால், ஆதிதிராவிடர் மக்களை கோயிலினுள் நுழையக்கூடாதென தடுக்கும் கெடுகெட்ட சாதிவெறியர்களை, அந்தக் கடவுள் அழிக்காதது ஏன்?


சக்தி - உலகை ஆள்பவன் - எல்லாம் தெரிந்தவன் என்று பொய்யுரைகளால் புகழப்படும் கடவுள்’’ இருக்கிறது என்று சொல்வது உண்மையாக இருக்குமானால், ஆதிதிராவிடர் மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் செட்டிப்புலம் ஆதிக்க சாதி இந்து வன்னியர்களின் முன் அந்தக் கடவுள் வந்து தட்டி கேட்டிருக்கலாமே? அது இருந்தால்தானே நியாயத்தை கேட்கும்!


காலம்காலமாக கடவுளின் பெய்ரால் ஒதுக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட தலித்து மக்களை, அரிஜன்ஸ் - கடவுளின் பிள்ளைகள் என்று ஆதிக்கச் சாதி மனநோயாளி காந்தி குறிப்பிட்டார். அதன் வேறுபட்ட பாணியில், எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் என்று சொல்லும் முட்டாள்கள் இந்த உலகத்தில் இப்போதும் நிறைந்திருக்கிறார்கள். தலித்துகளும் கடவுளின் பிள்ளைகள் என்றால், தமது பிள்ளைகளில் ஒரு பிரிவினரான வன்னியர்கள் இன்னொரு பிரிவினரான ஆதிதிராவிடர்களை வீட்டினுள் - கோயிலினுள் நுழைய விடாமல் தடுக்கும்போது, தந்தை கடவுள் இருந்தால் அது நேரில் வந்து, ஏண்டா எப்படி செய்யறீங்கன்னு கேட்டு திட்டி அடிக்க வேண்டாமா? அப்படி செய்யவில்லையெனில், அந்த ஆதிதிராவிட மக்கள் - கடவுளின் வப்பாட்டிக்கு பிறந்த பிள்ளைகளா? அவர்களுக்கு வீட்டினுள் நுழைய பங்கு உரிமை இல்லையா? இப்படி சாதி அடிப்படையில் உயர்வு - தாழ்வு - தீண்டாமை கற்பிக்கப்பட்ட இந்தச் சமூகத்தை மாற்ற முடியாத - கண்டுகொள்ளாத கடவுள் எங்கு இருக்கிறான்; எப்படி இருக்கிறான் என்பதை பக்தகோடிகள் சிந்தித்து பார்க்க வேண்டாமா?. இதையெல்லாம் செய்ய துப்பில்லாத கடவுள் இருப்பதாக நம்பி பேசிக்கொண்டிருக்கும் முட்டாள்களே, உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லையா? உங்கள் உடல் கூசவில்லையா?


உலகத்தில் ஓரறிவு உயிர், ஈரறிவு உயிர், ஐந்தறிவு உயிர், ஆறறிவு உயிர் என உயிர்கள் பல வகைகளில் பிறந்து வாழ்கின்றன. அவற்றில், ஆறாவது அறிவு இருப்பதாலேயே பகுத்தறிந்து உண்மைநிலையை உணரும் பக்குவம் மனிதனுக்கு இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனாலும், இல்லாத ஒரு பொருளை இருப்பதாக சொல்லி அதை கடவுளென்று பிதற்றிக்கொண்டு, சமூகத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் கேடு கெட்ட முட்டாள்களின் கூட்டம், பகுத்தறிந்து பார்க்க மறுப்பது ஏன்? காரணம், பகுத்தறிந்து பார்த்து உண்மையை உணர்ந்தால், பலரும் ஏமாற்றி பிழைக்க முடியாது.


மனிதன் சிந்திக்காத வகையில் அறிவை மழுங்கடிக்கும் முயற்சி பல மட்டங்களிலும் தொடர்கின்றன. தினமலர், குமுதம், தினகரன், சக்தி விகடன், கல்கி உள்ளிட்ட பல பத்திரிகைகள் பக்தி ஸ்பெசல் வெளியிடுகின்றன. அதேபோல், விஜய் தொலைக்காட்சி நடந்தது என்ன? என்ற நிகழ்ச்சியில் சாமி விசயங்களை ஒளிபரப்பினால், புதியதாக வந்துள்ள ஜி தொலைக்காட்சி தனது பங்குக்கு நம்பினால் நம்புங்கள் (நம்பலனா சாமி கண்ண குத்திடுமா?) என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.


சன் தொலைக்காட்சிக் குழுமத்தையும் ஜெயா தொலைக்காட்சி குழுமத்தையும் சொல்லாவே தேவையில்லை. சோதிடம், கோயில் தரிசனம், அருளாசி, இராமாயணம், மகாபாரதம்... என பல நிகழ்ச்சிகளில் பிற்போக்குத்தனக்களை மக்களின் மூளைக்குள் திணிக்கின்றன. பெரியாரின் பாசறையில் இருந்து வந்த கருணாநிதி இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரிரு ஊடகங்களை தவிர மற்றவை அனைத்தும் பிற்போக்குத்தனத்தையே கற்பிக்கின்றன. இதையெல்லாம் மாற்றவேண்டிய பொறுப்புள்ள பெரியாரின் பிள்ளைகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துக்கொண்டு சொத்துக்களை காப்பதற்காகவே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.


மக்களை நல்ல வழியில் செலுத்த வேண்டிய கடமையுள்ள தலைவர்கள், தனது தொண்டர்களுக்கு சாதிவெறியை தூண்டிவிடுவதை தொழிலாகவே கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கடந்து சிந்திக்கும் திறனுள்ள உயிரினமான மனிதர்கள், எண்ணங்களை அகல விரித்து அறிவுடன் சிந்தித்தால் உண்மை விளங்கும். பிரச்சனைகள் தீரும்.


பெரியாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிற இந்தக் காலக்கட்டத்திலும் தமிழ் நாடெங்கும் செட்டிப்புலம் போன்ற கிராமங்கள் ஏராளமாக கிடக்கின்றன. ஆதிக்கச் சாதி இனங்களில் பிறந்த பெரியாரிஸ்ட்களும், கம்யூனிஸ்ட்களும் சாதி ஒழிப்பை தமது உறவுகளிடம் பேசாமல், தலித்துகளிடம் பேசி வருவதால்தான் இந்த நிலை தொடர்கிறது. இந்தப் போலியான மனப்பான்மையை பெரியாரிஸ்டுகளும் கம்யூனிஸ்ட்களும் விட்டுவிட்டு, தம் சாதியை சேர்ந்தவர்களில் 10 பேரையாவது மாதந்தோறும் சாதியற்ற மனிதர்களாக உருவாக்க முயல வேண்டும். அதனை உறுதிமொழியாக ஏற்று செயல்பட முன்வரவில்லையெனில், முற்போக்கு அரிதாரம் பூசிக்கொண்டு, பிழைப்பு நடத்தும் தொழிலாகவே பெரியாரியத்தையும் பொதுவுடமை சித்தாந்ததையும் இவர்கள் காண்கிறார்கள் என்பதையே உங்கள் செயல்பாடுகளில் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.


தமிழ்த் தேசிய அரசியல் பேசிவரும் தலைவர்கள் சாதிவெறியை தூண்டும்படியும் பேசி வருகிறார்கள். சாதிகளோடு பிரிந்து கிடக்கும் பல இனங்களை ஒரே தமிழ்த் தேசத்தில் எப்படி அடைக்க முடியும்? இத்தகைய தலைவர்கள் அனைவரும், சாதி ஒழிப்பே, சமூக விடுதலை என்ற சித்தாந்தத்தை ஆழமாக புரிந்துகொண்டு, தமது உறவுகளின் சாதிப்பற்று மனோபாவத்தை மாற்ற முன்வர வேண்டும். அதுதான் சமூகத்துக்கும் நல்லது. அவர்களுக்கும் நல்லது.


தலித்துகளின் அடிப்படை உரிமை பிரச்சனைகளை அறிந்து களைய வேண்டிய பொறுப்புள்ள தலித் இயக்கங்கள் அம்பேத்கர் விருது’’ பெற்றுக்கொண்டும், தொகுதி பங்கீட்டில் ஓரிரு இடங்களை பெற்றுக்கொண்டும் மௌனித்து கிடப்பது வெட்கக்கேடானது.


முற்போக்கு - தமிழ்த்தேசிய - பொதுவுடமை அரசியல்வாதிகளுக்கும், கடவுள் இருப்பதாக சொல்லும் பக்தர்களுக்கும் கொஞ்சம்கூட வெட்கமில்லை.


தமிழக அரசியலில் இருந்து திராவிட அரசியல் மாயையை அகற்றுவதன் மூலமாகவே இப்போதுள்ள இந்தச் சமூகத்தை மாற்றுவதற்கான திட்டங்களை வகுக்க முடியும் என்ற கருத்தியலை மேலும் ஆழமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு வறட்டுத்தனமான தமிழ்த் தேசிய அரசியலையும், கம்யூனிச அரசியலையும் விவாதிக்க வேண்டும்.

முருக சிவகுமார் (murugasivakumar)
"கொண்ட இலட்சியம் குன்றிடாத எங்களின் கொள்கை வீரரின் காலடி மண்ணிலே நின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம். நிச்சயம் தமிழீழம் காணுவோம்.

இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது."

-
தமிழ்த்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன்.

................................................................................................................................................................................................................................................

மது தாயகநிலத்தை அழித்து, பின் அபகரிக்க உலக நாடுகளின் உதவியோடு சிங்களப் பேரினவாதம் மேற்கொண்ட இரத்தக் குளியல் நடவடிக்கையின் (Operation BloodBath) இறுதி நாட்கள் எம்மால் நினைத்துப் பார்க்க முடியாதவை. அழுவதற்கும் அவகாசமின்றி அந்தரித்த மக்கள் திரள். அருகில், கண்முன்னே வெடித்துச்சிதறும் ஷெல்களால் துடித்துச் சாகும் உயிர்களின் கடைசிக் கதறல்கள்.

நடந்து விட்டதை அறியும் ஒருகண அவகாசம் கூட இல்லாமல் பிணங்களாய் விழுந்தவரின் உருக்குலைந்த உடல்கள். கை, கால்கள் துண்டிக்கப்பட்டு உதவிகேட்கும் அவலக் குரல்கள்.

பங்கருக்குள் பதுங்கியபடியே பட்டினியில் மயங்கி உயிர்பிரியப் போனவரின் அழுகிய உடல்களது வாடை. அகப்பட்டதை எடுத்துக் கொண்டு உயிர்காக்க அங்குமிங்கும் ஓடியலட்சக்கணக்கான மக்கள் திரளுக்குள் மிதிபட்டு இறந்த பிஞ்சுக் குழந்தைகள், கை கொடுக்க எவருமின்றி ஆங்காங்கே மல்லாக்காய் கிடந்த முதியோர்கள். ஆம், உலகின் மன சாட்சிக் கதவுகள் மூடிக்கிடக்க முள்ளிவாய்க் காலில் இன அழித்தல் கோரத்தாண்டவம் அரங்கேறியது.

இப்பேரழிவுக்கும் நடுவில் கடைசிவரை களமாடியே வீரமரணம் அடைவோம் என உறுமும் துப்பாக்கிகளுடன் எமது புலிவீரர் அணிகள். மே 12 முதல் சீலனின் மரபை எம்வீரர்கள் சுவீகரித்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் தாக்குதல் தளபதியாய் இருந்த சீலன் அண்ணன் சண்டைக்களத்தில் விழுப்புண் அடைந்தபோது,தன்னைச் சுட்டுவிட்டு ய்தத்தை எடுத்துச் சென்று தொடர்ந்துபோரிடு என அருண் என்ற சக போராளிக்கு உத்தரவிட்டார். அந்த மரபையே நாங்கள் சீலன் அண்ணன் மரபு என்கிறோம். அவ்வாறே கடைசி நாட்களில் நாங்கள் களமாடினோம்.

· விமானக் குண்டுவீச்சு, பல்குழல் எறிகணை வீச்சு, டாங்குகளின் ராட்சத குண்டு வீச்சு யாவற்றையும் நேரடியாக எதிர்கொண்டபடி கடற் புலித் தளபதி சூசையோடு தளபதியர்கள் பானு, விடுதலை, புலவர், சிறீராம் அணிகள் இறுதிவரை போராடி மடியும் திட சங்கற்பம் பூண்டவர்களாய் அணிகளை வழிநடத்தினர்.

· தேசியத்தலைவருடன் தளபதியர்கள் பொட்டம்மான், ஜெயம், குமரன் மற்றும்ரட்ணம் மாஸ்டரின் கரும்புலி அணிகள் களத்தில் ஆவேசம் எடுத்து ஆடின.

மே 15 அன்று ஊடறுத்துத் தாக்குதல் நடத்தி காயமுற்றிருந்த சொர்ணம் அண்ணன் தனது உடலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கும்படி எமக்கு கட்டளையிட்டு எம் கண் முன்னாலேயே ''கடைசிவரை போராடுங்கோ. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'' என்று கூறியபடி தன் கழுத்தில் கிடந்த இரு சயனைட் குப்பிகளையும் கடித்து கண்கள் சொருக வீரமரணம் தழுவினார். சொர்ணம் அண்ணன் கேட்டுக்கொண்டபடி, அவரின் திருவுடல் எதிரியின் கையில் கிடைத்து விடக்கூடாதென்ற அவரின் விருப்பத்தை நிறைவேற்ற அவரது உடலை குண்டு வைத்துத் தகர்த்துவிட்டு சூசை அண்ணனிடம் சென்றபோது .நா.பொதுச் செயலரின் தனிச்செயலர் நம்பியார் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அரசியறல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் அண்ணனையும், புலித்தேவனையும் அறிவுறுத்தியன்படி இருவரையும் முல்லைத்தீவு வட்டுவாகலுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார். வெள்ளைக் கொடியேந்திப் போனவர்களின் தொடர்பு வட்டுவாகல் சென்றபின் அறுந்தது.

நடேசன், புலித்தேவன் அண்ணன்களுக்குக் கிடைத்த துரோக மரணம் உலகம் நிச்சயம் எங்களைக் காக்க வராது என்ற செய்தியை எமக்கு உறுதியாக்கியது. இந்நிலையில் தலைவரைக் காப்பது ஒன்றே களத்தில் நின்ற எமது கடமையாகியது. களமுனையில் அவசர மாற்றங்கள் செய்யப்பட்டன. எமது ஆட்லறி பீரங்கிகள் யாவும் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன. கடற்புலி அணிகள் மட்டும் இடைமறிப்புத் தாக்குதல்களில் உக்கிரம் காட்டி நின்றன.

எஞ்சிநின்ற நூற்றுக்கும் குறைவான கடற்புலிகளை காயங்களோடு தளபதி விடுதலை நெறி செய்தார். மே-16 இரவு நந்திக் கடற்கரை வழி முன்னேறியராணுவத்தினருக்கும் தளபதி புலவர் அணியினருக்கும் இடையே அதிகாலை வரை சமர் தொடர்ந்தது. ராணுவத்தின் 53-வது படைப்பிரிவானது முழுப்பலத்துடனான முன்னெடுப்பை புலவரின் சிறு அணி முறியடித்து பலநூறுராணுவத்தினரை கொன்றழித்தது.

அதேநேரத்தில், இரட்டை வாய்க்கால் பகுதியிலிருந்து முன்னேறி வந்த 58-வது படைப்பிரிவு இராணுவத்தினருக்கு தளபதி விடுதலையின் அணி மரண அடி கொடுத்தது. ஆத்திரம்கொண்ட சிங்களராணுவம் தன் வெறிக்கூத்தை அப்பாவி மக்கள் மீது திருப்பியபோதுதான் அலறியடித்த மக்கள்ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் படுத்துப்படுத்து நகர்ந்தனர். சூசை அண்ணனுக்குத் தொடர்பெடுத்து இதனைக் கூறினேன். தொடர்ந்து தலைவரின் நிலை என்ன என்று கேட்டபோது அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள் என்றார்.

மக்கள் இப்போது முழுமையாக வெளியேறத் தொடங்கியிருந்தனர். அதைப் பயன்படுத்தி இராணுவம் எமது நிலைகளை நோக்கி முன்னேறியது. எம்மால் எதிர்தாக்குதல் செய்யமுடியாத நிலை. எம்மைராணுவம் கடந்து முன்னேறிவிட்டபோது, சூசை அண்ணனுக்கு மீண்டும் தொடர்பெடுத்து அதனைச் சொன்னேன். அதற்கு சூசை அண்ணன், நான் ஜக்கத் அடிக்கப் போறேன், நீங்கள் கடைசிவரை சண்டையிடுங்கோ என்றார். ஜக்கத் என்றால் வெடிமருந்து அங்கி அணிந்து எம்மையே தற்கொடையாக்கும் மரபு. அத்தோடு சூசை அண்ணனுனா தொடர்பு அறுந்தது.

சூசையண்ணை இருந்த புளியமரத்தடி எமது நிலையிலிருந்து 300 மீட்டர் தூரம்தான். அவர் இருந்த மண் அணையாலான காப்பரணுக்குள்தான் வெடிபொருட்களும், ய்தங்களும் இருந்தன. அப்பக்கம் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. கருந்திரளான புகை வான்நோக்கி எழுந்தது. கடலில் சரித்திரம் படைத்த எங்கள் சூசைண்ணன் கடற்புலிகள் பிறந்து வளர்ந்த அதே முல்லைத்தீவு கரையில் காவியமானார்.

நெஞ்சுகனத்த வேதனையோடு மீண்டும் களமிறங்கினோம். காயமுற்றுத் துடித்தபடி உறவினரால் கைவிடப்பட்ட மக்களின் கதறல்கள், முனகல்கள், சிதறிய பிணங்களின் அகோரங்கள், முண்டங்கள், தலைகள், சிதறிய உடைமைகள், எரியும் வாகனங்கள் இவற்றினூடே தவழ்ந்து தவழ்ந்து எதிரியின் அணிகளுக்குள் ஊடுருவினோம்.

மே 17 மாலை 7 மணி அளவில்... ஐவர் ஐவராகப் பிரிந்து களமாட முடிவு செய்தோம். எமக்கிடையே எஞ்சியிருந்த எல்லா தொடர்புகளையும் துண்டித்தோம். இறந்துகிடந்தராணுவத்தினரின் சீருடைகளை அகற்றி நாங்கள் அணிந்தோம். அவர்களின் நிலைகள், காவலரண்களில் நின்றபடி இரவு முழுவதும் சமராடினோம்.எனது ஐவர் அணி மட்டுமே அன்றிரவு 50-க்கும் மேலானராணுவத்தினரை அழித்தது.

குடிக்கத் தண்ணீரில்லை. மூன்று நாளுக்கு முன் கிடைத்த ஒரேயொரு மாவு உருண்டையை சாப்பிட்டுவிட்டு இரத்தக்கறை படிந்த உடலும் உடையுமாய், இரண்டு மாதமாய் உறங்காத கண்கள், குண்டுக் கீறல்களில் வழியும்ரத்தம், வலி எதையும்பொருட்படுத்தாது மோதிக் கொண்டிருந்தோம்.

உண்டியலடிச் சந்தியைக் கடந்து பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த கவச வாகனத்திற்கு ஆர்.பி.ஜி. அடித்து எரித்தோம். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் கடும் சண்டை எழவே உள்ளுக்குள் புகுந்து 53-வது படைப்பிரிவுக்கும் 58-வது படைப் பிரிவுக்கும் இடையே சண்டையை மூட்டிவிட்டோம். நூற்றுக்கணக்கானராணுவத்தினர் ஒருவரையொருவர் சுட்டுக் கொன்று கொண்டிருந்தபோது நாங்கள் நந்திக்கடல் பக்கமாய் நகர்ந்தோம்.

எமது ஐவர் அணியில் இருவர் வீரமரணம் அடைய எஞ்சியிருந்த மூவரும் இரட்டைவாய்க்கால் பகுதிக்கு நகர்ந்து அங்கும் இருராணுவ அணிகளுக்கிடையே சண்டையை மூட்டினோம். எமது அணி மட்டுமே அங்கு 200-க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை சுட்டுக்கொன்றது.

மே18 நண்பகல் 12 மணியளவில்... அதேராணுவச் சீருடையுடன் ஒற்றைப்பனையடி நோக்கி நகர்ந்தோம். ராணுவ கவச வாகனம் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர் திசையில்ஆர்.பி.ஜி. உந்துணையோடு வேறொருராணுவ அணி வந்தது. நாங்கள் கவச வாகன அணிநோக்கி தாக்குதல் தொடுக்க அவர்களோ எதிர்திசை ஆர்.பி.ஜி. அணியோடு சண்டையைத் தொடங்கினார்கள். நாங்கள் மீண்டும் நந்திக்கடல் பக்கமாய் முல்லை வீதியை கடக்க முற்பட்டோம். அங்கே காவலரணில் நின்ற மூன்றுராணுவத்தினர் சிங்களத்தில் எங்களைக் கூப்பிட சிக்கல் வருமென்பதால் மூவரையும் சுட்டோம்.

அங்கு சண்டை வெடித்தது. அருகிலுள்ள பனங்கூடலுக்குள் நுழைய முயன்றபோது எங்கிருந்தோ வந்த ஆர்.பி.ஜி. எறிகணை என் காலை பதம் பார்த்தது. தூக்கியெறியப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தேன். எழ முயன்றேன். முடியவில்லை. கண்கள் சுழன்றன. சாவதாய் நினைத்தேன். கண்கள் மூடின. ஆனால், மீண்டும் கண்விழித்தபோது நம்ப முடியவில்லை. உயிருடன் இருந்தேன். முள்ளிவாய்க்காலில் அல்ல. ஸ்ரீலங்காவின் இராணுவ மருத்துவமனையில்.

அங்கிருந்து எப்படித் தப்பினேன் என்பது இன்னொரு நெடிய கதை. உயிரோடிருந்தால் மீண்டும் உங்களுக்கு எழுதுவேன்.

ஆனால் ஒன்று: சுமார் 38,000 மாவீரர்களின் தியாகங்களோடு நான்காம் ஈழப்போர் முற்றுப் பெற்றிருந்தாலும் அவர்களின் குருதிச் சுவடுகளில் பாதம் பதித்தபடி ஐந்தாம் ஈழப்போர் தொடங்கும் என்றேனும் ஒருநாள் தமிழீழம் வெல்லும்.

- அணிதிரள காத்திருக்கும் உம் உறவுகளில் ஒருவன்

-- புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்