உறங்கிக் கொண்டிருக்கிறேன்
ஜெ. பிரான்சிஸ் கிருபா
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்
என் தூக்கத்தின் கதவுகளை தலையால் முட்டாதீர்கள்
ஒரு கையால் வாயைப் பொத்திக் கொள்ளுங்கள்
மறு கையால் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்
மேலும் கைகள் இருந்தால் கடவுளாகிக் கொள்ளுங்கள்
எனக்கொன்றும் வருத்தமில்லை
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்
வேலு தம்பி வந்தால் என்ன
வில்வரத்தினம் வந்தால் என்ன
தமிழ்ச்செல்வன் வந்தால் என்ன
சிவரமணி வந்தால் என்ன
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்
குண்டுகள் விழட்டும்
தோட்டாக்கள் வெடிக்கட்டும்
தமிழன் உடல் தாறுமாறாய் கிழியட்டும்
தமிழச்சி முலையை நாய் கவ்விச் செல்லட்டும்
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்
நாடுகள் கூடட்டும்
மாநாடுகள் பேசட்டும்
வீடுகள் அற்றவர்கள்
காடுகள் சேரட்டும்
தடைகளை போடட்டும்
தவிடு பொடியாக்கட்டும்
எனக்கென்ன
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்
அவர்கள் சூழட்டும்
கூடி நின்று பதுங்கு குழியில் மோலட்டும்
இறந்து கொண்டிருப்பவர்கள் காயங்களில்
உப்பு எரியட்டும்
அம்மா என்று பிளந்த வாயிலும்
மூத்திரத் துளிகள் உதிரட்டும்
எனக்கென்ன
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்
கிராமம் நகரம் யாவும் மரணம்
என்றான தேசத்தில்
ஒரு பெட்டை நாய்கூட
வாழ அஞ்சுகிற கொடுமையான வீதியில்
இலைகளோ கிளைகளோ
வாய்பொத்திக் கொள்ளும் பொழுது
இரவானால் என்ன பகலானால் என்ன எனக்கு?
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்
சிவகாம சுந்தரியம்மன் நடை திறப்புக் காண
மனசுக்குள்ளேயே போய்க் கொண்டிருக்கிறார்கள்
பவானியும் செல்வியும் மைதிலியும் மதுசூதனனும்
நடை திறந்தால் என்ன மூடினால் என்ன
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்
போர்தான் தேநீர்
போர்தான் சிற்றுண்டி
போர்தான் சோறு
போர்தான் வாழ்வு
போர்தான் மரணம் என்றான நிலத்தில்
தமிழ் நதியாக ஓடட்டும்
கடல் மணியாக ஒலிக்கட்டும்
எனக்கென்னநான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்
விழிக்கும்போது
என் கல்லறை வெடிக்கும் ஓசையை
காதுள்ளவர்கள் கேட்கலாம்
கண்ணுள்ளவர்கள் பார்க்கலாம்
('உயிர் எழுத்து', ஜனவரி 2009 இதழில் பிரசுரமாகியுள்ள கவிதை)