முருக சிவகுமார் (murugasivakumar)


நான் ஆடியபோது
ரசித்தவனோடு ரசித்து
தேவரடியா என்றாய்...

உன் பெண்டிர்
விரல் சுட்டி
தேகம் குலுக்கியதை
பரதம் என்றாய்...

நீ பெருமையாக
உணரும் தேவரடியா
நாட்டியத்தை - நான்
ஆடியபோது தேவகலை
உனக்கு வராதென்றாய்....

களையெடுத்து அறுப்பறுத்து போர் அடிக்கும்
எனதுடலின் நெளிவு
சுளிவு அசைவை
நீ பாதம் நக்கி
கற்ற குரு நடராசன்
ஒருபோதும் தரவில்லை...

சுற்றிலும் கசடுகளை
சுத்தப்படுத்தும்
எறவானத்து - என்
துடைப்பக்கட்டையே மேல்
என்னை ஒதுக்கும்
உன் குருவைவிட...

(உண்மை 01.01.2008 இல் எழுதியது)

முருக சிவகுமார் (murugasivakumar)

யாழ்ப்பாணத்தில் 1990-ஆம் ஆண்டு புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது. அந்த வானொலியை அழிக்க இலங்கைப் படைகள் கிட்டத்தட்ட 23 முறை தாக்குதல்கள் நடந்தன. ஆனாலும் உடனுக்குடன அது சரி செய்யப்பட்டு தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது.

இந்நிலையில் வன்னியில் போர் உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த மே மாதம் 16-ஆம் தேதியுடன் புலிகளின் குரல் வானொலி தனது ஒலிபரப்பை நிறுத்திக் கொண்டது. இன்று 5-ஆம் தேதி கரும்புலிகள் நினைவு நாளை முன்னிட்டு,

”ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு எவ்வித காலவரம்பையும் நிருணயிக்க முடியாது; இறுதி இலட்சியத்தை அடையும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும்”
- தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்

என்ற அறிவிப்போடு இணையதளம் மூலம் தனது ஒலிபரப்பை ”புலிகளின் குரல்” தொடங்கியுள்ளது.
இதற்கான சுட்டி: http: //www.votradio.com/live/live.html
http://www.pulikalinkural.com/

செய்திகள், காணொலிகள், ஒலிப்பதிவுகள், பாடல்கள், ஒளிப்படங்கள் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன.
செல்பேசி மூலம் இந்த வானொலியை கேட்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
முருக சிவகுமார் (murugasivakumar)
தமிழக சட்டப்பேரவையில் 24-ஆம் தேதி புதன்கிழமை உயர்கல்வி மானிய கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர் க.பொன்முடி விடையளித்தார், அப்போது கல்லூரி ஆசிரியர்கள் 1000 பேர் புதிதாக அமர்த்தப்பட உள்ளதாக அறிவித்தார். இந்த வேளையில், கல்லூரி ஆசிரியர் பணியமர்த்த முறையில் இருக்கும் முறையற்ற சிக்கல்களை விவாதிப்பது அவசியமாகிறது.


தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக அரசு கலை கல்லூரிகளுக்கு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் விரிவுரையாளர்களை நேரடியாகத் அமர்த்தி வருகிறது. கடந்த 2007ஆம் ஆண்டில் 1000 விரிவுரையாளர்களையும், 2008-இல் 522 விரிவுரையாளர்களையும் அமர்த்தியது. 2009-இல் 1,195 விரிவுரையாளர்களை அமர்த்த எண்ணி செயலாற்றி வருகிறது. இவ்வாறாக பணியில் அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கானோர் முறையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களா என்றால் அது இல்லை. கடந்த ஆட்சியில் 2005ஆம் ஆண்டு போட்டித் தேர்வு மூலம் அரசு பொறியியல் மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஏறக்குறைய 61 ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். இதைப் பின்பற்றி இந்த அரசு பொறியியல் மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 2007ஆம் ஆண்டு 69 ஆசிரியர்களை அமர்த்தியது.
ஆனால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இப்போது வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு எந்த ஒரு போட்டித் தேர்வும் நடத்தப்படுவதில்லை. மாறாக, உயர்கல்வி தகுதி கல்லூரிகளில் பணிபுரிந்த அனுபவம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்து வருகிறது. இந்த முறையில் அதிகப்படியான முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாற்று எழுந்தபோதிலும் அதை நீக்க வழிவகை செய்யாமல் தொடர்ந்து முறையற்ற இந்த முறையிலேயே அமர்த்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

முறையற்ற மதிப்பீடு

இந்தத் தேர்வு முறையின்படி சான்றிதழ் சரிபார்ப்புக்கு 29 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதாவது முனைவர் பட்டத்திற்கு 9 மதிப்பெண்கள், கல்லூரிகளில் பணிபுரிந்த அனுபவத்திற்கு 15 மதிப்பெண்கள், புத்தகம் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் மொத்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்வித் தகுதியை தீர்மானிப்பது பல்கலைக்கழக மானியக்குழு. இக்குழு கடந்த 2006ஆம் ஆண்டு ஓர் இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. அதன்படி ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை முடித்தவரானால் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் விரிவுரையாளர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதோடு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கு தகுதியாகிறார். அவ்வாறு படிப்பை முடித்தவரின் கற்பித்தல் அனுபவம் என்பது ஆய்வியல் நிறைஞர் அல்லது முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு முதல் கணக்கில் கொள்ளப்படும். ஒருவர் சான்றாக ஒருவர் 2004ஆம் ஆண்டு ஆய்வியல் நிறைஞர் படிப்பை முடித்தவரானால் 2008ஆம் ஆண்டு வரை அவர் பணிபுரிந்த அனுபவகாலம் 4 ஆண்டுகள். அவர் பொது முதுநிலை கல்வித் தகுதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தனியார் கல்லூரிகளில் தற்காலிக அல்லது பகுதி நேர விரிவுரையாளராக 2004ஆம் ஆண்டுக்கு முன்னரே பணிபுரிந்ததாலும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெறுவதற்கு முன் அவர் பெற்ற அனுபவம் செல்லத்தக்கது அல்ல. இதை கருத்தில் கொள்ளாமல் மதிப்பெண்களை அரசு ஆசிரியர் தேர்வாணையம் வாரி வழங்கி வருகிறது.

தொலைநிலைக் கல்வியில் எம்.பில்

2006ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு இடைக்கால அறிக்கை வெளியானது. அதுமுதல் புற்றீசல் போல இந்தியாவின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தொலை கல்வி மூலமாக ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை வாரி வழங்கின. இதனால் கடந்த ஆண்டுகளில் இலட்சக்கணக்கானோர் தமிழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை தொலை கல்வி மூலம் பெற்றுள்ளனர். முதுநிலை கல்வித் தகுதியை மட்டும் கொண்டு தனியார் கல்லூரிகளில் பணிபுரிந்த தற்காலிக அல்லது பகுதிநேர விரிவுரையாளர்கள் பின்னாளில் பெறப்பட்ட ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைக் கொண்டு எளிதாக விரிவுரையாளர் வேலையைப் பெற்றுள்ளனர். இதனால் பல்கலைக்கழங்களில் - கல்லூரிகளில் முழு நேரமாகப் படித்து ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டத்தை பெற்றவர்கள் முன்பு குறிப்பிட்ட நபர்களின் ஒத்த வயதினராக இருப்பினும் கற்பித்தல் அனுபவமின்றி வாய்ப்பை முற்றிலுமாக இழந்துவிடுகின்றனர்.

கோட்டைவிட்ட தேர்வு வாரியம்

ஆசிரியர் தேர்வாணையத்தின் மதிப்பெண் விகிதப்படி மொத்த மதிப்பெண்களில் 52 விழுக்காடுகள் கற்பித்தல்அனுபவத்திற்கு வழங்கப்படுகிறது. அவ்வாறிருக்க ஒருவர் பெற்ற அனுபவம், கல்வித் தகுதி பெற்ற ஆண்டுக்குப் பிறகு பெறப்பட்டதா? என்பதைக் கூட கவனிக்க தேர்வு வாரியம் கோட்டைவிட்டது என்பதுதான் உண்மை. இதனால் நடைமுறைக்கு சாத்தியமற்ற பொய்யான அனுபவச் சான்றிதழைக் கொண்டு ஆயிரக்கணக்கானோர் அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களாகக் கடந்த 2 ஆண்டுகளில் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். தேர்வாணையம் பெயரளவுக்கு மட்டும் சிலரை தேர்வுப் பட்டியலிலிருந்து நீக்கியது. ஆனால் 75 விழுக்காட்டினர் பொய்யான சான்றிதழ்களைக் கொண்டு பணியில் சேர்ந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

முழுநேர கல்வி புறக்கணிப்பு

இதேபோன்று முனைவர் பட்டத்தை இருவழிகளில் பெறலாம். ஒன்று பகுதி நேரம். மற்றொன்று முழுநேரம். கல்லூரிகளில் 2 ஆண்டு பணிபுரிந்தவர்களுக்கே பகுதி நேரத்தில் முனைவர் பட்டப்படிப்பு படிக்க பல்கலைக்கழகம் இசைவளித்துள்ளது. ஆசிரியர் தேர்வாணையத்தின் கணக்குப்படி ஒருவர் பகுதி நேரத்தில் 5 ஆண்டுகளில் முனைவர் பட்டத்தை முடித்ததாக எடுத்துக்கொண்டால் அவருக்குக் கிடைக்கும் மதிப்பெண்கள், 5 ஆண்டுகளுக்கான கற்பித்தல் அனுபவத்திற்கு 10 மதிப்பெண்கள், முனைவர் பட்டத்திற்கு 9 மதிப்பெண்கள். ஆகமொத்தம் 19 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதே 5 ஆண்டுகள் ஒருவர் முழு நேரமாக முனைவர் பட்டம் பெற்றால் வெறும் 9 மதிப்பெண்கள் மட்டுமே தேர்வாணையம் வழங்குகிறது என்பது உண்மை. பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்போது கற்பித்தல் அனுபவம், ஆய்வு அனுபவம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த அனுபவம் முதலியவற்றை சமமாக எடுத்துக் கொள்ளும்போது தமிழக அரசால் அமர்த்தப்பட்ட ஆசிரியர் தேர்வாணையத்தால் முழு நேர மாணவரின் ஆய்வு அனுபவம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகிறது. இதனால் 5 முதல் 8 ஆண்டுகள் வரை முழு நேரம் படித்து முனைவர் பட்டம் பெற்ற முழுநேர ஆராய்ச்சி மாணவர்கள் கல்வியாளர்களாகப் பணியாற்ற வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

காற்றில் பறந்த தகுதி

கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பல்கலைக்கழக மானியக் குழுவால் அமைக்கப்பட்ட ஊதிய பரிசீலனைக் குழு கல்லூரி அல்லது பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான ஊதியத்தை 6ஆவது ஊதியக் குழுவிற்குப் பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையில் ஊதியம் மட்டுமின்றி கல்லூரி அல்லது பல்கலைக்கழக ஆசிரியர்களாக வருபவர்களின் கல்வித் தகுதியை முறறிலுமாக மாற்றி அமைத்துள்ளது. இதன்படி ஆய்வியல் நிறைஞர் பட்டம் மட்டும் பெற்ற தகுதியற்றவர்களாகின்றனர். முனைவர் பட்டம் பெற்றவர்களும் முதுநிலை பட்டம் பெற்று பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் விரிவுரையாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களும் மட்டும் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் புதிதாக சேரும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் ஊதியத்தைத் தாண்டுகிறது.
நிலைமை இவ்வாறாக இருக்க தமிழக அரசு புதிதாக விரிவுரையாளர்களை அமர்த்துவதாக அறிவித்து, கடந்த 2 வாரங்களில் அனைத்துப் பாடங்களுக்கும் நேர்காணல் முடிந்துவிட்டது. புதிதாக அமர்த்தப்படும் கல்லூரி ஆசிரியர்களுக்கு 6ஆவது ஊதியக் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுமெனில் பல்கலைக்கழக மானியக் குழுவின் 6ஆவது ஊதியக் குழு வெளியிட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழக ஆசிரியர்களின் குறைந்த அளவு தகுதியை அரசு காற்றில் பறக்கவிட்டது ஏன்? இந்த வினா எழும் என எண்ணிய உயர்கல்வித்துறை அவசர அவசரமாகப் பணி ஆணைகளை வழங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

தமிழக அரசுக்கு சில வினாக்கள்

பல ஆண்டுகள் இடைவிடாமல் முழுநேரமாக கல்லூரிக்கு சென்று படித்து முனைவர் பட்டம் பெற்ற ஒருவருக்கு வேலை வழங்க மறுக்க தமிழக அரசுக்கு, முறையற்ற முறையால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் சில வினாக்களையும் மாற்று திட்டங்களையும் முன்வைக்கிறேன்.

* அனைவருக்கும் கல்வி என்று இந்திய அரசு ஒருபுறம் கூறிக்கொண்டிருக்கும் வேளையில் ஏழை எளிய மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தகுதியற்ற விரிவுரையாளர்களைப் பணியில் தமிழக அரசு அமர்த்துகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பின்பற்றாத முறையற்ற தேர்வு முறையைத் தமிழக அரசு மட்டும் செயல்படுத்துவதன் நோக்கமும் அவசியமும் என்ன?

* பொருளாதாரத்தில் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் பயிலும் பொறியியல் கல்லூரிகளில் 69 விரிவுரையாளர்களைப் பணியில் அமர்த்த தேர்வு ஆணையம் போட்டித் தேர்வு நடத்தி திறமையானவர்களைப் பணியில் அமர்த்தியது. ஆனால் ஏழை எளியோர் பயிலும் அரசு கலைக் கல்லூரிகளில் போட்டித் தேர்வு நடத்தாமல் முறையற்ற தேர்வு முறையைப் பின்பற்றி திறமையற்ற விரிவுரையாளர்களைப் பணியில் அமர்த்துவதன் நோக்கம் என்ன?

* கடைநிலை ஊழியர் பணிளுக்குக்கூட போட்டித் தேர்வு நடத்தும் நிலையில் விரிவுரையாளர் பணி போன்ற உன்னதமான பணிக்குப் போட்டித் தேர்வு நடத்தாமல் தமிழக அரசு உயர்கல்வித்துறையை சீரழிப்பது ஏன்?

* இந்திய ஆட்சிப் பணியாளர்களைவிட அதிக ஊதியத்தைப் பெற இருக்கும் விரிவுரையாளர்களுக்குப் போட்டியின்றி நேர்மையின்றி வேலை வழங்குவது வேதனையாக உள்ளது.

* அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தொலை கல்வி மூலமாக வழங்கப்படும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தின் தரம் குறைவதை கருத்தில் கொள்ளாமல் தகுதி வாய்ந்த முழு நேரமாகப் பட்டம் பெற்ற மாணவர்களை ஒதுக்கி வைத்து பகுதிநேரமாகப் படித்தவர்களுக்கு வேலை வழங்குவது ஏன்?

* உழவர்கள் ஏழை எளிய மக்களின் பிள்ளைகளே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்று வருவதால் கல்வித் தரத்தை மேம்படுத்த முறைகேடான விரிவுரையாளர் தேர்வு முறையை உடனடியாகத் தமிழக அரசு நீக்கம் செய்ய வேண்டும்.

* எதிர்கால மாணவர்களின் நலன் கருதி பொய்யான கற்பித்தல் அனுபவச் சான்று, ஆராய்ச்சி தாள் சான்று அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்ட, அமர்த்தப்படவுள்ள அனைத்து விரிவுரையாளர்களையும் கண்டறிந்து மீண்டும் ஒருமுறை சான்றிதழ்களைச் சரிபார்த்து பணிநீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

படித்தவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லப்படும் நிலையில், முறையாக படித்தவர்களை புறக்கணித்து குறுக்கு வழியில் இலகுவாக படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை தமிழக அரசு உயர்கல்வித்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

(இக்கட்டுரைக்கான தகவல் வழங்கியது: அனைத்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் குழுமம், தென்மண்டல பிரிவு. அவர்களுக்கு நன்றி)
முருக சிவகுமார் (murugasivakumar)

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்தான் இப்போதைய பரபரப்பு. தேர்ச்சி கண்டவர்கள் மகிழ்ச்சி அடைந்து கல்லூரிகளில் சேர தேடி அலைகிறார்கள். தோல்வி கண்டவர்கள் துவண்டுபோய் வேதனை அடைகிறார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்குக் கல்வி அளிக்கும் "மகத்தான" பணியை ஆற்றும் கடமையுள்ள தமிழக அரசு மகிழவும் வேண்டாம்; வேதனைப்படவும் தேவையில்லை. மாறாக வெட்கப்பட வேண்டும்.


இது காட்டமான விமர்சனமாகக் கூட இருக்கலாம். வெளிப்படையான மனநிலையில் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் மாநில அளவில் முதல் மூன்று இடத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே.


ஆக, முதல் மூன்று இடப் பட்டியலில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இடம்பெறவில்லை. ஏன்? இதற்கு யார் பொறுப்பேற்பது? யார் குற்றவாளி? இந்த நிலைக்கு முதலில் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இரண்டாவதாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

மாணவர்களின் நிலைக்கு ஆசிரியர்களையும் அரசையும் குற்றம் சாற்றுவது எந்தவிதத்தில் நியாயம் என்று வினவலாம்.


என் நினைவில் பதிந்த நிகழ்வை உங்களுக்குச் சொல்கிறேன். அரசு பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர் ஒருவர், அவரின் மகனைத் தனியாருக்குச் சொந்தமான மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்திருந்தார். அவரிடம் பேசும்போது, 'அரசு பள்ளியில் பணியாற்றும் நீங்கள், உங்கள் மகனை அதே பள்ளியில் சேர்த்திருக்கலாமே' என்றேன். அதற்கு ஆசிரியர் சொன்ன விடை, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 'அரசு பள்ளிக்கூடத்தில் நண்பகல்வேளை உணவு உண்ணும் போது பன்றிகளும் மாணவர்களும் ஒன்றாக இருக்கும் நிலை உள்ளது. அந்தப் பள்ளியில் என் மகனைச் சேர்த்தால், நான் சரியாகப் படிக்காததற்கு என் அப்பாதான் காரணம் என்று எதிர்காலத்தில் அவன் சொல்வான், அப்பழியை நான் ஏற்க விரும்பவில்லை' என்றார்.


ஆசிரியர்கள் உட்படப் படித்தவர்களின் இந்த நிலைதான். இந்த நிலையை மாற்ற முயற்சிக்காது வெறுமனே பேசும் இந்த மாதிரி ஆட்களால்தான், 12-ஆம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் ஒரு இடத்தைக்கூட அரசு பள்ளி மாணவர்கள் பெறாததற்குக் காரணம்.


'மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்கள் இடம்பெறவில்லையே' என்று ஆசிரியர்களிடம் கேட்டால், 'அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி, அதுங்க திருந்தாதுங்க, யாருக்கு என்ன விதியோ அதுதான் நடக்கும்' என்று சொல்வார்கள். மாணவர்களுக்குத் தரமான கல்வியைத் தரும் பொறுப்புள்ள ஆசிரியர்கள், மாணவர்களைப்பற்றி நிலையான ஒரு எண்ணத்தை வைத்திருக்கின்றனர். இந்த மனநிலையில் மாற்றம் வராதவரை மாநில அளவில், மாவட்ட அளவிலான பட்டியலில் ஒரு மாணவரின் பெயர்கூட சேராது.

தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் இரண்டு, மூன்று மடங்கு அதிகம்.. புதிதாக எதையும் படிக்காமல் எப்போதோ படித்த பாடத்தை மனப்பாடமாக வகுப்பறையில் ஒப்பித்துவிட்டு நேரத்தை கழிக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அக்கறையின்றி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் போக்கில் மாற்றம் வரவேண்டும்.


பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் ஏழைகள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். படிக்காமல் வெயிலிலும் மழையிலும் உழைக்கும் நம் வாழ்க்கை குழந்தைகளுக்கு வந்துவிடக்கூடாது என்று பெற்றோர்கல் அனைவரும் எண்ணுகின்றனர். படிக்காத வறியவர்களின் குழந்தைகள், பள்ளியில் சேர்க்கப்படும்போதே ஏ, பி, சி, டி... சொல்லிக்கொண்டே சேர்வார்களா? இருக்கவே இருக்காது. எதுவும் தெரியாமல் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் கற்பித்து வல்லவர்களாக மாற்றவேண்டும். அதைவிட்டுவிட்டுப் படிக்காத வறியவர்களின் பிள்ளை வளர்ந்த சூழல்தான் சரியில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாற்றுவது எப்படி நியாயமாக இருக்கும்.


தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அதனை ஏற்று நடத்துகிறவர்களுக்கு எப்படியாவது பாடுபட்டு வெற்றியை அடைய வேண்டும் என்று உள்ள உறுதியுடன் வேலை செய்கின்றனர். அந்த இலக்கையும் அடைகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் கூறும்போது, சென்ற கல்வியாண்டில் நான் கற்பிக்கும் பாடத்தில் நல்ல தேர்ச்சி காட்டினால் மட்டுமே, ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு தேர்வு முடிவு எப்படி இருக்குமோ? அச்சமாக இருக்கிறது என்று சொன்னார்.


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த அச்சம் சிறிதும் கிடையாது. காரணம், மாணவர்கள் தேர்ச்சி அடைந்தால் என்ன, தேர்ச்சி பெறவில்லை என்றால் என்ன.. எப்படி இருந்தாலும், அரசு அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கி வருகிறது.

பள்ளிக்கு வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி, பாடம் கற்பித்தாலும் சரி, கற்பிக்காமல் இருந்தாலும் சரி, மாதந்தோறும் ஊதியம் மட்டும் வாங்கிவிடலாம், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு பெறலாம். தனியார் பள்ளி நிருவாகத்தின் கட்டளைக்கு அஞ்சி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் தனியார் ஆசிரியர்களிடம் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பாடம் கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனநிலையில் மாற்றம் வரும். படித்ததற்கு ஊதியம் தருகிறார்கள்.. அந்தப்பணத்தைத் தனியார் பள்ளிகளுக்குக் கட்டணமாகச் செலுத்தி நம் பிள்ளைகளுக்கு மட்டும் தரமான கல்வி கிடைக்கச் செய்கிறோம் என்பதான போக்கை அரசு பள்ளி ஆசிரியர்கள் மாற்றிக்கொள்வார்கள்.


ஆசிரியர்களின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு கடுமையான சில முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும். அதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் அரசு அலுவலர்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது. அரசு பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்களாக இருந்தால் அவர்கள் பணியாற்றும் பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எண்ணம்.


அடுத்து அரசின் பொறுப்பு என்ன? தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஏறக்குறைய ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இவ்வளவு தொகை செலவிட்டும் ஒருவரைக்கூட மாநிலப் பட்டியலில் இடம்பெறச் செய்யவில்லை. அரசு நிதி ஓதுக்கிச் செலவிட்டுத் திட்டங்களைத் தீட்டினால் மட்டும் போதாது. அந்தத் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா? என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியையும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே இருக்கும் இடைவெளியையும் அரசு போக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஒரு கல்வியாண்டின் பாதி ஆண்டுவரை மாணவர்களின் தரத்தை அரசு மதிப்பிட்டு, பெரும் வெற்றிக்கான இலக்கை அடைவதற்குத் தடையாக இருப்பவர்கள் ஆசிரியர்களா? அல்லது மாணவர்களா? என்பதை அறிய வேண்டும். கல்வியில் மாணவர்கள் பின்தங்கியுள்ளதற்கு மாணவர்கள் காரணம் என்றால் அதனைத் தீர்ப்பதற்குப் புதிய திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள்தான் காரணம் என்றால் அத்தகையை ஆசிரியர்களைக் களையெடுக்க வேண்டும். இத்தகைய செயல்களைச் செய்தால் மாணவர்களின் கல்வி மேம்படும்.


இல்லையெனில் தனியாருடன் போட்டிப்போடமுடியாத நிலையில் அரசு பள்ளிகள் இருந்துகொண்டேதான் இருக்கும். குறைந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடையும் மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி வெறும் அரசு உதவித்தொகை பெறுகிறவர்களாக மட்டுமே இருப்பார்கள்.


முத்தாய்ப்பாக ஒன்று சொல்ல வேண்டுமெனில் அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் வலியுறுத்திவரும் சமச்சீர்கல்வியைத் தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் இருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும்.

இல்லையெனில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களுக்கான பட்டியலில் அரசு பள்ளி மாணவர்கள் இல்லை என்ற நிலையை எண்ணித் தமிழக அரசு வெட்கப்பட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும்.

முருக சிவகுமார் (murugasivakumar)
ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். விக்டோரியா மாகாணத்தில் தங்கி படித்துவரும் இந்திய மாணவர்கள் மீது அந்நாட்டு மாணவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரவன் குமார் என்ற மாணவர் உள்பட 4 இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர். இவர்கள் தாக்கப்பட்ட இடம் ஒர் விருந்து நடைபெற்ற இடம்.

அங்கு ஸ்குரூடிரைவரால் குத்தப்பட்ட குமார் என்ற மாணவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர். இராஜேஷ் குமார் என்ற மாணவர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பல்விந்தர் சிங் என்ற மாணவர் கத்தியால் குத்தப்பட்டார். நிறவெறி காரணமாக இந்த தாக்குதல்கள் நடந்ததாக இந்திய மாணவர்கள் சார்பில் கூறப்படுகிறது.


அப்படியானால் இந்தியாவில் இருந்து படிக்க வந்த மாணவர்கள், ஆஸ்திரேலியர்கள் பார்வையில் கறுப்பர்கள். அதாவது, தாழ்ந்தவர்கள் - தீண்டத்தகாதவர்கள் - தங்களைவிட கீழானவர்கள்.


இத்தாக்குதல் குறித்து அறிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சார் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் ஆகிய இருவரும் பதற்றமடைந்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.


பாதிக்கப்பட்டவர்கள், கீழ் நிலை சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் இவ்வளவு விரைவில் பேசியிருப்பார்களா என்று சின்னபுள்ளதனமா கேட்காதீங்க. தமிழக மீனவர்களை இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றபோது தமிழ்நாட்டை சேர்ந்த ப.சிதம்பரம் உயர் பதவியில் இருந்தும் இந்தியப் பிரதமரோ, வெளியுறவுத் துறை அமைச்சரோ ஒரு வார்த்தை கூட பேசவில்லையே!


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், "ஆஸ்திரேலியாவில் இருக்கும் 90,000க்கும் அதிகமான இந்திய மாணவர்களும் எங்கள் நாட்டின் விருந்தினர்கள்" என்று கெவின் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அறிவுகெட்டத்தனமானது" என்று கூறி வருத்தமும், கண்டனமும் தெரிவித்தார்.


"ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அறிந்து வேதனை அடைந்தேன். ஆஸ்திரேலியாவில் நடந்த நிறவெறித் தாக்குதல் மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய களங்கம்" என்று பா.ஜ. தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.


இந்நிலையில் இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க கோரியும் நேற்று ஆஸ்திரேலியா வாழ் இந்திய மாணவர்கள் சம்மேளனம், தேசிய மாணவர்கள் சங்கம் ஆகியவை சார்பில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. மெல்போர்ன் நகரில் ஷரவன் குமார் சிகிச்சை பெற்று வரும் மெல்போர்ன் ராயல் மருத்துவமனை முன்பு தொடங்கி இந்திய மாணவர்கள் சம்மேளன தலைவர் குப்தா தலைமையில் விக்டோரியா நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். நிறவெறி தாக்குதலை நிறுத்து. எங்களுக்கு நீதி வேண்டும். பாரத மாதா வாழ்க’’ என்று முழக்கமிட்டபடி சென்றனர்.


சரி,
இதையெல்லாம் யாவரும் அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். ஆயினும் இது குறித்து நான் எழுதுவதற்கான காரணம்
, "நிறவெறியால் தாக்கப்பட்ட இந்திய மாணவர்கள்" என்ற சொற்கள் என்னை இந்தியாவோடு இணைத்து பல விடயங்களை யோசித்து பார்க்க வைக்கிறது.


தாக்குதலுக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்டவர்களை நிழற்படத்தில் பாருங்கள். இவர்கள் எல்லோரும் வெள்ளைத் தோல் மனிதர்கள். இன்னும் நல்ல சொற்களில் சொல்ல வேண்டுமானால், இவர்கள் இங்கு மேட்டுக்குடிகள். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களை இந்த மேட்டுக்குடிகள் என்ன செய்கிறார்களோ, அது இப்போது நடக்கிறது. (அதற்காக மாணவர் மீதான தாக்குதலை நியாயப்படுத்துகிறேன் என்று நினைக்காதீர்கள்)


உயர் கல்வியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தபோது, "இவர்களெல்லாம் உயர்கல்வி படிக்க வந்துவிட்டால், நாங்கள் தெரு பெருக்க போக வேண்டும்" என்று கூறி துடைப்பத்துடன் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்களில் துளியளவும் நியாயம் இல்லையென்றாலும், இதனை வட இந்திய ஆங்கில ஊடகங்கள் பெரிதாக்கி வெளியிட்டன. இந்த சாதிய மனநிலை மாற்றம் பெறாமலே பல மட்டங்களில் தொடர்கிறது.


காலம் காலமாக இவர்களால் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி ஒடுக்கப்பட்ட தலித் மக்கள், சாதி ரீதியாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.


தெருவில் நடந்தால் தீட்டு, பொது கிணற்றை பயன்படுத்த தடை, தலித் இனத்தை சேர்ந்தவர் படித்து உயந்த பதவியில் இருந்தாலும் கீழானவர்தான், ஆடு, பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகள் புழங்கும் இடங்களை கூட தலித் மக்கள் பயன்படுத்த எதிர்ப்பு, சமூக நீதி கொள்கையில் தலித் மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை சலுகைகள் என்று தவறாக நினைத்து அதனை கேவலப்படுத்தும் சாதி இந்து அதிகாரிகள். சாதி இந்துக்கள் செய்யும் கொடுமைகளை எதிர்த்து பேசினால், மலம் தின்ன வைப்பது, வாயில் சிறுநீர் கழிப்பது. தலித் பெண்தானே என்ற கேடு கேட்ட எண்ணத்தால் வல்லுறவுக்கு ஆட்படுத்துதல். இத்தகைய சாதி கொடுமைகள், நிறவெறியை விட கொடுமையானவை.


நிறவெறியால் பாதிக்கப்பட்ட அந்த மேட்டுக்குடிகள் தான், இந்தியாவில் இத்தகைய நிலை தொடருவதற்கு காரணமானவர்கள். வெள்ளை இனத்தவர்கள் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தவறென்று கூக்குரலிடும் இவர்களும் இவர்களின் உறவினர்களும் இந்திய ஒடுக்கப்பட்டவர்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களும் தவறென்று ஒப்புக்கொண்டு மனம் திருந்த வேண்டும். இன்னும் ஒருபடி போய்கூட முன்னோர்கள் செய்த குற்றத்திற்காக ஒடுக்கப்பட்டவர்கள் முன் மன்னிப்பும் கேட்க வேண்டும்.


"நிறவெறி தாக்குதலை நிறுத்து. எங்களுக்கு நீதி வேண்டும்" என்று பேரணியில் முழக்கமிட்ட இந்த மேட்டுக்குடிகள் - சாதியை பேணுபவர்கள் இந்திய தலித் மக்களுக்கும் நியதி கிடைக்காமல் முட்டுக்கட்டை போடுவதை கைவிட வேண்டும்.


உயர்வு - தாழ்வு, கருப்பு - வெள்ளை , இனம், பால் போன்றவற்றில் வேறுபாடு பார்த்து ஒரு பிரிவு மக்கள் இன்னொரு பிரிவு மககளை ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி துன்பத்தை கொடுக்கக் கூடாது. மனித உரிமைக்கு பங்கம் விளையும்போது பாதிக்கப்பட்டவர் பக்கம் நின்று நியாயம் கிடைக்க போராட வேண்டியது மனிதர்களின் தலையாய கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். தனக்கு ஏற்படும் வலியும் - துன்பமும் போன்றதுதான் பிறருக்கு ஏற்படும் வலியும் - துன்பமும் என்று மனதார உணர வேண்டும்.


ஆஸ்திரேலியாவில் நிறவெறியால் பாதிக்கப்பட்ட இவர்கள், நிறவெறி போன்றதே சாதிவெறியும் மத வெறியும் என்பதை உணர்ந்து சாதி - மதம் அற்ற சமூகத்தை உருவாக முனைய வேண்டும். நிறவெறியால் பாதிக்கப்பட்டபோது துடித்து கண்டித்த ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இந்தியாவில் சாதிவெறி தாக்குதல் நடக்கும்போது கண்டிக்க வேண்டும் அல்லது சாதிவெறி இல்லாமல் தடுக்க வேண்டும்.இதுவே என் எண்ணம்; சமூக ஆர்வலர்களின் எண்ணம்.

இது குறித்து தொடர்ந்து விவாதிக்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

முருக சிவகுமார் (murugasivakumar)

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள இராணுவம் ஓர் உடலை காட்டி செய்தி வெளியிட்டது. அந்த உடலை காட்டுவதற்கு முன்னர் மூன்று நாட்களில் பிரபாகரன் சாவு குறித்து பல்வேறு முரண்பட்ட செய்திகளை இலங்கை இராணுவம் கூறியது. அதாவது, பிரபாகரன் புலிகளுடன் தற்கொலை செய்துகொண்டார். பிரபாகரன் முக்கிய தளபதிகளுடன் ஓர் மூடுந்தில் தப்பி செல்ல முயன்றபோது சுட்டு கொல்லப்பட்டார்; உடல்கள் கருகிய நிலையில் இருப்பதால் அவற்றில் பிரபாகரன் உடல் எது என்பதை கண்டறிய முயன்று வருகிறோம் என்று கூறியது.
இந்த முரண்பட்ட தகவல்களால் இது பிரபாகரன் உடல் என்று சிங்கள இராணுவம் காட்டிய உடலை பெரும்பாலானோர் நம்பவில்லை. இந்நிலையில் பிரபாகரன் இறக்கவில்லை; உயிருடன் உள்ளார் என்று விடுதலைப் புலிகள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கு நேரெதிராக "பிரபாகரன் இறந்தது உண்மை" என்று கூறப்பட்டது. இதனால் பிரபாகரன் சாவில் மர்மம் தொடர்கிறது.

இந்நிலையில், இலங்கை காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ள கருத்து, பிரபாகரன் விசயத்தில் ஒரு மாறுபட்ட முரண்பட்ட கருத்தாக உள்ளது.

கொழும்பு கொட்டாஞசேனை புதுச்செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆய்தக்குழு இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில், இளைஞர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அதனை அறிந்து அங்கு காவல்துறை சென்று விசாரணை நடத்தியது. அப்போது, ஒரு பெரிய தகவல் வெளியாகியுள்ளது.
"துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், "துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட இளைஞர் பெயர் விமலன். அவர் யாரெனில், கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான சற்குணராஜா என்பவரின் மகன். விடுதலைப்புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவத்திற்குச் சமனானதொரு உருவத்தையுடையவர் சற்குணராஜா என்று பாதுகாப்பு தரப்பினர் இனங்கண்டுள்ளனர்.
சற்குணராஜா பற்றி இலங்கைப் படையினர் நடத்திய விசாரணையில், அவர் தற்போது இலங்கையில் இல்லை; தப்பி வேறொரு நாட்டுக்கு சென்றுவிட்டார் என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்'' என்று கூறியுள்ளார்.

"கிளிநொச்சியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழியில் இருந்து பெருமளவிலான நிழற் படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் பிரபாகரனும் அவரது உருவத்தை ஒத்த நபரொருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட நிழற் படமொன்று இருந்துள்ளது.
இதனையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்ற உருவமுடைய ஒருவர் இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது . நிழற் படம் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தின்போது அவர் வேறொரு நாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளார் என்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது'' என்றும் காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆக, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சற்குணராஜா என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவத்தை ஒத்த உருவத்தை உடையவர் என்று இலங்கை காவல்துறை ஒப்புகொண்டுள்ளது. பிரபாகரன் உருவமுடைய இரண்டு பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் தப்பிவிட்டார். தப்பியவர் பிரபாகரனாக கூட இருக்கலாமே?

இது குறித்து கொட்டாஞ்சேனை காவல் துறையினர் உட்பட சிறப்பு காவற்துறை குழுவொன்று தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றது.
முருக சிவகுமார் (murugasivakumar)
1. மன்மோகன் சிங் - பிரதமர்
2. பிரணாப் முகர்சி - நிதித்துறை
3. சரத்பவார் - உணவு - வேளாண்மை
4. ஏ.கே . அந்தொணி - பாதுகாப்பு
5. சிதம்பரம் - உள்துறை
6. மம்தாபானர்சி - தொடர்வண்டித்துறை
7. எஸ்.எம். கிருட்டினா - வெளியுறவுத்துறை
8. வீரபத்ரசிங் - இரும்பு எஃகுத்துறை
9. விலாஷ்ராவ் திஷ்முக் - கனரக தொழில்துறை
10. குலாம்நபி ஆசாத் - நலவாழ்வு
11. சுசில்குமார் ஷிண்டே - மின்சாரம்
12. வீரப்பமொயலி - சட்டம் - நீதி
13. பரூக்அப்துல்லா - புதுப்பிக்கவல்ல எரிசக்தி
14.ஜெயபால் ரெட்டி - நகர்ப்புறவளர்ச்சி
15. கமல்நாத் - சாலை போக்குவரத்து
16. வயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர் நலம்
17. மீராகுமார் - நீர்வளத்துறை
18. தயாநிதிமாறன் - ஜவுளித்துறை
19. ஆ. இராசா - தொலைத்தொடர்பு - தகவல் தொழில்நுட்பம்
20. முரளிதியோரா - பெட்ரோலியம்
21. அம்பிகா சோனி - செய்தி ஒலிபரப்பு
22. மல்லிகார்ஜூன கார்கே - தொழிலாளர் நலம்
23. கபில்சிபல் - மனிதவள மேம்பாடு
24. ஹான்டிக் - சுரங்கத்துறை
25. ஆனந்த்சர்மா - தொழில் - வணிகத்துறை
26. சி.பி. ஜோஷி - ஊரக வளர்ச்சி - பஞ்சாயத்துராஜ்
27. செல்சா - சுற்றுலா - வறுமை ஒழிப்பு
28. சுபோத்கான் சகாய் - உணவு பதனத்துறை
29. எம்.எஸ்.கில் - விளையாட்டு
30. வாசன் - கப்பல் போக்குவரத்து
31. பவன் குமார் பன்சால் - நாடாளுமன்ற விவகாரம்
32. முகுல்வாச்னிக் - சமூகநீதி
33. காந்திலால் பூரியா - பழங்குடியினர் நலன்
34. அழகிரி - ரசாயனம் - உரத்துறை

நடுவண் அரசின் இணை அமைச்சர்கள் பொறுப்பு

1. சிறீகாந்த் ஜெனா - இரசாயணம் மற்றும் உரம்
2. இ. அகமது - தொடர்வண்டித் துறை
3. முல்லப்பள்ளி இராமசந்திரன் - உள்துறை
4. வி.நாராயணசாமி - திட்டம் மற்றும் நாடாளுமன்ற அலுவல்
5. ஜோதிர்ஆதித்திய சிந்தியா - வணிகம் மற்றும் தொழில்
6. டி.புரந்தரேஸ்வரி - மனித ஆற்றல் மேம்பாடு
7. கே .எச்.முனியப்பா - தொடர்வண்டித் துறை
8. அஜயா மக்கன் - உள்துறை
9. பனபாக இலட்ஷ்மி - ஜவுளி
10. நமோ நாராயண் மீனா - நிதி
11. எம்.எம்.பல்லம் இராஜு - பாதுகாப்பு
12. சவுகத ரே - நகர்ப்புற வளர்ச்சி
13. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் - நிதி
14. ஜிதின் பிரய்வதா - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவளி




15. ஏ.சாய் பிரதாப் - உருக்காலை
16. பிரினீத் கவுர் - வெளியுறவு
17. குருதாஸ் காமத் - தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
18. ஹரீஷ் இராவத் - தொழிலாளர் மற்றும் வேலைவாயப்பு
19. கே.வி.தாமஸ் - வேளாண்மை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வழங்கல்
20. பரத்சின் சோலங்கி - மின்சாரம்
21. மாதவ் எஸ்.கண்டேலா - சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை
22. திநேஷ் திரிவேதி - நலவாழ்வு மற்றும் குடும்ப நலம்
23. சிசிர் அதிகாரி - ஊரக வளர்ச்சி



24. சுல்தான் அகமது - சுற்றுலா
25.முகுல் இராய - கப்பல் போக்குவரத்து
26.மோகன் ஜதுவா - செய்தி , ஒலிபரப்பு
27. டி.நெப்போ லியன் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
28. எஸ்.ஜெகத்ரட்சகன் - செய்தி, ஒலிபரப்பு

29. எஸ்.காந்திசெல்வன் - நலவாழ்வு மற்றும் குடும்ப நலம்
30. துஷார்பாசவுத்ரி - பழங்குடியினர் நலன்
31. ச ச்சின் பைலட் - தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
32. அருண் யாதவ் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு
33. பிரதிக் பாட்டீல் - கனரகத் தொழில்கள் மற்றும் அரசு நிறுவனங்கள்
34. ஆர்.பி.என். சிங் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
35. சசி தரூர் - வெளியுறவு
36. வின்சேன்ட் பாலா - நீர் வளம்
37. பிரதீப் ஜெயின் - ஊரக வளர்ச்சி
38. அகதா சங்மா - ஊரக வளர்ச்சி
முருக சிவகுமார் (murugasivakumar)

இலங்கையில் சிங்களப் படையினருடனான போரில் கொல்லப்பட்ட பிரபாகரனின் உடல் என்று கூறி சில ஒளிப்படங்களை (வீடியோ ) இலங்கை அரசு வெளியிட்டிருக்கிறது. ஆனால் அந்த உடல் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உடல் அல்ல என்றும், பிரபாகரனைப் போல பிளாஸ்டிக் சர்ஜரிசெய் யப்பட்ட யாரோ ஒருவரின் உடல் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்தியாவும் இது குறித்து ஐயம் எழுப்பியிருப்பதுடன், பிரபாகரன் பற்றிய கூடுதல் ஆதாரங்களை தரும்படி சிங்கள அரசு வலியுறுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கடந்த திங்கள்கிழமை அதிகாலை பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து தளபதிகளுடன் தப்பிச் செல்ல முயன்றபோது ஏவுகணை வீசி சுட்டுக் கொல்லப்பட்டதாக சிங்கள அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் இலங்கை அரசு வெளியிடவில்லை. இதையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் உயிருடன் நலமாக உள்ளார் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பன்னாட்டு தொடர்பாளர் செல்வராசா பத்மநாதன் அறிவித்தார்.

அந்த அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களிலேயே, சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாகரனின் உடல் கிடைத்திருப்பதாக அறிவித்த சிங்களப் படை, பிரபாகரனைப் போல் தொற்றமளிக்கும் உடலின் ஒளிப் படங்களையும் வெளியிட்டது. பிரபாகரன் 2 நாட்களுக்கு முன்@ப கொல்லப்பட்டு விட்டார். அவரின் உடல் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட நந்திக்கடல் பகுதியில் செவ்வாய்க்கிழைமை காலை கண்டெடுக்கப்பட்டது. அவரின் தலையில் குண்டு பாய்ந்த காயங்கள் இருந்தனஎன்று சிங்களப் படை தளபதி சரத் பொன்சேகாவும், செய்தி தொடர்பாளர் உதய நாணயக்காராவும் தெரிவித்தனர். ஆனால் பிரபாகரனின் உடல் தோற்றம் பற்றி செய்தியாளர் எழுப்பிய ஐயங்களுக்கு நாணயக்காரா விடையளிக்கவில்லை.

இலங்கை அரசு வெளியிட்ட ஒளிப்படத்தில் இருப்பது பிரபாகரனின் உடல்தான் என்று இலங்கை அரசு கூறினாலும், பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் மகிந்தா இராசபக்சே நேற்று காலை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், பிரபாகரன் பற்றி எதுவுமே குறிப்பிடாத நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் பிரபாகரனின் உடல் படத்தை சிங்களப் படை வெளியிட்டது ஏற்கும்படி இல்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபாகரனின் உடல் 2 நாட்களுக்கு தண்ணீரில் கிடந்ததாக சிங்களப் படை கூறியுள்ளது. அவ்வாறு தண்ணீரில் கிடந்தால் உடலும், முகமும் உப்பிப்போவதுடன், கருத்துப் போயிருக்கும். ஆனால் பிரபாகரனின் தலையில் குண்டு பாய்ந்ததாக கூறப்படும் இடத்தில் குருதித் துளிகளே இல்லை. பிரபாகரனின் கண்களும் செயற்கையாக பொருத்தியது போல் தொன்றுகிறது. தண்ணீரில் 2 நாட்கள் கிடந்த உடலின் தலையை தூக்கவே முடியாது. ஆனால் பிரபாகரனுடையது எனப்படும் உடலின் தலையை சிங்களப் படை வீரர் ஒருவர் மிக எளிதாக தூக்கிக் காட்டினார். எனவே இதுபிரபாகரனுடையது இல்லை என்ற ஐயம் எழுந்துள்ளதுஎன்று கொழும்பில் உள்ள பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

பிரபாகரனின் உடல் நேற்று காலை தான் கண்டெடுக்கப்பட்டதாக சிங்கள போர்ப்படை தெரிவித்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களி@@ய அவரின் உடலை மரபணு ஆய்வு செய்து விட்டதாக சிங்கள போர்ப்படை கூறியிருப்பதும் ஐயத்தை அதிகரித்துள்ளது. பிரபாகரனுக்கு 55 வயதாகும் நிலையில், இலங்கை அரசு வெளியிட்டுள்ள படத்தில் அவரின் உடல் 25 முதல் 40 வயதானதைப் போல மிகவும் இளமையாகத் தோன்றுகிறது.

சிங்களப் படையினரால் தேடப்படும் பிரபாகரன் தப்பிச் செல்வதாக இருந்தால் ஏன் சீருடையுடன் செல்ல வே ண்டும்? அடையாள அட்டை போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்?

திங்கள்கிழமையன்று ஏவுகணை வீசி கொல்லப்பட்டதாகவும், இதில் பிரபாகரனின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து விட்டதாகவும் கூறிய சிங்களப் படை, அடுத்த நாள் பிரபாகரனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறி உருக்குலையாத உடலை காட்டியது எப்படி?

தலைப் பகுதியை காட்டாமல் துணி போட்டு மூடி வைத்திருந்தது ஏன்? பிரபாகரனை கரய முள்ளிவா#க்கால் பகுதியில் சுற்றி வளைத்து விட்டதாக முதலில் கூறிய சிங்களப்படை, பின்னர் அவரின் உடலை நந்திக்கடல் என்ற இடத்தில் கண்டெடுத்ததாகக் கூறுவது ஏன்? என்பவை உள்ளிட்ட பல்வேறு வினாக்களை ஊடகத் துறையினர் எழுப்பியுள்ளனர். ஆனால் இவற்றில் எந்த வினாக்களுக்கும் விடையளிக்கப்படவில்லை.

அது மட்டுமின்றி, “விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வழக்கமாக தலை முடிக்கு சாயம் பூசுவது கிடையாது; அடிக்கடி முகச்சவரம் செய்வதும் இல்லை. அது மட்டுமின்றி அண்மைக் காலமாக அவர் மீசை வளர்ப்பதும் இல்லை. ஆனால் பிரபாகரனுடையது என்று கூறப்படும் உடலின் முகத்தில் அப்போதுதான் முகச்சவரம் செய்யப்பட்டிருக்கிறது . மேலும் இயல்புக்கு மாறாக மீசை இருப்பதுடன், தலைக்கும், மீசைக்கும் சாயம்பூசப்பட்டுள்ளது. பிரபாகரனின் உண்மையான காதும், படத்தில் காட்டப்படும் காதுக்கும் வேறுபாடுகள் உள்ளன. பிரபாகரனின் மூக்கு இயல்பாக இருப்பதை விட படத்தில் மிகவும்கூராக உள்ளது. பிரபாகரனின் நாடியில் ஒரு வெட்டுக் காயம் இருக்கும். ஆனால் படத்தில் வெட்டுக் காயம் இல்லை. மொத்தத்தில் படத்தில் காட்டப்படும் பிரபாகரனின் உடல் பிளாஸ்டிக் சரஜரி முறையில் உருவாக்கப்பட்டது போல தொன்றுகிறதுஎன்றும் அந்த வல்லுநர்கள் கூறினார்கள். இலங்கை அரசு வெளியிட்ட படத்தை இந்தியாவும் நம்பவில்லை. பிரபாகரன் குறித்த மேலும் ஆதாரங்களை வெளியிடும்படி இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டிருக்கிறது. இதனிடை@ய பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று விடுதலைப் புலிகள் இயக்க பன்னாட்டுத் தொடர்பாளர் பத்மநாதன் மீண்டும் கூறியுள்ளார்.

.

முருக சிவகுமார் (murugasivakumar)

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசும், இந்திய அரசும் அறிவித்துள்ளன. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் இரு நாட்டு அரசுகளும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார் என்றும், அவர் படுகொலை செய்யப்பட்டதாக சிங்களப் படையினர் பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியிருக்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் மனஉறுதியை குலைப்பதற்காகவே சிங்களப் படை திட்டமிட்டு பொய் செய்திகளைப் பரப்பி வருகிறது. இலங்கைப் போரில் பிரபாகரன் படுகொலை செய்யப்படவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் இறந்துவிட்டதாக சிங்கள அரசும், ஆங்கில ஊடகங்களும் பரப்பி வரும் பொய்திகளை நம்ப வேண்டாம்என்று நேர்காணலில் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

இலங்கை முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள கரய முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்படை தலைவர் சூசை ஆகியோர் குண்டு துளைக்காத ஊர்தியில் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அப்போது சிங்களப் படையினர் ஏவுகணைகளை வீசித் தாக்கியதில் மூவரும் கொல்லப்பட்டதாகவும் சிங்கள போர்ப்படை வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தியாவில் உள்ள ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டதாக சிங்கள அரசு தரப்பில் பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என்று ஈழத் தமிழர் ஆதரவு இணையதளமான அதிர்வு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்களுக்குச் சாதகமில்லாத பல தகவல்களை இலங்கைப் போர்ப்படை வெளியிட்டு வருகிறது. இலங்கைப் போர்ப்படை கூறி வருவதை அவர்களால் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பிக்க முடியாது. சிங்களப் படையினரால் வெளியிடப்படும் படங்கள் கூட இன்னும் உறுதி செய்யபடவில்லை. களத்தில் இறந்து கிடக்கும் பலரின் உடல்களை யூகத்தின் அடிப்படையில் அவராக இருக்கலாம், இவராக இருக்கலாம் என்று போர்ப்படை கூறி வருகிறது. எனவே உண்மை விரைவில் வெளியாகும். அதுவரை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பொறுமை காக்க வேண்டும்என்று அதிர்வு இணையதளம் கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும் பிரபாகரன் கொல்லப் பட்டதை இலங்கை அரசு உறுதியாக இன்னும் அறிவிக்கவில்லை. போர் நடைபெறும் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 250 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களில் பிரபாகரனும் ஒருவராக இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காக மரபணு ஆயவுகள் எதுவும் நடத்தப்படவில்லை. உளவுத் தகவல்களின் அடிப்படையில்தான் நாங்கள் உடல்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்என்று மட்டுமே போர்ப்படை செய்தி தொடர்பாளர் உதய நாணயக்காரா காலை தெரிவித்தார். ஆனால் இரவு வரை உடல் அடையாளம் காணப்பட்டதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

பிரபாகரன் கொல்லப்பட்டதை இலங்கை அதிபர் இராசபக்சே நேற்று பிற்பகலில் அதிகாரப்படியாக அறிவிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் மாலை அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி வரை எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

வழக்கமாக விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் கொல்லப்பட்டால் அவர்கள் வீர மரணம் அடைந்ததாக விடுதலைப் புலிகள் இயக்கம் முறைப்படி அறிவிக்கும். மேலும் அவர்களுக்கு மாவீரர், பிரிகேடியர் உள்ளிட்ட பட்டங்களும் அறிவிக்கப்படும். ஆனால் அத்தகைய அறிவிப்புகள் எதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதனிடை@ய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தொணி, சமாதான செயலகத்தில் பொறுப்பாளர் புலித்தேவன், காவல்துறை தலைவர் இளங்கோ, இரமேசு சுதர்மன், கபில் அம்மான் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என்றும், அவர்களது உடல்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் சிங்களப் படை அறிவித்துள்ளது. இதை விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ்நெட் இணையதளம் அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஒப்புக்கொண்டுள்ளது.

முருக சிவகுமார் (murugasivakumar)

உலகம் இதுவரை கண்டிராத கொடிய தாக்குதலை இலங்கையில் இராசபக்சே நடத்தி வரும் சூழ்லில் உலகமெங்கும் பல நாடகங்களும் நடந்து வருகின்றன. இந்தியாவில் மக்களவை தேர்தல் நடப்பது இந்த நாடகங்களுக்கு அடித்தளமாக இருக்கிறது.

சிங்கள அரசின் தாக்குதலில் பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முழு முதல் உடந்தையாக இந்திய அரசு செயல்பட்டு வருவதை உணர்வுள்ள தமிழ்ர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும், அதனை மூடி மறைக்கவும் தமிழ் மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பொறுக்கவும் கருணாநிதி செய்த நாடகங்கள் ஏராளம் .

ஆனாலும் தமிழ்கத்தில் இடைவிடாத போராட்டம் நடத்தி வரும் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழின உணர்வாளர்களின் முயற்சியால் தமிழ் மக்கள் தெளிவாகவே இருநதனர்.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரசு - தி.மு..வுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென முடிவெடுத்து இருந்தனர். தி.மு.. கூட்டணியினர் ஓட்டு கேட்டு சென்ற இடமெல்லாம் ஈழ்த் தமிழ்ர்களுக்கு எதிராக செயல்படுவதை எதிர்த்து முழக்கமிட்டனர். அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் .சிதம்பரத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்த மாணவர்களை தி.மு..வினரும் காங்கிரசாரும் அடித்துள்ளனர். அங்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை கைது செய்துள்ளது.

இதனிடையே தமிழ் ஈழ்ம் அமைய முழு ஆதரவை அண்ணா .தி.மு.. பொதுச்செயலாளர் செயலலிதா அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்தார் கருணாநிதி.

கடந்த சில மாதக்காலமாக உலக நாடுகளில் வாழும் தமிழ்ர்கள் அந்நாடுகளுக்கு நெருக்கடிகளை கொடுக்கும் முகமாக பலவித போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, லண்டனில் 28 வயதுடைய பரமேஸ்வரன் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்னாள் அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் உடனடியாக அரசு போரை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இலங்கை இரண்டாக உடையும்’’ என்று கூறியிருந்தது. அதனை ஏற்று விடுதலைப்புலிகள் நேற்று தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஒரு தலைப்பட்சமாக அறிவித்திருக்கும் போர் நிறுத்தத்தை திட்டவட்டமாக நிராகரித்த சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, "போர் நிறுத்தத்துக்கு எந்தவொரு தேவையும் இல்லை" எனவும், "விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

ஆனால், அமேரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கைக்கு தொடந்து நெருக்கடிகளை கொடுத்து வந்தது. இதனால் இன்று காலை எட்டு மணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் இராஜபக்சே தலைமையில் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூடி போர் நிறுத்தம் அறிவிக்கலாமா என கலந்தாய்வு செய்தனர்.

இந்நிலையில்தான் நாடகத்திலே நம்பிக்கை கொண்டு நாடகத்தாலேயே வளர்ந்த கருணாநிதி இன்று காலையில் காலவரையறையற்ற உண்ணாநிலை என்னும் ஓர் நாடகத்தை தொடங்கினார். தேர்தலில் ஆதாயத்தை பெற வேண்டுமே என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த நாடகம் வெகு விரைவில் முடிந்து விடும் என்று தமிழின உணர்வாளர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனை கண்டு ஒடி வந்த கருணாநிதியின் அடிவருடிகளும் ஆதாயம் பெற காத்திருப்பவர்களும் நாடகத்தில் பங்கேற்று சன் தொலைக்காட்சியின் ஒலிவாங்கி முன் நடித்தனர்.


இதையடுத்து பிற்பகல் ஏறக்குறைய ஒரு மணியளவில் போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. என்றும் அது தான் உண்ணாநிலை இருந்ததால்தான்’’ என்றும் அறிவித்து உண்ணாநிலையை கருணாநிதி முடித்துக்கொண்டார்.

இதில், முக்கியமான செய்தி என்னவெனில், உலக நாடுகளின் நெருக்கடி மற்றும் கோரிக்கையை ஏற்று வாநூர்தி தாக்குதல், கனவகை ஆயதங்களால் தாக்குதல் ஆகியவற்றை மேற்கொள்வதில்லை’’ எனவும் தாக்குதலை குறைப்பது எனவும் இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பில் போர் நிறுத்தம், என்ற சொல்லை சிங்கள அரசு பயன்படுத்தவே இல்லை.


உலக நாடுகளில் வாழும் தமிழ்ர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்; தமிழ்நாட்டிலும் கருணாநிதி உட்பட பலரும் இதற்கு முன் ஏற்கெனவே பல்வேறு போராட்டங்கக்ளை நடத்தியுள்ளனர். லண்டனில் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தில் 28 வயதுடைய பரமேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். இதனாலெல்லாம் ஏற்படாத போர் நிறுத்தம். ஐக்கிய நாடுகள் அவை சொல்லியும் போரை நிறுத்தாத இராஜபக்சே கருணாநிதிக்கு பயந்து போரை நிறுத்தி விட்டாராம்! தமிழ்ர்களே மனதை தொட்டு சொல்லுங்கள் இதனை நம்புகிறீர்களா?

இப்படி கருணாநிதிக்கு பயந்து இராஜபக்சே போரை நிறுத்துவார் என்று தெரிந்திருந்தால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே உண்ணாநிலை இருந்து போரை நிறுத்தி இருக்கலாமே. ஏனெனில் கருணாநிதியில் கள்ள மவுனத்தால் - சுயநலத்தால் கடந்த முன்று மாதங்களில் எட்டு ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அதை கருனாநிதி தடுத்திருக்கலாமே!

அப்போதெல்லாம் இலங்கைப் பிரச்சனை ஒரு பிரச்சனையே இல்லை; தேர்தலில் வெல்ல பணம் ஒன்றே போதும் என்று ஸ்டாலினும் அழகிரியும் சொன்னதை கருனாநிதி கேட்டுக்கொண்டிருந்தார்.

தமிழினத்திற்கு காங்கிரசு செய்த மாபெரும் துரோகத்தில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழ்நாட்டில் தமிழினத்துக்காக போராடிய பேசிய கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் சிறையில் இருக்கின்றனர். அவர்களை சிறையில் அடைத்து இராஜபக்செவா? அல்லது கருணாநிதியா ?

தமிழினம் கொல்லப்படுவதை கண்டு வேதனையில் துடித்த முத்துக்குமார் உட்பட பல தமிழின உணர்வாளர்கள் தீக்குளித்து செத்தார்களே. அவர்களுக்கு ஆறுதல் கூட கூறாத கருனாநிதி, இலங்கைத் தமிழ்ர்களை காப்பதர்காகவா உண்ணாநிலை இருந்தார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அதற்கு காரணம், மக்களவைத் தேர்தலில் காத்திருக்கும் தோல்வியை எண்ணி கலங்கிய கருனாநிதி ஓர் அற்புத நாடகத்தை நடத்தினார். இதுதான் உண்மை. தன் அரசியல் சாணக்கியத்தால் மக்களை திசை திருப்பி ஓட்டுகளை பொறுக்க பார்க்கிறார்.

இந்த உண்மையை தமிழ் மக்களுக்கு விளக்க தமிழின உணர்வாளர்களே, பயணமாகுங்கள்.

தமிழ் ஈழ்ம் உருவாவது மட்டுமே இலங்கைத் தமிழ்ர்களின் வாழ்வுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

கருணாநிதியின் நாடகத்தை நம்பி காங்கிரசு வேட்பாளர்களுக்கு ஓட்டு போட நினைத்தால் அதை பற்றி சொல்ல...... எதுவுமில்லை.