முருக சிவகுமார் (murugasivakumar)
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நிதின் கட்காரி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கட்காரி பிராமணர் சாதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அதே போல, வியாழன்று மக்களவை எதிர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து எல்.கே.அத்வானியை விலக வைத்து, அவருக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ் தேர்வு செய்யப்பட்டிருகிறார். அவரும் பிராமணர் சாதியை சேர்ந்தவர்.

இது வரையில் பாரதிய ஜனதா கட்சின் தேசிய தலைவராக இருந்த இராஜ்நாத் சிங் வயது 76. எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்த எல்.கே.அத்வானிக்கு வயது 83 என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவை தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சிக்கு புதிய இரத்தம் செலுத்தப்பட வேண்டும். அதுவும் இளம் இரத்தம் செலுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கட்சித் தலைவர் பதவிக்கு கட்காரியும், எதிர்கட்சி தலைவர் பதவிக்கு சுஷ்மா சுவராஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று வெளிப்படையாக கூறப்பட்டாலும், உண்மையான காரணம், பதவி விலகியிருக்கும் இராஜ்நாத் சிங்கும் அத்வானியும் பிராமணர் அல்லாதவர்கள். புதிதாக பொறுப்பேற்றுள்ள கட்காரியும், சுஷ்மாவும் பிராமணர்கள்.

பா.ஜ.க.வை பொறுத்த வரையில் அது முன்னேறிய வகுப்பினரின் கட்சி என்றும், குறிப்பாக, பிராமணத் தலைவர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சி என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால், பிராமணர் அல்லாத இராஜ்நாத் சிங்கும் அத்வானியும் முக்கிய தலைமை பதவியில் இருப்பதை பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை. இளம் தலைவர்கள் கட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்ததன் மூலம் ஆர்.எஸ்.எஸ். தலைமை மீண்டும் பா.ஜ.க.வை பிராமணத் தலைவர்களின் ஆதிக்கத்தில் கொண்டுவர திரைமறைவில் திட்டமிட்டு, அதை சாதித்து கொண்டுள்ளது.

பா.ஜ.க. தலைவராக இருக்கும் நிதின் கட்காரி மராட்டியத்தை சேர்ந்த பிராமணர். அம்மாநில பா.ஜ.க. தலைவராக இருந்து வந்தார். முன்பு இம்மாநிலத்தில் இருந்த பா.ஜ.க. சிவசேனை கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

சுஷ்மா சுவராஜ் முன்பு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி நடுவண் ஆட்சியில் செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்தவர்.

அண்மையில் கருநாடக மாநிலத்தில் குவாரி ஊழல் பண முதலைகளான அமைச்சர்கள் கருணாகரன், ஜனார்த்தனன் ஆகியோர் செய்த ஊழலை தட்டி கேட்டதாலே எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்க அவர்கள் முடிவெடுத்து, பணத்தால் சதித் திட்டம் தீட்டினர். அப்போது, சமாதானம் செய்வதாக கூறி எடியூரப்பாவை ஊழல் முதலைகளுக்கு பணியவைத்த பெருமை சுஷ்மா சுவராஜுக்கே உரியது. காரணம், அந்த பணமுதலைகளோடு சேர்ந்து சுஷ்மா என்ற முதலையும் பணத்தை பெருக்கிவருவதாக கூறப்படுகிறது.

அத்வானியின் பிறந்த நாளில் சமாதானம் நாடகத்தை நடத்தி தன்னை வலிமையானவராக காட்டிக் கொண்ட சுஷ்மா இப்போது, அத்வானியை தள்ளிவிட்டு இடத்தை பிடித்து அமர்ந்துவிட்டார். இதுவெல்லாம் அந்த சாதிக்கு புதிதல்லதானே?

பிற்போக்குவாத முட்டாள்களின் அமைப்புக்கு எந்த முட்டாள் தலைமை பதவிக்கு வந்தால் என்ன?

இதில் உச்சகட்ட நகைச்சுவை என்ன தெரியுமா? பா.ஜ.க. தலைவர் பொறுப்பை ஏற்ற கட்காரி பேசுகையில், தலித்துகளுக்காகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் பாடுபடுவேன் என்று கூறினார். ஆடுகளை ஓநாய் பாதுகாப்பதாக சொல்வதை யாராவது நம்புவார்களா? அப்படி நம்பினால், டாக்டர் அம்பேத்கர் சொல்லில் சொல்வதானால், அவர்களெல்லாம் பலியாடுகள்!
முருக சிவகுமார் (murugasivakumar)

இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சுதந்திரமான - நேர்மையான தேர்தல்கள் நடைபெறுவதற்கு வகை செய்கிறது. இதில், சுதந்திரமான தேர்தல் என்பதற்கு பொருள் - எந்தத் தரப்பில் இருந்தும் எந்தவிதமான குறுக்கீட்டுக்கும் இடம்தராத தேர்தல் என்பதாகும். நேர்மையான தேர்தல் என்றால், பாரபட்சமில்லாத சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் தேர்தல் என்பதாகும்.

அச் சட்டத்தின் விதிகளின்படி தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மக்களை வசீகரிக்கக்கூடிய - அரசுக்கு, ஆளுங்கட்சிக்கு ஆதரவை தூண்டக்கூடிய எந்தவிதமான புதிய கொள்கைகளையோ அல்லது திட்டங்களையோ அரசு அறிவிப்பதும் - பணத்தையோ, பொருட்களையோ கொடுப்பதும் சட்டவிரோதமாகும்.

அதிகார வேட்டையே நவீன அரசியலில் ஆதாரச் சுருதியாக மாறிவிட்ட பிறகு, அரசின் அதிகாரத்தை பயன்படுத்தியும், பண பலத்தை பயன்படுத்தியும் மக்களிடம் தேர்தலை சந்திப்பதென்பது நம் நாட்டில் வழக்கமாகவே இருந்துவருகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் சமயங்களிலெல்லாம் பிரதான கட்சிகளான தி.மு.க.,வும் அ.தி.மு.க.வும் மக்களை உபசரிப்பதாக மாறிமாறி குற்றம்சாற்றுவது வழக்கம். அது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையையும் எடுப்பதில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பெட்டியை திறந்துவைத்து கொண்டு, அதில் இருந்த கட்டுக்கட்டான பணத்தை வாக்களர்களாகிய மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தபோது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரேன் ஆனந்த் சின்கா கையும் களவுமாக பிடித்து பணத்தை கைப்பற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆனாலும், நேர்மையான தேர்தல் நடைபெறாமல் தடுக்கும் முயற்சியில் இறங்கிய அந்த அரசியல் பிரமுகருக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இதுதான் நம் நாட்டில் நிலவும் போக்கு.

தமிழகத்தில் வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய இரு தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலிலும் மக்களை வசீகரித்து ஓட்டுகளை பொறுக்க தி.மு.க.,வும் அ.தி.மு.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. வாக்காளர்களுக்கு வழக்கம் போலவே பணம் வழங்குவதும் மூக்குத்தி, குடம் உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதும் நடைபெற்று வருவதாக தி.மு.க. மீது அ.தி.மு.க. குற்றம்சாற்றியுள்ளது. அதேபோல், அ.தி.மு.க.வினர் பணம் வழங்குவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்ததால் செங்கோட்டையனும் ஓ.பன்னீர்ச்செல்வமும் தங்கியிருந்த விடுதியில் காவல்துறையினரோடு தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த மாதியான விசயங்கள் வழக்கமாக நடக்கும்; தவறே செய்திருந்தாலும் வெறு கண்டனத்தோடு தேர்தல் ஆணையம் நிறுத்திக்கொள்ளும்.

அ.தி.மு.க.வில் இருந்து விலகி ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணன் எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்று பல வினோதமான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக தெரிகிறது.

திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஆத்தூர் சிற்றூரில் தி.மு.க. தேர்தல் அலுவலகம் அருகில் திடீரென்று ஒரு அசைவ உணவகம் உருவாகியிருக்கிறதாம். தேர்தல் சிறப்பு அசைவ உணவகம் என்று இதற்கு பெயர் சூட்டி இருக்கிறார்கள். பார்ப்பதற்கு சிறிய உணவு விடுதியாக காட்சியளித்தாலும் காலை, பிற்பகல் மற்றும் இரவு நேரத்தில் வழங்கப்படும் அசைவ உணவு வகைகளை பார்க்கும்போது பெரிய நட்சத்திர உணவு விடுதிகளை நினைவுப்படுத்துவதாக இருக்கிறது.

உள்ளூர் தி.மு.க. நிருவாகி ஒருவரால் இந்த திடீர் உணவு விடுதி நடத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும் அங்குள்ள இன்னொரு உணவு விடுதியின் உரிமையாளரிடம் கேட்டபோது, இந்த திடீர் உணவு விடுதியின் உரிமையாளர் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. என்று கூறுகிறாராம். வடக்கு ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சிற்றூர்ப்புறங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள கட்சியினர் மற்றும் இந்த விடுதிக்கு வரும் கட்சி சார்பற்ற பொதுமக்கள் ஆகியோர் நாள்தோறும் 3 வேளையும் மூக்குமுட்ட சாப்பிட்டு செல்கிறார்கள் என்று உள்ளூர் வாசிகள் சிலர் தெரிவிக்கிறார்கள்.

காலையில் இடியாப்பம் பாயா, கொத்து புரோட்டா, ஆப்பம்; மாலையில் விதவிதமான பிரியாணி வகைகள் அத்துடன் சாதம், கோழிக் குழம்பு, மீன் குழம்பு, மட்டன் குழம்பு; இரவில் சாப்பாடு வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அசைவ சாப்பாடு, இல்லையேல் அசைவ வகைகளுடன் இட்லி, தோசை. ஒவ்வொரு நாளும் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் சாப்பாட்டுக்கான அடையாள டோக்கன்கள் வழங்கப்படுகிறதாம். அந்த டோக்கன்களை கொடுத்துவிட்டு எதை வேண்டுமானாலும் சாப்பிட்டுவிட்டு வரலாம்.

ஊரில் சில குடும்பங்கள் தமது முன்னோர் பெருமையை கூறும்போது, “எங்க குடும்பம் தின்னு கெட்ட குடும்பம்” என்று சொல்வார்கள். அது போலவே, திருச்செந்தூர் தொகுதியில் நடப்பதை பார்க்கும்போது, அத்தொகுதிமக்கள் “தின்னு கெட்ட குடும்பங்களாக” திகைத்து நிற்க போகிறார்கள் என்பதில் ஐயமில்லை. மக்கள் எப்போது தங்களது ஓட்டுகளின் மதிப்பை உணருகிறார்களோ அப்பொழுதுதான் உண்மையான ஜனநாயகம் நம் நாட்டில் உருவாகும். அது வரை நம்மை பண முதலாளிகளும் அரசியல்வாதிகளின் வாரிசுகளும் ஆண்டுகொண்டுதான் இருப்பார்கள்.

நவீன அரசியலின் ஆதாரச் சுருதியாக மாறிவிட்ட வாக்காளர்களுக்கான உபசரிப்பு, பெரும் ஆபத்தானது என்று சமூக ஆர்வலர்கள் கூறிவந்தபோதிலும் அது அரசியல் கலாசாரமாகவே தொடர்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் நமது ஜனநாயகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பெரும் தவறு நடந்திருக்கிறது. பணம் படைத்தவர்கள் மட்டுமே இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். சமூகம் நல்ல திசையில் செல்ல வேண்டும் என்று விருப்பம் கொண்டு செயல்பட்டு வருகிற சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று பேரவைக்கு செல்ல முடியுமா? முடியவே முடியாது. காரணம், பண பலத்துக்கும் படை பலத்துக்கும் தங்களை அடகு வைத்து விட்டு ஏமாளிகளாகவே இருக்க மக்கள் பழகிவிட்டார்கள்.

மக்களின் இந்த மனநிலையை உணர்ந்ததால்தான் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றிபெற்றுவிட்டால், பணம் சம்பாதிப்பதிலும் சொத்துக்களை வாங்கி போடுவதிலும் மட்டுமே கவனத்தை செலுத்துகின்றனர். பணத்துக்கும் மதுவுக்கும் இலவசங்களுக்கும் ஓட்டுகள் கிடைக்கிற போது அரசியல்வாதிகள் மக்கள் நலனில் ஏன் அக்கறை காட்ட வேண்டும்? மக்களின் மனமாற்றம் மட்டுமே சிறந்த ஜனநாயகத்தை ஏற்படுத்தும். ஆகவே இது குறித்து தொடர்ந்து விவாதிக்க வேண்டியிருக்கிறது.
முருக சிவகுமார் (murugasivakumar)
இந்தியாவில் தலித்து மக்கள் அனைத்து நிலைகளிலும் வஞ்சிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, அவர்களுக்கு ஆதிக்கச் சாதிகள் செய்யும் கொடுமைகளை விட அரசாங்கம் செய்து வரும் வன்கொடுமைகளை அதிகம். காரணம், இந்த ஆட்சியும், அதிகார மையங்களும் சாதிவாதிகளால்தான் ஆளப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.

ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளாக இருப்பது உணவு, உடை, இருப்பிடம். இந்த மூன்றில் உணவு இல்லாமல் பட்டினியோடு காலத்தை கழிக்க முடியும். அது நம் நாட்டில் இயல்பானதுதான். இந்தியாவின் மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் வயிறார சாப்பிடுவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் இராப்பட்டினியாகவே உறங்கச் செல்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அடுத்து, உடை - பழைய கந்தல் துணியையாவது துவைத்து துவைத்து கட்டிக் கொள்ளலாம். வறுமையின் உச்சத்தை வெளிச்சம்போட்டு வெளிப்படுத்துவதாக அரை நிர்வாணத்தோடு அலையும் மனிதர்கள் நம் சமுதாயத்தில் ஏராளமாக இருக்கிறார்கள்.


அடுத்து, மூன்றாவதாக இருப்பிடம். உணவு, உடை இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம் என்ற நிலையிலும் படுத்துறங்க இருப்பிடம் ஒன்று இல்லையெனில் வாழ்க்கை நரகமாகவே மாறிவிடும்.

பெரிய மாளிகை போன்ற வீடுகளை கட்டி வைத்துவிட்டு குடியிருக்காமல், கட்டி சாத்திவிட்டு கிடக்கும் வீடுகளை சென்னை உள்ளிட்ட நகரங்களில் காணலாம். அல்லது, இரண்டு மூன்று பேருக்கு 10 அறைகளுக்கு மேல் 4 மாடிகள் கட்டி ஆட்கள் நடமாட்டமின்றி பல அறைகள் கிடக்கின்றன. இவ்வாறாக, ஆறு மாதங்களாக பூட்டிக்கிடக்கும் வீடுகள் - ஆட்கள் வசிக்காத வீடுகளை கைப்பற்றி வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்க தனி சட்டம் கொண்டு வந்தால் நல்லாதான் இருக்கும். ஏனெனில், சிலர் வணிகம், அரசியல் போன்ற தொழில்களை செய்து, மக்களை ஏமாற்றி அளவுக்கு மீறி சொத்துக்களை அமுக்கி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அதே நேரத்தில், படுத்துறங்க வீடு என்று சொல்லுபடியான ஒரு இடம் இல்லாததால் பல குடும்பங்கள், சாலையோரங்களில் பிள்ளை குட்டிகளுடன் காலத்தை கழித்தபடி கிடக்கின்றன.

கிராமப் புறங்களில் பார்த்தோமானால், வயல்களில் எளிதாக கிடைக்கிற கரும்பு தோகையையும், தென்னங்கீற்றுகளையும் நிலக்கிழார்களிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கி கொண்டு வந்து கூரையாக வேய்து, மண்ணை பிசைந்து கற்களை வைத்து குடிசைகளை அமைத்து வாழும் மக்களை காணலாம். அந்தக் குடிசைகளில் பெரும்பாலானவை பல ஆண்டுகளாக மாற்றப்படாமல், கூரை பொத்தலாகி போய் இரவுகளில் முற்றத்தில் நிலா எட்டிப் பார்த்தபடி இருக்கும். மழை பெய்யும் காலங்களில் ஒரு ஓரத்தில் குழந்தைகளை தூங்கவைத்துவிட்டு, சொம்பு, தட்டு, ஈய ஏனம் ஆகியவற்றை வைத்து மழைநீரை பிடித்தபடி இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கும் எண்ணற்ற பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

இத்தகைய கொடுமைகளையெல்லாம், காலம் காலமாக உழைத்து தம் உழைப்பின் வழியாக பலரின் வாழ்வை சுகமாக்கிய தலித் மக்களே பெரும்பாலும் அனுபவித்து வருகிறார்கள்.


இந்த நிலையை போக்கி அனைத்து மக்களுக்குமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஆளும் அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்புடன்தான் தலித் மக்களுக்கு வீடு கட்டித் தருவதற்கென மத்திய அரசு அன்னை இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தை உருவாக்கியது. அதன் மூலம் 1980-க்கு பிறகு தலித் மக்களுக்கு 4 பேர் படுக்கும் அளவுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டன. நம் நாட்டில் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவழிக்காத சூழலில், தலித்துகளுக்கு வீடுகளை கட்டுவதற்கென ஒதுக்கப்பட்ட நிதியும் முறையாக செலவிடப்படவில்லை. இத்திட்டத்திற்கான பல ஆயிரம் ரூபாயில் ஆளுங்கட்சியினரும், அலுவலர்களும் பெரும் தொகையை தமது பங்காக எடுத்து கொண்டு, குறைந்த தொகையில் வீடுகள் கட்டித் தருகிறார்கள்.

அவ்வாறு கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகள் பலவும் அடுத்த மழைக்கே தாங்காமல் ஒழுகும் அவல நிலையில் இருந்தன. ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தலித் கான்கிரீட் வீடுகள் இப்போது பல இடங்களிலும் மேற்கூரை இடிந்துவிழுகின்றன.


காலம் முழுவதும் ஓய்வின்றி உழைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் தலித் மக்களுக்கு வழங்கப்படாத இந்தச் சமுதாயத்தில், பெரும்பாலான தலித்துகள் அன்றாடம் காய்ச்சிகளாகவே வாழ்கிறார்கள் அல்லது வாழ்வின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் முதலாளிகளிடம் கடனாக சில நூறுகளை வாங்கிவிட்டு, அதற்கு பல ஆயிரங்களை வட்டியாக கட்டிக்கொண்டு கடனாளிகளாகவே கிடக்கிறார்கள்.


இவர்களிலெல்லாம் இடிந்து விழும் நிலையிலுள்ள தங்களது வீடுகளை பராமரிக்கவோ மராமத்து பணிகளை செய்யவோ இயலாமல், வீடுகள் எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற பயத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
இப்போது மழைக்காலம் என்பதால் இது குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டியது அவசியம்.

அண்மையில் பெய்த மழையின்போது, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரபெருமாள் கோயில் என்ற கிராமத்தில் - அண்ணா நகரில் தமிழக அரசு கட்டிய தொகுப்பு வீட்டின் மேல் கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது. எப்படியும் இடிந்து விழும் என்ற நம்பிக்கையில் அண்டை வீட்டில் படுத்திருத்த அக்குடும்பத்தினர் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
(மேற்கூரை இடிந்து விழுந்துள்ள நிலையை கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள படத்தை பாருங்கள்)

அதற்கு முன்பு பெய்த மழையின்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர் பகுதியில் ஒரு தலித்தின் அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் அங்கு இரவில் படித்துக் கொண்டிருந்த 2 பெண் குழந்தைகள் மாண்டுபோனார்கள். வேதாரண்யம் அடுத்த உப்பளாஞ்சேரி கிராமத்தில் பன்னீர்ச்செல்வம் என்ற தலித்தின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்தவர்கள் காயமடைந்தார்கள். நல்லுதேவன் பட்டியில் உள்ள பழனி என்பவரின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பழனியின் குழந்தையும், மனைவியும் இறந்தனர்.


மொடக்குறிச்சி அருகே அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் காயத்துடன் சிறுமி உயிர் தப்பினாள்.

செங்குளம் காலனி அரசு குடியிருப்பு பால்கனி இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பலியானார். இங்கு குறிப்பிட்ட நிகழ்வுகள் கொஞ்சம்தான். இவ்வாறாக, தமிழ்நாடு முழுவதும் அரசால் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் மழை பெய்யும் போதெல்லாம் இடிந்து விழுகின்றன.

இதுதான் தலித்துகளுக்கு அரசு செய்துள்ள திட்டத்தின் நிலை. தலித்துகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மத்திய அரசு ஒதுக்கப்படும் நிதியை தமிழக ஆளும் வர்க்கம் முறையாக செலவழிக்காததே இந்த நிலைக்கு காரணம்.

ஆதிதிராவிடர் நலத்திற்கென உருவாக்கப்பட்ட துறை தலித்துகளின் வாழ்வு மேம்பாட்டிற்கு உதவியதாக தெரியவில்லை. ஒரு சாதாரண தலித், ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கிய நிதியின் மூலமாக முதலாளியாக மாறினார் என்பதை யாராவது கண்டதுண்டா? இருக்கவே வாய்ப்பில்லை. காரணம், ஆடு, மாடு வாங்குதல் அல்லது மண்வெட்டி, கடப்பாரை வாங்குதல் செருப்பு தைக்க கடை வைத்தல் - இப்படிபட்ட நிலையில்தான் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதைவைத்து யாராவது முதலாளியாக உருவாக முடியுமா?

தலித்துகள் முதலாளிகளாக மாறுவதற்காக உருவாக்கப்பட்ட பெட்ரோல் நிலையம், பேருந்து வழித்தட உரிமம் போன்ற திட்டங்கள் நிறைய இருக்கின்றன. அவை தலித்துகளின் பெயரால் வேற்று சாதியினருக்கு வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கும் அதிகாரிகள் இருக்கும் வரை சாதாரண தலித் வளர முடியாது. இதுதான் உண்மை. அது போலத்தான், அரசால் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை பராமரிப்பதற்கென தலித்துகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக ஆதிதிராவிடர் நலத்துறை கணக்குகள் எழுதியுள்ளன. ஆனால், அந்தத் தொகை தலித் மக்களுக்கு சென்றடையவே இல்லை.

இதைவிட மோசமாக அணுகுமுறையை தி.மு.க. அரசு தொடங்கி செய்து வருகிறது. அதுதான் சமத்துவபுரம் திட்டம். தலித்துகளின் பெயரால் பெரும் திட்டங்களுக்கான நிதியை எடுத்து வேற்று சாதியினருக்கு வழங்குவது போலவே, தலித்துகளின் பணம் சமத்துவபுரம் என்ற பெயரால் வேறுசாதியினருக்காக - ஆளுங்கட்சியினருக்காக செலவிடப்படுகின்றது.


அண்மையில், சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் பேசும் போது, ’’முந்தைய தி.மு.க ஆட்சியின்போது முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 145 இடங்களில் சமத்துவபுரங்கள் தொடங்கப்பட்டது. பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்ததன் நினைவாக மேலும் 95 சமத்துவபுரங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2008-09 தமிழ்நாட்டில் 29 சமத்துவபுரம் அமைக்க திட்டமிடப்பட்டது. இங்கு திறக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தோடு சேர்த்து இதுவரை 9 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் மீதமுள்ள 20 சமத்துவபுரங்களும் திறக்கப்பட்டு விடும். 2009-10-இல் மேலும் 30 சமத்துவபுரங்களும், 2011-ஆம் ஆண்டு மீதம் உள்ள 36 சமத்துவபுரங்களும் திறக்கப்பட்டு மொத்தம் 95 சமத்துவபுரங்களும் அமைக்கப்பட்டு திறக்கப்படும்’’ என்றார்.


கலைஞரின் முற்போக்கு கனவு திட்டம் என்றும், சமுதாயத்தை மாற்றுவதற்கான திட்டம் என்று தி.மு.க. அரசு மார்தட்டி வரும் இந்தத் திட்டமே ஒரு மோசடியான திட்டம். பட்டினியால் வாடுகிறவனுக்கு உணவு கொடுக்க வேண்டிய நிதியை வைத்து கோயிலில் அன்னதானம் வழங்கிய ஜெயலலிதாவின் திட்டம் போல, தலித் மக்களுக்கு வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய பணத்தில் இந்த 95 சமத்துவபுரங்களும் அமைக்கப்படுகின்றன.


தலித்துகளுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் தாட்கோ மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் வீடு கட்டித்தர வேண்டும். வேறு எந்தத் திட்டத்துக்கும் இந் நிதியை பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறி, சமத்துவபுரங்களுக்கு தமிழக அரசு நிதியை வீணாக செலவழித்து வருகிறது. பெரியாரின் பெயரால் வாழ்வின் உச்சத்தை தொட்ட கருணாநிதி சமத்துவபுரம் அமைக்க முடிவெடுத்தபோது, இதற்கான நிதியை தமிழக அரசே தமது நிதியில் இருந்து ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், தலித் மக்களுக்கான நிதி தவறான வழியில் செலவிடப்படுகிறது.

இந்த இடத்தில் சிலர் யோசிக்கலாம். வீடு, மானியக் கடன்கள் ஆகியவை அரசாங்கமா பார்த்து கொடுக்கிற இலவசங்கள் தானே... எவ்வளவு கொடுத்தால்தான் என்ன? என்ற மனநிலை பலருக்கும் இருக்கிறது. இப்படி எண்ணுபவர்கள்தான் படித்துவிட்டு அலுவலராக வரும்போது, அந்த மனநிலையோடே செயல்படுகிறார்கள். ஆண்டாண்டுக் காலமாக தலித் மக்களின் உழைப்பை சுரண்டி வாழ்ந்த, வாழ்கிற இந்த ஆதிக்க சமூகம், தலித்துகளின் வாழ்நிலையை மாற்ற கடமைப்பட்டுள்ளது.

தலித்துகளுக்கு அரசாங்கம் செய்வது சலுகையோ, இலவசங்களோ அல்ல; அவை தலித்துகளின் உரிமைகள் என்பதை வரலாற்று நிகழ்வுகளை தெரிந்துகொண்டு,
திறந்த மனதோடு ஒப்புக்கொள்ள வேண்டும். ஆதிக்கச் சாதிகளில் பிறந்தவர்கள் அதனை ஒப்புக்கொள்வதன் மூலமாகவே தலித்துகளின் உரிமைகள் முறையாக அவர்களை சென்றடையும்.

இந்த சமத்துவபுரம் என்ற மோசடி திட்டம் பற்றி செ.கு.தமிழரசன் மட்டுமே கண்டித்திருக்கிறார். தலித்துகளின் ஏகபோக பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்கிற வேறு எந்த தலித் தலைவர்களும் இது குறித்து வாய் திறக்கவேயில்லை. வெறும் ஒன்று, இரண்டு சீட்டுகளுக்காக தமது மக்களின் அடிப்படை உரிமைகளைகூட விட்டுத் தர தலித் தலைவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.


புனிதமான இடங்கள் என்று சொல்லப்படுகிற கோயில்களை கட்டுவதற்கு பல ஏழைமக்கள் மாண்டுபோனார்கள். அவர்களின் பிணங்களின் மீதுதான் நாம் வியக்கும் கோயிகளும் அரண்மனைகளும் கட்டப்பட்டன. அந்த கெடுகெட்டத்தனத்தை அரசன் செய்தான் என்பதாலேயே யாரும் தட்டிக் கேட்டு புரியவைக்கவில்லை. அது போலவே, தலித் தலைவர்களும், சமநீதி சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களும் இந்த மாதிரியான மோசடிகளை செய்யும் ஆளும் வர்க்கத்தையும், அதிகாரிகளையும் தட்டிக் கேட்காமல் இருக்கும் வரை - தலித்துகளின் சமாதிகளின் மீது சமத்துவபுரங்களை தமிழக அரசு கட்டிக்கொண்டுதான் இருக்கும். இந்த நிலையை மாற்ற சமூக ஆர்வலர்கள் பெரும் விவாதத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.