வீட்டில் ஒரு மகனும் தந்தையும் அமர்ந்திருந்தனர். நீண்ட நாட்களாக மனத்தில் இருந்த ஒரு ஐயத்தைக் கேட்டுவிட வேண்டும் என்று மகன் எண்ணினான். தன் தந்தையிடம் மகன், ‘நான் குழந்தையாக இருக்கும்போது கன்னுக்குட்டின்னு செல்லமாகக் கூப்பிட்டீங்க, இப்போ மாடுன்னு திட்டுறீங்களே...‘ என்று கேட்டான். அதற்குத் தந்தை விடையளித்தார்,‘உன் அம்மா உனக்குப் பால் கொடுக்கல.. நீ மாட்டுப்பால் குடித்துதான் வளர்ந்த, அதனாலதான் அப்போ கன்னுகுட்டி... இப்போ மாடு.. நீ வளந்துட்ட.. நான் செல்லமாதான் கூப்பிடுறேன்’ என்றார். இப்போது பெரும்பாலான குழந்தைகள் மாட்டுப் பால் குடித்துதான் வளருகின்றன.
ஒரு பாலூட்டியின் பாலும் வேறொரு பாலூட்டியின் பாலும் குணத்தில் வேறுபாடுடையது. உலகில் உள்ள அனைத்துப் பாலூட்டிகளின் பாலும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நம் சமூகத்தில் தாய்ப் பாலுக்கு மாற்றாகக் குழந்தைகளுக்கு விலங்கின் பால் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. தாயின் பால் குழந்தைக்கு அறிவைக் கொடுக்கிறது. இது அனைத்துப் பாலூட்டிகளுக்கும் பொருந்தும். ஆனால், ஒரு பாலூட்டியின் பாலை வேறொரு பாலூட்டியின் குழந்தைக்குக் கொடுக்கும்போது உடல் எடை கூடுவதாகவும், அறிவு வளம் குறைவதாகவும் கூறப்படுகிறது.
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்து தப்பிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து இளமை பருவத்தை அடையும்போதும் சீரான எடையுடன் வளர தாய்ப்பால் உதவுகிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துகளும் அடங்கியிருக்கின்றன. தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளைவிடத் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியுடன் இருப்பதாகப் பலரும் கூறுகின்றனர்.
குறிப்பாகக் குழந்தைகளுக்கு நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றிற்குத் தாய்ப்பால் துணை நிற்கிறது. பிறந்து 6 மாதங்கள் முதல் 1 வயதுவரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளில் 80 விழுக்காட்டினர் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வதில்லை. குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய்வரும் வாய்ப்பைத் தாய்ப்பால் குறைக்கிறது.
ஒவ்வாமையினால் ஏற்படும் மூச்சிறைப்பு நோயைத் தடுக்கும் வல்லமையும் தாய்ப்பாலில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு குடும்பத்தில் மரபு வழியாக நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து இருந்தால், அக்குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு முதல் 6 மாதக் காலங்கள் வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுத்துவந்தால் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கலாம்.
தாய்ப்பாலில் இருக்கும் அமிலத்தன்மையானது என்டோர்வின் எனப்படும் வலி போக்கியை (நிவாரணியை) அதிகம் சுரக்க வைக்கிறது. இதனால் உடலில் ஏற்படும் வலிகளைப் போக்கும் வல்லமை குழந்தைகளின் உடலுக்கு வருகிறது. மழலைப் பருவத்தில் குழந்தைகளை நச்சுயிரி(வைரஸ்), நுண்ணுயிரிகளால் ஏற்படும் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இவ்வாறான திடீர்ச் சாவுகளிலிருந்து குழந்தைகளைக் காக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு இருக்கிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தாய்ப்பால் என்ற உயர்ந்த கொடை தாய்க்கு மட்டுமே இருக்கிறது. ஆனால், பெண்களில் பலர் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதில்லை. தாய்ப்பால் கொடுப்பதால் தங்களின் உடலின் வனப்பும் கட்டமைப்பும் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். ஐந்தறிவு உள்ள மாடு, எருமை, ஆடு உள்ளிட்ட விலங்குகள் குட்டி ஈன்றதும், பால் கொடுக்கின்றன. பிற உயிரினத்திற்கும் தன் பாலை கொடையாகக் கொடுத்தாலும், தன் குட்டிக்குப் பால் கொடுக்காமல் இருப்பதில்லை. மனிதர்களின் தங்களின் தேவைக்கு மாட்டுப் பாலை கரந்துக்கொள்ளும் போதும் துன்பப்பட்டாவது தன் குட்டிக்குப் பால் ஊட்டி மகிழ்கிறது. இவ்வாறு ஐந்து அறிவுள்ள விலங்குகள் பாலூட்டுவதில் அக்கறையுடன் இருக்கும்@பாது, பெண்களில் சிலர் தங்களின் வனப்பையும், உடல் கட்டையும் காரணமாகக் கூறிப் பாலூட்டாமல் இருப்பது வருந்தத்தக்கது.
குழந்தைக்கு பாலூட்டாத பெண்களின் செயலை வணிக நிறுவனங்கள் ஊக்கப்படுத்துகின்றன. தங்களின் பொருட்களை விற்பனை செய்யப் புதிய உத்திகளைக் கையாளுகின்றன. தாய்ப்பாலைவிட தாங்கள் உருவாக்கும் பொருட்களில் சத்து அதிகமாக இருப்பதாக விளம்பரப்படுத்தித் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு தொலைக்காட்சிகளிலும் பதாகைகளிலும் பரப்புரை செய்கின்றன. ஆனால், வணிக நிறுவனங்கள் தரும் சத்துப் பொருட்கள் அனைத்தும் தாய்ப்பாலின் குணங்களுக்கு ஈடாவதில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆகவே, இத்தகைய வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைச் சட்டத்திற்குப் புறம்பானது எனச் சில நாடுகள் அறிவித்துள்ளன. மேலும், தாய்ப்பால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்குவதால் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை அனைத்து நாடுகளும் வலியுறுத்துகின்றன.
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் பெண்ணின் உடல் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் கருத்துகளை மருத்துவ ஆய்வுகள் முற்றிலும் மறுத்துள்ளன. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் உடலில் வேதியியல் மாற்றங்கள் உருவாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மகப்பேற்றுக் காலத்தில் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இந்த எடை காரணமாக உடலில் தேவையற்ற கலோரிகள் சேர்ந்துவிடும் இதனால் பல்வேறு நோய்கள் வரும் வாய்ப்பு உருவாகும். அந்தத் தேவையற்ற கலோரியை இழப்பதற்குப் பெண்கள் பாலூட்டுவது இன்றியமையாதது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மாதவிலக்குக் காலத்திற்குப் பின்னர்ப் பெண்களுக்கு ஆஸ்டியோ பெட்ரோசிஸ் எனப்படும் எலும்புமுறிவு நோய் வருவதாகக் கூறப்படுகிறது. தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு இந்த நோய் பெரும்பாலும் வருவதில்லை. மகப்பேற்றுக் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் குருதிப்போக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது கட்டுக்குள் வருவதாகவும், அவ்வாறு தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்குக் குருதிபோக்குத் தொடர்ந்து நீடிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், பாலூட்டும் பெண்களுக்கு மாதவிலக்குக் காலம் 20 முதல் 30 வாரங்கள் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரையும் பார்க்கும் திறன் 12 முதல் 15 அங்குலம் வரை இருக்கும். தாயின் மார்புக்கும், முகத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ஏறக்குறைய 15 அங்குலம் இருக்கும் என்பதால் குழந்தை பால் குடிக்கும்போது தாயின் முகத்தை உற்று கவனிக்கும். இதனால் அத்தாயின் முகம் குழந்தையின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும். ஒரு குழந்தை தனியாக இருக்கும்போது வேறொருவரும், அக்குழந்தையின் தாயும் ஒரே நேரத்தில் அழைக்கும்போது அக்குழந்தை சட்டெனத் தாயிடம் செல்லும்। தாயின் முகம் பழக்கப்பட்ட முகம் என்பதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.
தாய்ப்பாலின் மணத்தைக் குழந்தை விரும்புகிறது. இதனாலும் எளிதில் தாயைக் கண்டுகொள்கிறது. ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு கொப்பூழ்க்கொடி வழியே ஏற்படுகிறது. அதனைப் வலுப்படுத்தத் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளைவிடத் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்குத் தாயின் மீது அன்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
குழந்தை குடிக்கக் குடிக்க ஊறிக்கொண்டே இருப்பது தாய்ப்பாலின் தனித்தன்மை. தாய்க்கு மட்டுமே பால் கொடுக்கும் உயர்ந்த கொடை இருக்கிறது. எனவே, தாய்ப்பாலைக் குழந்தைகளுக்குத் தவறாமல் கொடுத்துக் குழந்தைக்கும், தாய்க்குமான உறவை வலுப்படுத்துவோம்.
இது முற்றிலும் உண்மை. பெண்ணியம், சம உரிமை கோரும் பெண் அமைப்புக்களும் இது பற்றி நமது பெண்களுக்கு போதிக்க துணிய வேண்டும்.
வாழ்த்துக்கள் நண்பரே!
--ரோஸ்விக்.
very good article.women must follow