முருக சிவகுமார் (murugasivakumar)

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசும், இந்திய அரசும் அறிவித்துள்ளன. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் இரு நாட்டு அரசுகளும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார் என்றும், அவர் படுகொலை செய்யப்பட்டதாக சிங்களப் படையினர் பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியிருக்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் மனஉறுதியை குலைப்பதற்காகவே சிங்களப் படை திட்டமிட்டு பொய் செய்திகளைப் பரப்பி வருகிறது. இலங்கைப் போரில் பிரபாகரன் படுகொலை செய்யப்படவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் இறந்துவிட்டதாக சிங்கள அரசும், ஆங்கில ஊடகங்களும் பரப்பி வரும் பொய்திகளை நம்ப வேண்டாம்என்று நேர்காணலில் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

இலங்கை முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள கரய முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்படை தலைவர் சூசை ஆகியோர் குண்டு துளைக்காத ஊர்தியில் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அப்போது சிங்களப் படையினர் ஏவுகணைகளை வீசித் தாக்கியதில் மூவரும் கொல்லப்பட்டதாகவும் சிங்கள போர்ப்படை வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தியாவில் உள்ள ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டதாக சிங்கள அரசு தரப்பில் பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என்று ஈழத் தமிழர் ஆதரவு இணையதளமான அதிர்வு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்களுக்குச் சாதகமில்லாத பல தகவல்களை இலங்கைப் போர்ப்படை வெளியிட்டு வருகிறது. இலங்கைப் போர்ப்படை கூறி வருவதை அவர்களால் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பிக்க முடியாது. சிங்களப் படையினரால் வெளியிடப்படும் படங்கள் கூட இன்னும் உறுதி செய்யபடவில்லை. களத்தில் இறந்து கிடக்கும் பலரின் உடல்களை யூகத்தின் அடிப்படையில் அவராக இருக்கலாம், இவராக இருக்கலாம் என்று போர்ப்படை கூறி வருகிறது. எனவே உண்மை விரைவில் வெளியாகும். அதுவரை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பொறுமை காக்க வேண்டும்என்று அதிர்வு இணையதளம் கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும் பிரபாகரன் கொல்லப் பட்டதை இலங்கை அரசு உறுதியாக இன்னும் அறிவிக்கவில்லை. போர் நடைபெறும் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 250 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களில் பிரபாகரனும் ஒருவராக இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காக மரபணு ஆயவுகள் எதுவும் நடத்தப்படவில்லை. உளவுத் தகவல்களின் அடிப்படையில்தான் நாங்கள் உடல்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்என்று மட்டுமே போர்ப்படை செய்தி தொடர்பாளர் உதய நாணயக்காரா காலை தெரிவித்தார். ஆனால் இரவு வரை உடல் அடையாளம் காணப்பட்டதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

பிரபாகரன் கொல்லப்பட்டதை இலங்கை அதிபர் இராசபக்சே நேற்று பிற்பகலில் அதிகாரப்படியாக அறிவிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் மாலை அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி வரை எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

வழக்கமாக விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் கொல்லப்பட்டால் அவர்கள் வீர மரணம் அடைந்ததாக விடுதலைப் புலிகள் இயக்கம் முறைப்படி அறிவிக்கும். மேலும் அவர்களுக்கு மாவீரர், பிரிகேடியர் உள்ளிட்ட பட்டங்களும் அறிவிக்கப்படும். ஆனால் அத்தகைய அறிவிப்புகள் எதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதனிடை@ய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தொணி, சமாதான செயலகத்தில் பொறுப்பாளர் புலித்தேவன், காவல்துறை தலைவர் இளங்கோ, இரமேசு சுதர்மன், கபில் அம்மான் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என்றும், அவர்களது உடல்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் சிங்களப் படை அறிவித்துள்ளது. இதை விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ்நெட் இணையதளம் அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஒப்புக்கொண்டுள்ளது.

|
1 Response
  1. நெஞ்சம் பொருக்குதில்லையே, இந்த அவதூறு பரப்பும் நிலைகெட்ட மானிடரை நினைத்துவிட்டால்...
    www.kalakalkalai.blogspot.com