முருக சிவகுமார் (murugasivakumar)

இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சுதந்திரமான - நேர்மையான தேர்தல்கள் நடைபெறுவதற்கு வகை செய்கிறது. இதில், சுதந்திரமான தேர்தல் என்பதற்கு பொருள் - எந்தத் தரப்பில் இருந்தும் எந்தவிதமான குறுக்கீட்டுக்கும் இடம்தராத தேர்தல் என்பதாகும். நேர்மையான தேர்தல் என்றால், பாரபட்சமில்லாத சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் தேர்தல் என்பதாகும்.

அச் சட்டத்தின் விதிகளின்படி தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மக்களை வசீகரிக்கக்கூடிய - அரசுக்கு, ஆளுங்கட்சிக்கு ஆதரவை தூண்டக்கூடிய எந்தவிதமான புதிய கொள்கைகளையோ அல்லது திட்டங்களையோ அரசு அறிவிப்பதும் - பணத்தையோ, பொருட்களையோ கொடுப்பதும் சட்டவிரோதமாகும்.

அதிகார வேட்டையே நவீன அரசியலில் ஆதாரச் சுருதியாக மாறிவிட்ட பிறகு, அரசின் அதிகாரத்தை பயன்படுத்தியும், பண பலத்தை பயன்படுத்தியும் மக்களிடம் தேர்தலை சந்திப்பதென்பது நம் நாட்டில் வழக்கமாகவே இருந்துவருகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் சமயங்களிலெல்லாம் பிரதான கட்சிகளான தி.மு.க.,வும் அ.தி.மு.க.வும் மக்களை உபசரிப்பதாக மாறிமாறி குற்றம்சாற்றுவது வழக்கம். அது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையையும் எடுப்பதில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பெட்டியை திறந்துவைத்து கொண்டு, அதில் இருந்த கட்டுக்கட்டான பணத்தை வாக்களர்களாகிய மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தபோது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரேன் ஆனந்த் சின்கா கையும் களவுமாக பிடித்து பணத்தை கைப்பற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆனாலும், நேர்மையான தேர்தல் நடைபெறாமல் தடுக்கும் முயற்சியில் இறங்கிய அந்த அரசியல் பிரமுகருக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இதுதான் நம் நாட்டில் நிலவும் போக்கு.

தமிழகத்தில் வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய இரு தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலிலும் மக்களை வசீகரித்து ஓட்டுகளை பொறுக்க தி.மு.க.,வும் அ.தி.மு.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. வாக்காளர்களுக்கு வழக்கம் போலவே பணம் வழங்குவதும் மூக்குத்தி, குடம் உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதும் நடைபெற்று வருவதாக தி.மு.க. மீது அ.தி.மு.க. குற்றம்சாற்றியுள்ளது. அதேபோல், அ.தி.மு.க.வினர் பணம் வழங்குவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்ததால் செங்கோட்டையனும் ஓ.பன்னீர்ச்செல்வமும் தங்கியிருந்த விடுதியில் காவல்துறையினரோடு தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த மாதியான விசயங்கள் வழக்கமாக நடக்கும்; தவறே செய்திருந்தாலும் வெறு கண்டனத்தோடு தேர்தல் ஆணையம் நிறுத்திக்கொள்ளும்.

அ.தி.மு.க.வில் இருந்து விலகி ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணன் எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்று பல வினோதமான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக தெரிகிறது.

திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஆத்தூர் சிற்றூரில் தி.மு.க. தேர்தல் அலுவலகம் அருகில் திடீரென்று ஒரு அசைவ உணவகம் உருவாகியிருக்கிறதாம். தேர்தல் சிறப்பு அசைவ உணவகம் என்று இதற்கு பெயர் சூட்டி இருக்கிறார்கள். பார்ப்பதற்கு சிறிய உணவு விடுதியாக காட்சியளித்தாலும் காலை, பிற்பகல் மற்றும் இரவு நேரத்தில் வழங்கப்படும் அசைவ உணவு வகைகளை பார்க்கும்போது பெரிய நட்சத்திர உணவு விடுதிகளை நினைவுப்படுத்துவதாக இருக்கிறது.

உள்ளூர் தி.மு.க. நிருவாகி ஒருவரால் இந்த திடீர் உணவு விடுதி நடத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும் அங்குள்ள இன்னொரு உணவு விடுதியின் உரிமையாளரிடம் கேட்டபோது, இந்த திடீர் உணவு விடுதியின் உரிமையாளர் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. என்று கூறுகிறாராம். வடக்கு ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சிற்றூர்ப்புறங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள கட்சியினர் மற்றும் இந்த விடுதிக்கு வரும் கட்சி சார்பற்ற பொதுமக்கள் ஆகியோர் நாள்தோறும் 3 வேளையும் மூக்குமுட்ட சாப்பிட்டு செல்கிறார்கள் என்று உள்ளூர் வாசிகள் சிலர் தெரிவிக்கிறார்கள்.

காலையில் இடியாப்பம் பாயா, கொத்து புரோட்டா, ஆப்பம்; மாலையில் விதவிதமான பிரியாணி வகைகள் அத்துடன் சாதம், கோழிக் குழம்பு, மீன் குழம்பு, மட்டன் குழம்பு; இரவில் சாப்பாடு வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அசைவ சாப்பாடு, இல்லையேல் அசைவ வகைகளுடன் இட்லி, தோசை. ஒவ்வொரு நாளும் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் சாப்பாட்டுக்கான அடையாள டோக்கன்கள் வழங்கப்படுகிறதாம். அந்த டோக்கன்களை கொடுத்துவிட்டு எதை வேண்டுமானாலும் சாப்பிட்டுவிட்டு வரலாம்.

ஊரில் சில குடும்பங்கள் தமது முன்னோர் பெருமையை கூறும்போது, “எங்க குடும்பம் தின்னு கெட்ட குடும்பம்” என்று சொல்வார்கள். அது போலவே, திருச்செந்தூர் தொகுதியில் நடப்பதை பார்க்கும்போது, அத்தொகுதிமக்கள் “தின்னு கெட்ட குடும்பங்களாக” திகைத்து நிற்க போகிறார்கள் என்பதில் ஐயமில்லை. மக்கள் எப்போது தங்களது ஓட்டுகளின் மதிப்பை உணருகிறார்களோ அப்பொழுதுதான் உண்மையான ஜனநாயகம் நம் நாட்டில் உருவாகும். அது வரை நம்மை பண முதலாளிகளும் அரசியல்வாதிகளின் வாரிசுகளும் ஆண்டுகொண்டுதான் இருப்பார்கள்.

நவீன அரசியலின் ஆதாரச் சுருதியாக மாறிவிட்ட வாக்காளர்களுக்கான உபசரிப்பு, பெரும் ஆபத்தானது என்று சமூக ஆர்வலர்கள் கூறிவந்தபோதிலும் அது அரசியல் கலாசாரமாகவே தொடர்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் நமது ஜனநாயகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பெரும் தவறு நடந்திருக்கிறது. பணம் படைத்தவர்கள் மட்டுமே இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். சமூகம் நல்ல திசையில் செல்ல வேண்டும் என்று விருப்பம் கொண்டு செயல்பட்டு வருகிற சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று பேரவைக்கு செல்ல முடியுமா? முடியவே முடியாது. காரணம், பண பலத்துக்கும் படை பலத்துக்கும் தங்களை அடகு வைத்து விட்டு ஏமாளிகளாகவே இருக்க மக்கள் பழகிவிட்டார்கள்.

மக்களின் இந்த மனநிலையை உணர்ந்ததால்தான் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றிபெற்றுவிட்டால், பணம் சம்பாதிப்பதிலும் சொத்துக்களை வாங்கி போடுவதிலும் மட்டுமே கவனத்தை செலுத்துகின்றனர். பணத்துக்கும் மதுவுக்கும் இலவசங்களுக்கும் ஓட்டுகள் கிடைக்கிற போது அரசியல்வாதிகள் மக்கள் நலனில் ஏன் அக்கறை காட்ட வேண்டும்? மக்களின் மனமாற்றம் மட்டுமே சிறந்த ஜனநாயகத்தை ஏற்படுத்தும். ஆகவே இது குறித்து தொடர்ந்து விவாதிக்க வேண்டியிருக்கிறது.
6 Responses
 1. Anonymous Says:

  exactly....


 2. seetha Says:

  சிவகுமர், என்னுடய பல மேல்னாட்டு நண்பர்கள் நம்மூரில் உள்ள ஏழ்மையை குறித்து ஆச்சரியம் தெரிவிப்பார்கள். எப்படி ஒரு சமுதாயத்தில் இது சாத்தியம் என்று.

  ஆனால் இப்போதெல்லம் எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?பெரும்பாலும் ஏழை மக்கள் தானே இப்படி இலவசம் வேண்டும் என்று ஓட்டு போடுகிறார்கள்?அப்போ என்ன செய்வது?இதில் சாதீ என்னும் தீ வேறு.மனம் வெறுத்து போகாமல் இருக்க உங்களைப்போன்ற இளைஞர்கள் தான் ஒரே நம்பிக்கை .


 3. Anbu Malar Says:

  மக்களின் மனமாற்றம் மட்டுமே சிறந்த ஜனநாயகத்தை ஏற்படுத்தும்.
  -E Anban


 4. Anbu Malar Says:

  அரசியல்வாதிகள் மக்கள் நலனில் ஏன் அக்கறை காட்ட வேண்டும்? மக்களின் மனமாற்றம் மட்டுமே சிறந்த ஜனநாயகத்தை ஏற்படுத்தும்.
  --E Anban


 5. Anbu Malar Says:

  உங்களைப்போன்ற இளைஞர்கள் தான் ஒரே நம்பிக்கை .
  E Anban


 6. prabakaran Says:

  ஐயா உங்களுக்கெல்லாம் ஒரு உண்மையை சொல்லுறேன் கேட்டு மயக்கம் போட்டு விடாதீங்க நம்ம ஊருல அலறகிரியா என்னவோ ஒருத்தரு வரலாறு படைக்கிறார்னு எழட்துனீங்க்களே கேட்டுக்குங்க ஒரு ஓட்டுக்கு 5000 ரூவயக் கொடுத்துருக்கங்கையா ஒரு தேசீயக் கைட்சி. யாருப்பா சொன்னது டமில்நாட் முன்னேறிடுச்சுன்னு. ஜார்க்கண்ட் மக்கள்ளாம் ரொம்ப ஏழைங்கப்பா ஆனா அங்க அரசியல்வாதிங்கல்லாம் நம்ம கலைஞர் மாதிரியேதான்.