undefined
undefined

ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளாக இருப்பது உணவு, உடை, இருப்பிடம். இந்த மூன்றில் உணவு இல்லாமல் பட்டினியோடு காலத்தை கழிக்க முடியும். அது நம் நாட்டில் இயல்பானதுதான். இந்தியாவின் மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் வயிறார சாப்பிடுவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் இராப்பட்டினியாகவே உறங்கச் செல்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அடுத்து, உடை - பழைய கந்தல் துணியையாவது துவைத்து துவைத்து கட்டிக் கொள்ளலாம். வறுமையின் உச்சத்தை வெளிச்சம்போட்டு வெளிப்படுத்துவதாக அரை நிர்வாணத்தோடு அலையும் மனிதர்கள் நம் சமுதாயத்தில் ஏராளமாக இருக்கிறார்கள்.
அடுத்து, மூன்றாவதாக இருப்பிடம். உணவு, உடை இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம் என்ற நிலையிலும் படுத்துறங்க இருப்பிடம் ஒன்று இல்லையெனில் வாழ்க்கை நரகமாகவே மாறிவிடும்.
பெரிய மாளிகை போன்ற வீடுகளை கட்டி வைத்துவிட்டு குடியிருக்காமல், கட்டி சாத்திவிட்டு கிடக்கும் வீடுகளை சென்னை உள்ளிட்ட நகரங்களில் காணலாம். அல்லது, இரண்டு மூன்று பேருக்கு 10 அறைகளுக்கு மேல் 4 மாடிகள் கட்டி ஆட்கள் நடமாட்டமின்றி பல அறைகள் கிடக்கின்றன. இவ்வாறாக, ஆறு மாதங்களாக பூட்டிக்கிடக்கும் வீடுகள் - ஆட்கள் வசிக்காத வீடுகளை கைப்பற்றி வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்க தனி சட்டம் கொண்டு வந்தால் நல்லாதான் இருக்கும். ஏனெனில், சிலர் வணிகம், அரசியல் போன்ற தொழில்களை செய்து, மக்களை ஏமாற்றி அளவுக்கு மீறி சொத்துக்களை அமுக்கி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் அதே நேரத்தில், படுத்துறங்க வீடு என்று சொல்லுபடியான ஒரு இடம் இல்லாததால் பல குடும்பங்கள், சாலையோரங்களில் பிள்ளை குட்டிகளுடன் காலத்தை கழித்தபடி கிடக்கின்றன.
கிராமப் புறங்களில் பார்த்தோமானால், வயல்களில் எளிதாக கிடைக்கிற கரும்பு தோகையையும், தென்னங்கீற்றுகளையும் நிலக்கிழார்களிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கி கொண்டு வந்து கூரையாக வேய்து, மண்ணை பிசைந்து கற்களை வைத்து குடிசைகளை அமைத்து வாழும் மக்களை காணலாம். அந்தக் குடிசைகளில் பெரும்பாலானவை பல ஆண்டுகளாக மாற்றப்படாமல், கூரை பொத்தலாகி போய் இரவுகளில் முற்றத்தில் நிலா எட்டிப் பார்த்தபடி இருக்கும். மழை பெய்யும் காலங்களில் ஒரு ஓரத்தில் குழந்தைகளை தூங்கவைத்துவிட்டு, சொம்பு, தட்டு, ஈய ஏனம் ஆகியவற்றை வைத்து மழைநீரை பிடித்தபடி இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கும் எண்ணற்ற பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
இத்தகைய கொடுமைகளையெல்லாம், காலம் காலமாக உழைத்து தம் உழைப்பின் வழியாக பலரின் வாழ்வை சுகமாக்கிய தலித் மக்களே பெரும்பாலும் அனுபவித்து வருகிறார்கள்.
இந்த நிலையை போக்கி அனைத்து மக்களுக்குமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஆளும் அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்புடன்தான் தலித் மக்களுக்கு வீடு கட்டித் தருவதற்கென மத்திய அரசு அன்னை இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தை உருவாக்கியது. அதன் மூலம் 1980-க்கு பிறகு தலித் மக்களுக்கு 4 பேர் படுக்கும் அளவுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டன. நம் நாட்டில் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவழிக்காத சூழலில், தலித்துகளுக்கு வீடுகளை கட்டுவதற்கென ஒதுக்கப்பட்ட நிதியும் முறையாக செலவிடப்படவில்லை. இத்திட்டத்திற்கான பல ஆயிரம் ரூபாயில் ஆளுங்கட்சியினரும், அலுவலர்களும் பெரும் தொகையை தமது பங்காக எடுத்து கொண்டு, குறைந்த தொகையில் வீடுகள் கட்டித் தருகிறார்கள்.
அவ்வாறு கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகள் பலவும் அடுத்த மழைக்கே தாங்காமல் ஒழுகும் அவல நிலையில் இருந்தன. ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தலித் கான்கிரீட் வீடுகள் இப்போது பல இடங்களிலும் மேற்கூரை இடிந்துவிழுகின்றன.
காலம் முழுவதும் ஓய்வின்றி உழைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் தலித் மக்களுக்கு வழங்கப்படாத இந்தச் சமுதாயத்தில், பெரும்பாலான தலித்துகள் அன்றாடம் காய்ச்சிகளாகவே வாழ்கிறார்கள் அல்லது வாழ்வின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் முதலாளிகளிடம் கடனாக சில நூறுகளை வாங்கிவிட்டு, அதற்கு பல ஆயிரங்களை வட்டியாக கட்டிக்கொண்டு கடனாளிகளாகவே கிடக்கிறார்கள்.
இவர்களிலெல்லாம் இடிந்து விழும் நிலையிலுள்ள தங்களது வீடுகளை பராமரிக்கவோ மராமத்து பணிகளை செய்யவோ இயலாமல், வீடுகள் எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற பயத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இப்போது மழைக்காலம் என்பதால் இது குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டியது அவசியம்.
அண்மையில் பெய்த மழையின்போது, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரபெருமாள் கோயில் என்ற கிராமத்தில் - அண்ணா நகரில் தமிழக அரசு கட்டிய தொகுப்பு வீட்டின் மேல் கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது. எப்படியும் இடிந்து விழும் என்ற நம்பிக்கையில் அண்டை வீட்டில் படுத்திருத்த அக்குடும்பத்தினர் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. (மேற்கூரை இடிந்து விழுந்துள்ள நிலையை கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள படத்தை பாருங்கள்)
அதற்கு முன்பு பெய்த மழையின்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர் பகுதியில் ஒரு தலித்தின் அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் அங்கு இரவில் படித்துக் கொண்டிருந்த 2 பெண் குழந்தைகள் மாண்டுபோனார்கள். வேதாரண்யம் அடுத்த உப்பளாஞ்சேரி கிராமத்தில் பன்னீர்ச்செல்வம் என்ற தலித்தின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்தவர்கள் காயமடைந்தார்கள். நல்லுதேவன் பட்டியில் உள்ள பழனி என்பவரின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பழனியின் குழந்தையும், மனைவியும் இறந்தனர்.
மொடக்குறிச்சி அருகே அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் காயத்துடன் சிறுமி உயிர் தப்பினாள்.
செங்குளம் காலனி அரசு குடியிருப்பு பால்கனி இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பலியானார். இங்கு குறிப்பிட்ட நிகழ்வுகள் கொஞ்சம்தான். இவ்வாறாக, தமிழ்நாடு முழுவதும் அரசால் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் மழை பெய்யும் போதெல்லாம் இடிந்து விழுகின்றன.
இதுதான் தலித்துகளுக்கு அரசு செய்துள்ள திட்டத்தின் நிலை. தலித்துகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மத்திய அரசு ஒதுக்கப்படும் நிதியை தமிழக ஆளும் வர்க்கம் முறையாக செலவழிக்காததே இந்த நிலைக்கு காரணம்.
ஆதிதிராவிடர் நலத்திற்கென உருவாக்கப்பட்ட துறை தலித்துகளின் வாழ்வு மேம்பாட்டிற்கு உதவியதாக தெரியவில்லை. ஒரு சாதாரண தலித், ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கிய நிதியின் மூலமாக முதலாளியாக மாறினார் என்பதை யாராவது கண்டதுண்டா? இருக்கவே வாய்ப்பில்லை. காரணம், ஆடு, மாடு வாங்குதல் அல்லது மண்வெட்டி, கடப்பாரை வாங்குதல் செருப்பு தைக்க கடை வைத்தல் - இப்படிபட்ட நிலையில்தான் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதைவைத்து யாராவது முதலாளியாக உருவாக முடியுமா?

இதைவிட மோசமாக அணுகுமுறையை தி.மு.க. அரசு தொடங்கி செய்து வருகிறது. அதுதான் சமத்துவபுரம் திட்டம். தலித்துகளின் பெயரால் பெரும் திட்டங்களுக்கான நிதியை எடுத்து வேற்று சாதியினருக்கு வழங்குவது போலவே, தலித்துகளின் பணம் சமத்துவபுரம் என்ற பெயரால் வேறுசாதியினருக்காக - ஆளுங்கட்சியினருக்காக செலவிடப்படுகின்றது.
அண்மையில், சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் பேசும் போது, ’’முந்தைய தி.மு.க ஆட்சியின்போது முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 145 இடங்களில் சமத்துவபுரங்கள் தொடங்கப்பட்டது. பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்ததன் நினைவாக மேலும் 95 சமத்துவபுரங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2008-09 தமிழ்நாட்டில் 29 சமத்துவபுரம் அமைக்க திட்டமிடப்பட்டது. இங்கு திறக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தோடு சேர்த்து இதுவரை 9 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் மீதமுள்ள 20 சமத்துவபுரங்களும் திறக்கப்பட்டு விடும். 2009-10-இல் மேலும் 30 சமத்துவபுரங்களும், 2011-ஆம் ஆண்டு மீதம் உள்ள 36 சமத்துவபுரங்களும் திறக்கப்பட்டு மொத்தம் 95 சமத்துவபுரங்களும் அமைக்கப்பட்டு திறக்கப்படும்’’ என்றார்.
கலைஞரின் முற்போக்கு கனவு திட்டம் என்றும், சமுதாயத்தை மாற்றுவதற்கான திட்டம் என்று தி.மு.க. அரசு மார்தட்டி வரும் இந்தத் திட்டமே ஒரு மோசடியான திட்டம். பட்டினியால் வாடுகிறவனுக்கு உணவு கொடுக்க வேண்டிய நிதியை வைத்து கோயிலில் அன்னதானம் வழங்கிய ஜெயலலிதாவின் திட்டம் போல, தலித் மக்களுக்கு வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய பணத்தில் இந்த 95 சமத்துவபுரங்களும் அமைக்கப்படுகின்றன.
தலித்துகளுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் தாட்கோ மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் வீடு கட்டித்தர வேண்டும். வேறு எந்தத் திட்டத்துக்கும் இந் நிதியை பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறி, சமத்துவபுரங்களுக்கு தமிழக அரசு நிதியை வீணாக செலவழித்து வருகிறது. பெரியாரின் பெயரால் வாழ்வின் உச்சத்தை தொட்ட கருணாநிதி சமத்துவபுரம் அமைக்க முடிவெடுத்தபோது, இதற்கான நிதியை தமிழக அரசே தமது நிதியில் இருந்து ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், தலித் மக்களுக்கான நிதி தவறான வழியில் செலவிடப்படுகிறது.
இந்த இடத்தில் சிலர் யோசிக்கலாம். வீடு, மானியக் கடன்கள் ஆகியவை அரசாங்கமா பார்த்து கொடுக்கிற இலவசங்கள் தானே... எவ்வளவு கொடுத்தால்தான் என்ன? என்ற மனநிலை பலருக்கும் இருக்கிறது. இப்படி எண்ணுபவர்கள்தான் படித்துவிட்டு அலுவலராக வரும்போது, அந்த மனநிலையோடே செயல்படுகிறார்கள். ஆண்டாண்டுக் காலமாக தலித் மக்களின் உழைப்பை சுரண்டி வாழ்ந்த, வாழ்கிற இந்த ஆதிக்க சமூகம், தலித்துகளின் வாழ்நிலையை மாற்ற கடமைப்பட்டுள்ளது.
தலித்துகளுக்கு அரசாங்கம் செய்வது சலுகையோ, இலவசங்களோ அல்ல; அவை தலித்துகளின் உரிமைகள் என்பதை வரலாற்று நிகழ்வுகளை தெரிந்துகொண்டு, திறந்த மனதோடு ஒப்புக்கொள்ள வேண்டும். ஆதிக்கச் சாதிகளில் பிறந்தவர்கள் அதனை ஒப்புக்கொள்வதன் மூலமாகவே தலித்துகளின் உரிமைகள் முறையாக அவர்களை சென்றடையும்.
இந்த சமத்துவபுரம் என்ற மோசடி திட்டம் பற்றி செ.கு.தமிழரசன் மட்டுமே கண்டித்திருக்கிறார். தலித்துகளின் ஏகபோக பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்கிற வேறு எந்த தலித் தலைவர்களும் இது குறித்து வாய் திறக்கவேயில்லை. வெறும் ஒன்று, இரண்டு சீட்டுகளுக்காக தமது மக்களின் அடிப்படை உரிமைகளைகூட விட்டுத் தர தலித் தலைவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
புனிதமான இடங்கள் என்று சொல்லப்படுகிற கோயில்களை கட்டுவதற்கு பல ஏழைமக்கள் மாண்டுபோனார்கள். அவர்களின் பிணங்களின் மீதுதான் நாம் வியக்கும் கோயிகளும் அரண்மனைகளும் கட்டப்பட்டன. அந்த கெடுகெட்டத்தனத்தை அரசன் செய்தான் என்பதாலேயே யாரும் தட்டிக் கேட்டு புரியவைக்கவில்லை. அது போலவே, தலித் தலைவர்களும், சமநீதி சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களும் இந்த மாதிரியான மோசடிகளை செய்யும் ஆளும் வர்க்கத்தையும், அதிகாரிகளையும் தட்டிக் கேட்காமல் இருக்கும் வரை - தலித்துகளின் சமாதிகளின் மீது சமத்துவபுரங்களை தமிழக அரசு கட்டிக்கொண்டுதான் இருக்கும். இந்த நிலையை மாற்ற சமூக ஆர்வலர்கள் பெரும் விவாதத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.
சிவகுமார், உணர்ச்சிகளை தூண்டிவிட்டு மட்டுமே ஆட்ட்சி அமைக்கபடும்போது மாற்றங்கள் வருவதென்பது மிகவும் தாமதமாகவும் சலிப்பாகவும் உள்ளது.உன்ங்களைப்போன்றோரின் எழுத்துக்கள் தான் நம்பிக்கைஊட்டுகின்றன.வடசென்னையில் போனால் தெரியும் சென்னை எவ்வளவு சிங்காரம் என்று.
ராசாவுக்கும் துரைசாமிக்கும் பதவி கொடுத்தால் மட்டும் போதும் தலித் இனமே நம் பின்னால் தான் என்று கணக்கு போடுகிறார்கள்.
இங்கு எல்லாமே அரசியல் தான்.
வாழ்த்துக்கள்.
தலைப்பில் உள்ள வார்த்தைகள் மொத்தமாக உலக சரித்திரத்தை குறியீட்டாக உணர்த்திய ஆச்சரியம்.
வேறுவிதமாக யோசித்துப்பாருங்கள் பினாயில் இலவசம் என்றால் கூட வரிசை நீண்டு நிற்கிறதே?
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் நிலமைய பாருங்கள் அது ஒரு பெரிய கொடுமை.
தொகுப்பு வீடுகள் திட்டத்தில் ஒரு மாறுதல் செய்திருக்கிறார்கள்.அவர்கள் கொடுக்கும் தொகைக்கு (70,000)மேலாக மக்கள் விரும்பினால் பணம் போட்டு வீடு கட்டி கொள்ளலாம்.பெரும்பாலோனார் அததான் செய்கிறார்கள் கடன் வாங்கினாலும் கூட.கொஞ்சம் நல்ல படியாக கட்டி விட்டால் உயிருக்கு பயப்படாமலாவது தங்கலாம் அதற்காக
நூற்றாண்டுகளாக தொடர்ந்து உதாசீனப்படுத்தப்பட்டு வரும் ஒரு இனத்தின் வலியையை மிக அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள். அதிகார வர்க்கத்திற்கு எதிரான உங்களின் இந்த அறச்சீற்றம் தொடர வேண்டும்.
நல்ல பதிவு.
ஆனால் தலித்துகளை வைத்து அரசியல் நடத்துபவர்கள் உள்ள வரை, தலித் பிரச்சினைகளும் ஓயப் போவதில்லை.
வணக்கம்..தாங்களின் பதிவு படித்தேன்..நன்றாக இருக்கிறது..
தழித் மக்களைப்பொருத்த அளவில்...விடிவு இல்லா ஒரு இரவு..
படித்து மேலே வந்தவர்களும் தங்களை தனித்து அடையாளம் கொள்கிறார்கள்.. பிற படித்த இளஞ்ஞர்களிடையே சக மனிதனின் அவல நிலை குறித்து ஒரு விழிப்புணர்ச்சி எற்ப்பட வேணுடும்.. இல்லை என்றால் கஷ்ட்டம்...
wen i find time, i'll read further...and mail you...if time permits, pl. mailme...from Pon
- ponnakk marutha
Good Siva
Good article on so called Samathuvapuram, Dalit must know that Mr.Karunanithi is our first enemy of Tamil Dalits.
Keep on writing...
thanks
abraham lingan
Dear Siva,
Vanakkam.
Your new article on Samathuvapuram is very nice and make new thinking on the govt. scheme. Also explores the defects and fraud done by the officials and govt. Vazhuthkkal for Tamilmanam Selection.
Thank u
Era. Venkatesh
வணக்கம்
தங்களின் ‘ தலித் சமாதிகளின் மீது எழும் சமத்துவபுரம்' கட்டுரையைப் படித்தேன். உங்களின் இந்த சமூகவியல் பார்வையைக் கண்டு உளம் மகிழ்கிறேன். பாராட்டுகிறேன்.
பொதுவாக இந்திய சூழலில் ஆதிக்க சாதிகளின் அடக்குமுறை என்பது தொடர்ந்து ஆங்காங்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அது தலித் மக்களுக்கான சிக்கல் மட்டுமல்ல. உழைக்கும் அனைத்து கீழ்த்தட்டு மக்களுக்குமான சிக்கலாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது.
தலித் அல்லாத பிற கீழ்த்தட்டு மக்களும் தினம்தினம் வஞ்சிக்கப்படும் அவலம் தொடர்ந்து நடைபெற்றுவருவதை நாம் மறந்துவிடக்கூடாது. அதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
மேலும் தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம்...
தங்களின் வலைப்பூவையும் பார்வையிட்டேன்..... மிக்க மகிழ்ச்சி
நன்றி
இரா. வெங்கடேசன்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
எதோ தலித் மக்கள் மட்டும் தான் வாழ்கையில் சங்கட படுகிறார்கள் மற்றவர்கள் எல்லோரும் பணத்தில் மிதக்கிறார்கள் என்பது போல உள்ளது உங்களது பார்வை. சமத்துவ புறங்கள் மிகச்சிறந்த திட்டம் என்று அங்கு வாழ்கின்ற , நான் சந்தித்த சில பயனாளிகள் சொல்லிருக்கின்றார்கள்.
திரு. சிவகுமார் அவர்களே, தங்கள் பதிப்பில் உள்ள உண்மைகள் சிந்திக்கப்பட வேண்டிய விஷயங்கள். தமிழ்நாட்டில் ஒதுக்கீடுகள் பல பொத்தாம் பொதுவாக இருக்கின்றன.
தாட்கோ போன்ற நிறுவனங்கள் தான் தலித் மேம்பாட்டிற்கென அரசு இயந்திரங்களாக செயல் படுகின்றன இதன் தலைமை மற்றும் முக்கிய அலுவல் அதிகாரிகள் பணி தலித் பிரிவினருக்கேஎன
கட்டாய ஒதுக்கீடு கேட்டு பெறுதல் தான் இது போன்ற நிகழ்வுகளுக்கு தீர்வாகும். இது குறித்து உரிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டியது மிக இன்றியமையாதது ஆகும்.
தற்போது தலைமை பொறுப்பில் உள்ளவர் யார் என்று பாருங்கள் அவர் ஒரு தமிழர் கூட அல்ல. பின் எவ்வாறு எதையும் எதிர்பார்க்க முடியும். தங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். கேட்கவேண்டியவர்கள்
மன கதவுகளை தட்டி திறக்கும் வரை.
பாலா